இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரையுலகில் தமிழ் நடிகைகளைவிட, மலையாள நடிகைகளே அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற பொதுக்கருத்து எப்போதும் நிலவுவது உண்டு. அப்படி 80-களிலேயே மலையாளத்தில் இருந்து வந்து, தமிழ் திரையுலகில் பெரும் ஆதிக்கம் செலுத்தியவர்தான் நடிகை அம்பிகா. தமிழில் சிவாஜி கணேசன், விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், மோகன்ராஜ், சத்தியராஜ்; தெலுங்கில் என்.டி. ராமாராவ், சிரஞ்சீவி, நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, ராஜ்குமார், ஸ்ரீநாத்; மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் என தென்னிந்திய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர் நடிகை அம்பிகா. “70, 80 வயதானாலும் சினிமாவில் நடிப்பேன். அப்படி, நடிப்பு வாய்ப்பு இல்லாமல் போனாலும், சினிமா உலகை விட்டு ஒதுங்க மாட்டேன். தயாரிப்பாளராகவோ, டைரக்டராகவோ இருப்பேன்” எனக்கூறி தற்போது வரை படங்கள், சீரியல்கள் என தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை அம்பிகா. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர் நேர்காணல் அளித்துள்ளார். அதில் திரையுலகில் தன்மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள், தனது தங்கையும், நடிகையுமான நடிகை ராதாவுடனான உறவு, தற்போதைய வாழ்க்கை முறை என தன்னைப் பற்றிய பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.


தனது தாய், தந்தை மற்றும் தங்கை ராதாவுடன் அம்பிகா

அம்பிகாவின் திரைப்பயணம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த 1962ஆம் ஆண்டு குஞ்சன் நாயர் மற்றும் சரசம்மா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர்தான் நடிகை அம்பிகா. அம்பிகாவிற்கு ராதா, மல்லிகா என இரு சகோதரிகள் உள்ளனர். அர்ஜுன், சுரேஷ் என இரு சகோதரர்களும் உள்ளனர். 5 வயதில் இருந்தே சினிமா மீது பைத்தியமாக இருந்த அம்பிகா, பள்ளிக்கு செல்லும்போது ஹீரோயின்கள் போல மேக்கப் போட்டுக்கொண்டுதான் செல்வாராம். சினிமாவில் நடிக்க வேண்டும் என தொடர்ந்து தன் அம்மாவிடம் கூறிக்கொண்டே இருப்பாராம். இச்சூழலில் சோட்டானிக்கரை அம்மன் படத்தின் ஷூட்டிங் அம்பிகாவின் சொந்த ஊரான கல்லரா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. அப்போது, அதை வேடிக்க பார்க்க வேண்டும் என அழுது, அடம்பிடித்து தனது அம்மாவையும் அந்த ஷூட்டிங்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தப் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 1976-ல் வெளியான இப்படம்தான் அம்பிகா சிறுமியாக நடித்த முதல் படம். தொடர்ந்து அடுத்த ஆண்டே மூன்று படங்களில் சிறுமியாக அம்பிகா நடித்துள்ளார்.

பின்னர் தனது பள்ளிக்கு சிறப்பு விருந்திரனராக வந்த நடிகர் மதுவிடம் வாய்ப்பு கேட்டு அவரின் சில படங்களில், சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். அப்போதே தனது எதிர்காலம் சினிமாதான் என்றும் முடிவு செய்துள்ளார். இப்படி 12 வயதில் தனது நடிப்பை தொடங்கிய அம்பிகா, 14 வயதில் ‘சீதா’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து பல மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த அம்பிகாவிற்கு தமிழிலும், கன்னடத்திலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து கமலுடன் "கடல்மீன்கள்" படத்தில் நடித்தார். அந்தப் படத்தை பார்த்த பாக்கியராஜ் "அந்த ஏழு நாட்கள்" படத்தில் அம்பிகாவை நடிக்க வைத்தார். இப்படம் வெற்றிப் பெற தமிழ் திரையுலகில் அம்பிகாவிற்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அம்பிகா நல்ல பீக்கில் இருக்கும்போது அவரது தங்கை ராதாவும் திரையுலகில் காலாடி எடுத்து வைத்தார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டாக அமைய, சகோதரிகள் இருவரும் அப்போது தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தனர். தொடர்ந்து தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தற்போதும் நடித்து வருகிறார் நடிகை அம்பிகா.


திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அம்பிகா

திருமண வாழ்க்கை

சினிமாவில் தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியாலும் கொடிகட்டிப் பறந்த காலத்தில் மலையாள நடிகருடன் காதல் என பல கிசுகிசுக்களை எதிர்கொண்டார் நடிகை அம்பிகா. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாது, கடந்த 1988ம் ஆண்டு பிரேம்குமார் மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அடுத்த ஆண்டே ஒரு மகன் பிறந்தான். இதனையடுத்து குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார் அம்பிகா. தொடர்ந்து இரண்டாவது மகன் பிறந்தான். ஆனால் 8 ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிப்பிற்கு திரும்பினார் அம்பிகா. படங்கள் மட்டுமின்றி சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார். அப்போது தனது சக நடிகரான ரவிகாந்த் உடன் காதல் ஏற்பட்டு 2000ம் ஆண்டு அவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் அந்த வாழ்க்கையும் 2002-ல் முடிவுக்கு வந்தது. பின்னர் திருமண வாழ்க்கையை உதறி தள்ளிய அம்பிகா, நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.


அம்பிகா, ராதாவின் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைத்த எம்ஜிஆர்

அரசியல் மோகம்

அம்பிகாவிற்கு சினிமா மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு இருந்து வருகிறது. அவரது அம்மா கேரள காங்கிரஸில் இருந்தார். தனக்கும் காங்கிரஸ் மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது என பலமுறை கூறியுள்ளார். மேலும் எம்ஜிஆர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாகவும், ஜெயலலிதா மீதான அன்பு காரணமாகவும், அவர் கேட்டுக் கொண்டதற்காக ஆண்டிபட்டி தொகுதியில் அம்பிகா, ராதா என இருவரும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். தனக்கு பிடித்த பெண் தலைவர்கள் இந்திரா காந்தி மற்றும் ஜெயலலிதா என்று அம்பிகா கூறியுள்ளார். அரசியலில் வருவதற்குகூட விருப்பம் இருப்பதாக அண்மையில் அம்பிகா தெரிவித்திருந்தார். அதற்கான நேரம் வந்தால் வருவேன். அப்போது எந்தக் கட்சியில் சேருவேன் என சொல்கிறேன் எனக் கூறியிருந்தார்.

வதந்திகள்

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள நடிகை அம்பிகா, தன்னைப் பற்றி வரும் வதந்திகள் குறித்து தான் கவலைப்படவில்லை எனவும், ஆனால் தற்போதெல்லாம் வன்முறை, கெட்ட வார்த்தைகள், ஆபாசம் நிறைந்த வார்த்தைகளை கொண்டு விமர்சிப்பதாகவும் ஆதங்கப்பட்டுள்ளார். “அப்படி பேசுபவர்கள் எல்லாம் யாரென்று எனக்குத் தெரியும். அவர்களை அடிக்க வேண்டும் என்ற அளவிற்கு ஆத்திரம் வரும். ஆனால் என்னைப் பற்றி பேசினால்தான் அவர்களுக்கு வருமானம் என்பதால் பாவம் என்று விட்டுவிட்டேன்” எனக் கூறியுள்ளார். மேலும் உருவக்கேலி குறித்து பேசிய அம்பிகா, "பலரும் என்னை பார்க்கும்போது, எப்படி இருந்த நீங்க, இப்படி ஆகிட்டீங்களே என்று கேட்பார்கள். 20 வயதில் இருந்ததுபோல 70 வயதில் ஒருவர் இருக்கமுடியுமா? ஒரு கதாநாயகிக்கு திருமணமாகி குழந்தை பிறந்து விட்டது என்றால், அவளுக்கு இருபது வயதே இருந்தாலும், 70 வயது என போட்டு பெரிய செய்தி ஆக்கி விடுவார்கள். ஆனால் ஹீரோக்கள் மட்டும் 17 வயது ஹீரோயின்களுடன்தான் எப்போதும் நடிப்பார்கள். இந்த துறை என்றில்லை. எல்லாத் துறைகளிலும் இப்படி ஆண், பெண் பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது. எங்களின் உடல் எடை அதிகமாக செய்யும். வேண்டுமென்றால் குறைத்துக் கொள்வோம். இதனை பார்த்து கருத்து சொல்லலாம். ஆனால் ஒருவரை புண்படுத்தும் வகையில் பாடி ஷேமிங் செய்யக்கூடாது” என தெரிவித்தார்.


எலகண்ட் லுக்கில் நடிகை அம்பிகா

கொடுமைகள், குடைச்சல்கள்

தாங்கள் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோது பல நடிகர்களும் குடைச்சல்கள் கொடுத்ததாக அம்பிகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அம்பிகா, "முதலில் ஒரு படம் தயாரித்தோம். அதில் ரூ.5 லட்சம் லாபம் கிடைத்தது. அப்போதைய காலக்கட்டத்தில் அது போதுமானதுதான். ஆனால் இதற்குமேல் படம் தயாரிக்ககூடாது என முடிவெடுத்தோம். ஏனென்றால் அந்தப் படம் பண்ணும்போதே நிறைய நடிகர்கள் கொடுமைகள், குடைச்சல்கள் கொடுத்தனர். தயாரித்தால்தானே பிரச்சனை, வேண்டாம் என நிறுத்திவிட்டோம். தயாரிப்பு கம்பெனியையும் மூடிவிட்டோம். இதற்கு மேல் படம் தயாரிக்க ஆசை இல்லை" எனக் கூறியுள்ளார்.


படிக்காதவன் படத்தில் வரும் ‘ஊரத் தெரிஞ்சிகிட்டேன்’ பாடலில் ரஜினிகாந்துடன்...

ஹீரோக்களுக்கு ரூ.200 கோடி சம்பளம் எதற்கு?

தொடர்ந்து டாப் ஹீரோக்களின் சம்பளம் குறித்து பேசிய அம்பிகா, ஹீரோக்களின் சம்பளத்தை ஏற்றியதே தயாரிப்பாளர்கள்தான் எனவும், தன்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ‘ஊர தெரிஞ்சிக்கிட்டே உலகம் புரிஞ்சுகிட்டே’ என்னும் பாடல், தனது வாழ்க்கைக்கு நன்றாக பொருந்தும் எனவும், அந்த பாடல் வரிகள் தன்னுடைய வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் எனவும் அம்பிகா கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அம்பிகா, "பாடலின் ஆரம்ப வார்த்தையில் இருந்து, முடிவுவரை அது என்னுடைய பாடல். இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்க்கையில் உள்ள வார்த்தைகள். காலம் நமக்கு பல பாடங்களை சொல்லிக் கொடுக்கும். முதலில் எல்லாம் இந்த பாட்டு ஓடினால் மாற்றுங்கள் எனக் கூறுவேன். இப்போதெல்லாம் நம் வாழ்க்கை அப்படியே இருக்கிறதே எனக் கூறுவேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்தப் பாடல் ஒத்துப்போகும்" என தெரிவித்துள்ளார். மேலும், "ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் நம்மை வேண்டாம் என்று கூறினால், விட்டுவிடுங்கள், யாரையும் எதற்கும் வற்புறுத்தாதீர்கள். நிராகரிப்புகளை ஏற்க பழகுங்கள்", என்று இளைய தலைமுறையினருக்கு அம்பிகா அருமையான அறிவுரையும் கூறியுள்ளார்.

Updated On 22 July 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story