இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(21-1-1990 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

"சிவாஜிக்கே தண்ணி காட்டியவர் ஆயிற்றே!” என்ற “பெருமை” பெற்றவர், பழைய நடிகை தேவிகா. அந்த தேவிகாவின் ஏக செல்வி, “கரகாட்டக்காரன்” கனகா! இந்த கனகா தயாரிப்பாளர்களுக்குத் தலைவலி கொடுப்பதில் வியப்பு இல்லை என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். ஏனென்றால் கனகாவை ஆட்டி வைப்பவர், அம்மா தேவிகாதான்! அம்மாவின் அனுமதி இல்லாமல் கனகா வாய் திறப்பது இல்லை. "பாத்ரூம்” கூடப் போவது இல்லை என்கிறார்கள்! கனகாவின் “கால்ஷீட்” விவகாரங்களைக் கவனிப்பது, ஒப்பந்தம் பேசுவது, “ரேட்” பேசுவது, முன் பணம் வாங்குவது எல்லாமே தேவிகாதான். படப்பிடிப்பிலும் தேவிகா கூடவே இருப்பார். பேட்டி- படம் என்றாலும் அப்படித்தான். தேவிகா அனுமதி இல்லாமல் கனகா எதுவும் செய்ய முடியாது!. அவ்வளவு கட்டுப்பாட்டுடன் கனகாவை வைத்திருக்கிறார், தேவிகா!

ஏன்? சீதா… நளினி… என்று ஏராளமான முன் உதாரணங்கள் இருக்கின்றனவே. அதுபோல கனகாவும் பறந்துவிடக் கூடாதே என்ற அச்சம்தான் காரணம்!.

அம்பலம் ஆயிற்று!

கனகா விவகாரம் வெகு நாளாகவே புகைந்து கொண்டிருந்தாலும், அதை அம்பலப்படுத்தியவர், இயக்குநர் பாரதிராஜாதான்!. படஅதிபர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் பாரதிராஜா, "நடிகை கனகாவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மாட்டோம்!” என்று அறிவித்ததைத் தொடர்ந்து, கனகாவின் கெடுபிடிகள் வெட்ட வெளிச்சமாயின.


நடிகை கனகா மற்றும் இயக்குநர் பாரதிராஜா

இத்தனைக்கும் கனகா நடித்து இதுவரை இரண்டு படந்தான் வெளிவந்திருக்கின்றது. "கரகாட்டக்காரன்" கனகாவுக்கு முதல் படம். இளையராஜாவின் இசை, கவுண்டமணி-செந்தில் காமெடிக்காக ஓடிய "கரகாட்டக்காரன்", கனகாவை அதிர்ஷ்ட நடிகையாக்கிவிட்டது. அடுத்து வந்த “தங்கமான ராசா”-வும் கனகாவுக்குக் கைகொடுக்க - கனகாவுக்கு மளமளவென்று படங்கள் வரத் தொடங்கின. இப்பொழுது கனகாவின் கையில் 12 படங்கள். அதாவது, 12 தயாரிப்பாளர்கள்!

என்ன தொல்லை?

கனகா அப்படி என்ன தொல்லை கொடுக்கிறார்? குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல. ஒரு படத்திலேயே உயர்ந்துவிட்ட கனகாவுக்கும், பிரச்சினைக்கும் தொடக்கம் முதலே நெருக்கம் அதிகம்! படப்பிடிப்புக்கு தாமதமாகச் செல்வது - கதாநாயகனைக்கூட மணிக்கணக்கில் காக்க வைப்பது - தயாரிப்பாளர், நடிப்பதற்குக் கொடுக்கும் ஆடை ஆபரணங்களை திருப்பிக் கொடுக்காமல் வைத்துக்கொள்ளுவது - தாமதமாக வந்தாலும் திமிராக நடந்துகொள்ளுவது இதெல்லாம் கனகா மீது சாதாரணமாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள்!

அம்மா வழியில்!

அம்மா தேவிகாவின் வழிகாட்டலே இத்தனைக்கும் காரணம் என்கிறார்கள். தான் கதாநாயகியாக இருந்தபோது, எப்படி நடந்து கொண்டாரோ, அப்படியே தன் மகளையும் பழக்கி வைத்திருக்கிறார் தேவிகா. “கோபப்படுவதில், ஜெயலலிதாவுக்கு அக்கா தேவிகா!” என்று அந்தக் காலத்திலேயே தேவிகாவுக்கு சினிமா உலகில் ஒரு பெயர் உண்டு.


இருவேறு ரியாக்சன்களில் நடிகை கனகாவின் புகைப்பட காட்சி

நடவடிக்கை ஏன்?

பாரதிராஜா அறிவித்த கடும் நடவடிக்கைக்கு அவசியம் என்ன வந்தது? நடிகை ஸ்ரீபிரியா, கனகாவை வைத்து “மனசு ஒரு தினுசு” என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கத் தொடங்கினார். "கரகாட்டக்காரன்" வெளிவந்தபிறகு, கனகாவுக்கு ஒப்பந்தமான முதல் படம் இதுதான். இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு, கனகாவுக்கு வேறு பல வாய்ப்புகள் வரவே, கனவா தனது 'ரேட்’டை உயர்த்தினார். இதனால் முதலில் ஒப்பந்தமான படம் நின்னு போனது. "படத்துக்கு சரியாக 'கால்ஷீட்' கொடுக்காமல், அதிக பணம் வாங்கி வேறு படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

இதனிடையே, ஒரு நாள் "மனசு ஒரு தினுசு” படப்பிடிப்புக்கு மகளோடு வந்த தேவிகாவுக்கும் இயக்குநர் ஸ்ரீபிரியாவுக்கும் இடையே பெரும் சண்டை மூண்டு விட்டது!. குறிப்பிட்ட ஒரு காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று, கனகாவுக்கு ஸ்ரீபிரியா சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கும் போது அதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவிகா, "என் மகள் கருவிலேயே நடிப்புப் பயின்றவள். நீ சொல்லிக் கொடுக்க வேண்டியது இல்லை" என்று கத்தியிருக்கிறார்.

உடனே ஸ்ரீபிரியா, "இந்தப் படத்துக்கு நான்தான் இயக்குநர். நான் சொல்வது போல்தான் உங்கள் மகள் நடிக்க வேண்டும். நீங்கள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருங்கள்" என்று சூடாகக் கூறியிருக்கிறார். அதற்கு பதிலாக தேவிகா, “நீ பெரிய இவள்… போடி! இந்த வயதில் சின்ன பையன் கார்த்திக்கை கையில் போட்டுக்கொண்டு அலைந்தவள்தானேடி நீ” என்று கத்த, படப்பிடிப்பில் ஒரே களேபரம்! தேவிகா உடனே தன் மகள் கனகாவை இழுத்துக் காருக்குள் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் போய்விட்டார். மறுநாள் படப்பிடிப்புக்கும் வரவில்லை.


அம்மா தேவிகாவுடன், நடிகை கனகா

சமாதானப் பேச்சு!

ஸ்ரீபிரியா, இதுகுறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கக்கூட்டு நடவடிக்கைக் குழுவிலும் புகார் செய்தார். இருதரப்பினரையும் (ஸ்ரீபிரியா- தேவிகா) அழைத்து பாரதிராஜா பேசினார். அவரது சமரசத் திட்டத்தை தேவிகா முதலில் ஏற்றுக்கொண்டார். தனது பேச்சுக்கும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். ஆனால், அதன்பிறகும் கனகா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை! இதன்மூலம், தேவிகா தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கக்கூட்டு நடவடிக்கைக் குழு இரண்டையும் அவமதித்தார். எனவேதான், “கனகாவை புறக்கணிப்போம்" என்று தயாரிப்பாளர் சங்கக்கூட்டு நடவடிக்கைக் குழு முடிவு எடுத்துள்ளது!

முன்பு நடந்தது

"தங்கமான ராசா"வுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது!. கனகா, வேறு படங்களில் அதிகப் பணம் கிடைத்ததும், “தங்கமான ராசா” படத்துக்கு ‘கால்ஷீட்டு’ கொடுக்காமல் தகராறு செய்தார். படத்தின் இயக்குநர் வி.அழகப்பன், தயாரிப்பாளர் சங்கக்கூட்டு நடவடிக்கைக் குழுவிடம் புகார் செய்தார். தயாரிப்பாளர் சங்கக்கூட்டு நடவடிக்கைக் குழு, “உடனே படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும்” என்று கனகாவுக்கு கட்டளையிட்டது. அதன்பிறகே, கனகா படத்தை முடித்துக் கொடுத்தார்.

ஆனால், அந்தப் படத்தில் நடிப்பதற்கு கனகாவுக்கு கொடுக்கப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஆடை, ஆபரணங்களை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. இப்பொழுது, “ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஆடை, ஆபரணங்களை உடனே, திருப்பிக் கொடுக்க வேண்டும்" என்று கனகாவுக்கு வி.அழகப்பன் வக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளார்.


ஆரம்பகால படங்களில் நடிகை கனகாவின் தோற்றம்

தேவிகா விளக்கம்

இதற்கு தேவிகா விளக்கம் அளித்து இருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது:-

"நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருப்பவள். இதுவரை நான் யாரையும் திட்டியதாகவோ, அவமதித்ததாகவோ பத்திரிகையில் செய்தி வெளிவந்தது இல்லை. ஆனால், இப்போது என்னைப் பற்றி சிலர் தவறாக எழுதுகிறார்கள். படப்பிடிப்பில் நான் தகாத வார்த்தை பேசியதாகக் கூறுகிறார்கள். ஆனால், நான் யாரையும் திட்டவில்லை. யாரிடமும் விரோதம் பாராட்டியதும் கிடையாது. அப்படியிருக்க, என் மீது ஏன்தான் அபாண்டம் சுமத்துகிறார்களோ தெரியவில்லை. நான் என் மகளுக்கு வளரச் சொல்லிக் கொடுப்பேனே தவிர, அவளது வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கமாட்டேன். நான் மட்டும் அல்ல எந்தத் தாயும் நிற்கமாட்டாள். உண்மை என்று, கற்பூரம் ஏற்றி அணைக்கவும் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார் தேவிகா.

Updated On 26 Feb 2024 6:23 PM GMT
ராணி

ராணி

Next Story