இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். பாலிவுட் வட்டாரத்தில் எந்த பிரச்சினை மற்றும் சர்ச்சையாக இருந்தாலும் முதலில் கருத்து தெரிவித்து விமர்சனங்களுக்கு ஆளாவதில் இவருக்கு நிகர் இவரே. எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் பாலிவுட்டில் கால்பதித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்திருப்பவர் கங்கனா. இவர் இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ்மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் இவர் நடித்த ‘தாம் தூம்’, ‘தலைவி’ போன்ற படங்கள் ஹிட்டான நிலையில் தற்போது இவர் நடிப்பில் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் ‘சந்திரமுகி -2’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. குறிப்பாக ‘சந்திரமுகி - 1’ அளவிற்கு இல்லை எனவும், அதையே ரீமேக் செய்திருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். சமூக ஊடங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகை கங்கனாவுக்கு மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது குறித்து அரசியல் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பல முன்னணி பாலிவுட் பிரபலங்களுக்கு மத்தியில் கங்கனாவுக்கு மட்டும் தனிப்படை பாதுகாப்பு ஏன்? ஒருபுறம் இந்தி, தமிழ் மொழிப்படங்கள் என பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும் கங்கனாவின் திரைப்பயணம் குறித்து ஓர் பார்வை...


கங்கனாவும் அரசியல் எதிர்ப்புகளும்

கங்கனாவும் உயரடுக்கு பாதுகாப்பும்

இமாச்சல பிரதேசத்திலுள்ள மாண்டி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த கங்கனா, சமூக ஊடங்களில் எப்போதும் பிஸியாக இருப்பது மட்டுமில்லாமல் கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களுக்கு பெயர் போனவர் என்றுகூட சொல்லலாம். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரை மாய்த்துக்கொண்டபோது நடிகை கங்கனா, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். அதனால் அவருக்கும் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கும் இடையே காரசார மோதல் ஏற்பட்டது. இருவரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களால் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். அதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு உயரடுக்கு பாதுகாப்பான ஒய். எஸ் பாதுகாப்பு வழங்கியது. முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்பு பாதுகாப்பானது ஒரு பாலிவுட் நடிகைக்கு வழங்கப்பட்டது ஏன்? என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் கேள்வி எழுப்பினர். அதற்கு, “நான் பாலிவுட் ஸ்டார் மட்டுமல்ல; அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அக்கறையுள்ள சிட்டிசன். நாம் துக்டே கும்பல் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குறித்து பேசியிருக்கிறேன். அதனால் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால்தான் பாதுகாப்பு கோரினேன்” என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்நிலையில் படப்பிடிப்பு, விமான நிலையம் என எங்கு சென்றாலும் பாதுகாப்பு அதிகாரிகள் கங்கனாவுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். கங்கனா திரையில் அறிமுகமானது முதல் முக்கிய பாலிவுட் நட்சத்திரம் மட்டுமில்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் இருப்பது வரை அனைத்துமே விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறது.


கங்கானா நடிப்பில் ஹிட்டான திரைப்படங்கள்

கங்கனா திரை அறிமுகம்

2006ஆம் ஆண்டு அனுராக் பாசு இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ்டர்’ என்ற திரைப்படத்தின்மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் கங்கனா ரனாவத். தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து சமூக பிரச்சினைகள் மற்றும் பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களில் நடித்து பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். தனது உணர்வுப்பூர்வமான நடிப்பு மற்றும் ஆழமான கதாபாத்திரங்களுக்கான தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி இந்திய அரசு இவரை கௌரவித்தது. குறிப்பாக, ‘வோ லாம்ஹே’, ‘லைஃப் இன் அ மெட்ரோ’, ‘ஃபேஷன்’ போன்ற படங்கள் மற்றும் சீரிஸ்கள் வெற்றி பெற்றிருந்தாலும், 2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிஷ் - 3’ திரைப்படம்தான் இவரை புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. அதன்பிறகு 2014-இல் வெளிவந்த ‘குயின்’ ட்ராமாவுக்காக 2 தேசிய விருதுகளைப் பெற்றார் கங்கனா.


பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருது பெற்ற தருணங்கள்

அதன்பிறகு 2019-இல் வெளிவந்த ‘மணிகர்ணிகா’ திரைப்படத்தில் வீரமங்கை ஜான்சிராணியின் கதாபாத்திரத்தின்மூலம் தனது ஆக்ரோஷமாக வீரத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையே தமிழில் ‘தாம் தூம்’, ‘தலைவி’ போன்ற நடித்து தமிழ் ரசிகர்களையும் பெற்றார். தற்போது இவர் நடிப்பில் தமிழில் வெளியாகியுள்ள ‘சந்திரமுகி - 2’ திரைப்படத்தில் சந்திரமுகியாகவே நடித்திருக்கிறார். திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், கங்கனாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தவண்ணமே உள்ளது.

சந்திரமுகியாக கங்கனா

சூப்பர் ஸ்டார் மற்றும் ஜோதிகா நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியாகி மெஹா ஹிட்டடித்த திரைப்படம் ‘சந்திரமுகி’. 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் வாசு. சந்திரமுகியில் ரஜினி மற்றும் வடிவேலுவின் காமெடி சீன்களாக இருக்கட்டும், ஜோதிகாவின் மிரட்டும் கண்களாக இருக்கட்டும், வேட்டையனின் அரண்மையாக இருக்கட்டும் அனைத்துமே சீனுக்கு சீன் ரசிக்கும்படியாகவும் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்ப்பார்ப்புடனும் கதை அமைந்திருந்தது. படம் முழுக்க காமெடி மற்றும் ஹாரர் இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்ற வகையில் மக்கள் கொண்டாடிய படம் அது.


‘சந்திரமுகி -1’ -இல் ஜோதிகா vs ‘சந்திரமுகி -2’ - இல் கங்கனா

இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து ‘சந்திரமுகி - 2’ பாகம் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்தில் ஜோதிகா உடலில் சந்திரமுகியின் ஆவி நுழைந்தது போன்ற கதையாக இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் நிஜ சந்திரமுகி எப்படி இருப்பாள்? அவளுக்கு என்ன நேர்ந்தது? அவள் யாரை பழிவாங்குகிறாள்? போன்றவற்றை கதையாகக்கொண்டு காட்சிப்படுத்தியிருக்கிறார் பி. வாசு. சந்திரமுகியாக திரையில் தோன்றியிருக்கிறார் கங்கனா ரனாவத். முதல் பாகத்தில் சந்திரமுகி ஆவி பிடித்த பெண்ணாக ஜோதிகா தோன்றியதால், நிஜ சந்திரமுகி எப்படியிருப்பாள் என்ற எதிர்பார்ப்பு படம் வெளியாவதற்கு முன்பே அதிகரித்திருந்தது. அதிலும் சந்திரமுகியாக கங்கனா வருவது மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியது. ஆனால் என்னதான் ரியல் சந்திரமுகியாகவே வந்தாலும் ஜோதிகா கொடுத்த தாக்கத்தை கங்கனாவால் தரமுடியவில்லை என்றே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கங்கனா ஒரு பரதநாட்டிய கலைஞராகவே வந்துசெல்வதாக விமர்சனங்கள் வருகின்றன. மொத்தத்தில் முதல் பாகத்தில் சிறு மாற்றங்களை மட்டுமே செய்து இரண்டாம் பாகத்தை இயக்கியிருப்பதாக கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதில் சிறப்பு என்னவென்றால் கதையே கேட்காமல் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனா ஒத்துக்கொண்டாராம். மொத்தத்தில் சந்திரமுகி முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாகம் தமிழ் மற்றும் இந்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. இருப்பினும் இந்த கதாபாத்திரத்தில் நடித்தது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே தெரிவித்திருக்கிறார் கங்கனா.


‘தேஜஸ்’ பட ட்ரெய்லரில் கங்கனா

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கங்கனாவின் ‘தேஜஸ்’ திரைப்பட டிரெய்லரானது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இந்திய விமானப்படை விமானியாக நடித்திருக்கிறார் கங்கனா. தமிழ் மட்டுமில்லாமல் இந்திய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ‘சந்திரமுகி - 2’ ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ள நிலையில் ‘தேஜஸ்’ திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Updated On 16 Oct 2023 7:05 PM GMT
ராணி

ராணி

Next Story