இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பாலிவுட்டின் முன்னணி சினிமா குடும்பங்களில் ஒன்றான கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவர் கரீனா கபூர். அந்த குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையான இவர் தனது சகோதர சகோதரிகளை போலவே சினிமாத்துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். பிரபல நடிகர் சைஃப் அலிகானை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், திருமணத்திற்கு முன்னும், பின்னும் தனது நட்சத்திர அந்தஸ்தை தவறவிடாமல் தொடர்ந்து திரையில் தோன்றிவருகிறார். 2000ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான இவர் தற்போது 60க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் தனது 24 ஆண்டுகால திரைவாழ்க்கையில் பாலிவுட்டில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த கரீனா தற்போது முதன்முறையாக தென்னிந்திய திரையில் தோன்றுவதாக தெரிவித்திருக்கிறார். என்னதான் ஸ்டார் குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் கரீனா கபூர் சந்தித்த சவால்கள், நெபோடிசம், காதல்கள் மற்றும் வெற்றிகரமான திரைவாழ்க்கை குறித்தெல்லாம் இக்கட்டுரையில் சற்று விரிவாக காணலாம்.

கரீனா கபூரின் குடும்பமும் நெபோடிசமும்

பாலிவுட் ரசிகர்களுக்கு கபூர் குடும்பத்தைப் பற்றி சொல்லத் தேவையில்லை. பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட ராஜ் கபூர் தனது 10 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். அதாவது சுதந்திரத்திற்கு முன்பே 1935ஆம் ஆண்டிலிருந்து திரைத்துறையில் இருந்துவந்த ராஜ் கபூரின் மகன்களான ரிஷி கபூர் மற்றும் ரந்தீர் கபூர் இருவருமே 1960களில் முன்னணி பாலிவுட் ஹீரோக்கள். ரந்தீர் கபூரின் மூத்த மகளான கரீஷ்மா பாலிவுட்டில் ஹீரோயினாக ஜொலித்த காலத்தில், இளைய மகளான கரீனாவுக்கும் ஹீரோயின் ஆகவேண்டும் என்ற ஆசையும், கனவும் துளிர்த்திருக்கிறது.


சிறுவயதில் கரீனா கபூர் மற்றும் குடும்பத்தினருடன்

ஆனால் அதற்கு முன்பே என்னதான் சினிமா பின்னணி கொண்ட குடும்பமாக இருந்தாலும் பெண்கள் திரைத்துறையில் வேண்டாம் என ரந்தீர் கபூர் கூறியதாலேயே கரீனாவின் தாயாருக்கும் தந்தைக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் பிரிந்திருக்கின்றனர். பின்னர் கரீஷ்மாவும், கரீனாவும் தனது தாயாரால் வளர்க்கப்பட்டனர். இருவரையும் வளர்க்க தனது தாய் பல வேலைகளை செய்ததாக கரீனா கபூர் பல நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார். அப்பாவிற்கு விருப்பமில்லை என்றாலும் அம்மாவின் ஆதரவுடன் 1991ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார் கரீஷ்மா. முதலில் அக்காவைப்போல திரைத்துறையில் நுழையவேண்டாம் என முடிவெடுத்த கரீனா தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த முயற்சித்திருக்கிறார். இருப்பினும் பாலிவுட்டிற்கு இப்படியொரு நட்சத்திரம் தேவை என்பதை விதி என்றோ முடிவெடுத்திருக்கிறது. உள்ளுக்குள் துவண்டு கிடந்த தனது நடிப்பு ஆர்வத்தை மீண்டும் தட்டி எழுப்பியவர் கிஷோர் நமித் கபூர் என்கிறார் கரீனா. இவர் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் உறுப்பினராக இருந்தவர். இவருடைய வழிகாட்டுதலின்பேரில் மும்பையிலுள்ள ஒரு நடிப்பு பள்ளியில் சேர்ந்தார் கரீனா.

பயிற்சியின்போதே ஹிருத்திக் ரோஷனுடன் சேர்ந்து, 2000ஆம் ஆண்டு ‘கஹோ நா... ப்யார் ஹை’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கரீனாவுக்கு கிடைத்தது. ஆனால் படப்பிடிப்பின்போது ஹீரோவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் கரீனா. அதன்பிறகு, அதே ஆண்டு அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து ‘ரெஃப்யூஜி’ திரைப்படத்தில் அறிமுகமானார். ஒரே ஆண்டில் அடுத்தடுத்து வெற்றி மற்றும் தோல்விப் படங்களை மாறி மாறி கொடுத்தார். அடுத்த ஆண்டே கரண் ஜோஹரின் ‘கபி குஷி கபி கம்’ திரைப்படத்தில் நடித்தார் கரீனா. அங்கிருந்து தொடங்கியது பாலிவுட்டில் கரீனாவின் வளர்ச்சி. அப்படம் பாலிவுட் மட்டுமில்லாமல் உலகளவில் வசூல் சாதனை படைத்தது. அப்படத்திற்காக பல்வேறு விருதுகளையும் வென்றார் கரீனா. ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கரீனா நடிப்பில் வெளியான 6 படங்களுமே தோல்வியை தழுவின. இதனால் வருத்தமடைந்ததாக கவலை தெரிவித்திருந்த கரீனா, இருப்பினும் அந்த காலகட்டத்தில்தான் திரையுலகம் குறித்து நிறையக் கற்றுக்கொண்டதாக பல இடங்களில் தெரிவித்திருக்கிறார்.


கரீனாவை புகழின் உச்சத்திற்கு கொண்டுசென்ற சில ஹிட் படங்களின் மாஸ் ரோல்கள்

தொடர் தோல்விப்படங்களை கொடுத்தாலும் கரீனாவிற்கு வாய்ப்புகள் வந்த வண்ணமே இருந்தன. அதனாலேயே என்னதான் அப்பா, அம்மா இருவரும் பிரிந்திருந்தாலும் கபூர் குடும்ப பின்னணி கரீனாவின் திரை வளர்ச்சிக்கு உதவுவதாக அப்போதைய ஊடகங்கள் அவரை விமர்சித்தன. நெபோடிசம் என்ற வார்த்தை பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்ட காலகட்டம் அது. அதனாலேயே நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தனது ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அடுத்ததாக வெளியான ‘சமேலி’ படத்தில் ஒரு விபச்சாரி கதாபாத்திரத்தை சவாலாக ஏற்று நடித்தார். அப்படம் மீண்டும் கரீனாவுக்கு பாலிவுட்டில் தனக்கான இடத்தை பிடிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படத்தினால் கிடைத்த பெயரும் புகழும் கரீனாவுக்கு அடுத்தடுத்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க உதவியது.

குறிப்பாக, 2004ஆம் ஆண்டு வெளியான ‘ஃபிடா’ படத்தில் முதன்முதலில் வில்லியாக நடித்தார். இருப்பினும் அதே ஆண்டு வெளியான ‘ஹல்ச்சுல்’ திரைப்படம்தான் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வணிகரீதியான வெற்றியை கரீனாவுக்குப் பெற்றுத்தந்தது. அதன்பிறகு தொடர்ந்து வெற்றி - தோல்வி என மாறி மாறி படங்களை கொடுத்துவந்தார் கரீனா. தனது இரண்டு மகள்களும் திரைத்துறையில் தங்களுக்கான இடத்தை பிடித்தபிறகு, மீண்டும் 2007ஆம் ஆண்டு குடும்பத்துடன் சமரசமானார் ரந்தீர் கபூர். தனது பெற்றோர் குறித்து கரீனா கூறுகையில், “நானும் கரீஷ்மாவும் சிறுவயதிலேயே அப்பா - அம்மா உறவு குறித்து புரிந்துகொண்டோம். எப்போதும் அம்மாவுடன் இருந்தாலும் அப்பாவின் அன்பும் ஆதரவும் எங்கள் இருவருக்குமே கிடைத்தது. கணவன் - மனைவி என்றால் எப்போதும் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு தம்பதி தாங்கள் திட்டமிட்டபடி வாழ்க்கை செல்லவில்லை என்றால் ஒன்றாக இருக்கவேண்டியதில்லை. எங்களுடைய வாழ்க்கையில் என்ன முடிவெடுக்கவேண்டி இருந்தாலும் இருவரும் கலந்து பேசி எடுத்தனர்” என்று கூறியுள்ளார். அதன்பிறகு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவந்த கரீனாவிற்கு தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்களும் வந்துபோயின. இருப்பினும் பெபோ என்று பாலிவுட் வட்டாரத்தால் அன்பாக அழைக்கப்படும் கரீனா உட்பட கபூர் வாரிசுகளுக்கு எப்போதும் திரையுலகில் ஆதரவு இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. குறிப்பாக, இந்திய சினிமா உலகில் நெபோடிசம் என்ற வார்த்தையையும் பாலிவுட்டையும் அடிக்கடி எளிதில் இணைத்துவிடலாம். அந்த அளவிற்கு வாரிசுகளுக்கு பாலிவுட்டில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் திரை பின்னணி இல்லாத நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்புகள் எவ்வாறு மறுக்கப்படுகிறது என்பதையும் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் மற்றும் ராதிகா ஆப்தே போன்ற பலர் தைரியமாக வெளிப்படையாகவே பேசி இருக்கின்றனர். எப்படியாயினும் பல நெபோ கிட்ஸ் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்ட சூழலில் தங்களது திறமையால் தனியிடத்தை பிடித்திருக்கிற ஒருசிலரில் கரீனாவும் ஒருவர்.


முன்னாள் காதலன் ஷாகித் மற்றும் காதல் கணவர் சைஃபுடன் கரீனா

காதல் தோல்வியும் கல்யாணமும்

2004ஆம் ஆண்டு ‘ஃபிடா’ படத்தில் இணைந்து நடித்த கரீனாவுக்கும் ஷாகித்திற்கும் இடையே காதல் மலர்ந்தது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பொதுவெளிகளில் ஒன்றாக சுற்றிவந்த இந்த ஜோடி 2007ஆம் ஆண்டு பிரிந்தது. ஆனால் அதற்கான காரணம் குறித்து இருவரும் வாய் திறக்கவில்லை. அதன்பிறகுதான் சைஃப் அலிகானை காதலித்தார் கரீனா. ஷாகித்துடன் ப்ரேக்-அப் ஆன அதே ஆண்டு சைஃபை டேட்டிங் செய்யத் தொடங்கினார் கரீனா. சைஃப் ஒருமுறை கரண் ஜோஹரின் ஃபேமஸ் நிகழ்ச்சியான காபி வித் கரணில் கலந்துகொண்டபோது, வீடியோவில் தோன்றிய கரீனா, முதன்முதலில் தான் சைஃபை பார்த்து காதல் வயப்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில், “லடாக்கில் ‘குர்பான்’ திரைப்பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது யாரோ ஒருவர் வானிட்டி வேனின் மீது ஏறி சட்டையின்றி அமர்ந்திருந்தார். யார் அது வேன்மீது ஏறி அமர்ந்திருப்பது? என நான் உற்று பார்த்தபோது, அது சைஃப் என்பதை தெரிந்துகொண்டேன். அந்த நொடியே நான் எனது மனதை தொலைத்துவிட்டேன்” என்று கூறினார். அதன்பிறகு 2012ஆம் ஆண்டு இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். இப்போது இவர்களுக்கு தைமூர் மற்றும் ஜஹங்கீர் என இரு மகன்கள் உள்ளனர்.

திருமணம் மற்றும் குழந்தைகளுக்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார் கரீனா. ஒரு நிகழ்ச்சியில் திருமணமாகி குழந்தைகளுக்கு தாயான கரீனாவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு சில நடிகர்கள் தயக்கம் காட்டுவது குறித்து கேட்கப்பட்டபோது, “நான் யாரையும் என்னுடன் நடிக்க வற்புறுத்தவில்லை. விருப்பமுள்ளவர்கள் நடிக்கட்டும். நான் எனது கதைகளில் தெளிவாக இருக்கிறேன்” என நச் பதில் கொடுத்தார். நடிப்புத் தவிர, குழந்தைகளின் கல்வி மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் கரீனா. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் பிரசாரங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கரீனா, பிறகு பெண்கள் கற்பழிப்புக்கு எதிராக ‘வித்யூ’ (VithU) என்ற பெயரில் ஆப் ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். மேலும் பெண் கல்வியை ஊக்குவிக்க யுனிசெஃபுடனும் இணைந்து பணியாற்றி வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு பின்னும் தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றி வரும் கரீனா தனது 20 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக தென்னிந்திய திரையுலகில் காலெடுத்து வைக்கவுள்ளார்.


‘க்ரூ’ மற்றும் ‘டாக்சிக்’ திரைப்படங்களின் போஸ்டர்கள்

யாஷுடன் இணையும் கரீனா?

கரீனா கபூர், தபு மற்றும் கிரித்தி சனோன் இணைந்து நடித்திருக்கும் ‘க்ரூ’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார் கரீனா. வருகிற 29ஆம் தேதி திரையரங்குகளில் ‘க்ரூ’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான புரோமோஷன்கள் நடந்துவருகின்றன. கோஹினூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் ஏற்படும் சிக்கல்களால் அங்கு பணிபுரியும் மூன்று பெண்கள் எவ்வாறு சிரமப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படம். இதை பாலாஜி டெலிஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அனில் கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு பிறகு கே.ஜி.எஃப் ஸ்டாரான யாஷ்ஷுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கே.ஜி.எஃப் பகுதி இரண்டும் மாஸ் ஹிட்டடித்த நிலையில் இந்திய அளவில் பிரபலமான கன்னட ஸ்டார் யாஷ் அடுத்து ‘டாக்சிக்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். கீத்து மோகன்தாஸ் என்பவர் இயக்கும் இப்படத்தில் யார்யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், கரீனா கபூர் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கரீனா கபூர் பேசுகையில், “தென்னிந்திய சினிமாவில் முதன்முறையாக நடிக்கிறேன். பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது எங்கு நடக்கிறது என தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்களிடம் இதுகுறித்து பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி” என கூறியிருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசனும் இணைந்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. பல பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய மொழிகளில் நடித்தாலும் ‘சம்மக்கச் சல்லோ’ என அனைவரது இதயத்திலும் இடம்பிடித்த கரீனா கபூரின் வருகையை தென்னிந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Updated On 1 April 2024 6:22 PM GMT
ராணி

ராணி

Next Story