இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவீஸும், இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இப்படத்தினை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட அதே வேளையில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள நிகழ்வு அவர்களது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு படத்தை வெளியிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் முடிந்து படத்தின் பெயர் குறித்த அறிமுக வீடியோ சில தினங்களுக்கு முன் படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. 'Thug Life' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் Thug Life-விற்குமான தொடர்பை வித்தியாசமான முறையில் அணுகலாம் வாருங்கள்...

Thug Life என்றால் என்ன?

Thug life என்ற இந்த வார்த்தை இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு புதிதான வார்த்தை ஒன்றும் இல்லை. சமூக வலைதளங்களில் அவ்வப்போது டிரெண்டாகும் பல வீடியோக்களில் இந்த வார்த்தையை அதிகப்படியாக நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால், இந்த 'Thug life' என்பதற்கு உண்மையில் என்ன அர்த்தம் என்றால்? . 'தக்' என்ற சொல்லின் வேர், இந்தியாவில் உருது மொழியின் 'தாக்' என்பதில்தான் துவங்குகிறது. வேறு சிலரோ இது ஹிந்தி வார்த்தை என்றும், இதன் பொருள் 'வஞ்சகர்' அல்லது 'ஏமாற்றுபவர்' எனவும் கூறுகின்றனர். ஆனால் உருது மொழி கூறும் பொருளின்படி 'பின்விளைவை நினைத்துப் பார்க்காத, துணிச்சலான மோசடிக்காரனை' இந்த வார்த்தை குறிப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் இந்த வார்த்தை பிரயோகம் துவங்கிய காலம் என்று பார்த்தால் 1800-களில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இங்கு அறிமுகமானது தான். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்த சமயத்தில், ஒரு கும்பல் அவர்களை அச்சுறுத்தியுள்ளது. இந்திய நெடுஞ்சாலைகளில் பயணிப்போரைக் கொன்று, அந்த கும்பல் உடைமைகளை கொள்ளையடித்ததாக நம்பப்பட்டது. இந்த கும்பலைத் தான் ஆங்கிலேய அரசு தக்குகள் என குறிப்பிட்டார்களாம். கொலை சம்பவத்தை பரம்பரை தொழில்முறையாகவே கொண்டவர்களின் வாழ்கை தான் 'தக்' என அந்த சமயம் கருதப்பட்டது. இந்த தக்குகள் குறித்து 1837இல் வெளிவந்த 'Illustrations of the history and practices of the Thugs' என்ற புத்தகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தை பரம்பரை தொழில்முறையாகவே கொண்ட தக்குகள்

இது ஒருபுறம் இருக்க வேறு சிலரோ, இதே ஆங்கிலேயர் காலத்தில் தக்கீஸ் என்கிற கொள்ளைக் கூட்டத்தில் தக் பெக்ராம் என்கிற கொடூரமான கொள்ளையன் இருந்ததாகவும், அவனது பெயரின் அடிப்படையிலேயே Thug என்ற வார்த்தை முறை வழக்கத்திற்கு வந்ததாகவும் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும், இந்த கூட்டத்தை வேருடன் அழித்தால் தான், இந்தியாவில் நாம் வர்த்தகம் செய்ய முடியும் என்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1830-ல் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தக்குகளை அழித்தொழித்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து, 1839இல் பிலிப் மெடோஸ் டெய்லர் எழுதிய 'Confessions of a Thug' என்ற புத்தகத்தில் தெளிவான தகவல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னரே, 'தக்' என்ற இந்திய வார்த்தை உலகளவில் கவனம் பெற்றது. பிறகு ராப்பர் டூபக் ஷகுர் என்ற நபர் Thug life என்ற வார்த்தை முறையை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினார். இவர் தன் உடலில் Thug life என டாட்டூ போட்டுக் கொண்டதோடு, வாழ்க்கையில் பல துன்பங்களைக் கடந்தும் வெல்பவன் என்பதை அதன் அர்த்தமாகவும் மாற்றிக்காட்டினார். இதன் அடிப்படையிலே நெட்டிசன்கள் மத்தியில் இந்த வார்த்தை டிரெண்டாகி, பலரும் சமூக வலைத்தளங்களில் Thug life வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.


'தக்' குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள்

கமலின் Thug Life Moments

பொதுவாகவே மேலை நாடுகளில், இழப்பதற்கு எதுவுமில்லாத, எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் வாழ்க்கையைத்தான் Thug Life என கூறுகிறார்கள். ஆனால் இங்கோ அதே விஷயத்தை கொஞ்சம் நக்கலும், நையாண்டியுமாக சேர்த்து தலையில் தொப்பி, கண்ணாடி, வாயில் சுருட்டு, கழுத்தில் முறுக்கு செயின் என வித்தியாசமான தோற்றத்தில் ஒருவரை மாற்றி அவரது துணிச்சலை வீடியோக்களாக பதிவிடுகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசனின் சொந்த வாழ்க்கை தொடங்கி தற்போது நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரை பல Thug Life Moments அவரது வாழ்கையில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, சினிமாவில் தனது ஆறு வயதிலேயே ஏ.வி.மெய்யப்ப செட்டியாரை கவர்ந்து, அன்றைய உச்ச குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்த டெய்சி இரானியையே பின்னுக்கு தள்ளி, 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் அறிமுகமாகி தனது Thug Life-ஐ தொடங்கிய கமல்ஹாசன், பின்னர் ஜெமினி கணேசனுடன் மட்டும் அல்லாமல் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பிற உச்ச நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்து அசத்தினார். 1972 ஆம் ஆண்டு வெளிவந்த 'குறத்தி மகன்' படத்தில் ஹீரோவுக்கு அண்ணனாக நடித்து சறுக்கிய போது, இனிமே இவன் ஹீரோ ஆகமாட்டான் இனி ஜீரோ தான் என்ற மனநிலைக்கு வந்தவர்களை, தன் அடுத்தடுத்த படங்களின் வெற்றியின் மூலம் வாயடைத்தார் கமல். பின்னர் ஹீரோ என்ற அடையாளம் கிடைத்த போதும், 'மன்மதலீலை', 'உணர்ச்சிகள்', 'அபூர்வராகங்கள்' போன்ற விரசமான கதைகளில் நடித்ததால், விடல பசங்க படம்தா இவனுக்கு ஒத்து வரும் என பேசியவர்களையே ஆச்சரியப்பட வைக்கும் விதமாக '16 வயதினிலே' படத்தில் நடித்து, நடிகன் டா... என்ற பெயர் வாங்கினார். பிறகு கோவணம் கட்டியவன் இனி எங்கு இவனுக்கு பேண்ட் எல்லாம் செட் ஆகப் போகிறது என நினைத்த நேரத்தில் தான், பேண்ட் என்ன, கோட் சூட்டே போட்டு அசத்துவேன் என 'சிகப்பு ரோஜாக்கள்' போன்ற படங்களில் அழகான உடையணிந்து பல அழகிகளை கவர்ந்தார் கமல்.


கமல்ஹாசனின் Thug Life Moments திரைப்படங்கள்

இப்படி தன் துவக்க காலத்திலேயே பல Thug Life Moments-ஐ சந்தித்துள்ள கமல், பின்னர் அவர் கண்ட ஒவ்வொரு வளர்ச்சியிலும் பல ஆச்சரியங்களை நிகழ்திக்காட்டினார். அந்த வரிசையில் உலகில் அதிக விருதுகள் வாங்கிய நடிகர் என்ற பெருமை கமலுக்கு இருப்பதோடு, ஹிந்தி திரையுலகில் தன் முதல் படத்திலேயே அதிர்வலையை ஏற்படுத்திய முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இதுதவிர இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படங்களில் அதிக அளவிலான முறை பரிந்துரைக்கப்பட்டது கமல் படங்கள்தான். 'தசாவதாரம்' படத்தில் 10 வேடங்களில் நடித்து 10 வித்தியாசமான பின்னணி குரல் கொடுத்திருந்த கமல் உலக அரங்கில் இதன் மூலம் அடையாளம் பெற்றார். மேலும் இந்தியாவிலேயே அதிக பிலிம் ஃபேர் விருது வாங்கிய நாயகன், தென் இந்தியாவிலேயே அதிக தேசிய விருது பல்வேறு பிரிவுகளில் வாங்கிய நாயகன் என்ற பெருமையும் இவருக்கு இருக்கிறது. இதில் குறிப்பாக இனி எனக்கு பிலிம் ஃபேர் விருது கொடுக்காதீர்கள், வேறு திறமையான நடிகருக்கு வழங்குங்கள் என கமல்ஹாசனே கடிதம் எழுதும் அளவிற்கு, அவர் வீட்டு அலமாரியை பிலிம் ஃபேர் விருதுகள் நிறைத்துள்ளன. அதேபோல் ஒவ்வொரு முறையும் தமிழ் சினிமா எப்போதெல்லாம் தடுமாற்றங்களை சந்திக்கிறதோ, அந்த நேரங்களில் எல்லாம் 'அபூர்வ சகோதரர்கள்', 'நாயகன்', 'தேவர் மகன்', 'இந்தியன்' போன்ற பல அற்புதமான படைப்புகளை தந்து தேசியளவில் தமிழுக்கு கவனம் பெற்று தந்தவர் கமல்ஹாசன் தான். ஏன் கடந்த ஆண்டு கூட கன்னடத்தில் 'கே.ஜி.எப்', தெலுங்கில் 'ஆர் ஆர் ஆர் ' போன்ற படங்கள் வெளிவந்து இந்தியளவில் கவனம் பெற்று வந்த நேரத்தில், தமிழ் சினிமா மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியாமல் தடுமாறி வந்தது. அப்போது கூட கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் வெளிவந்துதான் தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.


'நாயகன்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரைப்பட காட்சிகள்

மீண்டும் சக்திவேல் நாயக்கர்...

நடிகர் கமல்ஹாசன் சினிமா என்று மட்டும் அல்ல அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியலிலும் கூட அவர் நடந்து கொண்ட விதம் மற்றும் பேசிய கருத்துக்கள் பல சமயம் Thug Life நிகழ்வுகளாக மாறியுள்ளது. இருப்பினும் ஏற்கனவே கூறி இருந்த 'தக்' என்ற சொல்லுக்கு பொருளாக, ஒரு கேங்ஸ்டர் கூட்டத்திற்கு தலைவனாக நடித்து கமல்ஹாசன் அசத்திய படம் என்று பார்த்தால், அது 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'நாயகன்' திரைப்படமாகத்தான் இருக்க முடியும். இருந்தும் இந்தப் படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் ஆங்கிலேயரை அச்சுறுத்திய கொலைவெறி பிடித்த கூட்டம் போல் அல்லாமல், ராபின் ஹூட் பாணியில் இருப்பவர்களிடம் இருந்து பறித்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் பாசிட்டிவான கேங்ஸ்டர் கூட்டத் தலைவனாக தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. மும்பையில் வாழ்ந்த, வரதராஜ முதலியார் என்ற தமிழரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான இப்படத்தில் வேலு நாயக்கராக நடித்த கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. குறிப்பாக 'கேங்ஸ்டர்' படங்களுக்கெல்லாம் முன்னோடியான இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்ததற்கு காரணம், படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்கள்தான். பொதுவாகவே கமல் படங்களில் உள்ள வசனங்கள் Thug Life நிகழ்வை போல் வெட்டப்பட்டு அடிக்கடி இணையதளங்களில் வலம் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒரு படம் முழுவதுமே Thug Life Moments என சொல்லும்படியான வசனங்களை காட்சி நெடுங்கிலும் பார்க்க முடிந்த ஒரே படம் என்று கூறினால் அது 'நாயகன்' திரைப்படமாகத்தான் இருக்க முடியும் . இதற்கு உதாரணமாக நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்ல, அவங்கள நிறுத்த சொல்லு நா நிறுத்துறேன்..!, நீங்க நல்லவரா? கெட்டவரா? போன்ற வசங்களை அடிக்கோடிட்டு சொல்லலாம்.


கமலின் 'Thug Life' பட ப்ரோமோ காட்சிகள்

இதில் குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸில் தன் மகளின் மகனை வேலு நாயக்கர் கோர்ட்டில் சந்திக்கும்போது, 'உன் பெயர் என்ன?' என கேட்பார். அதற்கு அந்த சிறுவன் 'வேலு... சக்திவேலு' என சொல்லும் போது, என் பெயரும் அதுதான் என கூறி கமல்ஹாசன் நெகிழ்வார். ஆனால் அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்காது, 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த சக்திவேலு என்கிற பெயர், மற்றுமொரு அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்த போகிறது என்று. சில தினங்களுக்கு முன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, நவம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு, கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள 'Thug Life' படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியானது. அதில் கமல் வெட்டவெளியில் உடல் முழுவதும் துணியை சுற்றிக்கொண்டு நின்றவாறே, என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்.... காயல்பட்டினக்காரன் என கூறுவது போல முதல் காட்சி வடிவமைக்கப்படிருந்தது. பிறகு அவரை எதிரிகள் தாக்க வரும்போது, தன் மேல் இருந்த துணியை தூக்கியெறிந்து விட்டு, அதற்கு பதில் தாக்குதல் நடத்தும் படி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக 'பொறக்கும் போதே என் தலையில எழுதி வச்சுட்டாங்க, சக்திவேல் நாயக்கன் ஒரு கிரிமினல், தக், யாகுசான்னு.... யாகுசான்னா ஜப்பான் மொழியில் கேங்ஸ்டர் என்று அர்த்தம்’ என கமல் சொல்லும் போதே 'நாயகன்' படம் நினைவுக்கு வந்து நம் உடலும் சிலிர்த்து போனது. இந்த ப்ரோமோவை பார்த்த சிலர், மீண்டும் சாதிப் பெயரை பயன்படுத்தி கமல்ஹாசன் நடிப்பது தவறு என ஒருபுறம் குற்றம் சாட்ட, வேறு சிலரோ இது இந்த படத்தின் தாக்கம், அந்த படத்தின் தாக்கம் என இப்போதே பேச துவங்கியுள்ளனர். இருப்பினும் கமல் ரசிகர்களோ, படத்தின் டைட்டில் ப்ரோமோவை ஒரு புறம் கொண்டாடி வர, படத்தின் பெயர் 'Thug Life' என்பது தற்காலிக பெயராகத்தான் இருக்கும் என சிலர் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும், இன்று 'Thug Life' என்கிற வார்த்தை நையாண்டி தனங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், உண்மையான 'தக்' மனிதர்களின் வாழ்கை எப்படி ரத்தமும், சதையுமாக ஆபத்து நிறைந்த பயணமாக இருக்கும் என்பதை இப்படத்தில் கமல்ஹாசன் நிச்சயம் காட்ட முயல்வார் என நாம் நம்பலாம்.

Updated On 20 Nov 2023 6:24 PM GMT
ராணி

ராணி

Next Story