இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவில் எத்தனையோ மாஸ் ஹீரோக்கள் இருந்தாலும், சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இன்றுவரை சும்மா கெத்தாக திரையுலகில் வலம் வரக்கூடிய ஒரே நடிகர் யார் என்றால் அது நம் ரஜினிகாந்த்தான். இந்த பட்டத்திற்காக அன்று முதல் இன்றுவரை எத்தனையோ நடிகர்கள் போட்டிக்கு வந்தாலும் அத்தகைய நடிகர்களின் வாயிலாகவே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான் என்று சொல்ல வைத்ததுதான் ரஜினிகாந்தின் மாஸ். தன்னுடைய துவக்க காலத்தில் வில்லனாகவும், பிறகு 'முள்ளும் மலரும்', 'புவனா ஒரு கேள்விக்குறி', 'ஆறிலிருந்து அறுபது வரை' போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி, தான் ஒரு மகா நடிகன் என்பதை அப்போதே நிரூபித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்து இன்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் அவர் பின்னால் நிற்கிறது என்றால், அதற்கு மிக முக்கிய காரணம் அவர் நடித்த மாஸான படங்கள்தான். அந்த வகையில், ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனைகளை தந்த மாஸ் ஹிட் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

தாறுமாறு ஹிட் அடித்த 'தர்மயுத்தம்'


'தர்மயுத்தம்' படத்தில் இரு மாறுபட்ட காட்சிகளில் நடிகர் ரஜினிகாந்த்

1970-களின் இறுதியில் பன்முக கலைஞராக வலம் வந்துக் கொண்டிருந்த ரஜினி எனும் கலைஞனை, ஒரு வணிக மதிப்புமிக்க நாயகனாக ஒரு அந்தஸ்திற்கு உயர்த்திய முக்கியமான படங்களில் ஒன்று 'தர்மயுத்தம்'. கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், உடன்பிறவா அண்ணனுமான ஆர்.சி.சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் அன்று மிகப்பெரிய ஹிட் அடித்தது. மனிதர்களைக் கொன்று அவர்களின் கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை பணத்திற்காக விற்கும் கொள்ளைக் கூட்டம் ரஜினியின் ஒரே அன்புத் தங்கையைக் கொன்றுவிடும். அதற்காக அவர்களைப் பழிவாங்குவதுதான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. காதல், ஆக்‌ஷன், தங்கை பாசம் என அந்த சமயம் வெளிவந்த பெரும்பாலான படங்களில் பின்பற்றப்பட்ட அதே விஷயம்தான் இப்படத்திலும் இடம் பெற்றிருந்தாலும் திரைக்கதை படத்தின் வெற்றிக்கு முதன்மைப் பங்காற்றியது. பெளர்ணமி இரவுகளில் மட்டும் கதாநாயகனான ரஜினியை சங்கிலியில் கட்டிவைக்க வேண்டும், இல்லையென்றால் கட்டுப்படுத்த முடியாத வெறி ஏற்பட்டு விபரீதம் ஆகிவிடும் போன்ற அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத உளவியல் விஷயத்தை இயக்குநர் படத்தில் புகுத்தியிருந்த விதம், திரைக்கதையில் பரபரப்பைக் கூட்டியிருந்தது. இதற்கு முன்பு வெளிவந்த பல படங்களில் ரஜினி ஆக்‌ஷன் காட்சிகளில் தன்னுடைய அபார திறமையைக் காட்டியிருந்தாலும், அவர் முதன்மைக் கதாநாயகனாக நடிக்கத் துவங்கிய புதிதில் சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த படங்களில் 'தர்மயுத்தம்' முதல் இடத்தை பிடிக்கிறது.

பில்டப்பில் எகிறிய 'பில்லா'


துப்பாக்கியுடன் வெவ்வேறு தோற்றங்களில் காட்சியளிக்கும் ரஜினி

1980 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'பில்லா'. கே.பாலாஜி தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தை ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார். ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த இத்திரைப்படம் அன்று பட்டிதொட்டியெங்கும் கலக்கியதோடு, ரஜினிகாந்தின் திரைப்பயணத்திலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தியில் அமிதாப் நடித்த ‘டான்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் முதல் முறையாக ஒரு கேங்க்ஸ்டர் கூட்டத்தின் தலைவனாக ரஜினி நடித்து ஸ்டைலிலும், பில்டப்பிலும் பட்டையை கிளப்பியிருந்தார். இதில் மிகப்பெரிய கடத்தல் தலைவனான பில்லா மற்றும் கிராமத்து வெள்ளந்தி மனிதனான ராஜப்பா எனும் இரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரஜினி நடிப்பில் கதாபாத்திரத்திற்கேற்ற வேறுபாடுகளைக் காட்டி ரசிக்க வைத்திருப்பார். சொல்லப்போனால் துவக்கத்தில் இந்த படத்தில் நடிக்க தயாரிப்பாளர் கே.பாலாஜி அணுகிய போது, அப்போது அவருக்கு இருந்த உடல் பிரச்சினை மற்றும் மனஉளைச்சல் காரணமாக ரஜினி இப்படத்தில் நடிக்க தயங்கினாராம். பிறகு கே.பாலாஜி மீது இருந்த மரியாதையின் காரணமாக நடித்தவருக்கு இப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது. ரஜினியின் சினிமா வாழ்க்கையிலும் நிஜ வாழ்க்கையிலும் பில்லாவுக்கு என்று தனியிடம் அமைந்தது. குறிப்பாக இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் ஏ.வி.எம் முதலான பெரிய பெரிய நிறுவனங்கள் ரஜினியை வைத்துப் படங்கள் தயாரிக்க முன்வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மூர்க்கத்தில் மிரட்டிய 'முரட்டுக்காளை'


ரஜினியின் 'முரட்டுக்காளை' மற்றும் 'மூன்று முகம்' பட காட்சி

ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படம் 'முரட்டுக்காளை'. ரஜினியுடன் ஜெய்சங்கர், ரதி, சுமலதா, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்த இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் அன்று ஏ, பி, சி என மூன்று சென்டர்களையும் கலக்கியது. இதில் காளையன் எனும் கிராமத்து இளைஞராக வரும் ரஜினிகாந்த் நடிப்பிலும், ஸ்டைலிலும் அசத்தியதோடு, காளையுடன் மோதும் காட்சியிலும், கிளைமாக்ஸில் வரும் ரயில் சண்டை காட்சியிலும் ஆக்சனில் பின்னிப் பெடலெடுத்திருப்பார். குறிப்பாக படத்தில் அவர் 'சீவிடுவேன் சீவி' எனக் கூறி, ஒவ்வொரு முறையும் தலைமுடியை கோதிவிடும்போது அன்று தியேட்டரில் விசில் பறந்து காதுகள் கிழிந்தன. பழிக்குப் பழி வாங்குவதுதான் படத்தின் சிம்பிளான ஒன் லைன் ஸ்டோரி என்றாலும், திரைக்கதையும், இளையராஜாவின் இசையும் படத்திற்கு அடித்தளமாக இருந்து கிராமத்து மக்களின் வாழ்வியலை அழகாக பேசியது. இதில் ரஜினியின் அறிமுகப் பாடலான 'பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடல் இன்றைக்கும் ரஜினி ரசிகர்களின் முக்கியமான பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தின் ரிலீசுக்கு முன்பு வரை ரஜினியின் திரைப்பயணத்தில் சில தடுமாற்றங்கள் இருந்ததால், இனி ‘ரஜினி அவ்ளோதான்’ என்று பேசியவர்களின் வாயை மூடி, வாய் பிளக்க வைத்த திரைப்படம் என்றால் அது 'முரட்டுக்காளை' தான். இதற்கு பிறகுதான் ரஜினியின் அடுத்த இன்னிங்ஸே ஆரம்பமானது.

மூன்று வேடங்களில் கலக்கிய 'மூன்று முகம்'

1982 ஆம் ஆண்டு எ.ஜகந்நாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துக் கலக்கிய அதிரடி திரைப்படம் 'மூன்று முகம்'. இப்படத்தில் ராதிகா, தேங்காய் ஸ்ரீனிவாசன், செந்தாமரை உட்பட பல முன்னணி நடிகர்கள் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தனர். இதுவரை ரஜினிகாந்த் எத்தனையோ படங்களில் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இப்படத்தில் வரும் அலெக்ஸ் பாண்டியனை என்றுமே யாராலும் மறக்கமுடியாது. உடலை சற்று குறுக்கி, கண்களை மேலே சுழற்றி, சற்று உப்பிய கன்னத்தோடு தெனாவெட்டா போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் ரஜினியின் கம்பீர தோற்றத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டர்கள். ரஜினியை முன்னணி ஹீரோ என்கிற அந்தஸ்திற்கு உயர்த்திய முக்கியமான படங்களுள் ஒன்றான இதில் அவர் பேசிய ஒவ்வொரு வசனங்களும் அன்று தீ பிழம்பாய் வெடித்து சிதறின. குறிப்பாக "தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாதான் தீப்பிடிக்கும். இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்!" என அவர் பேசிய வசனம் ரஜினியின் ஆள் டைம் மாஸ். அதுபோலவே அலெக்ஸ் பாண்டியனான ரஜினிகாந்தை போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து மிரட்டும் தோணியில், என் பெயரை சொன்னால் வயிற்றில் இருக்கும் குழந்தை கூட வாயை மூடும் என செந்தாமரை சொல்வார். அதற்கு ரஜினியோ 'அலெக்ஸ்பாண்டியன் பெயரை சொன்னால் வயிற்றில் இருக்கும் குழந்தை அம்மாவின் வாயையும் சேர்த்து மூடும்' என சொல்லும் அந்த காட்சி இன்று பார்த்தாலும் மாஸ் கிளப்பும். இதனாலேயே இப்படம் அன்று மெகா ஹிட் ஆனதோடு, ஹிந்தியிலும் ரஜினியை வைத்தே ரீமேக் செய்யப்பட்டு வெற்றிக் கண்டது.

விட்டதை பிடித்த 'வேலைக்காரன்'


'வேலைக்காரன்' படத்தில் மாறுபட்ட வேடங்களில் ரஜினி

சூப்பர்ஸ்டார் என்ற பெயரை ரஜினிகாந்துக்கு நிலை நிறுத்திய முக்கியமான படங்களில் ஒன்று 'வேலைக்காரன்'. 1987 இல் கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற 'நமக் கலால்' படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் ரஜினிகாந்த் ரகுபதி எனும் கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு குடும்ப படமாக வெளிவந்த இப்படத்தில் நகைச்சுவையிலும், ஆக்‌ஷனிலும் கலக்கிய ரஜினிகாந்த், நாசரிடம் இன்டர்வியூக்கு வரும்போது பேசும் "ஐ எம் சன் ஆஃப் ரகுபதி, சன் ஆஃப் கஜபதி, சன் ஆஃப் வளையாபதி" என்கிற ஆங்கில வசனம், எவர் க்ரீன் காமெடியாக இன்று வரை இருந்து வருகிறது. குறிப்பாக வி.கே ராமசாமி மற்றும் செந்தில் ஆகியோருடன் ரஜினிகாந்த் படத்தில் செய்யும் லூட்டி வயிற்றை புண்ணாக்கும் விதமாகவே அமைந்திருக்கும். 'வேலைக்காரன்' படத்திற்கு முன்பும், பின்பும் வெளிவந்த 'படிக்காதவன்', 'மிஸ்டர் பாரத்', 'மனிதன்', 'ராஜாதி ராஜா', 'மாப்பிள்ளை' என ரஜினிக்கு எத்தனையோ சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படத்திற்கு என தனி சிறப்பு உண்டு. சொல்லப்போனால் இதில் ரஜினிக்கென்று பஞ்ச் டயலாக்கோ, மாஸ் தருணங்களோ ஒன்றுகூட கிடையாது, இருந்தும் இப்படம் ஒரு மாஸ் படம்தான். காரணம், 1985இல் வெளிவந்த ரஜினியின் 100வது படமான 'ஸ்ரீராகவேந்திரா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இப்படத்தை தயாரித்த ரஜினியின் குருவான கே. பாலசந்தருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அந்த வீழ்ச்சியிலிருந்து குருநாதரை காப்பாற்ற கவிதாலயா நிறுவனத்திடம் இருந்து சம்பளமே வாங்காமல் ரஜினிகாந்த் நடித்து கொடுத்த திரைப்படம்தான் 'வேலைக்காரன்'. அந்த வகையில், இதுவும் ஒரு மாஸ் படம் தானே.

பயத்தை ஏற்படுத்திய 'பாட்ஷா'


'பாட்ஷா' படத்தில் ரஜினி "ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி" வசனம் பேசும் காட்சி

'அண்ணாமலை' என்ற சூப்பர்ஹிட் படத்திற்கு பிறகு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான மெகாஹிட் திரைப்படம்தான் 'பாட்ஷா'. என்னதான் ரஜினிகாந்த் பல படங்களில் முஸ்லீம் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தாலும், படத்தின் டைட்டில் தொடங்கி, படத்தின் மையக்கருவரை இந்து-முஸ்லிம் ஒற்றுமை குறித்து பேசியிருந்த முதல் படம் என்றால் அது 'பாட்ஷா' திரைப்படம்தான். நக்மா, ரகுவரன், சரண்ராஜ், ஜனகராஜ் என பலரும் நடித்திருந்த இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமைதியான ஆட்டோ டிரைவராகவும், அதே நேரம் ஃபிளாஷ்பேக்கில் அதிரடி பாட்ஷாவாகவும் நடித்திருந்தார். குறிப்பாக மாணிக்கமாக வரும் ரஜினிகாந்த் ஒருகட்டத்தில் நண்பனின் மறைவிற்கு பிறகு, அவனது பெயரையும் சேர்த்து மாணிக் பாட்ஷாவாக மாறும் காட்சியை இன்றும் சிலாகித்து பேசாதவர்கள் இருக்கமாட்டார்கள். “நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி” என்று இப்படத்தில் ரஜினி பேசிய வசனம் அன்று பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. ரஜினியின் மாஸ் ஹீரோ பிம்பத்தை இன்னொரு உயரத்திற்கு எடுத்துச் சென்ற இப்படத்திற்கு பிறகுதான், ரஜினியை சுற்றி அரசியல் பரபரப்புகள் வலுவாக சூழத் தொடங்கின. ஒரு கட்டத்தில் அவர் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்ற பயத்தையும் அன்றைய அரசியல் தலைவர்கள் மத்தியில் இப்படம் ஏற்படுத்தியது. இதனால் தமிழ் சினிமா கண்ட இன்டஸ்ட்ரி ஹிட்டில் 'பாட்ஷா' படத்திற்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு.

பட்டையை கிளப்பிய 'படையப்பா'


'படையப்பா' படத்தில் வெவ்வேறு தோற்றங்களில் காட்சியளிக்கும் ரஜினிகாந்த்

மாஸ் ஹீரோ மற்றும் பஞ்ச் டயலாக் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பெயராகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு, அவரது எத்தனையோ படங்கள் மாஸ் ஹிட் வெற்றியை கொடுத்துள்ளன. இதில் மற்றுமொரு மறக்க முடியாத வெற்றியை கொடுத்த படம் என்றால் அது 'படையப்பா' திரைப்படமாகத்தான் இருக்கும். 1999 ஆம் ஆண்டு, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றியையும், வசூலையும் பெற்றுக்கொடுத்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், சிவாஜி கணேசன், லட்சுமி, ராதாரவி, நாசர், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ், ரமேஷ் கண்ணா, வடிவுக்கரசி, ப்ரீத்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தில் ரஜினி பேசும் என் வழி தனி வழி.. அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமாக கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல.. என்பது போன்ற டயலாக்குகள் பட்டையை கிளப்பியதுடன் ரஜினிக்கு என்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கின. அதுமட்டுமின்றி, படத்தில் ரஜினிக்கு ஒவ்வொரு சீனும் மாஸாக இருந்தாலும், தனது சால்வையால் ஊஞ்சலை இழுத்து கீழே இறக்கும் காட்சி இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மறக்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்படும். அந்த அளவிற்கு, அந்த காட்சியில் ரஜினி தன் ஸ்டைலான நடிப்பால் மிரட்டியிருப்பார். அதேபோன்று நீலாம்பரியாக வரும் ரம்யா கிருஷ்ணனின் திரைவாழ்க்கையில் இன்றுவரை இப்படம் மறக்க முடியாத மைல்கல்லாக இருந்து வருகிறது. பெண்மையின் ஆணவத்தையும், கர்வத்தையும் அடக்குவதுதான் இப்படத்தின் ஒன் லைன். இதை வைத்து அன்று தொடங்கி இன்று வரை எத்தனையோ படங்கள் வெளிவந்திருந்தாலும் ரஜினியின் இந்த 'படையப்பா' படத்தினை மட்டும் யாராலும் அசைக்க முடியாது.

சில்வர் ஜூப்ளி கண்ட 'சிவாஜி'


'சிவாஜி தி பாஸ்' திரைப்படத்தில் ரஜினியின் மாஸான காட்சிகள்

‘படையப்பா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதே எதிர்பார்ப்போடு ‘பாபா’, ‘சந்திரமுகி’ ஆகிய படங்களில் நடித்தார் ரஜினி. இதில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாபா’ திரைப்படம் சற்று தோல்வியை தழுவியது. இதன்பிறகு, நீண்ட இடைவேளை எடுத்து 2005ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த 'சந்திரமுகி' திரைப்படம் மாஸ் வெற்றிப்படமாக அமைந்து ஒரு வருடத்தை கடந்தும் ஓடியது. ஆனாலும், இப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து, சந்திரமுகியாக வரும் ஜோதிகா, பிரபு, நயன்தாரா, நாசர், வடிவேலு என அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததால், இது அனைவருக்குமான வெற்றியாகத்தான் பார்க்க முடிந்தது. ‘படையப்பா’ படத்திற்கு பிறகு ரஜினிக்கென்று தனியொரு மாஸ் கிடைத்த படம் என்றால் அது ஷங்கர் இயக்கத்தில், 2007ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிவாஜி தி பாஸ்’ திரைப்படமாகத்தான் இருக்கும். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து ரஜினி நடித்திருந்த இப்படம் அன்று மாஸ் ஹிட் படமாக அமைந்ததோடு, சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. அதிலும் குறிப்பாக ஒரு சண்டை காட்சியில் ‘கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கிளாத்தான் வரும்‘ டயலாக்கும் சரி, ‘பேரக்கேட்டவுடன ச்சும்மா அதிருதுல்ல‘ என சீனுக்கு சீன் அவர் பேசிய வசனங்களும் சரி, அன்று திரையரங்குகளை அதிர வைத்தன. அதிலும் கிளைமாக்ஸில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி ஸ்டைலாக மொட்டையை தட்டியபடி வரும் காட்சியில் ‘பாஸ் மொட்ட பாஸ்’ என ரஜினி பேசிய வசனம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஹிட்டானது. இன்றுவரை பல மீம்ஸ்களில் இந்த வசனங்கள் அவரது ரசிகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கவனம் ஈர்த்த 'கபாலி'


'கபாலி' படத்தில் ரஜினியின் மாஸ் ஹிட் காட்சிகள்

'அட்டக்கத்தி‘, 'மெட்ராஸ்' ஆகிய படங்களை இயக்கி திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இயக்குநர் பா. ரஞ்சித், முதல் முறையாக ரஜினியுடன் கை கோர்த்த திரைப்படம் 'கபாலி'. 2016ம் ஆண்டு, கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்த படம், 'கோச்சடையான்', 'லிங்கா' ஆகிய படங்களின் தோல்வியால் வருத்தத்தில் இருந்த ரஜினிக்கு, மாஸ் கம்பேக் கொடுத்தது என்று கூட சொல்லலாம். இதில் ரஜினி சால்ட் & பெப்பர் லுக்கில் மலேசியா டான் கேரக்டரில் மிரட்டியிருந்த அதே வேளையில், படத்தில் அவருக்கான ஆக்சன் காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் தெறிக்கவிடும் வகையில் இருக்கும். குறிப்பாக, தமிழ் படங்கள்ல இங்க மரு வச்சுக்கிட்டு, மீசைய முறுக்கிக்கிட்டு, லுங்கி கட்டிக்கிட்டு, நம்பியார் டேய் கபாலி அப்படினு சொன்ன உடனே, குனிஞ்சு சொல்லுங்க எஜமான் அப்படினு வந்து நிப்பானே, அந்த மாதிரி கபாலினு நினைச்சியாடா, கபாலி டா, 25 வருசத்துக்கு முன்னால, எப்படி போனானோ கபாலி, அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு என்ற வசனமும் சரி, நான் முன்னுக்கு வரதுதான் உனக்கு பிரச்சனைனா, நான் முன்னுக்கு வருவேன் டா, கோட் சூட் போடுவேன்டா, கால் மேல கால் போட்டு உக்காருவேன்டா ஸ்டைலா, கெத்தா... உன்னால பொறுத்துக்க முடியலைன்னா சாவு டா என்று பேசும் வசனமும் சரி அவருக்கு மிகப்பெரிய பாராட்டை பெற்றுக்கொடுத்தன. விமர்சன ரீதியாக இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

மீண்டும் ஜெயித்த 'ஜெயிலர்'


ரஜினியின் 'ஜெயிலர்' பட காட்சிகள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 'படையப்பா' படத்தின் வெற்றிக்கு பிறகு இப்படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, இவர்களுடன் மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில், பின்னணி இசைக்கு ஏற்றவாறு ‘‘ஹேய்.. இங்க நான் தான் கிங்கு. நான் வச்சதுதான் ரூல்ஸ். அந்த ரூல்ஸ என் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன். அத கப்சிப்னு கேட்டு ஃபாலோ பண்ணணும். அதவிட்டுட்டு ஏதாவது அடாவடித்தனம் பண்ண நெனச்ச, கண்டதுண்டமா வெட்டி கலச்சு போட்ருவேன்”. ஹுக்கும்.. டைகர் கா ஹூக்கும் என்று ரஜினி மிரட்டலாக பேசியிருந்த வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிக்கு மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்த படமாக 'ஜெயிலர்' திரைப்படம் அமைந்தது.

Updated On 18 Dec 2023 6:42 PM GMT
ராணி

ராணி

Next Story