இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான ஓரிரு மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தைகளை பெற்றுக்கொண்ட இந்த ஜோடி தொடர்ந்து அவர்களுடன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சமூக ஊடங்களில் எப்போதும் ட்ரெண்டிங்கிலேயே இருக்கின்றனர். குறிப்பாக, எந்த சமூக ஊடகங்களையும் பயன்படுத்தாத நயன்தாரா கடந்த ஆண்டு தனது இரண்டு குழந்தைகளுடன் மாஸான என்ட்ரி கொடுத்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இன்ஸ்டா கணக்கைத் தொடங்கினார். அதன்பிறகு இந்த தம்பதி எப்போதும் சோஷியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாகவே இருக்கின்றனர். சமீபத்தில் தங்களுடைய இரண்டாவது திருமண நாளை கொண்டாடிய இவர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பல்வேறு போட்டோஷூட்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கின்றனர். மேலும் இதனால் நயன்தாராவின் பழைய பேட்டிகளும் தற்போது மீண்டும் ட்ரெண்டாகி வருகின்றன. நயன்தாரா குறித்து வைரலாக பேசப்படும் செய்திகள் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.


விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் லேட்டஸ்ட் க்ளிக்

சோஷியல் மீடியாவில் மாஸ் என்ட்ரி!

‘ஐயா’ படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, ரஜினி, அஜித், விஜய், சூர்யா என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நாயகிகளில் ஒருவரானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்த்தை பெற்றார். என்னதான் டாப் ஹீரோயினாக வலம்வந்தாலும் நயன்தாராவை பற்றிய கிசுகிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவே இருக்காது. சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்த பிரச்சினைகளால் சமூக ஊடகங்களின் பக்கமே வராமல் தவிர்த்துவந்தார். இருப்பினும் சர்ச்சைகள் தன்னை விடாது துரத்துவதாக அவரே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டியில், “எனக்கு ஷூட்டிங் இல்லாத நாட்களில் நான் எனது வீட்டில் பெற்றோருடன் நேரம் செலவிடவே ஆசைப்படுவேன். அப்படி நான் வீட்டில் இருக்கும்போது எனக்கே தெரியாமல் என்னை பற்றி ஏதேனும் ஒரு செய்தி வந்திருக்கும். அதை வேறு யாராவது என்னிடம் வந்து சொன்னால்தான் எனக்கே தெரியும். அப்படி பிரச்சினைகளை எனக்கு டோர் டெலிவரி செய்வதில் பலர் ஆர்வமாக இருக்கின்றனர்” என்று கூறியிருந்தார்.

அந்த பேட்டிக்குப் பிறகு 10 வருடங்கள் கழித்து பேசியபோதும் அதையேதான் கூறினார் நயன்தாரா. எப்போது கேட்டாலும் தான் எந்த சமூக ஊடகங்களையும் பயன்படுத்துவது இல்லை என்று கூறிவந்த அவர், திருமணம் மற்றும் குழந்தைகளுக்குப் பிறகு திடீரென சோஷியல் மீடியாவில் இறங்கினார். அதற்கு முன்பு வரை விக்னேஷ் சிவன்தான் நயன்தாராவுடனான சுற்றுலா மற்றும் அவருடைய புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். 2022ஆம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு ஓரிரு மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் உயிர் மற்றும் உலக் என இரட்டைக்குழந்தைகளை பெற்றுக்கொண்ட இத்தம்பதி கிட்டத்தட்ட ஒருவருடமாக குழந்தைகளின் முகத்தை பொதுவெளியில் காட்டாமல் தவிர்த்துவந்தனர்.


கணவன் மற்றும் குழந்தைகளுடன் நயன்தாரா

குழந்தைகளை அறிமுகப்படுத்திய பிறகு திடீரென இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கி அதில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஸ்டைலாக நடந்துவரும் வீடியோ க்ளிப் ஒன்றையும் பதிவிட்டு என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு தொடர்ந்து இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நயன், தனது 9ஸ்கின் மற்றும் ஃபெமி9 ப்ராடக்ட்ஸ் குறித்தும், புதுப்பட அப்டேட்ஸ் குறித்தும் தவறாமல் பதிவிட்டு வருகிறார். மேலும் விக்கி - நயன் இருவருமே வெளிநாட்டுப் பயணங்கள், பண்டிகைகள் மற்றும் குழந்தைகளுடனான சிறந்த தருணங்கள் என எதையும் போஸ்ட் செய்ய தவறுவதில்லை.

சமீபத்தில் தங்களுடைய இரண்டாவது திருமண நாளைக் கொண்டாடிய இந்த தம்பதி, ஹாங்காங்கிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவந்தனர். அந்த புகைப்படங்களை இருவரும் மாறி மாறி பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டனர். அடுத்து பிசினஸ் விஷயமாக பெங்களூரு சென்றிருந்த நயன், ரொமான்டிக்காக பல போட்டோக்களை பதிவிட்டு ட்ரெண்டாகி வருகின்றனர். அதுபோக, தந்தையர் தினத்தை முன்னிட்டு உயிர் - உலக்குடன் விக்கியின் சிறந்த தருணங்களை வீடியோவாக பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

விக்கியும் ‘எனது பாகுபலிகளுடன்’ என குறிப்பிட்டு தான் தண்ணீருக்குள் மூழ்கியபடி இரண்டு மகன்களையும் மேலே தூக்கிபிடித்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இப்படி கணவன் - மனைவி இருவரும் நீயா நானா என அன்பை பொழிந்தபடி சமூக ஊடகங்களில் போஸ்ட் போட்டு கலக்கிவருகின்றனர்.

மார்க்கெட் குறைந்துவிட்டதா?

எப்போதும் குடும்பத்துடன் நேரம் செலவிட்டுவரும் நயன்தாராவுக்கு மார்க்கெட் முன்புபோல இல்லை என்கின்றன திரை வட்டாரங்கள். குறிப்பாக ‘ராஜா ராணி’யில் கம்பேக் கொடுத்த இவர், அடுத்தடுத்து பெண்களை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் பல படங்கள் மாபெரும் வெற்றிபெற்று, இவருக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தையும் பெற்றுக்கொடுத்தன. இதுகுறித்து அவர் பேசியபோது, “முன்பெல்லாம் கதைகளில் மாற்றம் செய்யவேண்டும் என்றாலும், கருத்துகளை தெரிவிக்கவேண்டுமென்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பு நடிகைகளுக்கு குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை முற்றிலும் மாறி இருக்கிறது. நம்முடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.


சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக பதிவுகளை போட்டுவரும் நயன்தாரா

அதனாலேயே பெண்களை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதுடன் அவற்றை வெற்றிப்படங்களாகவும் கொடுக்கமுடிகிறது” என்று கூறினார். திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்துவிடும் என்ற கருத்து பொதுவானதாக இருந்தாலும் இப்போதுள்ள பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்கு பிறகுதான் தங்களுக்கான மார்க்கெட்டை உயர்த்துகின்றனர். அந்த வரிசையில் நயனும் ஒருவர். ‘ஜவான்’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் தொடர்ந்து அங்கு கதைகளை கேட்டு வருகிறாராம். இருப்பினும் சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டதால் பல கண்டிஷன்களை போட்டு வாய்ப்புகளை நழுவவிட்டு வருகிறாராம் நயன்தாரா.

சமந்தாவுக்கு கைமாறிய வாய்ப்பு!

தற்போது தமிழில் ‘மண்ணாங்கட்டி’ எனும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயன், அடுத்து நிவின் பாலி ஜோடியாக மலையாளத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் ஒருசில படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் சென்னையில் குடும்பத்துடன் வசித்துவரும் இவர் வெளியூர்களில் ஷூட்டிங் என்றால் பல்வேறு கண்டிஷன்களை போடுகிறாராம். குறிப்பாக, மலையாளம் படம் ஒன்றில் மம்முட்டி ஜோடியாக நடிக்க முதலில் நயன்தாராவைத்தான் படக்குழு அணுகியதாம். ஆனால் சென்னை மற்றும் அதற்கு அருகில் ஷூட்டிங் நடந்தால்தான் நடிப்பேன் என அவர் கூறியதால் அந்த வாய்ப்பு தற்போது சமந்தாவிற்கு கைமாறியிருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நயன்தாரா கண்டிஷன் போட்டு நடிக்க மறுத்த மலையாளப் படத்தில் ஒப்பந்தமான சமந்தா

இதுபோக, சென்னையில் குடும்பத்துடன் அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்துவரும் நயன்தாரா, தான் குழந்தைகளுடன் வெளியே வரும்போதும், நீச்சல் குளத்தில் விளையாடும்போதும் யாரும் அவர்களை போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுக்கக்கூடாது என கடுமையான எச்சரித்திருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய வருபவர்களுக்குக்கூட கண்டிஷன் தானாம். சமீபகாலமாக இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வெளியாவதும் நயன்தாராவின் மார்க்கெட் குறைவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

அவங்கள மாதிரி வருமா?

என்னதான் நடிகை நயன்தாரா பெண்களை மையப்படுத்திய கதைகளில் நடித்தாலும் அவர் சுஜாதாவின் இடத்தை பிடிக்கமுடியாது என பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்திரா லட்சுமணன் தெரிவித்தது தற்போது வைரலாகி வருகிறது. 80களின் முன்னணி ஹீரோயினான சுஜாதா பெண்களை மையப்படுத்திய நிறையப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பல மெஹா ஹிட்டடித்திருக்கின்றன. எந்த மாதிரியான கதாபாத்திரங்களை கொடுத்தாலும் அவற்றை உணர்ச்சியுடன் ஒரே டேக்கில் நடித்துகொடுப்பதில் சுஜாதா வல்லவர் என அவர் புகழாராம் சூட்டியிருக்கிறார். இதனால் நயன்தாரா கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோயினாக இருந்தாலும் நடிப்பில் அந்தகாலத்து நடிகைகளை மிஞ்சமுடியாது என கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Updated On 1 July 2024 6:41 PM GMT
ராணி

ராணி

Next Story