இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவின் போக்கு என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு மாறுதல்களை பெற்று வருகிறது. ஒருகாலத்தில் புராண படங்கள் மட்டுமே பிரதானமாக வெளிவந்து மக்களை மகிழ்வித்த காலம் மாறி, பின்னர் சமூக படங்கள், குடும்ப படங்கள், ஆக்சன் மற்றும் நகைச்சுவை படங்கள் என பல விதமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தன. இதில் மாஸ், கிளாஸ், கல்ட் கிளாசிக் என பல ஜானர்களில் தமிழ் சினிமா புதுமைக் கண்டாலும், இயக்குநர்களின் வருகை மட்டும் குருகுலம் பாணியிலேயே பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அதனை உடைத்து திரைப்பட கல்லூரி மாணவர்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்தவர்தான் ஆபாவாணன். அவர் வழியிலேயே ஆர்.கே செல்வமணி, ஆர்.வி உதயகுமார் என பல இயக்குநர்கள் இங்கு சாதித்திருந்தாலும், 2012 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு மாற்றத்தை தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநர் உருவாக்கி காட்டினார். அவர் வேறு யாரும் இல்லை, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்தான். முன் அனுபவம் ஏதும் இல்லாமல், தன்னை ஒரு மிகச்சிறந்த குறும்பட இயக்குநராக அடையாளப்படுத்திக் கொண்டு ‘பீட்சா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி, வெற்றி நடை போட்டு வருகிறார். இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சென்னையை நோக்கி வரும் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் இவர் இன்று தொட்டு பார்க்காத உயரங்களே இல்லை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இயக்குநராக அறியப்படும் கார்த்திக் சுப்புராஜின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சுவாரஸ்யமிக்க திரைப்பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கார்த்திக் சுப்புராஜின் ஆரம்பகால வாழ்க்கை


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஆரம்பகால புகைப்படங்கள்

சினிமா பின்புலம் உள்ள ஒருவரால் மட்டும்தான் திரைத்துறைக்குள் வந்து எளிதில் சாதிக்க முடியுமா? என்ற எண்ணத்தை முற்றிலுமாக உடைத்து, திறமை இருந்தால் கடைக்கோடியில் இருக்கும் சாதாரண தமிழ் மகன் யாராக இருந்தாலும் சாதித்து விட முடியும் என்பதை தன் செயல்பாட்டால் நிரூபித்து காட்டி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் மதுரையில் 1983-ஆம் ஆண்டு, மார்ச் 19-ஆம் தேதி பிறந்தார். நன்கு படித்த குடும்பத்தில் பிறந்தவரான இவரது தந்தை கஜராஜ் மருந்து கம்பெனி நடத்தி வந்தார். இயல்பாகவே அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிரமான ரசிகர் என்பதால், தான் படம் பார்க்க செல்லும் போதெல்லாம் மகன் கார்த்திக்கையும் கூடவே அழைத்து செல்வாராம். அதனால்தானோ என்னவோ சிறு வயதில் இருந்தே கலைகள் தொடர்பான விஷயங்களில் கார்த்திக் சுப்புராஜுக்கு ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. அது அவ்வப்போது பள்ளி, கல்லூரி மேடை நிகழ்ச்சிகளிலும் வெளிப்பட்டு வந்துள்ளது. கலைகள் மீது ஆர்வம் இருந்தாலும் படிப்பிலும் படு கெட்டிக்காரராக இருந்த கார்த்திக் மதுரையில் உள்ள SBOA மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த கையோடு, கலைத்துறை தொடர்புடைய பாடப்பிரிவான காட்சி தொடர்பியல் அதாவது விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க ஆசைப்பட்டாராம். என்னதான் சினிமா மீது ஆசை கொண்ட குடும்பமாக இருந்தாலும், எல்லா பெற்றோர்களையும் போல் தொழில் என்று வரும்போது சினிமா வேண்டாம் இன்ஜினியரிங் படிக்க சொல்லி குடும்பத்தினர் கூறியதால் வேறு வழியின்றி தியாகராஜா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் சேர்ந்து படித்துள்ளார். அப்போது அங்கு நடத்தப்பட்ட கேம்பஸ் இன்டெர்வியூவில் தேர்வாகி பெங்களூரில் ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். என்னதான் பெரிய நிறுவனத்தில், கை நிறைய சம்பளத்தில் பணியாற்றினாலும், கார்த்திக்கிற்கு இயக்குநராக வேண்டும் என்ற கனவு மட்டும் ஒரு ஓரமாக இருந்துகொண்டே இருந்துள்ளது. அதற்கு தூண்டுகோலாக அமைந்ததுதான் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி.

திருப்புமுனை தந்த 'நாளைய இயக்குநர்'


‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ் பங்கேற்ற தருணம்

2009 ஆம் ஆண்டு தொடங்கி 2019 வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் தேர்ந்த இயக்குநர்களின் முன்னிலையில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அதில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் விருதுகளும் வழங்கப்பட்டன. அந்த வகையில், தமிழ் சினிமாவில் இன்று இயக்குநர்களாக அறியப்படும் நலன் குமாரசாமி, பாலாஜி மோகன், முண்டாசுப்பட்டி ராம்குமார், பண்ணையாரும் பத்மினியும் அருண்குமார் போன்றோர்கள் சிறந்த குறும்படங்களை எடுத்து தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நிலையில், கார்த்திக் சுப்புராஜும் அந்த வரிசையில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் ‘காட்சி பிழை’ என்ற குறும்படம் வாயிலாக நன்கு அடையாளம் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் அங்கிருந்தே தனக்கான ரசிகர்களை உருவாக்க ஆரம்பித்தார். இதற்கிடையில், எந்த சினிமா கனவை அடைய போராடிக் கொண்டிருந்தாரோ அந்த இலக்கை அடைவதற்குள், அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் இனி நீ இங்கு தேவையில்லை என்று கூறி அவரை தூக்கி வீசவும் செய்தது. தான் சம்பாதித்த பணத்தில் எப்படியும் முழு இலக்கையும் எட்டிவிடலாம் என்றிருந்த போது அவர் பணியாற்றிய நிறுவனம் அவரை அவமானப்படுத்திய செயல் மிகப்பெரிய வலியை அவருக்கு ஏற்படுத்தியது. இருந்தும் சமூக ஊடகங்கள் அதாவது யூடியூப் போன்ற தலங்கள் கால்பதிக்க ஆரம்பித்திருந்த தருணம் என்பதால் அவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்ட கார்த்திக் சுப்புராஜின் குறும்படங்களை தேடிச்சென்று ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்றதால், திரைத்துறைக்குள் நுழைவது என்பது மிகவும் எளிதான ஒன்றாக கார்த்திக் சுப்புராஜுக்கு இருந்தது. இப்படியான சூழலில் இருந்து தன்னை முழுமையாக கட்டமைத்துக்கொண்டு திரைத்துறைக்குள் நுழைந்தவருக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படம்தான் ‘பீட்சா’.

இயக்குநராக முதல் வெற்றி

ஹாரர் மற்றும் காமெடி என இரண்டு ஜானர்களில் படங்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவந்த அந்த காலகட்டங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஒவ்வொரு குறும்படமும் நன்கு வரவேற்பை பெற்றாலும், அதில் அவர் படமாக முதலில் எடுக்க நினைத்தது என்னவோ ஏற்கனவே ஹாரர் தழுவி எடுத்திருந்த 'பீட்சா' என்ற குறும்படத்தைத்தான். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த அக்குறும்படத்தினை அதே பெயரில் படமாக எடுத்தார். 2012-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோரை வைத்து முதல் பாதியில் ரொமான்ஸ், இரண்டாம் பாதியில் திகில், இறுதியாக படம் பார்க்கும் அனைவரும் ஆச்சரியப்படும் படியாக எடுக்கப்பட்டிருந்த கிளைமாக்ஸ் என அவர் எடுத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி மிகப்பெரிய அளவில் விமர்சகர்களின் பாராட்டுகளையும் அள்ளிக்குவித்தது. நாளைய இயக்குநராக எப்படி தன் வெற்றி முத்திரையை பதித்திருந்தாரோ, அதேபோன்று இயக்குநராகவும் முதல் முயற்சியிலேயே மிகப்பெரிய சாதனையை அவர் நிகழ்த்தியது ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தது. இப்படம் கார்த்திக் சுப்புராஜுக்கு மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் திரைவாழ்வுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படத்தினை தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்து வெளியிட்டனர்.


'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' திரைப்படங்களின் காட்சி

இதனை தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடிக்க ‘ஜிகர்தண்டா’ என்ற திரைப்படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். கேங்ஸ்டர் பின்னணியைக் கொண்டு வெளிவந்த இப்படத்தினை பார்த்த விமர்சகர்கள் பலரும் படத்தின் திரைக்கதை, இசை மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டியதன் மூலம் திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. அதே வேளையில் தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குநரான மணிரத்னமும் படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டினார். தொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் இப்படம் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 35 கோடி ரூபாய் வசூலித்தது. இதில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய நிகழ்வு என்னவென்றால் முதல் படமான பீட்சாவை எடுப்பதற்கு முன்பே ‘ஜிகர்தண்டா’ படத்தின் முதல் பாகத்தின் கதையை எழுதியிருந்தாராம் கார்த்திக். ஆனால், பட்ஜெட் பற்றாக்குறையால் ஜிகர்தண்டாவை முன்னதாகவே எடுக்க முடியாமல் போனதால் ‘பீட்சா’ முதல் படமாக எடுக்கப்பட்டுவிட்டது. மேலும் தனது இரண்டாவது படத்திலேயே இரு பிரிவுகளில் தேசிய விருதும் வாங்கிய கார்த்திக் சுப்புராஜ், அதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநராக மாறினார். இதனை தொடர்ந்து கார்த்திக்கின் மூன்றாவது படமாக வெளிவந்த ‘இறைவி’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது. நமது சமூகத்தில் பெண்களைப் பற்றிய கவலையோ, புரிதலோ இல்லாமல் நடந்துகொள்ளும் ஆண்களின் போக்கு அவர்களின் வாழ்வை எப்படியெல்லாம் சிதைக்கும் என்பதை அழுத்தமாக காட்டியிருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கமாலினி முகர்ஜி, அஞ்சலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தன. 2016-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது மட்டுமின்றி சமூக - அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாவும் பார்க்கப்பட்டது.

தயாரிப்பாளர் அவதாரம்


பென்குயின் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ்

இயக்குநராக தொடர்ந்து மூன்று வித்தியாசமான படங்களை கொடுத்த கார்த்திக் திடீரென்று தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். மூன்று படம் மட்டுமே எடுத்தவர் உடனே எப்படி தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் இயல்பிலேயே அவரின் குடும்பம் ஓரளவு நல்ல பின்புலம் உள்ள குடும்பம் என்பதாலும், நண்பர்களின் ஒத்துழைப்பு இருந்ததாலும் தயாரிப்பாளராக உருவெடுக்க அது உறுதுணையாக இருந்தது. அதன்படி ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி அதில் வெவ்வேறு இயக்குநர்களால் எடுக்கப்பட்ட ஆறு குறும்படங்களின் தொகுப்பை ஒரே படமாக எடுத்து 'பெஞ்ச் டாக்கீஸ்' என்ற பெயரில் வெளியிட்டார். இதில் விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து ‘அவியல்’, ‘மேயாத மான்’, ‘கள்ளச்சிரிப்பு’, ‘பென்குயின்’, ‘டிரிபில்ஸ்’, ‘பூமிகா’, ‘பபூன்’ என பல படங்களை தயாரித்தவர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தினையும் சொந்தமாக தயாரித்து இயக்கி வெளியிட்டிருந்தார். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா என இருபெரும் ஆளுமைகள் நடித்திருந்த இப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் கொண்டாடி தீர்க்கப்பட்டது. இதற்கு முன்பாக தனுஷை வைத்து எடுத்த ‘ஜகமே தந்திரம்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சில சறுக்கலை சந்தித்தபோதும், காந்தியவாதி குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் வாழ்க்கையில் குடியால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு சியான் விக்ரமை வைத்து ‘மகான்’ என தனது வித்தியாசமான படைப்புகளால் தனித்துவம் பெற்ற கார்த்திக், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் மூலம் தான் ஒரு சமூக பொறுப்புள்ள வித்தியாசமான இயக்குநர் என்பதை மீண்டும் நிரூபித்துக்காட்டினார்.

சூப்பர் ஸ்டாருடன் ஒரு ஃபேன் பாய் மொமெண்ட்!

2018 ஆம் ஆண்டு, பாழடைந்த ஃபேக்டரி, அதில் மாட்டிக்கொள்ளும் ஐந்து இளைஞர்கள்... என பிரபுதேவாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து ‘மெர்குரி’ என்ற ஹாரர் த்ரில்லர் படத்தை இயக்கினார் கார்த்திக். வசனமே இல்லாமல் மௌனப் படமாக வெளிவந்த இப்படம் 30 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தன் தந்தைக்கும் தனக்கும் மிகவும் பிடித்த ஹீரோவான ரஜினியுடன் கைகோர்க்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அந்த படம்தான் ‘பேட்ட’. முதல் முறையாக ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதல், காமெடி, தங்கை செண்டிமென்ட், ஆக்‌ஷன் என ரஜினியை பழைய ஸ்டைலில் காட்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்திருந்த இப்படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது. மேலும் இப்படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தது ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்தாக அமைந்தது. சிறு வயதில் இருந்தே கலை ஆர்வத்தை தன் மனதில் விதைத்திருந்த ரஜினிக்கு ஒரு ஃபேன் பாயாக கார்த்திக் சுப்புராஜ் செய்த நன்றி காணிக்கையாகவே இந்த படம் பார்க்கப்பட்டது.


'பேட்ட' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சசிகுமாருடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

திரைப்படங்கள் தவிர ‘புத்தம் புது காலை’, ‘நவரசா’, ‘பென்டாக்கிஸ்’ என வெப் தொடர்களையும் இயக்கி அவற்றிலும் வெற்றி கண்டுவரும் கார்த்திக் அடுத்ததாக தளபதி விஜயை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக கூறப்பட்டது. இருந்தும் சில அரசியல் முடிவுகளால் அந்த விஷயம் கைமீறி சென்றது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில இயக்குநர்கள் தங்களது வித்தியாசமான படைப்புகளின் மூலம் தனியொரு பெயரெடுத்து ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள். ஆனால் அதிலும் மிக சில இயக்குநர்கள்தான் எல்லா விதமான ஜானர்களையும் தொட்டுப்பார்த்து வெற்றிக்காணும் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த தலைமுறை இயக்குநர்களில் ஹாரர், கல்ட் கிளாசிக், மாஸ், சைலன்ட், சமூக பொறுப்புள்ள படம் என வித்தியாசமான ஜானர்களை கையாண்டு வெற்றிப் பெற்ற ஒரே இயக்குநர் என்றால் அது கார்த்திக் சுப்புராஜ்தான். குறும்பட இயக்குநராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று தன் படைப்புகளால் பாராட்டுகளை பெற்று வரும் கார்த்திக், எப்போதும் கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருக்க வாழ்த்துவோம்.

Updated On 25 March 2024 6:24 PM GMT
ராணி

ராணி

Next Story