இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர்தான் ரமேஷ் கண்ணா. சினிமாவில் மட்டுமின்றி நாடகத்துறையிலும் கைதேர்ந்தவர். 1000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். தனது நடிப்புத் திறமைக்காக சிறுவயதிலேயே குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் பாராட்டுப் பெற்றுள்ளார். சினிமாவில் ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு நண்பராக நடித்தது மட்டுமின்றி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களில் திரைக்கதையில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர், ராணி ஆன்லைன் நேயர்களுக்கு அளித்த நேர்காணலை தற்போது காண்போம்.


ஃப்ரண்ட்ஸ் பட நகைச்சுவை காட்சி

வடிவேலு தலையில் உண்மையில் சுத்தியலை போட்டீர்களா?

உண்மையில் வடிவேலு தலையில் சுத்தியல் விழுந்தது. எட்டுமுறை அவரது தலையில் சுத்தியலை போட்டேன். அந்த சுத்தியல் சாஃப் வுட் என்றாலும் மேலிருந்து போடும்போது வலிக்கும். ‘வேண்டுமென்றே போடுறியாடா, வலிக்குது’ என வடிவேலு திட்டிக்கொண்டே இருந்தான். அதேபோல அந்த படத்தில் வடிவேலு என்னை எட்டி உதைப்பார். அந்த ஷாட்டும் எட்டுமுறை எடுக்கப்பட்டது. அப்போது நான் கேட்டேன்; நீ மட்டும் என்னை எட்டி உதைக்கலாமா என்று. அதற்கு,‘நான் என்னடா பன்றது, டைரக்டர் சொல்றாரு’ எனக் கூறுவார். விஜய்யும், சூர்யாவும் இதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அதுபோல கடிகாரம் சீனுக்கும் இருவரும் சிரித்துக் கொண்டே இருந்தார்கள். நான், வடிவேலு எல்லாம் பெரிதாக சிரிக்கமாட்டோம். எங்களுக்கு அடுத்து எங்கு ஷூட் என்பதுதான் கவனத்தில் இருக்கும். ஃப்ரண்ட்ஸ் படம் இன்றுவரை பேசப்படுவதற்கு இயக்குநர் சித்திக்தான் காரணம். 2019-ல் நேசமணி தலையில் சுத்தியலை போட்ட சீன் மீண்டும் ட்ரெண்டானது. அன்று மோடி பதவியேற்பு விழா. ஆனால் நேசமணிதான் ட்ரெண்டிங்கில் இருந்தார். அது ஒரு சிறந்த பரிசு.


நடிகர் ரமேஷ் கண்ணா மகன் திருமண விழாவில் கலந்துகொண்ட விஜய்

நடிகர் விஜய்க்கும், தவெக தலைவர் விஜய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

எப்போதாவதுதான் விஜய், சூர்யாவை எல்லாம் பார்ப்போம். ஏதேனும் நிகழ்ச்சிகளில் சந்தித்து கொள்வோம். தனிப்பட்ட முறையில் யாரையும் பார்க்கமாட்டேன். ஷூட்டிங்கில் விஜய் பேசவேமாட்டார். யாரிடமும் பேசமாட்டார். நாம் போய் பேசினால்தான் பேசுவார். வேலையில் கவனமாக இருப்பார். அவர் அரசியலுக்கு வருவார் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. ரஜினிகாந்த் அரசியல் பற்றி பேசுவார்; கமல்ஹாசன் பேசமாட்டார். ஆனால் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தார். ரஜினிகாந்த் வரவில்லை. இதுதான் உலகம். விஜய் அரசியலுக்கு வந்தது நல்லதுதான். எப்போதும் ஒரு புது ரத்தம் அரசியலுக்கு தேவை. விஜயகாந்தின் பங்களிப்பு அரசியலில் இருந்தது. அதுபோல விஜய்யின் பங்களிப்பை பார்க்க வேண்டும். விஜய் என் பையன் திருமணத்திற்கு வரமாட்டார் என நினைத்தேன். கடைசியாக அவருடன் 2000-த்தில் படம் பண்ணேன். அதற்குபின் முழுவதும் அஜித்துடன்தான் பயணம். என் பையனுக்கு 2018-ல் கல்யாணம். எப்படி வருவார்?. பின்னர் என் பையன் விருப்பத்தால், விஜய்யின் வீட்டுக்கு போய் பத்திரிக்கை வைத்தோம். அப்போது மூன்று பேரும் ஃபோட்டோ எடுத்தோம். பேப்பரில் போட்டுவிடாதீர்கள் என்றார் விஜய். அப்படியானால் திருமணத்திற்கு வரமாட்டார் என்றுதான் நினைத்தேன். பின்னர் எதிர்பார்க்கவே இல்லை. சரியாக 6 மணிக்கு, விஜய், ரிசப்ஷனுக்கு வந்துவிட்டார். அனைவரிடமும் சாதாரணமாக பழகும் குணம் கொண்டவர் விஜய்.


நடிகர் ரமேஷ் கண்ணா

திரைத்துறைக்கு வந்தது எப்படி?

1000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளேன். சினிமாவைவிட நாடகம் வேகமாக இருக்கும். பள்ளிக்கூடத்திற்கே போகமாட்டேன். பள்ளிக்கூடத்தில் வினாத்தாளை பார்த்தால் ஒன்னுமே தெரியாது. படித்தால்தானே தெரியும். வெள்ளைத்தாளை அப்படியே திருப்பி தருவேன். டீச்சர் எல்லாம் திட்டுவார்கள். இதற்கு காரணம் என் நாடகம் மற்றும் திரைப்பயணம்தான். நடிகையாக வேண்டும் என்ற என் அம்மாவின் ஆசை நிறைவேறவில்லை. அதனால் என்னை அவர் நடிகனாக்க முயற்சிகளை மேற்கொண்டார். அதன்பலன், சிறுவயது முதலே, நான், நாடகங்களில் நடிக்கத்தொடங்கிவிட்டேன். நாட்கள் செல்லசெல்ல சினிமாவுக்கு வந்துவிட்டேன்.

குடியரசுத் தலைவரிடம் பரிசு...

குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனிடம் பரிசு வாங்கியுள்ளேன். அவர் மடியில் அமர்ந்துள்ளேன். அப்போது நான் சின்னப்பிள்ளை. எனக்கு பிரதமர், குடியரசுத் தலைவரை எல்லாம் தெரியாது. குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனைப் பார்க்க, அவரது அழைப்பின்பேரில் எங்கள் நாடகக் குழுவினர் சென்றிருந்தோம். இதற்காக டெல்லிக்கு சென்ற நான், ராஷ்டிரபதி பவனில் இருந்த ஃபவுண்டனில் விளையாடிக்கொண்டிருந்தேன். நாடக குழுவினருடன், நான் உள்ளே செல்லவே இல்லை. அப்போது ராதாகிருஷ்ணன் கேட்டிருக்கிறார், “ஆமாம், நாடகத்தில் ஒரு குழந்தை நடித்திருந்தானே. அவன் எங்கே?” என்று... எல்லோரும் என்னை தேடி கண்டுபிடித்து அவரிடம் கூட்டி சென்றனர். அவர் என்னை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டார். நான் அப்படியே பார்க்கிறேன், யாருடா இது நம்மை மடியில் உட்கார வைத்திருப்பது என்று... வீட்டிற்கு வந்து சரியான அடி அம்மாவிடம் வாங்கினேன். எல்லோரும் வந்து என் அம்மாவிடம், ஜனாதிபதியை பார்க்க போயிருக்கோம்... ஆனால் இவன், அங்கு தண்ணீரில் ஆட்டம்போட்டுக்கொண்டு, வேர்க்கடலை சாப்பிட்டுக்கொண்டு, ஈரத்துணியுடன் ராஷ்டிரபதி பவனை சுற்றி வருகிறான். இவனுக்கு ஏதாவது பொறுப்பு இருக்கா? போட்டுக்கொடுத்துவிட்டனர். அன்னைக்கு முழுவதும் வீட்டில் அனைவரிடமும் அடிவாங்கினேன். அதில் பாராட்டே கிடைக்கவில்லை; அடிதான் கிடைத்தது.


நடிகர் ரமேஷ் கண்ணா - நடிகர் விவேக்

சினிமாவில் இயக்குநர் பயணம் எப்படி ஆரம்பித்தது?

சிறுவயதில் நாடகம் போடும்போது, நானும், என் அண்ணனும் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளோம். கல்லூரி முடித்தபின் நாங்களே நாடக குரூப் ஆரம்பித்தோம். நாடகத்தில் நடித்தால் படத்திற்கு அழைப்பார்கள் என நினைத்தோம். ஆனால் ஒருத்தர் கூட அழைக்கவில்லை. இரவில் நாங்களே போய் நாடகம் என்று போஸ்டர் ஒட்டுவோம். போலீஸ் அழைத்து யார் என்று கேட்பார்கள். நான்தான் நாடக இயக்குநர் என்றால் நம்பமாட்டார்கள். டிக்கெட் கொடுத்தால் வந்துவிடுவார்கள் என சைக்கிள் எடுத்துக் கொண்டுபோய் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், பாரதிராஜா என எல்லோர் வீடுகளிலும் டிக்கெட் கொடுத்துவிட்டு வருவோம். பின்னர் திரைப்பட வாய்ப்பிற்காக ஸ்டூடியோ, ஸ்டூடியோவாக சென்று போட்டோ கொடுத்துவிட்டு வருவோம். சினிமாவில் வாய்ப்பே கிடைக்காது. அப்போதுதான் துணை இயக்குநராக சென்றால், சினிமாவிக்குள் போய்விடலாம் என்ற ஐடியா கிடைத்தது. அதனால்தான் துணை இயக்குநராக பணியாற்றினேன். பின்னர் இயக்குநரானேன். அதன்பின்தான் விவேக்கை வைத்து நாடகம் ஒன்று இயக்கினேன். சீரியலைவிட நானும், விவேக்கும் எபிலோக் வீடியோ போடுவோம். அது நாடகத்தைவிட ஃபேமஸ்.

Updated On 8 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story