இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தற்போதைய காலக்கட்டத்தில் கதாநாயகன், கதாநாயகி என யாராக இருந்தாலும், அறிமுகமாகும் முதல் படத்திலேயே வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் 80ஸ் காலக்கட்டத்தில் கதாநாயகர்களைவிட, கதாநாயகிகள் பலரும், அறிமுகமான முதல் படத்திலேயே ஹிட் அடித்தார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் தேர்வு செய்த கதைகள். திறமையான இயக்குநர்களும் கூட! அப்படி முதல் படத்திலேயே வெற்றிக்கண்ட நடிகைகளின் வரிசையில் இருப்பவர்களில் ஒருவர்தான் நடிகை ரேவதி. தனது கதை தேர்வு மூலம் 80ஸ், 90ஸ்களில் பிராந்திய சினிமாவை ஆண்டவர். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி தற்போது வேறு மாதிரியான எனர்ஜியில் இயக்குநாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரின் திரைப்பயணம் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் பற்றியும் பார்ப்போம்.


சல்மான் கானுடன் ‘லவ்’ படத்தில் நடித்த ரேவதி

ஆஷா கெளுன்னியின் வாழ்க்கையை மாற்றிய நிகழ்வு!

ரேவதியின் இயற்பெயர் ஆஷா கெளுன்னி. ஆஷா கெளுன்னியின் வாழ்க்கையையே மாற்றியமைத்த பள்ளி ஃபேஷன் ஷோ அது. அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தமிழ் இதழ் ஒன்றில் அட்டைப்படமாக வெளிவருகிறது. இந்த அட்டைப்படம் இயக்குநர் பாரதிராஜாவின் கவனத்தை ஈர்க்க, ஆஷாவை ரேவதி என பெயர்மாற்றம் செய்து மண்வாசனை படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார். இப்படம் வெற்றிவிழா காண அதே ஆண்டு ‘கட்டத்தே கிலிக்கூடு’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் ரேவதி. இவ்வாறுதான் தொடங்கியது பிராந்திய சினிமாவில் வெற்றிக்கண்ட நடிகை மற்றும் இயக்குநரான ரேவதியின் திரைப்பயணம். தமிழில் தொடர் வெற்றிப் படங்களைத் தர, தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்கிறார் ரேவதி. அதேசமயம் ஸ்ரீதேவியைப் போல தென்னிந்திய சினிமாவில் இருந்து ஹிந்திக்கு சென்று வெற்றிக்கண்ட ஒருசில நடிகைகளில் ரேவதியும் ஒருவர். சல்மான்கானுடன் ‘லவ்’ படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்தார். தற்போதுவரை சல்மான்கானின் சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் இருந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களான பாரதிராஜா, கே.பாலச்சந்தர், பரதன், மகேந்திரன், ஆர்.சுந்தரராஜன் ஆகியோரின் ஆஸ்தான நடிகையாக இருந்த ரேவதிக்கு மணிரத்னத்தால் இயக்குநர் அவராதம் மனதில் துளிர்விட தொடங்குகிறது. அஞ்சலி படப்பிடிப்பின்போது ரேவதியிடம் ஒரு வெற்றுப் பேப்பரை கொடுத்து அதில் எழுதக் கூறியிருக்கிறார் மணிரத்னம். ஆனால் ஒருநாள் முழுவதும் ஒரு வார்த்தை கூட எழுத முடியவில்லை ரேவதியால். அப்போதுதான் அவர் எழுத்து குறித்து யோசித்துள்ளார். இப்படி 1990-ல் மணிரத்னத்தால் துளிர்விட்ட விதை, மித்ர், மை ஃப்ரண்ட் என்ற படமாக திரையில் விழுந்தது. 2002 ஆம் ஆண்டில், ரேவதி தனது நெருங்கிய தோழி ஷோபனா நடித்த 'மித்ர், மை ஃப்ரண்ட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட இந்தப்படம் சிறந்த ஆங்கில திரைப்படம், சிறந்த நடிகை மற்றும் சிறந்த எடிட்டிங் என மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. மேலும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநருக்காக வெள்ளி மயில் விருதையும் பெற்றார் ரேவதி. தொடர்ந்து ‘ஃபிர் மிலேங்கே’ மற்றும் ‘சலாம் வெங்கி’ போன்ற ஹிந்தி படங்களையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் குட் வைஃப் என்ற வலைத் தொடரையும் இயக்கியுள்ளார். தொடர்ந்து படங்கள் இயக்க உள்ளதாகவும் ரேவதி தெரிவித்துள்ளார்.


முன்னாள் கணவர் மற்றும் தனது குழந்தையுடன் நடிகை ரேவதி

விவாகரத்துக்கு பின் தாய்மை...

பிரேம பாசம் படப்பிடிப்பின் போதுதான் ரேவதிக்கும், ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், நடிகருமான சுரேஷ் சந்திர மேனனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் பெற்றோரின் சம்மத்ததுடன் 1986 ஆம் ஆண்டு திருமண பந்தத்திற்குள் சென்றது. திரைத்துறையில் அறிமுகமாகி மூன்று ஆண்டுகளே ஆனநிலையில், நல்ல பீக்கில் இருந்த சமயத்தில் 20 வயதில் திருமணம் செய்துகொண்டார் ரேவதி. 1993 ஆம் ஆண்டில் வெளியான புதிய முகம் படத்தில், ரேவதி, சுரேஷ் மேனன் இருவரும் இணைந்து நடித்தனர். சுரேஷ் மேனன் படத்தை இயக்கியிருந்தார். இவ்வாறாக மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த சுரேஷ்-ரேவதி வாழ்க்கையில் குழந்தையின்மை பிரச்சனை புயலாக வீசியதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழ ஆரம்பித்தது. கருத்து வேறுபாடு, மாறுபட்ட சிந்தனைகளால் பிளவுபட தொடங்கிய இருவருக்கும் இடையேயான மணவாழ்க்கை, குழந்தை இல்லாததால் இன்னும் மோசமடைந்தது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு, 2002ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது, இருவருக்கும் இடையேயான கணவன், மனைவி உறவு. ரேவதியும் சுரேஷும் பிரிந்து வாழ முடிவு செய்து, விவாகரத்திற்கு விண்ணப்பித்தனர்.

தொடர்ந்து இருவரும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்து 10 வருடம் தனியாக வாழ்ந்து வந்தநிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றம் இவர்களுக்கு பரஸ்பர விவாகரத்து வழங்கியது. பரஸ்பர விவாகரத்துக்கு பிறகு ரேவதியும், சுரேஷும் சிறிதுகாலம் திரைவாழ்க்கையில் இருந்து விலகி இருந்தனர். ஆனால் விவாகரத்துக்குப் பிறகும் தானும், சுரேஷும் நண்பர்களாகவே இருப்போம் என்று ரேவதி தெரிவித்திருந்தார். அதுபோல தற்போதுவரை இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பதாகவும், இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பும் அப்படியே உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் பலமுறை, அந்த வயதில் திருமணம் செய்திருக்கக்கூடாது என்று எண்ணியதாகவும் கூறியுள்ளார். கெரியரின் உச்சத்தில் இருந்தபோது, அதை உணராமல் அந்த வயதில் எடுத்த திருமண முடிவுதான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு எனவும் பலமுறை தெரிவித்துள்ளார் ரேவதி. இதனிடையே செயற்கை கருத்தரிப்பு மூலம் தனது 48வது வயதில் ஒரு குழந்தைக்கு தாயானார் ரேவதி. அனைவரும் அது தத்துக்குழந்தை எனக்கூறிய நிலையில், அது தத்துக்குழந்தை இல்லை, ஐவிஎஃப் முறைமூலம் தான் சுமந்து பெற்றப்பிள்ளை என கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகால மௌனத்தை கலைத்தார் ரேவதி. தொடர்ந்து சுரேஷ் மேனனும், ரேவதியும் தங்கள் திரைப்பயணத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பயணிக்கும் ரேவதி...

3 தேசிய விருதுகள்...

இதுவரை நடிகை ரேவதி சிறந்த நடிகைக்கான 3 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். தனது முதல் படத்திற்கே தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வென்றார். அதே ஆண்டு, தனது முதல் மலையாள படத்திற்கும் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். 1990 ஆம் ஆண்டில் ‘கிழக்கு வாசல்’ படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதையும் வென்றார்.1992ஆம் ஆண்டில் தெலுங்கில் சிறந்த நடிகையாக கௌரவிக்கப்பட்டார். தென்னிந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் பாராட்டுகள் இருந்தபோதிலும், மலையாளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்கு பின்னரே ரேவதிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதாவது மலையாள சினிமாவின் பிரியமான முகங்களில் ஒருவராக மாறிய ரேவதிக்கு கடந்த 2022ஆம் ஆண்டுதான் ‘பூதகளம்’ படத்திற்காக கேரள அரசின் மாநில திரைப்பட விருது கிடைத்தது. நடிகை என்பதையும் தாண்டி, இயக்குநர், திரைக்கதையாசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடகி, எழுத்தாளர் என தற்போதுவரை தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார் ரேவதி.

வெளியில் மகிழ்ச்சியாக தெரியும் திரை நட்சத்திரங்கள் பலரின் நிஜ வாழ்க்கை பல சோகங்களை தாங்கியுள்ளது. அதனையும் மீறிதான், அவர்கள் நம்மை திரையில் சந்தோஷப்படுத்தி வருகின்றனர் என்பதற்கு ரேவதியின் வாழ்க்கையும் ஒரு எடுத்துக்காட்டு.

Updated On 26 Aug 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story