இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வடிவேலு பட காமெடியில் வரும் ‘வாமா மின்னலு’ டயலாக்கை போல, நடிகர் விஜய்யின் ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமாகி, பின் காணாமல் போனவர்தான் நடிகை வனிதா விஜயகுமார். பின் திருமணம், குழந்தைகள், விவாகரத்து என குடும்ப விவகாரங்களில் சிக்கிய இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் கவனம் பெற்றார். அதனைத்தொடர்ந்து தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது வனிதா விஜயகுமார், அவரது முன்னாள் காதலர் ராபர்ட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இப்படத்தை வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது. இந்நிலையில் தன் மகள் ஜோவிகாவும், நடிகை தேவையானி மகள் இனியாவும் ஒன்றா என வனிதா விஜயகுமார் கேள்வி எழுப்பியுள்ளது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. எதற்காக திடீரென இந்த பேச்சு வந்தது, வனிதா விஜயகுமார் இவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.


சந்திரலேகா படத்தில் நடிகர் விஜய் & வனிதா விஜயகுமார் - தற்போது வனிதா விஜயகுமார்

சந்திரலேகாவில் அறிமுகமான நடிகை வனிதா விஜயகுமார்...

பிரபல நடிகர் விஜயகுமாருக்கும், நடிகை மஞ்சுளாவிற்கும் பிறந்தவர்தான் வனிதா. விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் முதல் மகள்தான் இவர். இவரின் சகோதரிகளான ப்ரீத்தா, ஸ்ரீதேவியும் நடிகைகள் ஆவர். மேலும் அனிதா, கவிதா, அருண் விஜய் என விஜயகுமாரின் முதல் மனைவிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் அருண் விஜய்யும் நடிகர் ஆவார். இப்படி சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த வனிதா, நடிகர் விஜய்யின் சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் மாணிக்கம் என்ற படத்தில் நடித்தார். பின்னர் அவ்வளவாக சினிமாவில் தலைக்காட்டவில்லை.


இரண்டாவது கணவர், காதலர் மற்றும் மூன்றாவது கணவருடன் நடிகை வனிதா விஜயகுமார்

திருமண வாழ்க்கை...

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த வனிதா, தனது 18 வயதில் சீரியல் நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு பிறகு திரைத்துரையில் இருந்து வெளியேறிய வனிதா சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக, ஆகாஷுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இதனைத்தொடர்ந்து தொழிலதிபர் ஆனந்த் ஜெயராமன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவருடன் ஜெயந்திகா என்ற மகளும் உள்ளார். 2010ஆம் ஆண்டு ஆனந்த் உடனும் விவாகரத்து செய்துக்கொண்ட வனிதா, பின்னர் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டரை காதலித்தார். இவர்களும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய, 2020ஆம் ஆண்டு புகைப்பட கலைஞரான பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பீட்டர் பாலின் முதல் மனைவி தாங்கள் முறையாக விவாகரத்து பெறவில்லை எனக்கூறி, வழக்கு தொடர்ந்தார். இதனால் பீட்டர் பாலை தனது கணவராக ஏற்க மறுத்த வனிதா, அவருடனான உறவை முறித்துக் கொண்டார். தொடர் திருமணங்களால் வனிதா கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். ஒரு சமூகத்தில் ஆண் இல்லாமல் ஒரு பெண் வாழ்வது எளிதல்ல என ஆரம்ப காலக்கட்டத்தில் விமர்சனங்களுக்கு விளக்கமளித்த அவர், இப்போதெல்லாம் 4 என்ன 40 திருமணம் செய்துக்கொள்வேன், இது என் வாழ்க்கை என கூறிவருகிறார்.


நடிகர் விஜயகுமார் மற்றும் மகள் வனிதா விஜயகுமார்

அப்பா விஜயகுமாருடன் மோதல்...

ஆகாஷூடன் விவாகரத்து பெற்ற உடன் குழந்தைகள் விவகாரத்தில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஆகாஷ் வழக்கு தொடர மகன் ஸ்ரீஹரி அப்பாவுடனும், மகள் ஜோவிகா அம்மாவுடனும் இருக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே விஜயகுமாருக்கும், வனிதாவிற்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. தனது அம்மாவுடைய சொத்துக்களை தனது அப்பாவான விஜயகுமார் ஏமாற்றி, தனது முதல் மனைவியின் மகனான அருண் விஜய் பெயருக்கு மாற்றி எழுதியதாக வனிதா குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது இந்த பிரச்சனை மிகவும் பூதாகரமாக வெடித்தது. வனிதாவை விஜயகுமார் அடித்த காட்சிகள் எல்லாம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. போலீசாரும் தன்னை அடித்து இழுத்து சென்றதாக வனிதா கூறினார். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கே சென்று வனிதா பாதுகாப்பு கோரினார். மேலும் அப்போதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சென்றும் பாதுகாப்பு கோரினார். ஒரு பிரபல குடும்பத்தின் பெண்ணிற்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண்களின் பாதுகாப்பு என்ன என பொதுமக்கள் பலரும் அப்போது வனிதாவிற்கு ஆதரவாக பேசினர். ஆனால் இந்த விவகாரத்தில் வனிதாவின் அம்மாவான மஞ்சுளாவோ, அவரின் உடன்பிறந்த சகோதரிகளான ப்ரீத்தா, ஸ்ரீதேவி கூட வனிதாவிற்கு ஆதரவாக பேசவில்லை. அவர் தனது வயிற்றில் பிறந்ததே பாவம் என, வனிதாவின் தாய் மஞ்சுளாவே கூறினார். இதன்பிறகு வனிதா குறித்து தங்கள் குடும்பம் எப்போதும் பேசாது எனவும் விஜயகுமார் ஊடகங்களில் தெரிவித்தார். அதைப்போலவே இன்றுவரை வனிதா குறித்து விஜயகுமார் குடும்பம் பேசுவதும் இல்லை, அவரை கண்டுக்கொள்வதும் இல்லை.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார்

பிக்பாஸ் மூலம் திரும்பிய இயல்பு வாழ்க்கை...

திருமணம், விவாகரத்து, குடும்பத்தினருடன் மோதல் என பிரச்சனை வளையத்திற்குள் சிக்கிக்கொண்ட வனிதா பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் முழுமையாக குணமடைய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். இப்படி வாழ்க்கை சென்றுக் கொண்டிருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட வனிதா, 2வது போட்டியாளராக வெளியேறினார். ஆனால் தனது அதிகாரத் தோரணை, மற்றும் நேருக்கு நேர் பேசும் சுபாவம் என ரசிகர்களின் ஓட்டுகளை வாங்கிய வனிதா, மீண்டும் வைல் கார்டு எண்ட்ரியில் உள்ளே நுழைந்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது, இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம்தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்தப் படத்தை வனிதாவின் மூத்த மகளான ஜோவிகாதான் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோதுதான் தனது மகளையும், தேவையானி மகளையும் ஒப்பிட்டு பேசுவது குறித்து வனிதா ஆதங்கம் தெரிவித்தார்.


மகள் ஜோவிகாவுடன் நடிகை வனிதா விஜயகுமார் - மகள் இனியாவுடன் நடிகை தேவையானி

தாவணி அணிந்த ஜோவிகா...

தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள ஜோவிகா தனது மிஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றிற்கு, தாவணி அணிந்து வந்திருந்தார். அந்த உடையில் ஜோவிகாவின் இடுப்பு தெரிந்தது. இதனை விமர்சித்த இணையவாசிகள், தேவயானி மகள் இனியாவும்தான் தாவணி போடுகிறார். அவர் இப்படியா இடுப்பு தெரியுமாறு தாவணி போடுகிறார் என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் தேவயானி வளர்ப்பு குறித்தும், வனிதாவின் வளர்ப்பு குறித்தும் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்தனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள வனிதா, முதலில் ஒருவரை ஒருவர் ஒப்பீடு செய்வது ஏன்? அதிலும் என் மகளையும், தேவயானி மகளையும் ஒப்பீடு செய்து பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பினார். முதலில் தன்னுடன் தன் மகளை ஒப்பிட்டு பேசவேண்டாம் எனவும், தானும் தேவயானியும் நல்ல நண்பர்கள் எனவும் தெரிவித்தார். வனிதாவை தொடர்ந்து பேசிய ஜோவிகா, ஜீன்ஸ் போட்டால் ஜீன்ஸா என்பது, தாவணி போட்டால் குறை கண்டுபிடிப்பது, என்னதான் செய்வது என கேள்வி எழுப்பினார்.


ஜோவிகா - வனிதா விஜயகுமார்

ஜோவிகா காதலிக்கமாட்டாள்...

மேலும் பேசிய வனிதா, தனது மகள் காதலிக்க மாட்டாள் எனவும், வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை பார்த்தே ஜோவிகா இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். ஜோவிகா என்னை ஒரு பெரிய முட்டாள் என்றுதான் நினைச்சுட்டு இருக்காள். எமோஷனலாக பார்த்தால் அது கரெக்ட்தான். இப்போது அதெல்லாம் அவளுக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டது. அட்லீஸ்ட் ஜோவிகாவுக்கு எந்த தவறும் நடக்காதுல்ல எனவும் வனிதா கூறினார்.

Updated On 8 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story