தமிழ் திரையுலகின் 1980-2025 காலக்கட்டத்தையே நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் தமிழ் சினிமாவின் 1980-களின் முந்தைய காலக்கட்டத்தில் இருந்த பல திறமையான இயக்குநர்களையும், நடிகர்களையும், இசை அமைப்பாளர்களையும் நமக்கு தெரியாது. இப்போதெல்லாம் ஒரு ஹூரோவிற்கு இருக்கும் மாஸை வைத்து படம் எடுத்துவிட்டால், பெரிய இயக்குநர்களாக பார்க்கபடுகின்றனர். ஆனால் அப்போதெல்லாம் கதைக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஏன் திரையுலக நடிகர்கள் பலருக்குமே 1990-களுக்கு முன்பு இருந்த திரையுலக ஜாம்பவான்கள் பலரை தெரியாது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முக்கிய அங்கம் வகித்த பழம்பெரும் நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்களை நமக்கு நினைவு கூர்ந்துள்ளார் நடிகர் ரமேஷ் கண்ணா. இதுதொடர்பாக ராணி ஆன்லைன் நேயர்களுக்கு நடிகர் ரமேஷ் கண்ணா அளித்த நேர்காணலை இங்கு காணலாம்.
அஜித்குமார், சரோஜா தேவி பிடிக்கும் - நடிகர் ரமேஷ் கண்ணா
உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் யார்?
அப்போது எம்ஜிஆர், சிவாஜி கணேசன். இப்போது அஜித்குமார், விஜய்.
உங்களுக்கு பிடித்த நடிகைகள்?
நான் ஒரு சரோஜாதேவி பைத்தியம். சாவித்திரி பைத்தியம். நடிகை பானுமதி போல ஒரு நடிகை கிடையாது. அற்புதமான நடிகை அவர். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடுவது, இசை அமைப்பது என பன்முக திறமை கொண்டவர். இப்போது எல்லா நடிகைகளையும் பிடிக்கும்.
வில்லன்களுக்கு என ஒரு ஸ்டைலை கொண்டு வந்தவர் ரகுவரன் - ரமேஷ் கண்ணா
பிடித்த வில்லன்கள் யார்?
வில்லன் கதாபாத்திரங்களில் அப்போது பி.எஸ். வீரப்பா, நம்பியார், அசோகன். எப்போதுமே ரகுவரன். அவர்தான் வில்லன்களுக்கு என ஒரு ஸ்டைஸ் கிரியேட் செய்தார். அதைத்தான் பிரகாஷ் ராஜ் போன்றோர் காப்பி அடித்தனர்.
உங்களுக்கு பிடித்த காமெடியன்?
நடிகர் சந்திரபாபுதான் தி கிரேட் காமெடியன். அவர்போன்ற ஒரு காமெடியன் கிடையாது. அவர் நடனம், ஆடுவது, பாட்டு பாடுவது, படம் இயக்குவது என மிகப்பெரிய நடிகர். அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அதற்குப்பின் வந்தவர் நாகேஷ். இன்றுவரை ஒரு சிறந்த நடிகர் என்றால் அது அவர்தான். இப்போது வடிவேலு சூப்பராக நடிக்கிறார். நடிகைகளில் கோவை சரளா.
நாசர், இயக்குநர் சரண் பிடிக்கும் - ரமேஷ் கண்ணா
உங்களுக்கு பிடித்த குணச்சித்திர நடிகர்?
எஸ்.வி. ரங்கராவ், பாலையா என்ற நடிகர்கள் இருந்தனர். அவர்களை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை. பாலையா நடித்தால் அழுதுவிடுவோம். பாலையா வில்லன், காமெடி, குணச்சித்திரம் என அனைத்திலும் நடிப்பார். இப்போது நாசர் நன்றாக நடிக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களிலும் நன்றாக நடிக்கிறார்.
மிகவும் பிடித்த இயக்குநர்?
எனக்கு எப்போதும் இயக்குநர் ஸ்ரீதர்தான். ஹிந்தியில் சாந்தாராம். சாந்தாராமின் ‛தோ ஆன்கி பராஹத்’ என்கிற இந்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘பல்லாண்டு வாழ்க’. ஒரு சிறை அதிகாரி, 6 சிறை கைதிகளை நல்வழிப்படுத்தி அவர்களை மீட்பதே படத்தின் கரு. சாந்தாராம் போன்ற இயக்குநர்கள் எல்லாம் இப்போது இல்லை. இப்போது விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார் பிடிக்கும். சரண் அற்புதமான இயக்குநர்.
எவர்கீரின் இளையராஜா, ஆஸ்கார் ரகுமான் பிடிக்கும் - ரமேஷ் கண்ணா
உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர்?
இசை அமைப்பாளர் என்றால் எப்போதும் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாத ராமமூர்த்திதான். ஆனால் ஆதிநாராயண ராவ் என்ற இசையமைப்பாளர் ஒருவர் இருந்தார். நடிகை அஞ்சலி தேவியின் கணவர். அஞ்சலி தேவியை நடிகை ஆக்கியது அவர்தான். அஞ்சலிதேவியின் அடுத்த வீட்டு பெண் படத்திற்கு இசை அமைத்தவரும் அவர்தான். சிறந்த இசையமைப்பாளர். அதற்கு பின் எவர்கிரீன் இளையராஜா. அடுத்தது ஏ.ஆர்.ரகுமான். இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கிவிட்டார். இளையராஜாவே ஏ.ஆர். ரகுமானை பாராட்டினார்.
அரசியல் தலைவர் என்றால் காமராசர்தான், அதன்பின் முதலமைச்சர் ஸ்டாலின் - ரமேஷ் கண்ணா
அரசியல் தலைவர்களில் உங்களுக்கு பிடித்தவர் யார்?
அரசியல் தலைவர் என்றால் அப்போது காமராசர். அவரைப் பற்றி ஒவ்வொரு விஷயம் கேட்கும்போதும் ஆச்சர்யமாக இருக்கும். அவரைப் போன்ற ஒரு தலைவரை நாம் பார்க்கவே முடியாது. அற்புதமானவர். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சொல்ல வேண்டும் என்றால், மும்பைக்கு நேரு, காமராசர் மற்றும் சில அமைச்சர்கள் சென்றுள்ளனர். அங்கு எடை பார்க்கும் இயந்திரம் இருந்துள்ளது. அதில் எட்டணா போட்டு நேரு எடையை பார்த்துள்ளார். மற்றவர்கள் காமராசரை பார்க்க சொல்லியுள்ளனர். அதற்கு இல்லை, நான் பார்க்கமாட்டேன், எனக்கு பிடிக்காது என காமராசர் கூறியுள்ளார். நேரு சிரித்துக் கொண்டே, அவங்கிட்ட எட்டண்ணா கூட இருக்காது, அதனாலதான் முடியாது எனக் கூறுகிறான் என தெரிவித்தார். இதுபோல பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதுபோல கல்லூரியில் இரண்டு ஷிஃப்ட் முறையை கொண்டு வந்தவரும் காமராசர்தான். இப்போது நம் முதலமைச்சர் ஸ்டாலினும் நன்றாக செயல்படுகிறார். முதியோர்களுக்கு, மாணவர்களுக்கு என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
உங்களுக்கு பிடித்த உணவு?
எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். இதுதான் பிடிக்கும், அதுதான் பிடிக்கும் என்று இல்லை. ஒரு காலத்தில் உணவே இல்லாமல் இருந்தோம். அதனால் எந்த சாப்பாடாக இருந்தாலும் சாப்பிடுவேன்.
