இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த வருடம் மலையாளம் சினிமா பெரும் சரிவை சந்தித்தது. எதிர்பார்த்த பெரிய படங்கள் பெரிய வெற்றியை அடையவில்லை. 'ர்ட்ஸ்', 'ரோமாஞ்சம்', '2018', 'கண்ணூர் ஸ்குவாட்' மற்றும் 'நேரு' ஆகிய படங்கள் மட்டுமே பெரும் வசூலை அடைந்தன. 'பாமிலி' மற்றும் 'காதல் தி கோர்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டாலும் பெரிய வசூலை பெறவில்லை. இதனால் 2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மலையாள சினிமா, வசூல் ரீதியாக வெற்றி அடைய வேண்டும் என்கிற நோக்கில் பயணித்து வருகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து மற்ற திரை துறையினரை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. 'ஆட்டம்', 'ப்ரேமலு', 'பிரம்மயுகம்', 'ஆபிரகாம் ஒஸ்லர்' மற்றும் 'அன்வெஷிப்பின் கண்டெதும்' போன்ற படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றியை பெற்றிருக்கின்றன. இந்த படங்களை பற்றியும் இதன் வசூல் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

சிறிய பட்ஜெட்டில் மிகப்பெரிய வெற்றி - ப்ரேமலு


'ப்ரேமலு' படத்தின் போஸ்டர் காட்சி

பகத் பாசில் மற்றும் நஸ்ரியா தயாரிப்பில் கிரிஷ் A.D. இயக்கத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம்தான் "ப்ரேமலு". அமெரிக்கா செல்ல விரும்பும் சச்சின்(நஸ்லென்), விசா நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் ஹைதராபாத்திற்கு மேற்படிப்பிற்காக வருகிறார். அங்கு நண்பனின் தோழி ரீனாவை(மமிதா பைஜு) சந்திக்கிறார். அப்பொழுது ரீனாவின் மீது சச்சினுக்கு காதல் வருகிறது. அதன்பின் இருவரும் இணைந்தனரா என்பதே படத்தின் கதை . ஏற்கனவே இதே கதையில் பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படத்தை காட்சி படுத்தியிருக்கும் விதமும், திரைக்கதையும் நன்றாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பலமே நஸ்லென் மற்றும் மமிதா பைஜுதான். குறிப்பாக மமிதா பைஜு ரசிக்க வைக்கிறார். படத்தில் வரும் கல்யாண காட்சிகள் மக்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறது. அஜ்மலுடைய ஒளிப்பதிவும், விஷ்ணுவின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம். ரோம் - காம் படமாக வெளியான "ப்ரேமலு" இதுவரை 55 கோடி வசூலை பெற்றுள்ளது. 10 கோடியில் எடுக்கப்பட்ட "ப்ரேமலு" மிகப்பெரிய வசூல் சாதனையும் செய்துள்ளதாம்.

மலையாளத்தில் மீண்டும் ஒரு க்ரைம் திரில்லர் - ஆபிரகாம் ஒஸ்லர்


'ஆபிரகாம் ஓஸ்லர்' பட போஸ்டரில் இடம்பெற்றுள்ள நடிகர் ஜெயராம்

2020 ஆம் ஆண்டு வெளியான அஞ்சம்பதிரா படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கிய திரைப்படம்தான் "ஆபிரகாம் ஒஸ்லர்". ஜெயராம், அனஸ்வரா ராஜன் மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் மெகாஸ்டார் "மம்மூட்டி" நடித்துள்ளார். காவல்துறையில் உதவி கமிஷனராக இருக்கும் ஆபிரகாமிற்கு ஒரு கொலை நடந்துவிட்டதாக ஃபோன்கால் வருகிறது. கொலை நடந்த இடத்திற்கு விரைந்து செல்கிறார். அங்கு பார்த்தால் கொலை நடந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. திரும்பி வீட்டிற்கு வந்தால் அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். பிறகு 3 வருடம் கழித்து இதே போல் ஒரு குடும்பம் கொலை செய்யப்படுகிறது. அதை மீண்டும் விசாரிப்பதற்கு ஆபிரகாம் ஒஸ்லர் வருகிறார். அந்த கொலை செய்தவர்களை ஆபிரகாம் கண்டு பிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை. கிரைம் திரில்லர் படமான இது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளதாம். தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக இரவு காட்சிகளில் அவர் அமைத்திருக்கும் லைட்டிங் மிகச்சிறப்பாக உள்ளது. அதேபோல மிதுன் முகுந்தனின் பின்னணி இசையும் மிரள வைக்கிறது. 18 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 40 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது.

மெகாஸ்டாரின் புதிய அவதாரம் - பிரம்மயுகம்


'பிரம்மயுகம்' படத்தில் கொடுமன் பொட்டியாக வரும் நடிகர் மம்மூட்டியின் தோற்றம்

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி, அர்ஜுன் அசோகன் நடிப்பில் ஹாரர் திரில்லர் படமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்தான் "பிரம்மயுகம்". கதை ஆரம்பிப்பதே 17 ஆம் நூற்றாண்டில் நடப்பது போல் தொடங்குகிறது. தேவன் என்கிற பாடகர் தனது நண்பருடன் பாட்டு கச்சேரி முடிந்து காட்டு வழியில் நடந்துவந்து கொண்டிருக்கிறார். இரவு நேரம் ஆகிவிட்டதால் இருவரும் காட்டில் தங்க நேரிடுகிறது. இரவில் தங்கிய தேவனின் நண்பன் பேயால் கொலை செய்யப்படுகிறான். வேறு வழியின்றி காட்டை விட்டு தப்பிக்க நினைக்கும் தேவன் ஒரு வீட்டில் தஞ்சம் அடைகிறார். ஆனால் தேவனுக்கு தெரியாது இனிமேல் அந்த வீட்டை விட்டு வெளியே வரமுடியாதென்று. அதன்பின் நடந்தது என்ன என்பதே படத்தின் மீதி கதை. இந்த மாதிரி கதைகளை எடுப்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். திரைக்கதையை மிகநேர்த்தியாக அமைத்துள்ளார் இயக்குநர் ராகுல் சதாசிவன். அருவியை கடக்கும் காட்சியில் வரும் ட்ரோன் ஷாட்டாக இருக்கட்டும், அதன்பின்பு கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் 360 டிகிரி ஷாட்டாக இருக்கட்டும் சேனாத் ஜலாலின் ஒளிப்பதிவு மிகநேர்த்தி என்றே சொல்லப்படுகிறது. மம்மூட்டியின் கதாபாத்திரமும் மக்களை பயமுறுத்துகிறதாம். வெறும் 27 கோடியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இரண்டே நாளில் 40 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.

மீண்டும் கமெர்ஷியல் படங்களுக்கு திரும்பிய டொவினோ தாமஸின் “அன்வேஷிப்பின் கண்டேதும்”


'அன்வேஷிப்பின் கண்டேதும்' படத்தின் ஸ்டில்

அறிமுக இயக்குநர் டார்வின் குரியகோஸ் இயக்கத்தில் டொவினோ தாமஸ், அர்த்தனா பினு நடிப்பில் க்ரைம் திரில்லர் படமாக வெளியாகியிருக்கும் படம்தான் “அன்வேஷிப்பின் கண்டேதும்”. ஒரு படத்திற்கு இரண்டு கதை. இந்த படம் ஆரம்பிப்பதே 1993 ஆம் ஆண்டு என்றுதான் சித்தரிக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் ஒரு கேஸ், அடுத்த பாதியில் ஒரு கேஸ் என்று விறுவிறுப்பான திரைக்கதையுடன் படம் நகர்கிறது. இந்த படம், பார்க்கும் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை தரும். ஏனென்றால் இரண்டு வெவ்வேறு கதைகள் ஒரே கதாநாயன் என்று அருமையாக எடுத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் டார்வின் குரியோஸ். காவல் துறையில் நடக்கும் அரசியலை வெளிச்சம் போட்டு காட்டும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், டொவினோ தாமஸ் யதார்த்தமான நடிப்பில் அசத்தியிருக்கிறார். படம் மெதுவாக நகர்வதாக சொல்லப்பட்டாலும், 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 26 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

Updated On 4 March 2024 6:20 PM GMT
ராணி

ராணி

Next Story