இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஜெமினி கணேசனுக்கு “காதல் மன்னன்” என்று பட்டம் கொடுத்தது யார்? போட்டியின் முடிவை அவரே அறிவிக்கிறார். பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலிகள் யார்? படித்து பாருங்கள்!.

நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதையொட்டி என் ரசிகர்கள் ஒன்றுகூடி சென்னையில் வெள்ளி விழா கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த வெள்ளிவிழாவை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு பரிசு கொடுக்க நான் முன் வந்தேன்.

காதல் மன்னன்

என்னை எல்லோரும் “காதல் மன்னன்” என்று அழைக்கிறார்கள். “காதல் மன்னன்” என்றால், அது என்னைக் குறிப்பிடுவதாக ஆகிவிட்டது. இந்த “காதல் மன்னன்” என்ற பெயர் எனக்கு எப்படி ஏற்பட்டது? யார் இந்தப் பட்டத்தை எனக்கு வழங்கினார்கள்? அல்லது, யார் முதல் முதல் என்னை “காதல் மன்னன்” என்று அழைக்கத் தொடங்கினார்? இது எனக்கே தெரியாது!. இதைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தேன்.“காதல் மன்னன்” என்ற பட்டத்தை எனக்கு யார் முதலில் வழங்கியது? இதை சொல்லும் ரசிகர்களுக்கு நான் பரிசு கொடுக்கப் போகிறேன் என்று அறிவித்தேன்.


இளமையில் நடிகர் ஜெமினி கணேசன்

கடிதங்கள்

இந்த அறிவிப்பு பத்திரிகைகளில் வெளிவந்ததுமே, எனக்கு ரசிகர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து குவிந்து விட்டன. அந்தக் கடிதங்களைப் படித்துப் பார்த்து, சரியான பதிலை தேர்ந்து எடுக்கும் முன் நான் திணறிப் போய் விட்டேன்!

கல்யாணப்பரிசு

“கல்யாணப்பரிசு” படத்தில் நடித்த பின்தான் “காதல் மன்னன்” என்ற பட்டம் எனக்கு கிடைத்தது என்று பல ரசிகர்கள் எழுதியிருக்கிறார்கள். “கல்யாணப்பரிசு” படத்தின் நூறாவது நாள் விழா மதுரையில் கொண்டாடப்பட்ட பொழுது, அங்குள்ள ஜெமினி கணேசன் ரசிகர் மன்றம் இந்தப் பட்டத்தை எனக்கு வழங்கியதாக சில ரசிகர்கள் சொல்லுகிறார்கள். வேறு சிலர், சென்னையில் நடந்த “கல்யாணப்பரிசு” நூறாவது நாள் விழாவில், “இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் காதல் மன்னன்தான்” என்று டைரக்டர் ஸ்ரீதர் என்னைப் பாராட்டி பேசியதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இராமநாதபுரம் மாவட்டம் வத்திராயிருப்பு ஜெமினி கணேசன் ரசிகர் மன்றம் இந்தப் பட்டத்தை எனக்கு வழங்கியதாக ஒரு ரசிகர் எழுதியிருக்கிறார்.


“கல்யாணப்பரிசு” படத்தில் விஜயகுமாரி மற்றும் சரோஜா தேவியுடன் ஜெமினி கணேசன்

சிவாஜி கணேசன்

எனக்கு, “காதல் மன்னன்” பட்டத்தை கொடுத்தவர் சிவாஜி கணேசன் என்று சில ரசிகர்கள் எழுதியிருக்கிறார்கள். “பாசமலர்” படத்தில் ஒரு காட்சியில் “வாப்பா காதல் மன்னா” என்று சிவாஜி கணேசன் என்னை அழைக்கிறார். அதேபோல, “பார்த்தால் பசிதீரும்” படத்தில், ஒரு காட்சியில், “தமிழ் நாட்டு காதல் மன்னா” என்கிறார். இந்த இரண்டு படங்களையும் ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

நாகேஷ்

“சுமைதாங்கி” படத்தில் நாகேசும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து எனக்கு “காதல் மன்னன்” பட்டத்தை வழங்குகிறார்கள். இதேபோல “பாக்கிய லட்சுமி” படத்தில் ‘டணுல்’ தங்கவேலு “காதல் மன்னன்” என்று எண்ணை பாராட்டுகிறார். புராணப் படமான “வீர அபிமன்யூ” வில் கூட கிருஷ்ண வேடதாரியான என்னைப் பார்த்து, கீதாஞ்சலி ஆடிப்பாடிக்கொண்டு, “காதல் மன்னா வா வா” என்று அழைக்கிறார். இதையும் குறிப்பிட்டு சில ரசிகர்கள் எழுதியிருக்கிறார்கள். என்னை ‘காதல் மன்னன்’ என்று படங்களில் காணும் வசனங்களும், பாட்டுகளும் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன! எழுத இடம் போதாது.


சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன்

பாரதி விழா

“எட்டயபுரம் பாரதி விழாவில் இந்தப் பட்டம் கொடுக்கப்பட்டது.” “உங்களைக் காதல் மன்னன் ஆக்கியவர் பிரதமர் நேருதான்”. ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இந்தப் பட்டத்தைக் கொடுத்தார்...” ஜனாதிபதி ஜாகீர் உசேன் இந்தப் பட்டதைக் கொடுத்தார்....” அறிஞர் அண்ணாதான் “காதல் மன்னன்” என்ற பட்டதை உங்களுக்கு சூட்டினார்.” “உங்களுக்கு இந்தப் பட்டதை தந்தவர் இன்றைய முதலமைச்சரான கலைஞர் கருணாநிதிதான்” இப்படி பல பதில்கள் ரசிகர்களிடம் இருந்து வந்திருக்கின்றன.

எம்.என். ராஜம்

“பெண் குலத்தின் “பொன் விளக்கு” என்ற படம் வெளிவந்த பொழுது, நடிகை எம்.என்.ராஜத்தின் பேட்டி “தினத்தந்தி” யில் வந்தது. அதில் “நடிகர்களில் காதல் மன்னன் ஜெமினிகணேசன் தான்” என்று குறிப்பிட்டு இருக்கிறார் என்று சில ரசிகர்கள் எழுதியிருகிறார்கள். “மிஸ்ஸியம்மா” படத்தில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு, “காதல் மன்னன்” என்று என்னைப் பாராட்டி “பேசும் படம்” பத்திரிக்கையில் ஒரு ரசிகர் கடிதம் எழுதியதாக சிலர் சொல்லுகிறார்கள்.


சாவித்திரியுடன் தோன்றும் ஜெமினி கணேசன்

“பேசும் படம்” பத்திரிக்கையே உங்களை முதன் முதலாகக் “காதல் மன்னன்” என்று அழைத்தது என்று ஒருவர் எழுதியிருக்கிறார். “இந்தப் பட்டத்தை உங்களுக்கு யாரும் கொடுக்கவில்லை. ரசிகர்களே உங்களை ‘காதல் மன்னன்’ என்று அழைக்கத் தொடங்கி விட்டார்கள்” என்றுகூட சிலர் எழுதியிருகிறார்கள். டூரிங் டாக்கீஸ் சுவரொட்டிகளில் “காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த படம்” என்று அச்சிட்டார்கள் என்று சில ரசிகர்கள் கூறியிருகிறார்கள். இலங்கை வர்த்தக ஒலிபரப்பைச் சேர்ந்த நண்பர் மயில்வாகனம் எனக்கு இந்தப் பட்டத்தை கொடுத்தாக ஒர் இலங்கை ரசிகர் எழுதியிருக்கிறார்.

“தினத்தந்தி”

எனக்கு “காதல் மன்னன்” என்ற பட்டத்தை, தினத்தந்தி பத்திரிகை தான் கொடுத்தது; “தினத்தந்தி” சினிமாச் செய்திகளிலும், ஊர்க் குருவி கேள்வி-பதிலிலும் “காதல் மன்னன் ஜெமினிகணேசன்” என்று எழுதினார்கள் என்று சில ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். “என் அன்பு கணேசா! கலைச் செல்வா! மல்லிகாவோ, மிஸ்ஸியம் மாவோ, மாமன் மகளோ, பெண் எவளோ சொல்லாவிட்டால் ‘காதல் மன்னனென’ சொன்னதும் பொய் தானே என்று எனக்கு படப்பா மாலை வாசித்தளித்த என் அருமை நண்பர் பாரதி பக்தர் திரு.கே.ராமமூர்த்தி நினைக்கிறார். ஒரு கேள்விக்கு எத்தனை பதில் பார்த்தீர்களா?அத்தனை பதில்களையும் நான் அலசு அலசு என்று அலசினேன்! சினிமாத் துறையிலும், சினிமா பத்திரிக்கைகளிலும் நெடுங்காலமாகப் பணியாற்றிவரும் நண்பர்களிடமும் கேட்டேன்.


'தேன் நிலவு' படத்தில் வைஜெயந்தி மாலாவுடன் ஜெமினிகணேசன்

முடிவு

அவர்கள் அனைவரும் கூறியது இதுதான்.

“தினதந்தியில்தான் முதலில் உங்களை ‘காதல் மன்னன்’ என்று எழுதினார்கள்.” “தினத்தந்தி”யில் சினிமாச் செய்திகள் எழுதி வந்தவரும், இத்துறையில் நீண்ட நாள் அனுபவம் நிறைந்தவருமான என் நண்பர் ஜோசப் சுகுமாரனிடம் இதுபற்றி கேட்டேன். அவரும் “இதுதான் சரி” என்றார். “முன்பெல்லாம் காதல் நடிப்புகள் நாடக பாணியில் செயற்கையாக இருக்கும். நீங்கள் காதல் காட்சிகளில் நடிக்கத் தொடங்கிய பின்புதான், காதல் நடிப்பில் ஒரு புரட்சி ஏற்பட்டது. உங்கள் காதல் நடிப்பு இயற்கையாகவும், ரசிக்கும் படியும் இருந்தது. எனவே, உங்களை ‘காதல் மன்னன்’ என்று எழுதினோம். இதே பெயர் உங்களுக்கு நிலைத்து விட்டது” என்று அவர் சொன்னார். இந்த முடிவு சரி என்று பல பத்திரிகை நிருபர்களும், பல நண்பர்களும் சொன்னார்கள். ஆகவே, இந்த முடிவையே ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. கடையநல்லூர் பி.யு.சம்சுதீன் (ஆசிரியர், மசூது தைக்கா நடுநிலைப் பள்ளி), பாண்டிச்சேரி எஸ்.சின்னதுரை (79ஏ, காந்தி வீதி), திருநெல்வேலி எம்.கே. முகமது அலி (64, சரக்கி மூப்பன் தெரு, மேலப்பாளையம்) ஆகிய மூன்று ரசிகர்களும் இந்தக் கருத்தை திட்டவட்டமாகவும், தெளிவாகவும் எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அவர்கள் மூவருக்கும் எனது பாராட்டுக்கள். அவர்களுக்கு எனது அன்புப் பரிசாக பேனாக்கள் அனுப்பியிருக்கிறேன். இந்தப் போட்டியில் கலந்து கொண்ட எல்லா ரசிகர்களுக்கும் எனது பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

Updated On 30 Oct 2023 6:38 PM GMT
ராணி

ராணி

Next Story