இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்த ஆண்டின் முதல் பாதி கோலிவுட்டுக்கு நன்றாக அமையவில்லை என்றாலும் இரண்டாம் பாதி சூப்பராக இருக்கப்போகிறது. காரணம், முன்னணி ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கப்போகின்றன. தற்போது உருவாகி வரும் படங்கள் குறித்தும், ரிலீஸுக்கு தயாராகிவருகிற படங்கள் குறித்தும் வெளியாகியிருக்கும் அப்டேட்ஸ்களை பார்க்கலாம்.

ட்ராப் ஆகிவிட்டதா ரஜினியின் கூலி?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘கூலி’ என பெயரிடப்பட்டிருப்பதாக ஏப்ரல் மாதமே டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. அதையடுத்து ஜூன் முதல் வாரமே படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ஸ்க்ரிப்ட் வேலை முழுமை அடையாததால் லோகேஷ் இன்னும் படப்பிடிப்பை தொடங்க தயாராகவில்லை என்று கூறப்பட்டது. இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.


‘கூலி’ படத்தின் லுக் டெஸ்ட் செல்ஃபியை பகிர்ந்த லோகி

இப்படி தொடர்ந்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘கூலி’ படத்தின் லுக் டெஸ்ட்டின்போது எடுத்த செல்ஃபியை தனது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்ட் செய்த லோகேஷ் கனகராஜ், படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கவிருப்பதாக கூறியிருக்கிறார். லோகியின் இந்த போஸ்ட்டுக்கு பலர் கருத்து தெரிவித்து கமெண்ட் செய்துவருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் ரஜினியின் மகளாக ஸ்ருதி நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் விரைவில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுமாறும் லோகியிடம் வேண்டுகோள் வைத்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

முதல்நாளே இவ்ளோ கலெக்‌ஷனா?

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல் ஹாசன், தீபிகா படுகோன் போன்ற பல மெகா ஸ்டார்கள் நடித்திருக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டிருந்த இப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பானது மிகவும் அதிகமாகவே இருந்தது.


வசூல் சாதனை படைத்துவரும் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் போஸ்டர்

இந்நிலையில் படம் வெளியான முதல்நாளே ரூ.180 கோடி வசூல் செய்திருக்கிறது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் ப்ரீ பிசினஸானது சாட்டிலைட், ஆடியோ உரிமம், டிஜிட்டல் மற்றும் தியேட்டர் உரிமம் என அனைத்தும் சேர்த்து 390 கோடியாக இருந்த நிலையில் முதல் நாள் வசூலே கிட்டத்தட்ட 200 கோடியை எட்டியிருப்பதால் படம் லாபம் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஓவர்சீஸ் விநியோக உரிமை 80 கோடிக்கு பெறப்பட்ட நிலையில், அமெரிக்காவில் மட்டும் முன்பதிவு 1.2 கோடியை நெருங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘கங்குவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் திஷா படானி, பாபில் தியோல், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்றோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்தமாதம் படத்தின் டீஸர் வெளியானது.


அக்டோபரில் போட்டிபோட காத்திருக்கும் ‘வேட்டையன்’ மற்றும் ‘கங்குவா’

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதேநாளில்தான் ரஜினியின் ‘வேட்டையன்’ படமும் வெளியாக இருக்கிறது. இதனால் இரண்டும் படங்களுக்குமிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷா வாய்ப்பை தோழிக்கு வாங்கிக்கொடுத்த நயன்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின் திரிஷாவா? நயன்தாராவா? என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே இருந்துவருகிறது. இருப்பினும் ஒரு கட்டத்தில் நயன்தான் என ரசிகர்கள் முடிவுசெய்த நிலையில் திடீரென அடுத்தடுத்து ‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’ என்று ஹிட் படங்களைக் கொடுத்து தென்னிந்திய அளவில் மீண்டும் மார்க்கெட்டை பிடித்துவிட்டார் திரிஷா. இதனால் திரிஷாவை பின்னுக்குத் தள்ள நயன் பின்னாலிருந்து வேலைபார்ப்பதாக திரையுலகில் தகவல்கள் கசிகின்றன. ஏற்கனவே நயனின் நெருங்கிய நண்பரான அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் திரிஷாதான் ஹீரோயின் என பேசப்பட்ட நிலையில், கதாநாயகி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது.


நயன்தாரா மற்றும் திரிஷா இடையே மறைமுக போட்டி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல்

அதேபோல், ‘மூக்குத்தி அம்மன்’ படம்மூலம் ஆர்.ஜே. பாலாஜியுடன் கூட்டணி சேர்ந்த நயன், அவருடன் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொண்டார். இதனால் பாலாஜியின் அடுத்த படமான ‘மாசாணி அம்மன்’ படத்தில் அம்மனாக திரிஷாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தன்னுடைய நெருங்கிய தோழியான சமந்தாவுக்கு அந்த வாய்ப்பை பெற்றுக்கொடுத்திருக்கிறாராம் நயன். ஏற்கனவே ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு பிறகு நயனை தனக்கு சகோதரி என்று சொல்லிவந்த ஆர்.ஜே. பாலாஜியால் நயனின் இந்த அன்புக்கட்டளைக்கு நோ சொல்ல முடியவில்லை என்கின்றன திரை வட்டாரங்கள்.

மாஸான லுக்கில் அஜித்!

‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடித்துவரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. அதிலிருந்து இப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பது தெரியவந்தது. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் செகண்டு லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. காட் ப்ளஸ் யூ மாமே என தலைப்பிடப்பட்டிருக்கும் அந்த போஸ்டரில் அஜித் மாஸான தெறிக்கவிடும் லுக்கில் இருக்கிறார்.


‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் செகண்டு லுக் போஸ்டர்

குறிப்பாக, அவர் அணிந்திருக்கும் கூலரில் ‘பில்லா’ அஜித்தின் படம் இருப்பதால் இது என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பானது அதிகரித்திருக்கிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், இடையே ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார் அஜித். அஜித்தின் டை ஹார்ட் ஃபேனான ஆதிக் கட்டாயம் மாஸான அஜித்தை திரையில் காட்டுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக பேசிவருகின்றனர்.

விஜய் கட்சியில் சேருகிறாரா திரிஷா?

இனிமேல் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று கூறி அரசியலில் இறங்கியிருக்கிறார் விஜய். சொன்னபடியே தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி கட்சியில் ஆள் சேர்ப்பு, கொடி, சின்னம் மற்றும் கொள்கைகள் குறித்து தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வரும் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என்று கூறிவிட்டார். இருப்பினும் கட்சி சார்பாக பல நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு விருது விழா என தொடர்ந்து பொதுவெளியில் தலைகாட்டி வருகிறார். இந்நிலையில் விஜய் கட்சியுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய திட்டமிட்டு வருகிறது ராகவா லாரன்ஸ் மற்றும் கே.பி.ஒய் பாலா இணைந்து செயல்படுத்தி வரும் ‘மாற்றம்’ குழு.


விஜய் கட்சியில் திரிஷா இணைய வாய்ப்பு? - நெருங்கிய வட்டாரங்கள்

இதனிடையே நடிகையும் விஜய்யின் நெருங்கிய தோழியுமான திரிஷா விஜய் கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே திரிஷாவை அரசியலுக்கு வருமாறு அவருடைய ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில் விஜய் கட்சியில் அவர் சேர வாய்ப்பிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் சார்பில் சொல்லப்படுகிறது. அதனை உறுதிசெய்யும் விதமாக ஏற்கனவே நன்றாக தமிழ் பேசும் திரிஷா, தமிழாசிரியர் ஒருவரை வைத்து மேடைகளில் எப்படி தூய தமிழில் பேசுவது? என பேச்சுப் பயிற்சி எடுத்துவருவதாக மற்றொருபுறம் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Updated On 4 July 2024 4:52 AM GMT
ராணி

ராணி

Next Story