இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சினிமா என்றால் சுவாரஸ்யம் இல்லாமலா இருக்கும்? அதுபோலத்தான் ஒவ்வொரு படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை அள்ளிக்கொடுக்கின்றன. இந்த வாரம் தமிழ் சினிமாவை பொருத்தவரை திரைப்பட அப்டேட்ஸ்களை விட நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகள்தான் அதிகம் பேசப்பட்டன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம்

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் நிக்கோலாய்க்கும் வரலட்சுமிக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்ற கேள்விதான் பலருக்கும் இருந்தது. இப்போது அதுகுறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நிக்கோலாயும், சரத்குமாரும் நீண்டகாலமாகவே நண்பர்களாக இருந்திருக்கின்றனர். அப்போதே வரலட்சுமிக்கு அவர்மீது கொஞ்சம் காதல் இருந்ததாம்.


வரலட்சுமியின் முன்னாள் காதலன் விஷால் மற்றும் கணவர் நிக்கோலாய்

அந்த சமயத்தில் நிக்கோலாய்க்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துவிட்டதாம். இடையே நடிகர் விஷாலின் அப்பா தயாரித்த படத்தின் ஷூட்டிங்கிற்கு சரத்குமார் சரியாக வராமல் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டாராம். அதனால் அவரை பழிவாங்கவே வரலட்சுமியை காதலிப்பதாக விஷால் நாடகமாடினாராம். அதுதெரிந்து வரலட்சுமி சோகத்தில் இருந்த நேரத்தில், நிக்கோலாய்க்கும் விவாகரத்து ஆகிவிட்டதால் இருவரும் மீண்டும் சேர்ந்துவிட்டனராம். அதனால்தான் இந்த காதலுக்கு சரத்குமார் பச்சைக்கொடி காட்டியதாக சினிமா வட்டாரத்தில் பேசிவருகின்றனர்.

புதிய பாடலில் ஜி.வியுடன் இணைந்த சைந்தவி!

சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் மற்றும் சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர். இருப்பினும் தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருப்போம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது ‘சார்’ என்ற திரைப்படத்தின் முதல் பாடலான ‘பனங்கருக்கா’ என்ற பாடலை ஜி.வி பிரகாஷும், சைந்தவியும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார்.


‘சார்’ திரைப்படத்தில் இணைந்து பாடல் பாடிய ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி

இதனால் பாடலின் மீதான எதிர்பார்ப்பானது அதிகரித்திருக்கிறது. ‘சார்’ படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்திற்கு முதலில் ‘மா.பொ.சி’ என பெயரிடப்பட்டது. பின்பு சில தவிர்க்கமுடியாத காரணங்களால் படத்தின் பெயர் ‘சார்’ என மாற்றப்பட்டிருக்கிறது. வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.

சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!

‘சுப்ரமணியபுரம்’ படத்தை இயக்கி, நடித்த சசிகுமார் தொடர்ந்து ‘போராளி’, ‘ஈசன்’, ‘தாரை தப்பட்டை’ போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். ஆனால் தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்த இவருடைய படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தன. இருப்பினும் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து ‘கருடன்’ படத்திலும் நடித்திருந்தார் சசிகுமார்.


சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் சிம்ரன்

இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குநரின் இயக்கத்தின்கீழ் சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவிருக்கிறார். ‘குட் நைட்’ படத்தை தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. குடும்ப கதையை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

வீடுகளை அடமானம் வைத்த தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை தமன்னா, மும்பை அந்தேரி சாலையிலிருக்கும் தனக்கு சொந்தமான மூன்று அபார்ட்மெண்ட்களை இந்தியன் வங்கியில் ரூ. 7.84 கோடிக்கு அடமானம் வைத்திருக்கிறாராம். அதற்காக ரூ. 4.7 லட்சம் ஸ்டாம்ப் டியூட்டி கட்டியிருக்கிறாராம். அதே நேரத்தில் மும்பையில் காஸ்ட்லி ஏரியாவான ஜூஹூ தாரா பகுதியில் மிகப்பெரிய அலுவலகம் ஒன்றை மாதம் ரூ. 18 லட்சம் வாடகைக்கு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


பிசினஸிற்காக வீடுகளை அடமானம் வைத்த நடிகை தமன்னா

மற்றொருபுறம் அதே பகுதியிலிருக்கும் வணிக வளாகம் ஒன்றை 5 ஆண்டுகளுக்கு லீஸுக்கு எடுத்து வாடகைக்கு விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மாத வாடகை ரூ. 18 லட்சம் என்றும், நான்காவது ஆண்டில் ரூ.20.16 லட்சமாகவும், ஐந்தாவது ஆண்டில் ரூ. 20.96 லட்சமாகவும் உயரும் என்றும் சொல்லப்படுகிறது. சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை இப்படி பல்வேறு பிசினஸ்களில் முதலீடு செய்துவருகிறார் தமன்னா.

ஹோட்டலில் தங்குகிறாரா ஜோ?

சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டு கூட்டுக்குடும்பமாக ஒன்றாக வாழ்ந்துவந்தனர். சிலகாலம் திரையுலகிலிருந்து விலகியிருந்த ஜோதிகா, ரீ-என்ட்ரி கொடுத்து தற்போது தமிழ், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா சென்னையில் பிரம்மாண்டமாக கட்டியிருக்கும் வீட்டில் பெற்றோர், சகோதரர் என குடும்பத்துடன் வாழலாம் என திட்டமிட்டிருந்தாராம். ஆனால் இதற்கு நடுவேதான் சூர்யா - ஜோதிகா இருவரும் மும்பையில் வீடுவாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர்.


மும்பையில் வசிக்கும் சூர்யா - ஜோதிகா தம்பதி

கடந்த சில வருடங்களாக மும்பையில் வசித்துவரும் ஜோதிகா, சென்னைக்கு வந்தாலும் சிவகுமார் வீட்டில் தங்காமல் ஹோட்டல்களில்தான் தங்குகிறாராம். இதனால் இன்னும் ஜோதிகாவுக்கும் சூர்யா குடும்பத்துக்குமிடையே பிரச்சினை இருப்பதாக கூறுகின்றன நெருங்கிய வட்டாரங்கள். ஆனால் இதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை.

ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பாலிவுட்டின் ‘கிங் கான்’ என அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கின்றனர். இவருக்கு ‘லோகார்னோ திரைப்பட விழா’வில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படவிருக்கிறது. ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்திலிருக்கும் லோகார்னோவில் நடைபெறும் இவ்விருது விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 17-ஆம் தேதிவரை நடைபெறுகிறது.


பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இத்திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ இந்த ஆண்டு ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2002ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘தேவ்தாஸ்’ மற்றும் கடந்த ஆண்டு வெளியான ‘ஜவான்’ ஆகிய இரண்டு படங்களும் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வசூல் சாதனை புரிந்திருக்கின்றன.

Updated On 15 July 2024 6:09 PM GMT
ராணி

ராணி

Next Story