இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(03-12-1972 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)

சென்னையில் நடந்த நேருஜி பிறந்தநாள் விழா கூட்டத்தில் சிவாஜி கணேசன் பேசினார். அவர் கூறியதாவது:-

"நேற்றுவரை ஒன்றாக இருந்தவர்கள், தி.மு.கழகத்தைத் தாங்கிக் கொண்டு இருந்தவர்கள், இன்று வெளியே வந்து ஏதேதோ பேசுகிறார்கள். திடீர் என்று அப்படி என்ன வந்துவிட்டது? உங்களுக்கு (வெளியே வந்தவர்களுக்கு) தனிப்பட்ட முறையில் ஏதோ ஏற்பட்டுவிட்டது. சொந்த ஏமாற்றத்தின் காரணமாக வெளியில் வந்துவிட்டார்கள்.

வெளியே வந்ததும், தி.மு.கழக ஆட்சியில் ஊழல்-லஞ்சம்-சர்வாதிகாரம் என்று சொல்லுகிறார்கள். இது பல ஆண்டுகளாக நாங்கள் (காங்கிரஸ்காரர்கள்) சொல்லி வருவது தானே? பழைய சாமானுக்கு புதிய மெருகு கொடுப்பது போல பழைய படத்துக்கு வர்ணம் பூசுவது போல, இப்பொழுது இவர்களும் சொல்லுகிறார்கள்.

விதையை விதைத்தவர் காமராஜர்


நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

வெளியில் வந்தவர்கள் சுத்தமானவர்கள் என்றால், என்ன செய்திருக்க வேண்டும்? 'நல்லவரே! தூய்மையானவரே! நீங்கள் இத்தனை நாளாக சொல்லி வந்ததை உண்மை என்று உணர்ந்தோம். நாங்களும் உங்கள், பின்னால் வருகிறோம்" என்று காமராஜரிடம் அல்லவா வந்திருக்க வேண்டும்? ஆனால், இவர்கள் சொல்வது என்ன? காமராஜரை சுயநலக்காரர் என்கிறார்கள்! யாரைப் பார்த்து யார் இப்படிச் சொல்வது காமராஜர் என்ற உழவர், மக்கள் என்ற நிலத்தில் எழுச்சி என்ற விதையை விதைத்து வளர்த்தார். அதை அறுவடை செய்ய யார் யாரோ வருகிறார்கள், விடுவோமா?

நான் தாத்தா

என் தலையைத் தனியே வெட்டி வைத்தாலும், "நான்தான் காங்கிரஸ் - காங்கிரஸ்தான் நான்" என்று கூற மாட்டேன். எனக்கு அது போன்ற சர்வாதிகார எண்ணம் ஏற்படாது. நான் கடைசிவரை காமராஜரின் தொண்டனாகவே இருப்பேன்.


பொது நிகழ்ச்சி ஒன்றில் காமராஜருடன் சிவாஜி கணேசன்

உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று நான் பேசமாட் டேன், என் வாலிபம் கடந்து கொண்டே இருக்கிறது. வீட்டுக்குப் போனால், பேரக்குழந்தைகள் 'தாத்தா' என்று என்னை அழைக்கும் இனிய குரல் கேட்கிறது. இந்த வயதில் நான் எதையும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கவில்லை".

இவ்வாறு சிவாஜி கணேசன் கூறினார்.

எம். ஜி. ஆர்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

சிவாஜி கணேசனின் பேச்சு பற்றி நிருபர்கள் எம்.ஜி.ஆரிடம் கேட்டார்கள்.

"சிவாஜி கணேசனின் அரசியலைப் பற்றி முன்பு எனக்கு என்ன கருத்து இருந்ததோ, அதை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு அவரிடம் எவ்விதக் கொள்கை மாற்றமும் ஏற்படவில்லை" என்று எம்.ஜி.ஆர் சொன்னார்.

Updated On 30 Sept 2025 12:08 AM IST
ராணி

ராணி

Next Story