
(23-06-1974 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
"ஜெயசித்ராவை நான் காதலிக்கவில்லை!" என்று நடிகர் சிவகுமார் கூறினார்.
திருமணம் செய்து கொள்ளப் போகும் சிவகுமாரை "ராணி" நிருபர் பேட்டி கண்டார். அப்போது அவர் சொன்னதாவது:-
"நான் ஒரு நடிகையை காதலிப்பதாக சில மாதமாக பத்திரிகையில் செய்தி வந்தது. எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பிறகும், என்னையும், அந்த நடிகையையும் வைத்து செய்தி வெளியிட்டார்கள்.
நான் என்றுமே ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள விரும்பியது இல்லை. நான் நட்சத்திர திருமணத்தில் நம்பிக்கை இல்லாதவன்.
நட்புதான், காதல் அல்ல!
ஒரு நடிகனும் நடிகையும் பல படங்களில் சேர்ந்து நடிக்கும்போது, அவர்கள் இடையே நட்பு பிறப்பது இயற்கை! ஆனால், அதை காதல் என்று எப்படிச் சொல்ல முடியும்? சமுதாயத்தில் எத்தனையோ ஆண்களும் பெண்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். அதை மக்களும் ஒப்புக் கொள்கிறார்கள். அதேபோல், ஒரு நடிகனும் நடிகையும் ஏன் நண்பர்களாக இருக்கக் கூடாது?
பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் சிவகுமார்-ஜெயசித்ரா
ஜெயசித்ராவுடன் நட்பு உண்டு
என்னுடன் ஜெயசித்ரா அதிகப் படங்களில் நடித்துள்ளார். அவர் ஒரு திறமையாள நடிகை என்ற வகையில் அவரிடத்தில் எனக்கு மதிப்பும் நட்பும் உண்டு. இதை வைத்துக்கொண்டு கயிறு திரித்தால், என் பெயரும் கெடும். அந்த நடிகையின் பெயரும் கெடும்.
கிராமத்துப் பெண்...
நான் முழுக்க முழுக்க கிராமிய சூழ்நிலையில் வளர்ந்தவன். அந்த வகையில், எனக்கு மனைவியாக வரும் பெண் வெறும் அழகியாக மட்டும் இருக்காமல், கிராமப் பண்பாட்டோடு, குடும்பத்தை கட்டிக் காக்கும் பொறுப்பு உள்ளவளாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் சிவகுமார்
இன்று நான் நடிகனாக இருப்பதால், பல ஆயிரம் பெண்கள் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பலாம். ஆனால், நான் நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு, கிராமத்துக்குச் சென்று ஏர் பிடித்தாலும் என் பின்னால் வரக்கூடிய ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருந்தேன். நான் நினைத்தபடியே, என் பெற்றோர்கள் எனக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்து இருக்கிறர்கள். இவ்வாறு சிவகுமார் கூறினார்.
