இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘ஜோ’ என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்ட ஜோதிகா, கிட்டத்தட்ட 7 ஆண்டுகளே திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு, கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘36 வயதினிலே’ படம் மூலம் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா. அதன்பிறகு பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையே தேர்வு செய்து நடித்துவருகிறார். இந்நிலையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்திலும் ‘காதல் தி கோர்’ திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருக்கிறார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஜோதிகாவின் நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நடிகை ஜோதிகாவின் திரைப்பயணம் மற்றும் காதல் வாழ்க்கை குறித்து ஓர் தொகுப்பை காணலாம்.

ஜோதிகாவின் திரைப்பயணம் - ரீவைண்ட்!

மும்பையில் பிறந்து வளர்ந்த ஜோதிகா, ‘டோலி சஜா கே ரக்னா’ என்ற திரைப்படம் மூலம் முதலில் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். அங்கு சரியான வரவேற்பு இல்லாததால் கோலிவுட் பக்கம் திரும்பியவருக்கு, 1999ஆம் ஆண்டு அஜித் - சிம்ரன் நடிப்பில் வெளியான ‘வாலி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுல அறிமுகம் கிடைத்தது. அந்தப் படத்தில் சோனா என்ற அஜித்தின் கற்பனை கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர்கொடுத்திருப்பார் ஜோதிகா. இத்திரைப்படத்திற்காக விருதுகளையும் வென்றார். அடுத்த படமே சூர்யாவுடன்தான். ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து ரொமான்ஸ் செய்ய, அது நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்தது. காதல் ஒருபுறம் இருக்க, ‘குஷி’, ‘ரிதம்’, ‘தெனாலி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘பிரியமான தோழி’, ‘தூள்’ போன்ற படங்கள் மெகா ஹிட்டடித்தன.


நடிகை ஜோதிகாவின் ஆரம்பகால திரைவாழ்க்கை

சூர்யா - ஜோதிகா காதல்!

ஒருபுறம் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருந்தாலும், மற்றொருபுறம் சூர்யாவுடனான காதல் சீக்ரெட்டாக தொடர்ந்து கொண்டிருக்க, ‘காக்க காக்க’ திரைப்படம் இவர்களின் காதலுக்கு கைகொடுத்தது. இருவரும் வெவ்வேறு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் ஜோதிகாவின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே ஆட்களை அனுப்பி நலம் விசாரிப்பாராம் சூர்யா. இதை ஒரு பேட்டியில் அவரே தெரிவித்திருந்தார். ‘திருமலை, ‘மன்மதன்’ போன்ற படங்கள் ஜோதிகாவின் மார்க்கெட்டை உயரத்திற்கு கொண்டுசெல்ல, மீண்டும் ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘ஜில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்களில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து தங்கள் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியதன்மூலம் திருமணத்திற்கு முன்பே, இருவரும் தங்களை ‘சிறந்த ஜோடி’ என நிரூபித்தனர். இதனிடையே, ரஜினி - ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ‘சந்திரமுகி’ திரைப்படம் இவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. சூர்யா-ஜோதிகா காதலுக்கு, சூர்யா வீட்டிலிருந்து இதனிடையே எதிர்ப்பும் கிளம்பியது. நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, காதலை ஏற்கும்வரை காத்திருக்கிறோம் என்று கூறி 4 ஆண்டுகள் இருவரும் காத்திருந்தனர். இருவரின் உறுதியை பார்த்த சிவக்குமார் ஒருவழியாக காதலை ஏற்றுக்கொள்ளவே 2006ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

சினிமாவுக்கு ப்ரேக் டு ரீ - என்ட்ரி!

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என சிவக்குமார் கட்டுப்பாடுகள் விதித்துதான் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார் என்று செய்திகள் வெளியான நிலையில், அதனை உறுதி செய்யும்விதமாக ‘மொழி’ திரைப்படத்திற்கு பிறகு ஜோதிகா நடிக்கவில்லை. தொடர்ந்து சூர்யா திரைப்படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்க, இந்த தம்பதியருக்கு தியா, தேவ் என இரு குழந்தைகள் பிறந்தனர். அவர்களை வளர்ப்பதில் முழு கவனத்தையும் செலுத்திவந்த ஜோதிகா, தான் ஒரு நடிகை என்பதை தனது குழந்தைகளுக்கு சொல்லாமலேயே வளர்த்ததாகவும், மேலும் குறிப்பிட்ட வயதுவரை, தான் நடித்த படங்களை குழந்தைகளை பார்க்கக்கூட விடவில்லை என்றும், ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் 2013ஆம் ஆண்டு ‘2டி என்டர்டெயின்மென்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தைத் தொடங்கினார் சூர்யா.


கணவர் சூர்யாவுடன் ஜோதிகா

அந்த நிறுவனம் தயாரித்த முதல் படமான ‘36 வயதினிலே’ திரைப்படம் மூலம் 2015ஆம் ஆண்டு மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா. இத்திரைப்படம் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ என்ற மலையாள திரைப்படத்தின் தழுவல் என்றாலும், கதாநாயகியை மையப்படுத்திய கதாபாத்திரம் என்பதால் தமிழிலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’ போன்ற பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வுசெய்து நடித்துவந்த ஜோதிகா, ஒருபுறம் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வந்தார். ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தயாரித்ததற்காக தேசிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக, ‘காதல் தி கோர்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ஜோதிகா.

என்ன சொல்கிறது காதல் தி கோர்?

2007ஆம் ஆண்டு ‘ராகிலிபட்டு’ மற்றும் 2009ஆம் ஆண்டு ‘சீதா கல்யாணம்’ ஆகிய இரண்டு மலையாளத் திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜோதிகா அதன்பிறகு தற்போது ‘காதல் தி கோர்’ படம்மூலம் மலையாள திரையுலகில் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார். மலையாளத்தில் மெகா ஹிட்டடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபிதான், ‘காதல் தி கோர்’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் ஜோதிகா ஜோடி சேர்ந்துள்ள முதல் படம் இது. இதை மம்மூட்டி நிறுவனமே தயாரித்திருக்கிறது. அரசு ஊழியராக இருந்து ஓய்வுபெற்ற ஜார்ஜ், தனது மனைவி ஓமணா மற்றும் மகளுடன் வசித்துவருகிறார். இவர் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கும் சமயத்தில், மனைவி ஓமணா விவாகரத்துக்கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். விவாகரத்துக்கு ஓமணா முன்வைக்கும் காரணம் அனைவரையும் அதிரச்செய்கிறது. தனது கணவர் ஜார்ஜ் மேத்யூ ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதை அவர் கூறும் தருணங்கள் மற்றும் இதனால் ஜார்ஜ் என்ன மாதிரியான மனநிலைக்கு தள்ளப்படுகிறார்? தன்பாலின சேர்க்கையாளர்களின் குடும்பத்தினர் அவர்களை எப்படி எதிர்கொள்கின்றனர்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜியோ பேபி.


பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களில் ஜோதிகா

மேலும் மம்மூட்டியும், ஜோதிகாவும் அமைதியான காட்சிகளில்கூட வலி மற்றும் உணர்ச்சிகளை தங்களது ஆத்மார்த்தமான நடிப்பின்மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். மவுனம்கூட அழகிய மொழி, அதன்மூலம் எத்தகைய உணர்வையும் பரிமாற முடியும் என்பதை ஆழமாக உணர்த்துகிறது ‘காதல் தி கோர்’. முதன்முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார் மம்மூட்டி. காதலுக்கு மரியாதை கொடுக்கும் மனைவியாக ஜோதிகாவும் அவருடன் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்.

நவம்பர் 23ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகினர் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகைகள் சமந்தா, ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, சித்தார்த் மற்றும் நடிகர் சூர்யா போன்றோர் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இந்த ஆண்டின் திரைப்படம். அழகான மற்றும் சக்திவாய்ந்த இந்த படத்தை பாருங்கள். மம்மூட்டி சார் நீங்கள் என்னுடைய ஹீரோ. உங்களுடைய இந்த நடிப்பிலிருந்து என்னால் நீண்ட நாட்களுக்கு வெளிவர முடியாது. ஜோதிகா லவ் யூ. ஜியோ பேபி லெஜண்ட்” என குறிப்பிட்டுள்ளார். நடிகர் சூர்யா தனது இன்ஸ்டா பதிவில், “அழகான மனங்கள் ஒன்றிணைந்தால்தான், ‘காதல் தி கோர்’ போன்ற திரைப்படங்கள் கிடைக்கும்.

இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்த படக்குழுவுக்கும், நல்ல சினிமா மற்றும் உத்வேகத்தைத் தூண்டும் கதைகள்மீது காதல்கொண்ட மம்மூட்டி சாருக்கும் எனது பாராட்டுகள்! ஜியோபேபியின் அமைதிகூட ஆழமாக பேசுகிறது! எனது ஓமணா ஜோதிகா, காதல் என்ன என்பதை வெளிக்காட்டி மனங்களை வென்றுள்ளார்” என்று பாராட்டியுள்ளார். இதுவரை இதுபோன்ற கதைக்களங்களை காணாத ரசிகர்கள் பலரும் வெகுவாக இப்படத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் இதுபோன்ற சிறந்த கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ஜோதிகா தனது செகண்ட் இன்னிங்க்ஸை சிறப்பாக கையாள வாழ்த்துகள்!

Updated On 11 Dec 2023 6:45 PM GMT
ராணி

ராணி

Next Story