இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வில்லனாக தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், யதார்த்தமான நடிப்பாலும், ஸ்டைலாலும் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனும் அளவுக்கு ஒரு குணச்சித்திர நடிகராக, மாஸ் ஹீரோவாக, காதல் நாயகனாக, வசூல் சக்கரவர்த்தியாக என தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களில் மிளிர்ந்திருக்கிறார். இப்படி எத்தனை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் இவர் தனித்துவமாக தெரிந்த சில போலீஸ் கதாபாத்திரங்களும் ரஜினி எனும் நடிகனை கொண்டாட வைத்திருக்கிறது. அப்படி வெற்றி என்பதற்கு அப்பாற்பட்டு ‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியன் தொடங்கி இன்றைய ‘ஜெயிலர்’ வரை அவர் ஏற்று நடித்திருக்கும் போலீஸ் வேடங்கள் குறைவுதான் என்றாலும் அப்படங்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை என்று கூட சொல்லலாம். ஏனென்றால் ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரங்களின் வடிவங்களுக்கு ஏற்றவாறு போலீஸ் கமிஷனராக, ஐபிஎஸ் அதிகாரியாக வித்தியாசம் காட்டி ஸ்டைலாக தனக்கே உரிய உடல் மொழியில் மிடுக்காக நடித்து அசத்தியிருப்பார். இன்னும் சொல்லப்போனால் போலீஸ் கதாபாத்திரம் உள்ள வேடங்களில் நடிப்பது என்றால் ரஜினிக்கு பிடிக்கவே பிடிக்காதாம். அப்படியிருந்தும் இன்றும் அவ்வப்போது அவர் போலீஸ் வேடங்கள் உள்ள படங்களில் ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காக நடித்து வருகிறார். அந்த வகையில், ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் ரஜினிகாந்த் இதுவரை அவரது திரைவாழ்க்கையில் போலீஸ் அதிகாரியாக நடித்த படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அன்புக்கு நான் அடிமை


'அன்புக்கு நான் அடிமை' திரைப்படத்தில் முதல் முறையாக போலீஸ் வேடம் ஏற்ற நடிகர் ரஜினிகாந்த்

1980 காலகட்டம் என்பது ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டமாகும். அதிலும் 1980-ஆம் ஆண்டில் மட்டும் ரஜினி, 'பில்லா', 'அன்புக்கு நான் அடிமை', 'காளி', 'நான் போட்ட சவால்', 'ஜானி', 'பொல்லாதவன்', 'முரட்டுக்காளை' என 11 படங்களில் நடித்திருந்தார். இவற்றில் ஒரு சில படங்கள் சுமாரான வெற்றியை பெற்றிருந்தாலும் பெரும்பாலான படங்கள் மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை பெற்று தரும் அளவிற்கு சூப்பர்ஹிட் படங்களாக அமைந்தன. அந்த வகையில், அந்த ஆண்டில் இயக்குநர் ஆர். தியாகராஜன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 1980-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்புக்கு நான் அடிமை’ திரைப்படம் வெற்றி படமாக மட்டுமின்றி முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வெளிவந்த படமாகவும் அமைந்தது.. இப்படத்தில் ரஜினியுடன் விஜயன், சுஜாதா, ரதி, சுருளிராஜன் என பலர் நடித்திருப்பர். இப்படத்தினை தயாரிப்பாளர் தூயவன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். வழக்கமான மசாலா கதைதான் என்றாலும் இன்ஸ்பெக்டராக வரும் விஜயனும், திருடனாக வரும் ரஜினியும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் சிறு வயதில் பிரிந்துவிடுவார்கள். ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் மீண்டும் அவர்கள் சந்திக்கும் போது விஜயன், ரஜினியால் ரயிலில் இருந்து தூக்கி எறியப்படுகிறார். பின்னர் திருடனான ரஜினி கிராமத்தில் தன் அண்ணன் இன்ஸ்பெக்டராக இருந்த இடத்தில் போலி அதிகாரியாக மாறி வில்லனாக வரும் நாகப்பனுக்கு குறி வைக்கும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்து ரசிக்க வைத்திருப்பார்.

மூன்று முகம்

ரஜினியை முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்திற்கு உயர்த்திய படங்களுள் மிக முக்கியமான படம் என்றால் அது ‘மூன்று முகம்’ திரைப்படம்தான். 1982ல் ஜெகநாதன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில், முதல் முறையாக அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் என மூன்று கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களை கவர்ந்திருப்பார். தன் இயல்பான நடிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ரஜினி நடித்திருந்த இப்படம் அன்றைய 80-களில் வெளிவந்த படங்களிலேயே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. மேலும் 175 நாட்கள் திரையில் ஓடி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த இப்படத்தில், வில்லனாக வரும் செந்தாமரையிடம் காவல் நிலையத்தில் ரஜினி பேசும் வசனமான “தீப்பெட்டிக்கு இரண்டு பக்கம் உரசுனா தான் தீப்பிடிக்கும்.. ஆனால் இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்” என்ற வசனம் பட்டிதொட்டியெல்லாம் ஒரு கலக்கு கலக்கியது. இதனாலேயே அலெக்ஸ் பாண்டியன் என்றால் அது ரஜினிதான் என்று சின்ன குழந்தை கூட சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. அந்த அளவுக்கு தனது மாஸான நடிப்பால் அசரவைத்த ரஜினி, போலீஸாக அவர் நடித்த படங்களில் சிறந்த படம் எது என்று ரசிகர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது 'மூன்று முகம்' படமாகத்தான் இருக்கும். அதிலும் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் ரஜினியின் நடிப்பு கூடுதல் சிறப்பை அவருக்கு பெற்று தந்திருக்கும்.

கொடி பறக்குது


'கொடி பறக்குது' படத்தில் போலீஸ் வேடத்தில் ரஜினிகாந்த்

‘16 வயதினிலே’ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட இயக்குநர் இமையம் பாரதிராஜா, அதன்படி 1988 ஆம் ஆண்டு அவரை வைத்து 'கொடி பறக்குது' என்றொரு படத்தினை இயக்கினார். ‘மூன்று முகம்’ படத்தில் ரஜினி போட்டிருந்த போலீஸ் கெட்டப்பிற்கு பிறகு, இப்படத்தில் டிஜிபி ஈரோடு சிவகிரி, ஜெடிபி தாதா என இரு மாறுபட்ட வேடங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்தில் நடித்திருந்த ரஜினிகாந்திற்கு இப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் இப்படத்தில் ரஜினியுடன், சுஜாதா, அமலா, மணிவண்ணன், பாக்யலக்ஷ்மி, ஜனகராஜ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாரதிராஜாவின் சொந்த தயாரிப்பில் எடுக்கப்பட்ட படம் என்பதால், படத்தினை தொடங்குவதற்கு முன்பாகவே பாரதிராஜா, ரஜினியிடம் நீ கேட்கும் சம்பளம் ரூ. 30 லட்சத்தை என்னால் உடனடியாக கொடுக்க முடியுமா? என தெரியவில்லை' என்று கூற, உடனே ரஜினி பாரதிராஜாவிடம் இருந்து வெறும் 5 ரூபாயை மட்டுமே முன்பணமாக பெற்றுக்கொண்டு, இப்போதைக்கு இது போதும், மீதி பணத்தை படம் முடிந்த பிறகு பெற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு நடித்து கொடுத்தாராம். இப்படி பாரதிராஜா - ரஜினி கூட்டணியில் வெளியான 'கொடி பறக்குது' திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பினை பெற்றிருந்தாலும், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இருந்தும் படத்தில் ரஜினியின் போலீஸ் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இன்றும் ரஜினியின் ரசிகர்கள் தேடித் சென்று பார்க்கும் படமாகவும் ‘கொடி பறக்குது’ திரைப்படம் இருந்து வருகிறது. மேலும் போலீஸ் உடையில் ரஜினி வரும்போதெல்லாம் அவரின் நடை, உடல் மொழி, முக பாவனைகள் என அனைத்தும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். இதனால் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரூ.30 லட்சத்தை எடுத்துக்கொண்டு ரஜினியிடம் சென்ற பாரதிராஜா, அதனை அவரிடம் கொடுக்க, ரஜினியோ வெறும் 20 லட்சத்தை எடுத்துக்கொண்டு மீதி 10 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டாராம்.

'நாட்டுக்கு ஒரு நல்லவன்'

ஆக்‌ஷன், ஸ்டைல், காமெடி, செண்டிமென்ட என எப்போதும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் ரஜினி, 1991-ஆம் ஆண்டு வி.ரவிச்சந்திரன் இயக்கத்தில், 'நாட்டுக்கு ஒரு நல்லவன்' என்ற படத்தில் நடித்திருந்தார். பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா, குஷ்பு உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் தமிழ் , தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியானது. இப்படத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக சுபாஷ் என்னும் கதாபத்திரத்தில் களம் இறங்கும் ரஜினி சட்டவிரோதமான கும்பலை வலை போட்டு பிடிக்க முயற்சிக்கும் ஒவ்வொரு காட்சிகளிலும் நடிப்பில் மிரட்டியிருப்பார். இருப்பினும் இப்படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது.

பாண்டியன்


'உன் கண்ணில் நீர் வழிந்தால்' மற்றும் 'பாண்டியன்' திரைப்படங்களில் ரஜினிகாந்த்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணியில் 1992-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் ‘பாண்டியன்’. திரைத்துறையில் இருந்து முற்றிலும் ஓய்வு பெறப் போவதாக இருந்த எஸ்.பி.முத்துராமன் கடைசியாக ரஜினியை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டு ‘பாண்டியன்’ படத்தினை சொந்தமாக தயாரித்து இயக்கியிருந்தார். கன்னடத்தில் வெளியான ‘பாம்பே தாதா’ படத்தின் ரீமேக்காக வெளியான இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ நடிக்க, அவரது அக்காவாக ஜெயசுதாவும், நண்பனாக சரண்ராஜும் நடித்திருந்தனர். படத்தின் ஒரிஜினல் பதிப்பில் ஹீரோவாக நடித்திருந்த கன்னட நடிகர் பிரபாகர், இதில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் முதல் பாதி காதல், காமெடி என செல்ல, இரண்டாம் பாதியில் ரஜினி ஐபிஎஸ் அதிகாரியாக வந்து ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருப்பார். ரஜினியை வைத்து தனது கடைசி படத்தினை இயக்கியதால், அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களையும் படத்தில் புகுத்தி இருந்தார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். அந்த ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்த ரஜினியின் பாண்டியன் படத்துடன் கமலின் ‘தேவர் மகன்’, விஜயகாந்தின் ‘காவியத் தலைவன்’, சத்யராஜின் ‘திருமதி பழனிச்சாமி’, பிரபுவின் ‘செந்தமிழ் பாட்டு’ ஆகிய படங்களும் ஒன்றாக வந்து போட்டி போட்டன. இதில் கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும், ரஜினியின் ‘பாண்டியன்’ சுமாரான வெற்றியை பதிவு செய்தது. இருப்பினும் வசூலில் சாதனை நிகழ்த்தி ரஜினிக்கே உரிய அடையாளத்தை பதிவு செய்தது.

தர்பார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2020-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் "தர்பார்". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, மகளாக நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு நடித்திருந்தனர். ‘பாண்டியன்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து, மும்பை பகுதியில் நடக்கும் போதை பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்கும் கெத்தான, அதே நேரம் நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஆதித்யா அருணாச்சலம் என்ற கெட்டப்பில் வந்து ரஜினி அசத்தியிருந்தார். மேலும் படத்தில் மிகவும் இளமையாக தோன்றியிருக்கும் ரஜினி, தனது கெட்டப்புக்கு ஏற்றவாறு துள்ளி குதித்து நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருந்தார். இருப்பினும் போலீஸ் கெட்டப்பில் ரஜினி நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது மட்டுமின்றி, வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் படத்தினை விமர்சித்தவர்கள் கலவையான விமர்சனங்களை அள்ளித் தெளித்து படம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை, ஒரு முறை பார்க்கலாம் என்று கூறியிருந்தனர்.


'தர்பார்' மற்றும் 'ஜெயிலர்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த்

ஜெயிலர்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஜினிகாந்தின் 169-வது படமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று வெளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினை பெற்ற திரைப்படம்தான் 'ஜெயிலர்'. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளிவந்த இப்படத்தில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ஜாக்கி ஷெராஃப், விநாயகன், யோகிபாபு, கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற 'காவலா', 'தலைவரு அலப்பறை' உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் கவனம் பெற்றன. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் வரும் ரஜினி தன் மகனை கொன்றவர்களை பழிவாங்க போராடும் காட்சிகளில் உணர்ச்சிப் பொங்க தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் படத்தில் ரஜினி பேசும் வசனங்களான பொண்டாட்டி கிட்ட பொய் சொல்லியே நரகத்துக்கு போயிடுவோம், படிச்சாலும் ரிட்டயர்டு ஆனாலும் வீட்ல மதிப்பு இல்ல, நான்தான் இங்க கிங் போன்றவை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றன. உலக அளவில் ரூ.650 கோடி வசூல் செய்த இப்படம் ரசிகர்களால் திருவிழாக் கோலம் போல் கொண்டாடி தீர்க்கப்பட்டது.

வேட்டையன்


ரஜினி நடித்து வரும் 'வேட்டையன்' திரைப்படத்தின் புகைப்படங்கள்

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ‘ஜெய்பீம்’ பட இயக்குநரான டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்திலும் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ரஜினியின் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் வாழ்த்துடன் 'வேட்டையன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த போஸ்டர் வழக்கமான போஸ்டர் போல் இல்லாமல், முற்றிலும் மாறுபட்டு ஓவியத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியர் ராஜ்குமார் வரைந்துள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On 29 Jan 2024 6:43 PM GMT
ராணி

ராணி

Next Story