இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிகர், நடிகை என்றாலே பல கிசுகிசுக்களுக்கு ஆளாவர். இதில் ஒருசிலரே விதிவிலக்கு. அப்படி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பல கிசுகிசுக்களுக்கு ஆளானவர்தான் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து தற்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தாலும், தனது கணவர் மரணத்திற்கு பிறகு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானர் நடிகை மீனா. நடிகர் தனுஷை மீனா இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், பாஜகவில் முக்கிய பதவியில் சேர இருப்பதாகவும், அமைச்சர் ஒருவரின் அரவணைப்பில் இருப்பதாகவும் எண்ணற்ற வதந்திகள் வெளியாகின. இந்நிலையில் தன் மீதான பல்வேறு சர்ச்சைகள் குறித்தும், இதுவரை வெளியில் சொல்லாத பல்வேறு விஷயங்களையும் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார் மீனா.


நடிகர் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாகவும், ஹீரோயினாகவும் நடித்த மீனா

கண்ணழகி மீனா...

கண்ணழகி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் மீனா 90ஸ் காலக்கட்டத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உருவெடுத்து, தற்போதுவரை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பலரும் மீனா, ரஜினிகாந்தின் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படம் மூலம்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என நினைத்திருப்பர். ஆனால் அதற்கு முன்னரே 1982-ல் வெளியான சிவாஜி கணேசனின் ‘நெஞ்சங்கள்’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டு வெளியான ரஜினியின் ‘எங்கேயோ கேட்ட குரல்’ என்ற படத்திலும் ரஜினிக்கு மகளாக நடித்திருப்பார். இப்படி 45க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, தனது 13 வயதில் தெலுங்கில் நவயுகம் என்ற படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் "ஒரு புதிய கதை" படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படம் மீனாவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து ரஜினியுடன் எஜமான், முத்து, வீரா, குசேலன், அண்ணாத்த ஆகிய படங்களிலும், கமலுடன் அவ்வை சண்முகி, அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும், மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம், தெலுங்கில் நாகர்ஜுனா, சிரஞ்சீவி, வெங்கடேஷ் என முன்னணி தென்னிந்திய நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்துள்ளார் மீனா. கடைசியாக தமிழில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.


மீனாவின் திருமண புகைப்படம்

திருமணம்...

கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக்கொண்டார் மீனா. திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகியிருந்தார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் பிறந்தார். அப்போது மலையாள படமான த்ரிஷ்யத்தில் நடிக்க மீனாவிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் நைனிகா சிறுகுழந்தை என்பதால் மீனா நடிக்க மறுத்துள்ளார். பின்னர் மீண்டும் கேட்க, அவரது கணவர் ஆதரவுடன் மீனா சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். நைனிகா 2016ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.


நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்த மீனாவின் கணவர்...

கணவர் மரணம்...

இதனிடையே எதிர்பாராதவிதமாக கடந்த 2022ம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தார். கணவரின் இழப்பு மீனாவின் வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன்பின் மீனா நடிகர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவை அனைத்தையும் மறுத்தார் மீனா. இந்நிலையில், தனது பிறந்தநாளை ஒட்டி, நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் கலந்துகொண்டார் மீனா. இந்நிகழ்ச்சியில் தனது திரைப்பயணம், குடும்பம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகை சௌந்தர்யா குறித்து மீனா பேசியிருந்தது ரசிகர்களிடையே பெரும் கவனம் ஈர்த்துள்ளது.


சௌந்தர்யா சிக்கிய விமான விபத்தில் இருந்து தப்பிய மீனா

விமான விபத்தில் தப்பித்த மீனா!

நிகழ்ச்சியில் சௌந்தர்யா குறித்து பேசிய மீனா, “எங்களுக்கு இடையேயான போட்டி எப்போதும் ஆரோக்கியமானதாக இருந்தது. அவர் மிகவும் திறமையான மற்றும் அற்புதமான நபர். அவர் எனக்கு நெருங்கிய தோழி. அவரது மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இன்றுவரை, அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் முழுமையாக மீள முடியவில்லை” என்று தெரிவித்தார். தொடர்ந்து, “விபத்து நடந்த நாளில் நானும் சௌந்தர்யாவுடன் செல்லவேண்டியது... எனக்கும் அழைப்பு வந்தது, ஆனால் எனக்கு அரசியல் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் பிடிக்காததால், ஒரு படப்பிடிப்பு இருப்பதாகக் கூறி அதைத் தவிர்த்துவிட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பதைக் கேள்விப்பட்டபோது நான் மிகவும் மனமுடைந்து போனேன்” என தெரிவித்துள்ளார். சௌந்தர்யா இறந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆனாலும், இந்த விபத்து தற்போதுவரை பலரிடமும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தானும் அந்த விமானத்தில் செல்லவேண்டி இருந்ததாக மீனா அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.

இரண்டாம் திருமணம்...

கணவரின் இழப்பு மீனாவை வெகுவாக பாதித்தது. ஆனால் மகள், உறவினர்கள், நண்பர்களால் மெல்ல மெல்ல ஆறுதல் அடையத் தொடங்கினார் மீனா. வித்யாசாகர் இறந்த செய்தி வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்தும் பல ஆதாரமற்ற தகவல்கள் பரவத் தொடங்கின. மீனா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்தார் மீனா. இதனிடையே மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து நடன இயக்குநரும், அவரின் நெருங்கிய தோழியுமான கலா மாஸ்டர் பேசியிருக்கிறார். “மீனாவின் கணவர் இறந்த பிறகு, அவளிடம் நான் 'உனக்கு வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும், உனக்கு சின்ன வயசுதான்' என்று சொன்னால், மீனா என்னை திட்டுவாள். உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க.. வேண்டாம் அக்கா... எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் என மீனா கூறுவாள். நானும் அமைதியாகிவிடுவேன்” என கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஜெகபதி உடனான நிகழ்ச்சியில் தனது இரண்டாம் திருமணம் தொடர்பாக பேசிய மீனா, “என் கணவர் இறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, நான் இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகி வருவதாகவும், எனது திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் கிசுகிசுக்கள் வெளியாகின. இதுபோன்ற கிசுகிசுக்களைக் கேட்டபோது, ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று யோசித்தேன். திரையுலகில் இருந்து விவாகரத்து பெற்ற ஒருவரை நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்ற செய்தியும் வந்தது. இதுபோன்ற செய்திகளைக் கேட்டதும், எல்லாவற்றின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் இதுபோன்ற தவறான செய்திகளை எழுதுபவர்களுக்கு குடும்பங்கள் இல்லை என்று உணர்ந்தேன். இந்த வதந்திகளால் நானும், என் குடும்பத்தினரும் பெரும் வேதனை அடைந்தோம். எனக்கு இரண்டாவது திருமணம் செய்ய விருப்பமில்லை. இப்போது, என் கவனமெல்லாம் என் மகள் நைனிகா மீதுதான்” என தெரிவித்தார்.


கொள்ளை அழகில் நடிகை மீனா

மேலும், அப்போது சில தோல்விப் படங்களை கொடுக்கும் ஹீரோக்கள் வெற்றிப் படங்களை கொடுக்க வேண்டுமென்றால் என்னை அழைப்பார்கள். ஆனால் அந்த வெற்றிக்கு பின் என்னை கண்டு கொள்ளமாட்டார்கள் எனவும், அதுபோல குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு அதே நடிகர்களுக்கு கதாநாயகியாக நடிப்பது ஒருமாதிரி கூச்சமாகவும், என்னது இது என்று தோன்றியதாகவும் மீனா தெரிவித்துள்ளார். மீனாவின் சமீபத்திய இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Updated On 23 Sept 2025 11:30 AM IST
ராணி

ராணி

Next Story