சமீபத்தில் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் அசத்தலாக ஓடி நல்ல வசூலை பெற்று பல சாதனைகளை முறியடித்த நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

விஜய்யின் வித்தியாசமான நடிப்பில் முற்றிலும் ஆக்ஷன் திரைப்படமாக அமைந்த ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பல எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் என்று பல பிரபலங்கள் நடிப்பில் உருவான இந்த திரைப்படம், வெளியான ஒரே நாளில் உலக அளவில் 148 கோடி ரூபாய் வசூலை பெற்று ‘ஜெயிலர்’ மற்றும் ‘ஜவான்’ படத்தின் வசூலை முறியடித்தது. ஒரே நாளில் இவ்வளவு வசூலை ஈட்டிய இந்த திரைப்படம் தற்போதுவரை 590 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற பல ஹிட் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் தனது கதைக்களத்தில் L.C.U (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) என்று புதிதான ஒரு ஐடியாலஜியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அப்படி அவர் இயக்கிய ‘கைதி’ மற்றும் ‘விக்ரம்’ படத்தில் இருந்த L.C.U, ‘லியோ’ திரைப்படத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற சஸ்பென்ஸ், திரைப்படம் வெளியாகும் வரை ரகசியமாகவே இருந்தது.

அதேபோல் இசை வெளியீட்டு விழாவிற்காகவும், விஜய்யின் குட்டி கதைக்காகவும் காத்திருந்த பலருக்கும் திடீரென்று விழா ரத்தானதால் ஏமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் நல்ல வசூலை கண்ட இந்த திரைப்படத்திற்காக நடத்தப்பட்ட வெற்றி விழாவில் ரசிகர்களின் குட்டி கதை ஆசை நிறைவேறியது. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா என்று பல மாநிலங்களிலும் நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது.


இப்படி நல்ல விமர்சனங்களை பெற்றுவரும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வசூலித்த வசூலை தொடர்ந்து இப்போது ஓடிடி தளத்திலும் வெளியாக இருக்கிறது. ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் இந்தியாவில் நவம்பர் 24 ஆம் தேதியும், மற்ற நாடுகளில் 28ஆம் தேதியும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Updated On
ராணி

ராணி

Next Story