தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா குறித்து இழிவான முறையில் நடிகர் மன்சூர்அலிகான் பேசியிருக்கும் வீடியோவானது மக்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

மன்சூர்அலிகான், இவர் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களோடு நடித்து வந்தார். பின் நாட்கள் செல்ல செல்ல சினிமாவில் அவருக்கு இருந்த பிரபலமானது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கிய நிலையில், அவருக்கான திரைப்பட வாய்ப்புகளும் குறுகியது. அடுத்த கட்டமாக அரசியலில் களமிறங்கினார். அரசியலில் ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சியில் இணைந்த இவர் பின்பு சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட துவங்கி, டெபாசிட் கூட வாங்க முடியாமல் அரசியலில் தோல்வியைத் தழுவினார்.

சினிமா என்ட்ரியும் சர்ச்சையும்

பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள மன்சூர்அலிகான், கடந்த மாதம் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜயின் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இந்த நிலையில், நேர்க்காணல் ஒன்றில் பங்கேற்ற இவர் நடிகை திரிஷா குறித்த கேள்விக்கு சர்ச்சையான கருத்துகளை கூறியிருந்தார். திரிஷா பற்றி பேசும்பொழுது “இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. நானும் திரிஷா இருக்கிறார்.. லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம்.. அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு.. ரோஜா ஆகியோருடன் அப்படியான காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால், இப்போதெல்லாம் படங்களில் இதுபோன்ற பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை” என்று இழிவான முறையில் அவர் பேசியிருக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு பொது மக்களிடையே விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

திரிஷாவின் பதிலடி


மன்சூர்அலிகானின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் கோவமடைந்த திரிஷா, அவரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “‘நடிகர் மன்சூர்அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அவரின் பேச்சானது ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு’ என்ற பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த சர்ச்சையில் திரிஷாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், குஷ்பு, மாளவிகா மோகன் என பல திரைப்பிரபலங்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மன்சூர் அலி கானின் பேச்சுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

மன்சூர் அளித்திருக்கும் விளக்கம்

இவ்வாறு மென்மேலும் சர்ச்சைக்கு உள்ளாகும் திரிஷா குறித்த பிரச்சினைக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மன்சூர்அலிகான். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நான் சக நடிகைகளுக்கு எப்போதும் மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை தவறாக கட் செய்து திரிஷாவிடம் காண்பித்து கோபப்பட வைத்திருக்கிறார்கள். லியோ திரைப்படத்தின் பூஜையின் போதும் கூட என்னுடைய இரு பெண் குழந்தைகளும் திரிஷாவின் ரசிகைகள் என்றுதான் கூறி இருந்தனர். என்னோடு நடித்த நடிகைகளில் பலர் எம்.பி, எம்.எல்.ஏ போன்ற உயர் பதவிகளில் தான் இருக்கின்றனர். ஆனால் இந்த நாள் வரை அவர்களுக்கும், எனக்கும் கூட எந்த ஒரு சர்ச்சையும் வந்ததே இல்லை. ஆனால் தற்போது நடப்பது அனைத்துமே எனக்கு எதிராக, சிலரின் அரசியல் சூழ்ச்சியால் நடக்கிறது.” என்று விளக்கியுள்ளார்.


Updated On
ராணி

ராணி

Next Story