இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில், ஒரு படம் எடுத்தாலும் அது சரித்திரத்தில் இடம்பெறும் படமாக இருக்க வேண்டும். அப்படி நினைத்து பணியாற்றுபவர்கள் இங்கு ஏராளம் என்றாலும், அந்த சரித்திரப் பட்டியலில் இடம் பெறுபவர்கள் என்னவோ வெகுசிலர்தான். அந்த வரிசையில், இன்றைய சூழலில் எத்தனையோ பேர் சிறந்த இயக்குனர்கள், நடிகர்களாக வலம் வந்தாலும், இவ்விருவரின் கூட்டணியை மட்டும் என்றும், யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு புகழ் பெற்ற இவ்விருவரும் இணைந்து அதிக படங்களில் பணியாற்றியதோ அல்லது தொடர் வெற்றிகளை கொடுத்ததோ கிடையாது. 36 ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை படத்தில் இணைந்த இந்த கூட்டணி, இன்றும் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அது வேறு யாருமில்லை 1987ஆம் ஆண்டு ‘நாயகன்’ என்ற சரித்திர புகழ் வாய்ந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கமல் - மணிரத்னம் கூட்டணிதான், தற்போது மீண்டும் இணைந்துள்ளது. ‘நாயகன்’ வெற்றிக்கு பிறகு, இத்தனை ஆண்டுகள் இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்தது ஒருபுறம் பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணியால் இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்…

இந்திய சினிமாவை அதிர வைத்த 'நாயகன்'

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து 1987-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'நாயகன்'. இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தை, முகுந்தன் ஸ்ரீனிவாசன் தயாரிக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். மும்பை பின்னணியை மையமாக கொண்ட இப்படத்தில் வேலு நாயக்கர் என்னும் கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த கமல்ஹாசனுக்கு ஜோடியாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி, கார்த்திகா, விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு முன்பு வரை கமல்ஹாசன் எத்தனையோ படங்களில் நடித்து மறக்க முடியாத வெற்றிகளை கொடுத்திருந்தாலும் 1980களின் இறுதியில் வெளியான இந்த படம் மட்டும் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை இந்திய அளவில் ஏற்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் இப்படத்தில் வேலு நாயக்கராகவே வாழ்ந்ததால்தான். சொல்லபோனால் இப்படம் ஹாலிவுட்டில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'தி காட்பாதர்' படத்தின் தாக்கத்தால் தான் மணிரத்னம் இயக்கி இருந்தார் என சில தரப்பினர் கூறினாலும், கதை சொல்லப்பட்ட விதத்திலும், காட்சிக்கு தகுந்த வசனங்களை எழுதி படமாக்கிய முறையிலும் ஜெயித்துக்காட்டியிருந்தார் மணிரத்னம். உதாரணமாக, இது நடிகை சரண்யாவுக்கு முதல் படம் என்றாலும், 'நாளைக்கு கணக்கு பரீட்சை; சீக்கிரமா விட்டுடுவீங்களா?' என, அவர் கேட்கும் போது நம்மை அறியாமலே நம் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடுவார் இயக்குனர்.


'நாயகன்' படத்தில் கமலுடன் சரண்யா பொன்வண்ணன்

அதேபோன்று 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல, நீங்க நல்லவரா, கெட்டவரா...' போன்ற வசனங்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டதுடன், கொண்டாடியும் தீர்க்கப்பட்டது. குறிப்பாக 'கேங்ஸ்டர்' படங்களுக்கெல்லாம் முன்னோடியான இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்ததற்கு காரணம், படத்தில் நடித்திருந்த கதாபாத்திரங்களின் தேர்வுதான். இதனாலேயே மும்பையில் வாழ்ந்த, வரதராஜ முதலியார் என்ற தமிழரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான இப்படத்தில் வேலு நாயக்கராக நடித்த கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதேபோன்று மும்பை தாராவியை கண்முன் நிறுத்திய, தோட்டாதரணி மற்றும் ஒளிப்பதிவில் பிரம்மாண்டம் காட்டியிருந்த பி.சி ஸ்ரீராம் ஆகியோருக்கும் தேசிய விருது கிடைத்தது. மேலும் 60-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் 'நாயகன்' திரைப்படம் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது.


வேலு நாயக்கராக கமல்ஹாசன்

உலக நாயகனாக மாறிய கமல்

‘நாயகன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணி இணையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக அவரவர் பணிகளில் பிஸியாகத் தொடங்கினர். அதன்படி கமல் தொடர்ந்து ‘சத்யா’, ‘சூரசம்ஹாரம்’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘வெற்றி விழா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘குணா’ என படத்திற்கு படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கத் துவங்கினார். பின்னர் 90களுக்குப் பிறகு ‘சிங்கார வேலன்’, ‘சதிலீலாவதி’, ‘அவ்வை சண்முகி’, ‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ போன்ற நகைச்சுவை படங்களை தேர்வு செய்து கலக்கிய அதே வேளையில், ‘மகாநதி’, ‘நம்மவர்’, ‘அன்பே சிவம்’ போன்ற நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து முத்திரைப் பதித்தார். இதுதவிர ‘தேவர் மகன்’, ‘விருமாண்டி’ போன்ற படங்களில் நம் தமிழ் மக்களின் வாழ்வியலை கூறி, சர்ச்சைகளை மீறி சாதித்துக் காட்டிய கமல், ‘குருதிப்புனல்’, ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற படங்களில் மிகவும் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்து பலரையும் கவர்ந்தார். இந்த சமயங்களில் எல்லாம் கமல், மணிரத்னம் மீண்டும் இணைந்து பணியாற்றுவது குறித்து பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன்' திரைப்படம் தேசிய அளவில் கவனம் பெற்று, கமலுக்கு மற்றுமொரு தேசிய விருதை பெற்று தந்த போது, 'நாயகன்' படம் குறித்து மீண்டும் நினைவு கூறப்பட்டது.


கமல்ஹாசன் ஏற்று நடித்த மாறுபட்ட கதாபாத்திரங்கள்

இந்நிலையில் 2000-ஆம் ஆண்டு 'தெனாலி' படத்தில் பணியாற்றிய போது தன்னை ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியவர் என்ற முறையிலும், படத்தில் தனக்கு உறுதுணையாக நிறைய உதவிகள் செய்ததற்காகவும் நன்றி தெரிவிக்கும் விதமாக ‘உலக நாயகன்’ என்ற பட்டத்தினை கமல்ஹாசனுக்கு, அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வழங்கினார். இதன்பிறகு, இப்பட்டத்தை வைத்தே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு முதல் முறையாக 10 வேடங்கள் ஏற்று கமல்ஹாசன் நடித்திருந்த ‘தசாவதாரம்’ படத்தில் ‘உலக நாயகனே’ என்ற பாடலையும் எழுதி இன்னும் பிரபலப்படுத்தினார் இயக்குனர் அதே கே.எஸ்.ரவிக்குமார். இந்த பட்டம் கமலுக்கு பிடித்திருந்ததோ இல்லையோ, அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததால் அன்றில் இருந்து இன்றுவரை கமலை ‘உலக நாயகன்’ என்றுதான் ஒட்டுமொத்த திரையுலகமும் அழைத்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த 'விக்ரம்' படம் உட்பட ஒவ்வொரு படங்களிலும் ‘உலக நாயகன் கமல்ஹாசன் ’ என்று தான் அவரது பெயரும் போடப்பட்டு வருகிறது.


இந்தியன் தாத்தா மற்றும் தசாவதாரம் படத்தில் நம்பியாக கமல்

சரித்திரம் படைத்த மணிரத்னம்

இயக்குனர் மணிரத்னம் ‘நாயகன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபு மற்றும் கார்த்திக்கை வைத்து ‘அக்னி நட்சத்திரம்’ என்றொரு மெகா ஹிட் படத்தை எடுத்தார். 1988-ஆம் ஆண்டு வெளிவந்து தற்போது 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இப்படம் அன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பிரபு - கார்த்திக்கின் மோதல்களும் இன்றும் சிலாகித்து பேசப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து ‘அஞ்சலி’, ‘சத்ரியன்’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘திருடா திருடா’, ‘பம்பாய்’, ‘ஆசை’, ‘இருவர்’, ‘நேருக்கு நேர்’, ‘அலைபாயுதே’, ‘டும் டும் டும்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என 2000-ங்களின் இறுதிவரை இயக்குனராக, தயாரிப்பாளராக, கதாசிரியராக பணியாற்றிய அத்தனை படங்களும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. இதில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அஞ்சலி’, ‘ரோஜா’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ஆகியவை தேசிய விருதுகளையும் அள்ளிக் குவித்தன. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் மகளான நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்ட மணிரத்னம் கமலுக்கு இன்னும் நெருங்கிய உறவாக மாறினார்.


மணிரத்னம் இயக்கி தயாரித்த முக்கியமான திரைப்படங்கள்

இதனாலயே இவ்விருவரும் எப்போது இணைந்து பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அவர்களது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இன்னொருபுறம் மணிரத்னம் தனது திரையுலக வாழ்க்கையில் தொடர் வெற்றிகளை கொடுத்திருந்தாலும், என்னவோ தெரியவில்லை 2004-க்குப் பிறகு ஒன்றிரண்டு வருடங்கள் இடைவெளிவிட்டு படங்கள் இயக்கினார். அப்படி 3 வருட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கி வெளிவந்த ‘ராவணன்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு திரைக்கு வந்து கொஞ்சம் சறுக்கலை சந்தித்தது. பின்னர் மீண்டும் 3 வருட இடைவெளி எடுத்து ‘கடல்’, ‘ஓ காதல் கண்மணி’, ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’ என இயக்கியவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமாக வந்து அமைந்ததுதான் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்றுப் புகழ்மிக்க புதினமான நாவலை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இப்படத்தை எடுக்க எம்ஜிஆர் தொடங்கி எத்தனையோ ஜாம்பவான்கள் முயற்சித்தும் முடியாத நிலையில் அதனை மணிரத்னம் செய்துகாட்டி சரித்திரம் படைத்தார்.

'நாயகன்' ரீ ரிலீஸ்

1980 மற்றும் 90களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பல படங்கள் அவ்வப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்படுவது தற்போது வழக்கமாகி உள்ளது. அப்படி ரீ ரிலீஸ் செய்யப்படும் அந்த படங்கள், அன்று வெளியான சமயத்தில் என்ன மாதிரியான வரவேற்பை பெற்றதோ, அதே வரவேற்பை இப்போதும் பெற்று வருகின்றன. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களும் இதுபோன்ற படங்களை பார்க்க மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், கமல்ஹாசன், ஜோதிகா நடித்து 2006 ஆம் ஆண்டு வெளிவந்த 'வேட்டையாடு விளையாடு' படத்தினை டிஜிட்டலுக்கு மாற்றி மறு வெளியீடு செய்யப்பட்ட போது, அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல்நாள் முதல் காட்சியின் போது நிறைய திரையரங்குகள் ஹவுஸ்புல்லானதாகவும், அந்த சமயம் வெளியான படங்களை விட நல்ல வசூல் செய்ததாகவும் திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.


'நாயகன்' ரீ ரிலீஸ் போஸ்டர் மற்றும் 'விக்ரம்' கமல்

இதுதவிர கமலின் 'வெற்றி விழா', 'காக்கிச் சட்டை', ஆகிய படங்கள் டிஜிட்டல் முறையில் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இந்த நிலையில், இன்றும் ஒரு மிகப்பெரிய கல்ட் கிளாசிக் படமாக இருந்து வரும் கமல்ஹாசனின் 'நாயகன்' திரைப்படம் மீண்டும் டிஜிட்டல் வடிவில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறந்த நடிகர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என மூன்று தேசிய விருதுகளை வென்ற இப்படம் கமலின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படம் இன்றளவும் பல இளம் இயக்குனர்களுக்கு ஒரு பாடப்புத்தகமாகவே திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கமல் - மணிரத்னம்

36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்போது கமலின் 234 வது படமான இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் உடன் இணைந்து உயதநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவீஸும், இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் படத்தினை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு படத்தை வெளியிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகர் சிம்பு நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1987-ஆம் ஆண்டு 'நாயகன்' படத்தின் வெற்றிக்கு பிறகு இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன்

Updated On 6 Nov 2023 6:54 PM GMT
ராணி

ராணி

Next Story