இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவையும், தமிழ்நாட்டு அரசியலையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. காரணம் தமிழ்நாட்டில் இன்றுவரை ஆட்சிக்கட்டிலில் மாறி மாறி அமர்ந்து மக்கள் சேவை ஆற்றியவர்களில் பிரதானமாக இருப்பவர்கள் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால் திரைத்துறையில் இருந்து வந்து தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்குள் நுழைந்த அனைவரும் பெரிய அளவில் சாதித்து இருக்கிறார்களா? என்றால் எம்.ஜி.ஆர். என்ற ஒருவரைத்தவிர நிச்சயம் வேறு யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென்று நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, முழுநேர அரசியல்வாதியாக இயங்க ஆயத்தமாகி வருகிறார். அந்த வகையில், தமிழ் சினிமாவில் ‘பிளாக் அண்ட் வொயிட்' காலம் தொடங்கி இன்று வரை அரசியல் கட்சி தொடங்கிய நடிகர்கள் யார் யார்? இவர்களில் சாதித்து நின்றவர்கள் எத்தனை பேர் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

எம்.ஜி.ஆர்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தேர்தல் களத்தில் மக்களை சந்தித்த தருணம்

சினிமாவில் இருந்து நடிகர்கள் அரசியல் களத்திற்கு வருவதும், தனி கட்சி தொடங்குவதும் புதிதல்ல. இது காலம் காலமாக நடக்கும் ஒன்றுதான். அதற்கு முதல் வித்திட்டவர் யார் என்று பார்த்தால் மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்தான். திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த எம்ஜிஆர், அறிஞர் அண்ணா மீது கொண்ட அன்பினால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியில் வந்து, திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை முழு மூச்சாக இணைத்துக்கொண்டு கழக பணியாற்றி வந்ததோடு, தேர்தல் களத்திலும் இறங்கி அண்ணாவிற்காக வாக்கு சேகரித்தார். மேலும் தனது திரைப்படங்கள் வாயிலாகவும் திராவிட கொள்கைகளை பரப்பினார். இப்படியான சூழலில்தான் அண்ணா முதலமைச்சராகி ஒரு வருடத்திலேயே உடல்நலக்குறைவால் மறைந்து போக, அந்த இடத்திற்கு யார் வருவது என்ற போட்டி நிலவியது. இந்த சமயத்தில் கலைஞர் - எம்ஜிஆர் இடையே முரண்பாடு ஏற்பட, திராவிட முன்னேற்ற கழகத்தை விட்டு வெளியே வந்து 1972-ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற தனி கட்சியைத் தொடங்கினார் எம்ஜிஆர். அப்படி எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அந்த கட்சி 1973-ல் தேர்தலை சந்தித்து 11 எம்.எல்.ஏ-க்களுடன் தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. அடுத்தடுத்த தேர்தல்களில் இன்னும் முன்னேறி 1977-ஆம் ஆண்டு முதலமைச்சராக அரியணையில் ஏறும் அளவுக்கு உயர்ந்தது. இப்படி எம்ஜிஆரால் வளர்க்கப்பட்ட கட்சி, 1987-ஆம் ஆண்டு அவரின் மறைவிற்கு பிறகு நீண்ட போராட்டங்களை சந்தித்து மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் கைக்கு வந்தது. ஜெயலலிதா ஆரம்பத்தில் நிறைய விமர்சனங்களை சந்தித்திருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக எம்ஜிஆர் அவர்களால் கட்டி காப்பாற்றப்பட்ட அதே பேரையும், புகழையும் காப்பாற்றி தொடர்ந்து தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியை கட்டியெழுப்பி தமிழக சட்டசபையில் இரண்டாவது பெரிய அரசியல் கட்சி என்ற அடையாளத்தை பெற்று தந்தார்.

எஸ்.எஸ். ராஜேந்திரன்


எஸ்.எஸ். ராஜேந்திரன் மற்றும் மறைந்த முதலமைச்சர்கள் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர்.

கலைஞரின் பராசக்தி படத்தில் அறிமுகமாகி, லட்சிய நடிகர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சேடபட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் என்ற எஸ்.எஸ். ராஜேந்திரன் சினிமாவை தாண்டி அரசியலிலும் அதீத ஈடுபாடு கொண்டவர். அதிலும் திராவிட கொள்கைகள் மீது மிகவும் நம்பிக்கை கொண்ட எஸ்.எஸ்.ராஜேந்திரனும், எம்ஜிஆரைப் போன்றே அறிஞர் அண்ணா மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவர். அதனால்தான் அன்று பிரதான கட்சிகளாக செயல்பட்டு வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளில் நடிகர்கள் பலரும் சேர்ந்து வந்த நேரத்தில், எஸ்.எஸ்.ஆர் மட்டும் அக்கட்சிகளில் சேராமல் திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே மக்கள் பணியாற்றினார். மேலும் கட்சிக்காக நாடகங்கள் நடத்தி, நிதி திரட்டியும் கொடுத்தார். அப்போது பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார். முதல் முறையாக 1957-ம் ஆண்டு திமுக சட்டமன்ற தேர்தலை சந்தித்த போது அக்கட்சியில் தேனி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர். உதயசூரியன் சின்னம் கிடைக்காததால், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மீண்டும் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தேனியில் போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தார். இதனால் அந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றார். இதனை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி தி.மு.க. சார்பில் டெல்லி மேல்-சபைக்கு அதாவது ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் திமுகவில் இருந்து விலகி, எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க.வில் சேர்ந்து, 1981-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவராக பதவி வகித்தார். 1987-ல் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு அங்கும் சில குழப்பங்களால் அதிமுக கட்சியில் இருந்தும் வெளியில் வந்தவர் தனி கட்சி ஆரம்பித்து செயல்பட தொடங்கினார். பின்னர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயல்பட ஆரம்பித்த போது அக்கட்சியில் மீண்டும் இணைந்து பணியாற்ற தொடங்கியவர், பின்னர் அங்கிருந்தும் வெளியில் வந்து திருநாவுக்கரசுடன் சேர்ந்து பணியாற்றினார். சில காலங்களில் எதுவும் ஒத்துப்போகாமல் முழுமையாக அரசியலை விட்டு விலகி ஓய்வெடுக்க ஆரம்பித்தார்.

சிவாஜி கணேசன்


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தனிப்பட்ட மற்றும் காமராஜருடன், சிவாஜி கட்சி பணியாற்றிய புகைப்படங்கள்

நடிப்புக்கென்று தனி இலக்கணம் வகுத்த சிவாஜி கணேசன், திரையுலகில் தனி ராஜாங்கமே நடத்தியவர். தன் நடிப்பின் மூலமாக பல கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்து நம்மையெல்லாம் ரசிக்க வைத்தவர். திரைவாழ்வில் மகா நடிகராக விளங்கிய சிவாஜிக்கு, திரைவாழ்க்கையில் தான் தனித்துவமாக கோலோச்சியது போன்று, அரசியலிலும் மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் அப்போது மிகப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுமார் 30 ஆண்டுகாலம் காங்கிரஸில் கட்சி பணியாற்றி வந்தவர், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, ஜானகிக்கு ஆதரவு தரும்படி காங்கிரஸிடம் கோரிக்கை வைக்க, ஆனால் அவர்களோ எம்ஜிஆர் இல்லாத வெற்றிடத்தை வைத்து தமிழகத்தில் தங்கள் கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்று ஆதரவு தர மறுத்துவிட்டனர். இதனால் மன வருத்தமுற்ற சிவாஜி கணேசன் ஆர்.எம்.வீரப்பன் ஆலோசனையின் பேரில் அக்கட்சியில் இருந்து வெளியேறி ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற கட்சியை தொடங்கினார். பின்னர், ஜானகிக்கு ஆதரவாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த சிவாஜி அந்த தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்தார். நம் எண்ணங்களும், செயல்களும் உயர்வாக இருக்க வேண்டும். படித்தவர்கள் அனைவரும் பாராட்டும் படியாக நடந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிவாஜி இந்த தேர்தலில் தோல்வியுற்றதை நினைத்து மிகவும் வருத்தமுற்றார். மேலும் ஜானகி அணியினருடன் மன வருத்தம், கட்சியில் உடன் இருந்தவர்களும் பிரிந்து மாற்று கட்சிகளுக்கு சென்ற நிகழ்வு போன்றவை அவரை இன்னும் வேதனைக்கு உள்ளாக்க, கட்சியை கலைக்கும் முடிவுக்கு வந்தார் சிவாஜி. தனது கட்சியை களைத்த பிறகு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தவர் அங்கும் சிறிது காலம் இருந்து விட்டு, பிறகு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். சிவாஜி அரசியலில் சோபிக்காமல் போனதற்கு பல காரணங்கள் அப்போது சொல்லப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்று சிவாஜிக்கு பொய் பேச தெரியாது. மனத்தில் பட்டதை அப்படியே பேசிவிடுபவர். பொய் பேசினால்தான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்றால் அந்த அரசியலே தேவையில்லை என்று அவர் ஒதுங்கியிருக்கலாம் என்று அவரது ரசிகர்கள் பலரும் கூறியதாக சொல்லப்படுகிறது. எது எப்படியாகினும் திரையுலகில் அசைத்து பார்த்திட முடியாத நடிப்புச் சக்ரவர்த்தியான நடிகர் திலகத்தால் அரசியலில் சாதிக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமான ஒன்றுதான்.

பாக்கியராஜ், டி.ராஜேந்தர்

எம்ஜிஆரால் கலையுலக வாரிசு என அழைக்கப்பட்டவர் இயக்குநர் பாக்கியராஜ். இவர் சினிமாவில் தன் திரை பயணத்தை தொடங்கிய 1970 மற்றும் 80 கால கட்டங்களில் எம்.ஜி.ஆர். மீது இருந்த அளவுகடந்த அன்பினால், அவரின் தீவிர தொண்டராக மாறினார் பாக்கியராஜ். இதனால் 1983-ஆம் ஆண்டு தனது இயக்கத்தில் வெளிவந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றி விழாவினை எம்.ஜி.ஆர். தலைமையிலேயே நடத்தினார். பாக்கியராஜின் அழைப்பை ஏற்று அப்போது விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆரும் அவரை தனது கலையுலக வாரிசு என்று அறிவித்தார். இதனால் மிகுந்த சந்தோஷத்திற்கு உள்ளான பாக்கியராஜ் எம்.ஜி.ஆரை குருவாக ஏற்றுக்கொண்டதுடன், தன்னை முழுநேர தொண்டராகவும் அதிமுகவில் இணைத்துக் கொண்டு கட்சி பணிகளை ஆற்ற தொடங்கினார். இதன்பிறகு தனது படங்களில் எம்ஜிஆர் தொடர்பான காட்சிகளையும் பயன்படுத்தி அவரின் புகழை பரப்பி வந்தார். எப்படியும் கட்சியிலும் எம்.ஜி.ஆரின் நன்மதிப்பை பெற்று நல்ல பொறுப்பிற்கு வந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு 1987-ஆம் ஆண்டு எம்ஜிஆரின் திடீர் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அக்கட்சியில் நிலவிய சூழ்நிலைகள் பிடிக்காமல் அதிமுகவில் இருந்து வெளியே வந்து எம்.ஜி.ஆர்.மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனி கட்சியினை தொடங்கி செயல்பட ஆரம்பித்தார். ஆனால் தனது கட்சிக்கு போதுமான ஆதரவு கிடைக்காததால் அதனை கலைத்துவிட்டு திமுகவிற்கு சென்றார். சிறிது காலம் அங்கிருந்து விட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தவர், பின்னர் அதுவும் நிலைக்காமல் முழுவதுமாக அரசியலில் இருந்து ஒதுங்கினார்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் பாக்கியராஜ் மற்றும் கலைஞர் கருணாநிதியுடன் இயக்குநர் டி.ராஜேந்தர்

இவரை போன்றே தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறமைகளோடு வலம் வந்தவர் டி.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் டி.ராஜேந்தர். இவர் கலைஞர் மீதும், திமுகவின் மீதும் அதீத பற்றுதலும், ஈடுபாடும் கொண்டவர். அதனால் தன்னை கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுகவில் இணைத்துக் கொண்டதோடு, அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் மாறினார். மேலும் தான் இயக்கும் அல்லது நடிக்கும் படங்களில் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்துவது மட்டுமின்றி, கலைஞர் தொடர்பான விஷயங்களையும் இடம்பெறச் செய்தார். இதனால் கட்சியில் ராஜேந்தருக்கு நல்ல பெயர் கிடைத்தது மட்டுமின்றி, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் கிடைத்தது. இப்படி திமுகவில் தன்னை முழுவதுமாக இணைத்துக்கொண்டு தீவிரமாக பணியாற்றியவர் சிலருடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் 1991-ஆம் ஆண்டு அக்கட்சியை விட்டு விலகி ‘தாயகம் மறுமலர்ச்சி கழகம்’ என்ற தனி கட்சியை ஆரம்பித்து அந்த ஆண்டு தனியாக தேர்தலை சந்தித்தார். ஆனால் அத்தேர்தலில் தோல்வியை தழுவவே, மீண்டும் திமுகவில் இணைந்தார். பிறகு சிறிது நாட்களில் மறுபடியும் அக்கட்சியில் இருந்து விலகி, லட்சிய திமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். பெயரளவில் மட்டுமே தற்போது அக்கட்சியின் செயல்பாடுகள் உள்ளதாக தெரிகிறது.

விஜயகாந்த்

1980-ஆம் ஆண்டு கதாநாயகனாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்த விஜயகாந்த் சினிமாவில் எப்படி தன்னை நிலை நிறுத்திக்கொள்ள போராடினாரோ, அதேபோன்று அரசியலிலும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள பலகட்ட போராட்டங்களை சந்தித்தார். ஒருபுறம் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோவாக விஜயகாந்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிய அவரது நண்பர் ராவுத்தர், இன்னொருபுறம் நண்பனை எப்படியாது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் அமரவைத்து விட வேன்டும் என்று அதற்கான விதைகளையும் ஆரம்பத்திலேயே தூவ ஆரம்பித்துவிட்டார். இதன் பலனாகவே விஜயகாந்த் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக மட்டுமின்றி மனிதநேயமிக்க மனிதராகவும், பலரின் பசியை போக்கிய வள்ளலாகவும் திரைத்துறையினர் மத்தியில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பார்க்கப்பட்டார். அந்த நம்பிக்கையில்தான் மறைந்த நடிகர் விஜயகாந்த், 2005-ஆம் ஆண்டு தனது சொந்த ஊரான மதுரையில் வைத்து தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.


நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து தேர்தல் பணியாற்றிய புகைப்பட காட்சிகள்

இதன் பிறகு 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டதில், விருத்தாசலம் தொகுதியில் நின்ற விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். இதன் பிறகு 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்ததுடன், இரண்டாவது பெரிய கட்சி என்று அறியப்பட்ட திமுகவை பின்னுக்குத்தள்ளி எதிர்கட்சி தலைவராக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இப்படி நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி என்ற படிக்கட்டில் ஏற ஆரம்பித்த விஜயகாந்த், சிறிது நாட்களிலேயே உடல்நல குறைவு, கூட்டணியில் பிரச்சினை, தனது கட்சியில் இருந்த எம்.எல்.ஏ-க்கள் செய்த துரோகம் என மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளானார். ஆனால் எந்த இடத்திலும் அதனை காட்டிக்கொள்ளாது தொடர்ந்து அரசியலில் பயணித்தவரை மீடியாக்களும் விட்டு வைக்கவில்லை. அனைவரும் அவரை கேலிச்சித்திரம் போல் சித்தரிக்க தொடங்கினர். அரசியலில் அவருக்கு இங்கு ஆரம்பித்த இறங்குமுகமானது, பின்னர் மேலே எழும்ப முடியாத அளவில் தொடர் தோல்விகளையும் கொடுத்தது. இதன் பிறகு, முழுவதுமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கியவரை காலதேவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி அன்று அழைத்துக்கொண்டார். தற்போது அவரின் தேமுதிக கட்சியை அவரின் மனைவி பிரேமலதா நிர்வகித்து வருகிறார்.

சரத்குமார், கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமார், நடிப்பைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட வேண்டும் என்று முதலில் தன்னை திமுக கழகத்தில் இணைந்துகொண்டு, பின்னர் அங்கிருந்து வெளியேறி ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்தார். ஆனால் அங்கும் அவருக்கு இருக்க மனமில்லாமல் வெளியே வந்து 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அமைப்பை தொடங்கினார். இதன் மூலம் 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் சரத்குமார் மற்றும் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் போட்டியிட்டு அத்தேர்தலில் வெற்றி பெற்றனர். ஆனால் அடுத்ததாக 2016-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதன்பிறகு 2016 டிசம்பரில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சியில் நடந்த குழப்பங்களால், அதிமுகவை விட்டு வெளியில் வந்த சரத்குமார் தற்போது வரை அக்கட்சியை பெயரளவில் மட்டுமே செயல்படுத்திக் கொண்டிருக்கிறாரே தவிர மிகப்பெரும் கட்சியாக அவரால் உருவெடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.


அரசியல் தலைவர்களாக நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் கமல்ஹாசன்

அதேபோன்று உலக நாயகன் கமல்ஹாசனும் நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரப் போகிறேன் என்று கூறி வந்த நிலையில், திடீரென கலைஞர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவு, செல்வி ஜெயலலிதா மறைவு போன்ற சூழ்நிலைகளில் ஏற்பட்ட சமயத்தில் முழுமையாக அரசியல் களத்தில் குதித்து நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என இரண்டு தேர்தல்களை தனித்து நின்று சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்று உயர்ந்தார். ஆனாலும் தமிழ் சினிமா ரசிகர்களை அவரால் கவர முடிந்த அளவிற்கு மக்களை கவர முடியவில்லை. இதனால் இன்று வரை முழுமையான வெற்றியை பெற முடியாமல் திணறி வருகிறார். இருந்தும் கமலின் அரசியல் பயணம் வெற்றி என்ற இலக்கை நோக்கிச் செல்லுமா? அல்லது பாதியிலேயே நின்று போகுமா? என்பதற்கு காலத்திடம்தான் பதில் உள்ளது.

விஜய்

‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த விஜய் பல்வேறு விமர்சனங்களையும், அவமானங்களையும் கடந்து இன்று தென்னிந்திய சினிமாவே பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகராக, பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக வலம் வருகிறார். தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வந்த நேரத்தில், திடீரென்று கடந்த 2-ஆம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும், வாக்குறுதி அளித்திருக்கும் படங்களில் மட்டும் நடித்து முடித்துவிட்டு, இனி சினிமாவில் நடிப்பதில்லை என்றும் அறிவித்தார். நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் அதற்கு வரவேற்பு தெரிவித்தனர். தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுவரும் இடங்களில் ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து செல்ஃபி எடுத்து வரும் விஜய்யை விரைவில் முழுநேர அரசியல்வாதியாக கான அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இவரின் இந்த அரசியல் பயணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அளவிற்கு வளர்ந்து விருட்சம் பெறுகிறதா? விஜயகாந்த் போன்று ஓரளவிற்கு சாதித்து நிற்கப்போகிறாரா? அல்லது மற்றவர்களை போன்று பெயரளவில் செயல்படப்போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


நடிகர் விஜய் தன் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்ற தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

இவர்கள் தவிர விஜயகுமார், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களும் அரசியல் கட்சி துவங்கும் திட்டத்தில் இருந்தார்கள். ஆனால் அரசியல் என்ற ஆடுகளத்தில் நின்று நிதானமாக ஆடி நம்மால் சாதிக்க முடிமா? என்று யோசித்து கட்சி துவங்காமல், அரசியலில் முழு ஈடுபாடு காட்டாமல் தங்களுக்கு பிடித்த யாரோ ஒருவருக்கு அவ்வப்போது ஆதரவாக பேசுவதோடு தங்களது அரசியல் பயணத்தை முடித்துக் கொண்டார்கள்.

Updated On 19 Feb 2024 6:21 PM GMT
ராணி

ராணி

Next Story