
பெரும்பாலானோருக்கு ஆகச்சிறந்த பொழுதுபோக்கு என்றால் அது திரைப்படங்கள்தான். அதனாலேயே திரைப்படங்கள் மற்றும் திரைத்துறை குறித்த செய்திகள் அனைவரின் கவனத்தையும் எளிதில் தன்பக்கம் ஈர்த்துவிடுகின்றன. இந்த வாரம் சினிமா குறித்த அப்டேட்ஸ் பல வெளிவந்திருந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் காரணமாக, அனைத்து துறைகளுமே பதற்றத்தில் இருக்கின்றன. இதனால் பல திரைப்படங்களின் வெளியீடு மற்றும் அதுசார்ந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
2வது திருமணத்துக்கு தயாராகும் ஜெயம் ரவி?
பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மனைவியை விவாகரத்து செய்வதாக நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். மனைவி ஆர்த்தி இதுகுறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்த போதிலும் ரவிமோகன் எதற்கும் அசருவதாக இல்லை. அப்போதே பெங்களூருவைச் சேர்ந்த பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் என்பவருடன் இணைத்து பேசப்பட்டார். ஆனால் அவர், கெனிஷா தன்னுடைய தெரபிஸ்ட் என்று கூறியதோடு, அவரை பற்றி தவறாக பேசவேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசனுடைய மகளின் திருமணத்திற்கு கெனிஷாவுடன் ஒரே மாதிரி உடையணிந்துகொண்டு வந்தார் ரவிமோகன்.
ஆர்த்தியுடனான விவாகரத்துக்கு முன்பே கெனிஷா பிரான்சிஸுடன் ஜோடியாக வலம்வரும் ரவிமோகன்
ஆர்த்தியுடனான விவாகரத்து வழக்கு இன்னும் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் அதற்குள்ளாகவே தனது காதலியுடன் பொதுவெளியில் ரவி உலாவருவதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆனால் அதுகுறித்து ரவிமோகன் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதேநேரம் ஆர்த்தியோ, இன்னும் தனக்கும் ரவிக்கும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே தன்னை ரவியின் முன்னாள் மனைவி என்று கூறாதீர்கள். ரவியின் இந்த செயலுக்கு நான் அழப்போவதில்லை. 2 குழந்தைகளின் தாயாக தைரியமாக இருக்கப்போகிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
லோகிக்கு ‘கூலி’க்கு இவ்வளவு சம்பளமா?
ரஜினி, கமல், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம்வருகிறார் லோகேஷ் கனகராஜ். எல்.சி.யு என்ற பெயரில் தனக்கென தனி பாணியை உருவாக்கி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துவருகிறார். இப்போது ரஜினியை வைத்து இவர் இயக்கியிருக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கூலி படத்துக்கு லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 60 கோடி சம்பளம்!
இந்த படத்தில் நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா மற்றும் சௌபின் சாஹிர் உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ‘கூலி’ படத்தை இயக்குவதற்காக லோகிக்கு ரூ. 60 கோடி சம்பளமாக வழங்கபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
‘ஜெயிலர்’ நடிகர் செய்த ரகளை
2023ஆம் ஆண்டு ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மலையாள நடிகரான விநாயகன். மலையாளத்தில் பல ஹிட் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல் ஒரு மலையாள படப்பிடிப்புக்காக கொல்லம் மாவட்டத்தில் ஹோட்டல் அறையில் சில நாட்கள் தங்கியிருக்கிறார்.
போதையில் ரகளை செய்த நடிகர் விநாயகன் கைது
அந்த சமயம் ஹோட்டலை விட்டு வெளியேற செக் அவுட் செய்ய மறுத்ததுடன் ஹோட்டல் ஊழியர்களிடமும் ரகளை செய்து சண்டையிட்டிருக்கிறார். அவர் போதையில் இருப்பதை தெரிந்துகொண்ட ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அங்குவந்த போலீசார் விநாயகனை கைதுசெய்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் மது அருந்தியிருப்பது தெரியவர, அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
யோகி பாபு விளக்கம்!
கடந்த வாரத்தில் நடைபெற்ற ‘கஜானா’ திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு கலந்துகொள்ளவில்லை. அந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருவதற்கு ரூ. 7 லட்சம் பணம் கேட்பதாக தயாரிப்பாளர் ராஜா மேடையில் வைத்தே வெளிப்படையாக கூறியதுடன், அவரின் இந்த செயல் குறித்தும் கடுமையாக சாடினார். இந்நிலையில் ‘ஜோரா கைய தட்டுங்க’ பட விழாவில் கலந்துகொண்ட யோகி பாபு இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
தன்னை பற்றிய வதந்திகளுக்கு யோகி பாபுவின் விளக்கம்
ஒரு பட விழாவுக்கு வராததால் யார் யாரோ எப்படி எப்படியோ பேசுகிறார்கள் என்றும், தனக்கே நிறையப்பேர் பணம் கொடுக்கவேண்டி இருப்பதாகவும், தன்னை பற்றி பேசுபவர்களை கடவுள் பார்த்துக்கொள்ளட்டும் என்றும் கூறி ஆதங்கப்பட்டார். மேலும் தனது சம்பளத்தை தான் தீர்மானிப்பது கிடையாது என்றும், நல்ல கதையுடன் தயாரிப்பாளர்கள் வந்தால் தானே சம்பளத்தை குறைத்துக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
ராகவா லாரன்ஸின் பேருதவி!
தமிழ் திரையுலகில் பிறருக்கு உதவி செய்வதையே ஒரு சேவையாக கொண்டுசெயல்படும் உயர்ந்த உள்ளங்களில் ஒருவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ். இவரை பார்த்து பலரும் தங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்துவருகின்றனர். சமீபத்தில் கூலி வேலைக்குச் செல்லும் ஒரு தம்பதி, தனது மகளின் காதுகுத்துக்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை பெட்டியில் போட்டு மண்ணில் புதைத்து வைத்திருந்ததாகவும், ஆனால் அந்த பணத்தை கரையான் அரித்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க கூறியதுடன், அதுகுறித்த ஆதாரங்களையும் வெளியிட்டனர்.
கரையான் அரித்த பணத்தை ஏழை தம்பதிக்கு சர்ப்ரைஸாக திரும்ப கொடுத்த ராகவா லாரன்ஸ்
இது ராகவா லாரன்ஸ் காதுகளுக்கு போக, உடனே ஒரு லட்ச ரூபாய் பணத்தை அந்த தம்பதியிடம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். இதுகுறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் லாரன்ஸின் இந்த நற்குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
போர் பதற்றம் - ‘தக் லைஃப்’ எடுத்த முடிவு!
பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தனது போராட்டத்தை நடத்திவருகிறது. மாறி மாறி நடத்தப்பட்ட தாக்குதலில் இருநாட்டை சேர்ந்தவர்களும் கடுமையாக பாதிக்கபட்ட நிலையில், ஐபிஎல் போன்ற பல முக்கியமான நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தால் ரத்து செய்யப்பட்ட தக் லைஃப் ஆடியோ லான்ச்
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் 16ஆம் தேதி மிகப்பெரிய அளவில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டிருந்தது படக்குழு. ஆனால் இரு நாடுகள் இடையேயான பதற்றம் காரணமாக இந்த விழாவை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது.
