
தளபதி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தவாறு 2026 சட்டமன்ற தேர்தல், விஜய்யை முதலமைச்சர் ஆக்குமோ இல்லையோ, யாதும் அறியான் திரைப்பட இயக்குநர், விஜய்யை முதலமைச்சர் ஆக்கிவிட்டார். சினிமாவில் முதலமைச்சர் என காட்டிவிட்டால், உண்மையில் முதலமைச்சர் ஆகிவிடுவாரா? சர்க்கரை என்று எழுதினால் உண்மையில் இனிக்குமா என்ன? என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இந்த வாரம் முழுவதும் தமிழ் சினிமா மற்றும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய யாதும் அறியான் பட ட்ரெய்லர், விக்னேஷ் சிவன் - நயன்தாரா விவாகரத்து சர்ச்சை, நடிகை அனுஷ்காவின் காதல் கதை உள்ளிட்டவை குறித்து சினி பைட்ஸ் பகுதியில் காண்போம்.
அம்பிகாபதியில் தனுஷ் - கிருதி சனோன்
ரீ-ரிலீஸாகும் அம்பிகாபதி...
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ராஞ்சனா. இப்படத்தின் மூலம் தனுஷ் ஹிந்தியில் அறிமுகமானார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற டைட்டிலில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அவளா அவளா பாரு, அவள் அமராவதியா கேளு எனும் இப்படத்தின் பாடலும், “யாரு மறுபடியும் கஷ்டப்பட்டு, பொறுமையா காதலிச்சு, மனச ஒடச்சிக்கிட்டு’’... எனும் இப்படத்தின் டயலாக்கும் தற்போது வரை இணையத்தை கலக்கி வருகின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறது படக்குழு. நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு காட்சிகள் மெருகூட்டப்பட்டு, புதிய கிளைமேக்ஸில் 4கே தரத்தில் படம் வெளியாக உள்ளது.
பாகுபலியில் பிரபாஸ் & அனுஷ்கா - விரைவில் வெளியாக உள்ள காதி படத்தில் அனுஷ்கா
திருமண வதந்திகள்... காதல் குறித்து மனம் திறந்த அனுஷ்கா...
பாகுபலி படத்தில் இணைந்து நடித்ததில் இருந்து நடிகர் பிரபாஸும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இதுகுறித்த கேள்விகளுக்கு இருவரும் சிரித்தபடியே மறுப்பு தெரிவித்தனர். தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்தான் என்றும், தங்களுக்குள் காதல் உணர்வு இல்லை என்றும் விளக்கமளித்திருந்தனர். இருப்பினும் 40 வயதாகியும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. அனுஷ்காவின் திருமணம் குறித்த சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன.
இந்நிலையில் தன் முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, தன் வகுப்பின் சக மாணவன் தனக்கு ப்ரபோஸ் செய்ததாகவும், அப்போது காதல் என்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும், அந்தக் காதலை தான் ஏற்றுக் கொண்டதாகவும் அனுஷ்கா தெரிவித்துள்ளார். அது ஒரு இனிமையான நினைவு எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தான் ஒருவரை உண்மையாக விரும்பியதாகவும், ஆனால் கடந்த 2008ஆம் ஆண்டே தாங்கள் பிரிந்ததாகவும் அனுஷ்கா தெரிவித்துள்ளார். இதற்கிடையே அனுஷ்கா தற்போது காதி படத்தில் நடித்துள்ளார். அனுஷ்காவின் வித்தியாசமான தோற்றத்தில் உருவாகி உள்ள இப்படத்தை க்ரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளார். யுவி கிரியேஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமினில் விடுவிப்பு!
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த ஜூன் 23ஆம் தேதியும், போதைப்பொருள் சப்ளை செய்ததாக 26ஆம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஜாமின் கோரி இருவரும் சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது, இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து மீண்டும் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், ஜூலை 8ஆம் தேதி இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஜூலை 9ஆம் தேதி இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆசைகள் ஆயிரம் படத்தில் இணையும் நடிகர் ஜெயராம் - அவரது மகன் காளிதாஸ்
25 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக நடிக்கும் தந்தை - மகன்!
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம். சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தனது மகன் காளிதாஸுடன் இணைந்து நடிகர் ஜெயராம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த ‘கொச்சு கொச்சு சந்தோஷங்கள்’ என்ற படத்தில் ஜெயராமுக்கு மகனாக காளிதாஸ் நடித்திருப்பார். அதனைத்தொடர்ந்து தற்போது ஜி.பிரஜித் இயக்கும் ‘ஆசைகள் ஆயிரம்’ படத்தில் மகனுடன் இணைந்து ஜெயராம் நடிக்கிறார். இச்செய்தியை நடிகர் காளிதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையுடன் இணைந்து நடிக்கப் போவதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
உண்மையான வாழ்க்கையை உணர விரும்பினால் ராமின் பறந்து போ பாருங்கள் - நடிகை நயன்தாரா
‘பறந்து போ’ படத்தை பாராட்டிய நயன்தாரா!
ராம் இயக்கத்தில் சிவா நடிப்பில் ஜூலை 4ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பறந்து போ’. இப்படத்தில் அஞ்சலி, மிதுல் ரயான், கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ளார். பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். தரமான கல்வி, சிறந்த வாழ்க்கை முறையை குழந்தைகளுக்கு தருவதாக எண்ணி, தற்போதைய தலைமுறை பெற்றோர்கள் குழந்தைகளை வைத்திருக்கும் நவீன சிறைக்கூடத்திலிருந்து தப்பி, தனக்கு கிடைத்த ஒருநாளை அன்பு (சிறுவன்) எப்படி கழிக்கிறான் என்பதே இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. பெற்றோர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ஒரு படமாக பறந்து போ அமைந்துள்ளது. இந்நிலையில் படம் குறித்து பாராட்டி பேசியுள்ளார் நடிகை நயன்தாரா. படம் தொடர்பாக பேசிய அவர், “இந்த பரபரப்பான உலகை விட்டு விலகி, உண்மையான வாழ்க்கை என்னவென்று அறிய விரும்பினால், உங்கள் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு மலை ஏறுங்கள். அப்படி இல்லை என்றால், இயக்குநர் ராமின் பறந்து போ படத்திற்கு அவர்களை கூட்டிச் செல்லுங்கள். காரணம் இந்த படம் நமக்கு வாழ்க்கையில் என்ன தேவை, எதை இழக்கிறோம் என்பதை அழகாக சொல்கிறது. நான் இதுவரை பார்த்த படங்களில் இது ஒரு இனிமையான படம். இயக்குநர் ராமிற்கும், அவரது படக் குழுவுக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பிரபு சாலமன் - காடன் படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, விஷ்ணு விஷால்
மனசாட்சி இல்லாத பிரபு சாலமன்... இன்றுவரை அவருடன் பேசுவதில்லை - நடிகர் விஷ்ணு விஷால் ஆதங்கம்!
யானைகள் மற்றும் காட்டை மையப்படுத்தி கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காடன். பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்திருப்பர். விஷ்ணு விஷாலின் ப்ளாக்பஸ்டர் மூவியான ராட்சசனை தொடர்ந்து இப்படம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் பிரபு சாலமனுடன் தனக்கு ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “காடன் படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சிவரை நான் இருப்பேன். ராணாதான் முதலில் இறப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இறுதியில் நான்தான் காட்டை பாதுகாப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டன. ஆனால் ரிலீஸின் ஐந்து நாட்களுக்கு முன்புதான், படத்தின் இடைவேளை வரை மட்டுமே என் காட்சிகள் இருப்பதை நான் அறிந்தேன். இதுதொடர்பாக என்னிடம் பிரபு சாலமன் எதுவும் கூறவில்லை. ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பிறகு காடன் ரிலீசானது. இதனால், படத்தை தீவிரமாக புரோமோஷன் செய்துகொண்டிருந்தேன். அப்போதுதான் எனது காட்சிகள் வெட்டப்பட்டது எனக்கு தெரியவந்தது. ஆனாலும் அடுத்த ஐந்து நாட்கள் வரை படத்திற்கு புரமோஷன் செய்துகொடுத்து விட்டுதான் வந்தேன். அப்போது கூட பிரபு சாலமன் அதுகுறித்து என்னிடம் பேசவில்லை. அதிலிருந்து இதுநாள் வரை நான் அவரிடம் பேசவில்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன” என தெரிவித்தார்.
2026-ல் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்ற போஸ்டரால் சர்ச்சை
2026-ல் முதலமைச்சர் விஜய்... சர்ச்சையை ஏற்படுத்திய புதுப்பட ட்ரெய்லர்!
இளம் இயக்குநர் கோபி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘யாதும் அறியான்’ படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜூலை 8ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தின் கதைக்களம் 2026ம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதால், ‘முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு’ என்ற வாசகம் பொருந்திய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள காட்சி ஒன்று படத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்பின் வந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த விஜய், 2026 சட்டமன்ற தேர்தல்தான் தங்கள் இலக்கு என அறிவித்தார். தொடர்ந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் பணியாற்றி வருகிறது தவெக. மேலும் கட்சியின் உட்கட்டமைப்பையும் மேம்படுத்தி வருகின்றனர். கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் காட்சி வெளியானது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா
பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணாக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உட்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தொழிலதிபர் பனிந்திர சர்மா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, மஞ்சு லட்சுமி, பிரகாஷ் ராஜ், நிதி அகர்வால், அனன்யா நாகல்லா மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்ரீமுகி ஆகிய பிரபலங்கள் உட்பட 29 பேர் மீது தெலங்கானா மாநிலம் சைபராபாத் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு தற்போது அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தொடர்ந்து 29 பேரின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விவரங்களை கைப்பற்றி விசாரணையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், தன் மீதான இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 2016-ல் ரம்மி ஆன்லைன் செயலிக்காக விளம்பரம் செய்த பிரகாஷ் ராஜ், அந்த ஒப்பந்தத்தை ஓராண்டிலேயே முடித்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதேபோல 2017ஆம் ஆண்டிலேயே மற்றொரு கேமிங் செயலி தொடர்பான ஒப்பந்தத்தையும் முடித்துக் கொண்டதாக விளக்கமளித்துள்ளார். இதனை மீறி வரும் வழக்குகளையும் சட்டபூர்வமாக சந்திக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் நடித்த அனைத்து விளம்பர செயலிகளும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டவை என ராணா டகுபதியும் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் கூறினால் தவெகவில் பொறுப்பு வகிக்க தயார் என வனிதா விஜயகுமார் தகவல்
தவெக மகளிரணி தலைவியாகும் வனிதா?
நடிகை வனிதா, ராபர்ட் மாஸ்டர் நடிப்பில், ஜோவிகா தயாரிப்பில் உருவான திரைப்படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இப்படம் ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு படக்குழு தீவிர புரமோஷனில் இறங்கியது. இதற்காக வனிதா விஜயகுமார் பல யூடியூப் சேனல்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் நேர்காணல் அளித்தார். அப்போது நிரூபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த வனிதா, விஜய் அழைத்தால் தான் தவெகவில் இணைய தயாராக இருப்பதாக கூறினார். இதனைப் பார்க்கும் இணையவாசிகள் வனிதா தவெகவில் இணைந்தால், அவருக்கு மகளிரணி தலைவர் பதவி வழங்கப்படலாம் என கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலையொட்டி, தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அண்மையில் தவெகவில் மாவட்ட செயலாளர்கள் பகுதி வாரியாக நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வனிதாவின் இந்த பேச்சு கவனம் ஈர்த்துள்ளது.
கணவர் விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் விவாகரத்து?
‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் அறிமுகமாகி கொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, கிட்டதட்ட 7 வருட காதலுக்கு பின் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாய், தந்தையும் ஆனார்கள். தொடர்ந்து படங்கள், குழந்தைகள், சுற்றுலா என நடிகை நயன்தாரா பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விவாகரத்து செய்ய உள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் புயலை கிளப்பி வருகின்றன. இந்த செய்தி எப்படி பரவியது, இதற்கு யார் காரணம் என்று பார்த்தால், நயன்தாராதான் என பலரும் தகவல் தெரிவிக்கின்றனர். நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றுதான் இந்த செய்தி இணையத்தில் பரவ முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அப்படி என்ன அந்த பதிவில் இருந்தது என்றால், “குறைவான அறிவுடைய ஒருவரை நீங்கள் திருமணம் செய்தால், உங்கள் திருமணம் மிகப்பெரிய தவறாக மாறும். உங்கள் கணவருடைய செயல்பாடுகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல. என்னை விட்டு விடுங்கள். நான் ஏராளமான பிரச்சனைகளை உங்களால் அனுபவித்து விட்டேன்” என்பதுதான். ஆனால், இதை உண்மையில் நயன்தாரா பதிவிடவில்லை எனவும், அது போலி பதிவு என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இன்னும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சிவராத்திரி பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக வனிதா மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா
நடிகை வனிதா மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா...
அண்மைக் காலமாகவே தமிழ் சினிமாவில் பழையப்பட பாடல்களை புதுப் படங்களில் பயன்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. அவ்வாறு பயன்படுத்தப்படும் பாடல்களில் பெரும்பாலானவை இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களாகத்தான் இருக்கும். இவ்வாறு தனது அனுமதியின்றி பயன்படுத்தப்படும் தனது பாடல்களுக்கு நஷ்ட ஈடு கேட்டும், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், வழக்கு தொடர்ந்தும் வருகிறார் இளையராஜா. அந்தவகையில் நடிகை வனிதா விஜயகுமார் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அந்த மனுவில், ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் ‛மைக்கேல் மதன காமராசன்' படத்திலிருந்து சிவராத்திரி... பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடலை நீக்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்துள்ள வனிதா, "ராஜா அப்பா ஏன் இப்படி செய்கிறார் என தெரியவில்லை? அவரை நேரில் பார்த்து பேசி அனுமதி பெற்றுதான் பாடலை பயன்படுத்தினேன். இருந்தபோதும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஏன் என்று தெரியவில்லை. அவர் வீட்டுக்கு மருமகளாக சென்றிருக்க வேண்டியவள் நான்" என்று தெரிவித்துள்ளார்.
வயது மூப்பு காரணமாக சரோஜா தேவி மறைவு
கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி காலமானார்!
காளிதாஸ் என்னும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. தனது முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றார். இதைத்தொடர்ந்து 1958ஆம் ஆண்டு, நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் அறிமுகமான முதல் படமும் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து 17 ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த சரோஜா தேவி, 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் உடன் மட்டும் மொத்தம் 48 படங்களில் நடித்துள்ளார். ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ.வி.எம். ராஜன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என பல பட்டப்பெயர்களை கொண்ட சரோஜா தேவி, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஜூலை 14ஆம் தேதி சரோஜா தேவி உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
