இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(02.01.1977 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

"மச்சானைப் பார்த்தீங்களா" என்ற பாட்டு எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்தப் பாட்டுக்கு இசையமைத்த இளையராஜாவை எத்தனை பேருக்குத் தெரியும்?

1968-ல் மதுரை மாவட்டம் பண்ணைபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாவலர் என்பவர், தன் சகோதரர்களுடன் சென்னைக்கு வந்தார். "பாவலர் சகோதரர்கள்" என்ற இசைக் குழுவை அமைத்து, மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

அந்த "பாவலர் சகோதரர்கள்" இசைக் குழுவில் ஆர்மோனியம் வாசித்தவர், இளையராஜா. பாவலருக்கு இரண்டாவது தம்பி!. இளையராஜா சில காலம் இசை அமைப்பாளர் ஜி.கே. வெங்கடேசிடம் உதவியாளராகவும் இருந்தார்.

அன்னக்கிளி


இளம் வயதில் இசையமைப்பின்போது இளையராஜா

"அன்னக்கிளி" படம் தயாரிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், இளையராஜா தன் நண்பர் செல்வராஜ் மூலம் பஞ்சு அருணாசலத்தைப் பார்த்தார். "படம் எடுக்கும்போது கூப்பிட்டு அனுப்புகிறேன்" என்று இளையராஜாவை அனுப்பிவிட்டார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சு அருணாசலத்திடம் இருந்து அழைப்பு வந்தது. "உங்கள் திறமை முழுவதையும் வைத்து இசை அமைத்துக் கொடுங்கள்" என்று “அன்னக்கிளி" படத்துக்கு இசை அமைக்கும் பொறுப்பை இளையராஜாவிடம் ஒப்படைத்தார்கள். முதல் படமே இளையராஜாவுக்கு வெள்ளி விழாப் படமாக அமைந்து விட்டது!!

மனைவி


மகன் கார்த்திக் ராஜா மற்றும் மகள் பவதாரிணியுடன் இளையராஜா

இளையராஜா திருமணமானவர். மனைவி பெயர் ஜீவா. கார்த்திக் என்ற ஒரு மகனும், பவதாரணி என்ற மகளும் இருக்கிறார்கள். இவர் “கிதார்" இசைப்பதில் வல்லவர். இதற்காக சென்னையில் உள்ள "லண்டன் டிரினிடி" இசைக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பரிசு பெற்று இருக்கிறார். இந்தக் கல்லூரியின் 1971-72க்கான சுழற்கோப்பையும் இவருக்குக் கிடைத்தது.


அண்ணன் பாஸ்கரன், தம்பி கங்கை அமரனுடன் இளையராஜா

இப்பொழுது, "தீபம் மற்றும் 10 படங்களுக்கு இசை அமைத்துக்கொண்டிருக்கும் இளையராஜா இப்போதும் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கிறார்". "ஒவ்வொரு படத்துக்கும் வெவ்வேறு விதமாக இசை அமைக்க வேண்டும். இதுவே எனது குறிக்கோள்" என்கிறார், இளையராஜா. இளையராஜா இசை அமைக்க உதவியாக இருப்பவர்கள், அண்ணன் பாஸ்கரன், தம்பி அமர்.

Updated On 27 May 2024 6:35 PM GMT
ராணி

ராணி

Next Story