இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

என்னதான் வாரிசுகளின் பிள்ளைகளுக்கு திரை வாய்ப்புகள் எளிதில் கிடைத்தாலும் திறமை இருந்தால் மட்டுமே மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள். அதிலும் குறிப்பாக, கோலிவுட்டை பொருத்தவரை சிறந்த நடிப்புத் திறமை மட்டுமே மக்கள் மனதில் இடம்பிடிக்கிறது. பல திரைப் பிரபலங்களின் வாரிசுகள் நடிக்க வந்தாலும்கூட அதில் ஒருசிலரே தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். அப்படி தனது நடிப்பு மற்றும் அழகான சிரிப்பால் தனக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டு, தென்னிந்திய திரையுலகில் வலம்வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷை, கூடவே வதந்திகளும் துரத்திக்கொண்டே வருகின்றன. தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாவுள்ள கீர்த்தி சுரேஷின் திரைப்பயணம் குறித்துப் பார்க்கலாம்.


கீர்த்தியின் ஆரம்பகால திரை வாழ்க்கை

கீர்த்தி சுரேஷின் திரை அறிமுகம்

கீர்த்தி சுரேஷ் குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. இருப்பினும், நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி, 2000-களில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் 2013ஆம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு 2015-இல் விக்ரம் பிரபு ஜோடியாக தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், கீர்த்திக்கு தமிழ் திரை வாய்ப்புகளை தேடிக்கொடுத்தது.

குறிப்பாக, சிவகார்த்திகேயனுடன் இவர் ஜோடிசேர்ந்த ‘ரஜினிமுருகன்’ திரைப்படம்தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது. தொடர்ந்து ‘ரெமோ’, ‘பைரவா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ என அடுத்தடுத்து தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் போன்றோர்களுடன் திரையில் தோன்றினார். இதனிடையே தெலுங்கிலும் பிஸியான கீர்த்தியை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற படம்தான் ‘மகாநதி’.


மகாநதி படத்தில் சாவித்திரியாக கீர்த்தி

பயோபிக்கின் மெகா ஹிட்

‘நடிகையர் திலகம்’ சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், கதாநாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ், தனது ஆத்மார்த்தமான நடிப்பின்மூலம் இந்திய அளவில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையையும் ஏற்றினார். அந்தப் படம் தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுத்தந்தது. கீர்த்தியின் அர்ப்பணிப்பு மற்றும் நடிப்பை பலரும் புகழ்ந்தனர். இருப்பினும், அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக உடல் எடையை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் கீர்த்தி. சக நடிகைகளைப்போல உடல் எடை ஏற்றத்தால் தனது மார்க்கெட்டை இழக்க விரும்பாத கீர்த்தி, எடையைக் குறைக்க உடற்பயிற்சிகளை மேற்கொண்டார்.


எடையை குறைத்து ஸ்லிம்மான கீர்த்தி

கீர்த்தியின் எடை குறைப்பு

முன்பு பப்ளியான கீர்த்தியை மட்டுமே பார்த்த ரசிகர்களே, “கீர்த்தி சுரேஷா இவங்க?” என ஆச்சர்யப்பட்டு கேட்கும் அளவுக்கு எடையை குறைத்தார். இதனால், ‘மிகவும் மெலிந்து பல்லிபோல் காணப்படுகிறார்’ என்றும், மேலும், ‘ஆபரேஷன் செய்துதான் கீர்த்தி உடல் எடையைக் குறைத்திருக்கிறார்’ என்றும் சமூக ஊடங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், 9 மாதங்கள் கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டுதான் தனது உடல் எடையைக் குறைத்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மிகவும் ஒல்லியான காரணத்தால் ஒரு கட்டத்தில் உடற்பயிற்சியை விட்டுவிட்டு யோகாவுக்கு மாறினார். இப்படி தனது உடல் எடையை சற்று ஏற்றி, மீண்டும் மார்க்கெட்டை பிடித்தார்.


கீர்த்தி சுரேஷ் குறித்த வதந்திகள்

விடாது துரத்தும் கல்யாண வதந்தி

சில நடிகர் நடிகைகளைக் குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்துகொண்டே இருக்கும். அந்த லிஸ்ட்டில் டாப்பில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக, அவரைப்பற்றி அதிகம் பரப்பப்படும் வதந்திகளில் ஒன்று திருமணம். அவ்வப்போது கீர்த்திக்கு அவருடன் திருமணம், இவருடன் திருமணம் என்று தகவல்கள் பரவுவதும் அதற்கு அவர் விளக்கமளிப்பதும் வாடிக்கையாகி விட்டது. முதலில் கீர்த்தி, தனது பள்ளிப்பருவ நண்பரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதுகுறித்து கீர்த்தி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அதன்பிறகு, தொழிலதிபருடன் கீர்த்திக்கு திருமணம் என செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துவிட்டார். அதேபோல், இசையமைப்பாளர் அனிருத்தும் கீர்த்தி சுரேஷும் காதலித்து வருவதாக புகைப்படங்களுடன் செய்திகள் பரவின. ஆனால் அதை கீர்த்திக்கு நெருக்கமானவர்கள் மறுத்தனர். இதனிடையே நடிகர் விஜய்க்கும், கீர்த்திக்கும் உறவு இருப்பதாக வதந்திகள் பரவின. அது ஓய்வதற்குள் மீண்டும் அனிருத் - கீர்த்தி குறித்த பேச்சு அடிபட ஆரம்பித்திருக்கிறது.


இசையமைப்பாளர் அனிருத்துடன் கீர்த்தி சுரேஷ்

அனிருத் - கீர்த்தி காதல்?

தற்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள கீர்த்தி, இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் எனவும் தகவல்கள் பரவின. இசையமைப்பாளர் அனிருத்தும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். குறிப்பாக ஆண்ட்ரியா, ஜோனிட்டா காந்தி போன்ற தன்னைவிட வயதில் மூத்த பாடகிகளுடனான அனிருத்தின் காதல் மற்றும் ப்ரேக் -அப் குறித்து அவ்வப்போது செய்திகள் பரவிவந்தன. இந்நிலையில் மீண்டும் கீர்த்தி சுரேஷுடன் கிசுகிசுக்கப்பட்டார் அனிருத். இருவருக்குமிடையே ரகசிய காதல் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகின்றனர் எனவும் கடந்த சில நாட்களாக செய்திகள் பரவின.


கீர்த்தியின் அப் - கமிங் படங்கள்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

இந்நிலையில், இதற்கு விளக்கமளித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷின் அப்பா ஜி. சுரேஷ். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது எனவும், இதில் எதுவும் உண்மையில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து கீர்த்தி கூறுகையில், அனிருத் தனக்கு மிகவும் நல்ல நண்பர் எனத் தெரிவித்துள்ளார். மேலும், திருமணம் குறித்து கேட்டபோது, “திருமணம் நடக்கும். நடக்கும்போது நானே அறிவிப்பேன்” என்று கூறி ஒருவழியாக அனிருத்துடனான திருமண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கீர்த்தி. தற்போது ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா போன்ற படங்களில் பிஸியாக உள்ள நடிகை கீர்த்தி, விரைவில் திருமணம் குறித்து தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

Updated On 2 Oct 2023 6:32 PM GMT
ராணி

ராணி

Next Story