இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. தோல்வியால் துவண்டு போன பலருக்கும் நம்பிக்கையூட்டிய இந்த வகையிலான படங்களுக்கென்று தனி ரசிகர்கள் இங்கு அதிகம் இருப்பதோடு, 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஜானரிலான படங்கள் அவ்வப்போது ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன. அந்த வகையில், கவின் நடிப்பில் வருகிற 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள 'ஸ்டார்' திரைப்படமும் இதே மாதிரியான தாக்கத்தைதான் ஏற்படுத்த போகிறது என்பது கடந்த வாரம் வெளியான ட்ரெய்லரிலேயே நமக்கெல்லாம் புரிந்திருக்கும். இந்த தொகுப்பில் கடந்த 20 ஆண்டுகளில் இப்படியான நம்பிக்கையூட்டிய திரைப்படங்கள் என்னவெல்லாம் வந்திருக்கின்றன? அவை ரசிகர்கள் மத்தியில் எப்படியான தாக்கத்தையும், வரவேற்பையும் பெற்றிருக்கின்றன என்பது பற்றி இங்கே காணலாம்.

முகவரி (2000)


"முகவரி" படத்தில் ஸ்ரீதராக வரும் அஜித்குமார்

ஹீரோ என்பவன் ஜெயிக்கணும். ஜெயிக்கிறவன்தான் நிச்சயமாக ஹீரோவாக இருக்க முடியும் என்கிற இலக்கணம் வெகு காலமாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. ஆனால் இந்த இலக்கணத்தை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, யதார்த்தம் பேசி பலரின் உள்ளங்களிலும் தனது அழுத்தமான நடிப்பால் அஜித் எழுதிய புது விலாசம்தான் 'முகவரி' திரைப்படம். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில், V.Z. துரை இயக்கி இருந்த இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். அஜித், ஜோதிகா, ரகுவரன், சித்தாரா, மணிவண்ணன், விவேக் உட்பட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். அழகிய குடும்பம். அப்பா, அண்ணன், அண்ணி, தங்கை என அன்பால் கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழும் ஸ்ரீதர், தான் ஒரு மிகப்பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என ஆசைப்படுகிறான். இந்த முயற்சியில் அவன் வெற்றி பெறுவதற்காக ஒட்டுமொத்த குடும்பமும், நண்பர்களும் பல உதவிகள் செய்தாலும், ஏதோவொரு விதத்தில் தடை ஏற்பட்டு அவமானமே மிஞ்சுகிறது. ஒவ்வொரு முறையும் ஸ்ரீதர் துவண்டு விழும்போதெல்லாம் அண்ணனாக வரும் ரகுவரன் நண்பனாகி ஒருபுறம் உத்வேகப்படுத்த, காதலியாக வரும் ஜோதிகாவும் உற்சாகமூட்டி அவனை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்ல முயற்சி செய்கின்றனர். இருந்தும் ஒருகட்டத்தில் காதலா? இசையா? என்ற சூழல் வரும்போது காதலியை விட்டுக்கொடுக்கும் ஸ்ரீதர், மற்றொரு சூழலில் இசையா? குடும்பமா? என்ற நிலை வரும்போது, தான் உயிராக நேசிக்கும் இசையையே தூக்கி எறிகிறான். இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் கே.எஸ். ரவிக்குமார், எஸ்.வி.சேகர் உட்பட பல பிரபலங்கள் படத்தின் கிளைமேக்ஸில் ஹீரோ ஜெயிப்பது போல் காட்டினால் பெரிய ஹிட் ஆகும் என கூற, பி.சி.ஸ்ரீராம் போன்ற ஆளுமைகளோ படத்தின் கிளைமேக்ஸை மாற்றி நாவல்டியைக் கெடுத்துடாதீங்க என படக்குழு தரப்பிடம் அட்வைஸ் சொன்னார்களாம். இவற்றையெல்லாம் மீறி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடத்தில் அன்று பெற்றிருந்தாலும் 'ஒருத்தன் ஜெயிச்சுட்டா அதைக் கொண்டாட அவனோட குடும்பம் இருக்கணும். அந்த குடும்பம் இல்லாம நான் ஜெயிக்கிறதுல ஒரு அர்த்தமும் இல்ல' என படத்தின் முடிவில் அஜித் பேசும் வசனத்தின் வாயிலாகவே இதுதான் சரியான கிளைமேக்ஸ் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருந்தது.

வாரணம் ஆயிரம் (2008)


"வாரணம் ஆயிரம்" படத்தில் ராணுவ அதிகாரியாக வரும் நடிகர் சூர்யா

உணர்வுகளை கவிதை போன்ற திரைப்படமாக எடுப்பதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வல்லவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதிலும் தனது சொந்த வாழ்க்கையில் தந்தையை இழந்தபோது தனக்கு ஏற்பட்ட வலியையே திரைக்கதையாக்கி அவர் எடுத்திருந்த 'வாரணம் ஆயிரம்' திரைப்படம், அவர் எழுதிய திரை காவியங்களிலேயே மிகச் சிறந்த படைப்பு எனலாம். இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா எனக் கேட்க தோன்றும் அளவுக்கு அப்பா கிருஷ்ணனாக வரும் சூர்யாவும் சரி, அம்மா மாலினியாக வரும் சிம்ரனும் சரி நடிப்பில் ஒருபுறம் மிளிர. மேல் நடுத்தர வர்க்க இளைஞனாக வரும் மகன் சூர்யாவோ ஜாலி, அன்பு, பாசம், குடும்பம், காதல், அழுகை, வேலை என பல்வேறு பரிமாணங்களில் பயணித்து நமது மலரும் நினைவுகளை தட்டி எழுப்பி இருப்பார். குறிப்பாக படத்தில் சூர்யாவின் வாழ்க்கையில் தேவதையாக வரும் சமீரா ஒரு விபத்தில் சிக்கி இறந்து விடுவார். அதன் பின் மதுபோதைக்கு அடிமையாகி பித்துப்பிடித்து அலையும் சூர்யாவை அப்பாவும் அம்மாவும் சேர்ந்து மீண்டும் மனிதனாக மாற்றுவார்கள். அந்த நேரத்தில் சூர்யாவின் வாழ்க்கையில் ப்ரியா என்கிற மற்றொரு பெண் நுழைந்து, பல மாற்றங்கள் கண்டு ராணுவ அதிகாரியாக மாறுவார். இந்த மாற்றம் எல்லாமே ஒரு நண்பனாக, குருவாக, தோழனாக வரும் தந்தையின் வழிகாட்டுதல்களுடன் நடந்திருக்கும். அப்படிப்பட்ட தந்தையும் ஒரு நாள் மரணத்தைத் தழுவ, மீண்டும் சூர்யாவின் வாழ்க்கை இருண்டு போகிறது. ஆனால், அதன் பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறார் சூர்யாவின் அம்மா மாலினி. பின் மீண்டும் அவனது பயணம் தொடர்கிறது... இப்படித்தான் 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தின் கதைப்போக்கு அமைந்திருக்கும். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்கள்தான் இவைகள் என்றாலும் தோல்விக்கு பின்பும், மிகப்பெரிய இழப்பிற்கு பின்பும் கூட வாழ்க்கை இருக்கிறது என்பதை இப்படம் அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் இன்றும் நினைவுகூரக்கூடிய படமாக 'வாரணம் ஆயிரம்' இருந்து வருகிறது.

மயக்கம் என்ன (2011)


"மயக்கம் என்ன" திரைப்படத்தில் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபராக வரும் தனுஷ்

செல்வராகவன் படம் என்றாலே சோகம், வித்தியாசம், கொஞ்சம் விரசம் போன்ற விஷயங்களே பிரதானமாக இருக்கும் என்கிற கருத்து அதிகம் இங்கு உண்டு. 'மயக்கம் என்ன' திரைப்படம் ரிலீஸ் ஆன சமயத்திலும் அதே மாதிரியான விமர்சனங்கள்தான் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி இப்போதும் பலருக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் திரைப்படமாக இந்த 'மயக்கம் என்ன' இருப்பதற்கான மிக முக்கியமான காரணம், அதில் வரும் யாமினி கதாப்பாத்திரம்தான். கண்கள் முழுக்க கனவுகளுடனும், கையில் ஒரு கேமராவுடனும் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபராக சாதிக்கத் துடிக்கும் கார்த்திக்காக வரும் தனுஷ், அதற்காக எப்படியெல்லாம் போராடுகிறார், எவ்வளவு இழப்புகளையும் அவமானங்களையும் சந்திக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இதற்கிடையில் நண்பனின் காதலியாக வரும் யாமினி, மனம் மாறி கார்த்திக் மீது காதல் கொள்கிறார். கார்த்திக் விலகி விலகிச் சென்றாலும் யாமினி விடவில்லை. ஒருகட்டத்தில் யாமினியின் உண்மையான காதலை புரிந்துக் கொண்டு நண்பர்களே அவர்களைச் சேர்த்து வைக்கிறார்கள். கல்யாணமும் நடக்கிறது. ஆனால், ஒரு சூழ்நிலையில் கார்த்திக் உயிராக நினைக்கும் புகைப்பட துறையை சார்ந்தவர்களே "உனக்கு போட்டோகிராபியெல்லாம் சரிப்பட்டு வராது வேற வேலை இருந்தா பாரு" என கேலி செய்யும் அளவுக்கு நிலைமை மாற, குடிபோதைக்கு அடிமையாகும் கார்த்திக் ஒரு சைக்கோவாக மாறுகிறார். காரணமற்ற கோபங்களால் பிறரை அடித்து உதைப்பதும், கட்டிய மனைவியை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதுமான கதாபாத்திரத்தில் தனுஷ் ஒருபுறம் கோபத்தை ஏற்படுத்த, தோற்று கொண்டே இருக்கும் ஒரு கலைஞனின் மனைவியாக அலட்டிக் கொள்ளாமல் யாமினியாக வரும் ரிச்சாவோ நடிப்பில் நம்மை கலங்கடித்துவிடுவார். குறிப்பாக, படத்தின் கிளைமேக்ஸில் தன்னை ஏமாற்றியவனை வென்று, உலக அளவில் சிறந்த புகைப்படக் கலைஞனாக தனுஷ் விருது வாங்கும் தருணத்தில் யாமினியாக வரும் ரிச்சா கொடுக்கும் அழுகை, கோபம், மகிழ்ச்சி கலந்த அந்த ரியாக்ஷன் மறக்கமுடியாத காட்சியாக என்றுமே இருக்கும்.

எதிர்நீச்சல் (2013)


"எதிர்நீச்சல்" படத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த்

நடிகர் தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் துரை இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், நந்திதா நடிப்பில் வெளியான திரைப்படம் 'எதிர்நீச்சல்'. தமிழகத்திற்கு பெருமை தேடி தந்த ஒரு பெண் சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்டு அவளது கனவுகள் கலைக்கப்பட்ட, மறைக்கப்பட்ட சம்பவத்தை கதைக்கருவாக கொண்டு உருவாகிய இப்படம் அன்று பலருக்கும் தன்னம்பிக்கை ஊக்கியாக இருந்தது. குஞ்சிதபாதம் என்ற பெயருடைய சிவகார்த்திகேயன் அந்த பெயரை அவமானமாக கருதுகிறான். அந்த பெயராலேயே பல கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிறான். ஒரு கட்டத்தில் அதே பெயர் அவனது காதலுக்கும் வில்லனாக மாற, வாழ்க்கையில் ஏதாவது சாதித்தால் இந்த பெயரின் அவமானம் போய்விடும் என கருதுகிறான். இதற்காக ஓட்டப்பந்தயம் ஒன்றில் கலந்துக்கொள்ள முடிவெடுக்கும் குஞ்சிதபாதம், ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்து காதலிலும் ஜெயித்தானா? பெயரில் என்ன இருக்கிறது என்பதை உணர்ந்தானா? என்பதுதான் மீதிக் கதை. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தோடு வெளிவந்த இத்திரைப்படத்தை மேம்போக்காக பார்த்தால் நகைச்சுவை படமாக நமக்கு தோன்றினாலும், அழுத்தமான கருத்தினையும் மனதில் ஆழ பதிய வைத்து சென்றிருக்கும். குறிப்பாக, ஒரு பணக்காரரின் பெண் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திறமைசாலியான வள்ளியாக வரும் நந்திதா மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவள் பெண் அல்ல ஆண் எனக் கூறி பரிசோதனை செய்யும் அளவிற்கு அவளை கொண்டு போய், அவளது கனவை இருட்டில் தள்ளும் காட்சிகள் பலரின் வாழ்க்கையிலும் வெவ்வேறு சூழ்நிலைகளில் நடந்த சம்பவங்களை நிச்சயம் நினைவுப்படுத்தும். அதேபோல் இத்தனை சோதனைகளுக்கு பிறகும் படத்தின் கிளைமேக்ஸில் கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு சிவகார்த்திகேயன் மாரத்தானில் வெற்றி பெரும்போது நாமே வென்ற உணர்வை 'எதிர்நீச்சல்' படம் தரும்.

ஜீவா (2014)


"ஜீவா" படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா

கிரிக்கெட் விளையாடும்போது ஜெயிக்கப் போராடலாம்? ஆனால் அந்த கிரிக்கெட்டை விளையாடுவதற்கான வாய்ப்பை பெறுவதற்கே போராடினால் எப்படி? அதுதான் 'ஜீவா' படத்தின் கதை. பொதுவாகவே கிரிக்கெட் என்றவுடன் அதில் நடக்கும் ஊழல், சூதாட்டம் குறித்துதான் பல படங்கள் இங்கு வெளிவந்துள்ளன. ஆனால் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் சாதிய உணர்வு குறித்து பேசிய முதல் படமாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'ஜீவா' படம் இருந்தது. ப்ளஸ்டூ படிக்கும் ஜீவாவுக்கு பாடம் ஏறவில்லை, கிரிக்கெட்தான் பிடிக்கிறது. ஆனால் அவனது அப்பாவிற்கோ மகன் எப்படியாவது ஒரு அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்தால் போதும் என்கிற எண்ணம். இந்த நேரத்தில் பக்கத்து வீட்டுக்கு வரும் ஜெனியுடன் காதல், பின் வீட்டுக்குத் தெரிந்து பெரிய பிரச்சினை என கதையின் போக்கு செல்ல, காதலியைப் பிரிந்த ஏமாற்றத்தில் குடிக்கு அடிமையாகிறான் ஜீவா. ஒருகட்டத்தில் காதல் தோல்வியின் வேதனையை போக்க தந்தையின் வழிகாட்டுதல் மூலம் மீண்டும் கிரிக்கெட் களத்திற்குள் நுழைகிறான். ஜெனியை மறந்துவிட்டு கிரிக்கெட்டில் தீவிரமாகி, ரஞ்சிப் போட்டிக்கு தேர்வாகிறான் ஜீவா. அங்கு நடக்கும் சாதி அரசியலுக்கு சக நண்பன் லட்சுமணன் பலியாவதைப் பார்த்து கலங்கும் ஜீவா, அடுத்து என்ன செய்கிறான்? காதலியுடன் சேர்ந்தானா என்பதுதான் மீதிக் கதை. படத்தின் முதல்பாதி வழக்கமான காதல் படமாகவே துவங்கினாலும், இரண்டாம் பாதியில் காட்டப்படும் காட்சிகள் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் மன வலியை தரும் படியாகவே அமைந்திருக்கும். குறிப்பாக நன்றாக விளையாடியவனின் முதுகை அதிகாரி தடவிப் பார்க்கும் காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத ஒன்றே எனலாம். ஒருவருடைய வளர்ச்சியை எப்படி சாதி பின்னோக்கி இழுக்கிறது என்பதை படம்பிடித்துக் காட்டிய இப்படத்தின் கிளைமேக்ஸ் தன்னம்பிக்கையூட்டும் வகையில் பாசிட்டிவாக முடிந்தது பாராட்டும் படியாகவே இருக்கும்.

கனா (2018)


"கனா" திரைப்படத்தில் கிரிக்கெட் கனவோடு கௌசல்யாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஒரு கிராமத்து பெண் கிரிக்கெட் விளையாட வரும்போது என்னென்ன மாதிரியான பிரச்சினைகளை சந்திப்பாள்? தன் கனவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்போது அவள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? பல தடைகளை மீறி சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாக அவள் எப்படி சாதிக்கிறாள்? என்பதை அப்பா மகள் பாசம், விவசாயம், நட்பு, காதல் ஆகியவற்றுடன் சேர்த்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் சொன்ன கதைதான் 'கனா'. குளித்தலையில் வசிக்கும் விவசாயியான முருகேசன் கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ் ஒரு கிரிக்கெட் வெறியன். தந்தையைப் பார்த்து மகள் கௌசல்யாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷும் சிறு வயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்கிறார். தன் ஊரில் இருக்கும் ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து அடுத்தடுத்து ஜெயிப்பது முருகேசனுக்கு பிடித்திருந்தாலும், அவளது தாய்க்கு பிடிக்கவில்லை. இதேவேளையில் ஊரில் இருப்பவர்களும் 'பொம்பள பிள்ளைய போய் கிரிக்கெட் விளையாட அனுப்பிட்டியே' என கூறி முருகேசனை ஏச, இவற்றை எல்லாம் மீறி கௌசல்யா இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல எப்படி கைக் கொடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இதற்கிடையே முருகேசன் விவசாயத்தில் ஏதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கதையோட்டத்தோடு சொல்லப்பட்டு ஒரு பக்கம் மகளிர் கிரிக்கெட், மற்றொரு பக்கம் விவசாயம் என இருகோடுகளில் பயணிக்கும் இந்த கதை சமூகத்திற்கு முக்கியமான சோசியல் மெசேஜ் ஒன்றையும் சொல்லிவிட்டு சென்றிருக்கும். குறிப்பாக இதில்வரும் "இந்திய கிரிக்கெட்டை காப்பாத்த நாங்க 11 பேர் இருக்கோம், ஆனா இந்தியாவில் விவசாயத்த காப்பாத்த யார் இருக்கா?" போன்ற வசனங்கள் கேளிக்கைக்கு பலியாகி வரும் இன்றைய சமூகத்தினருக்கு சவுக்கடியாக அமைந்திருக்கும்.

சூரரைப் போற்று (2020)


"சூரரைப் போற்று" படத்தில் நண்பர்களுடன் மாறன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா

பணக்காரர்கள் மட்டுமே விமானத்தில் பயணிக்க முடியும் என்ற விதியை தனது திறமையால் அடித்து நொறுக்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறுதான் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் கதை. ஏர் ஓட்டும் விவசாயியாக இருந்தாலும், சாமானிய மக்களாக இருந்தாலும் அவர்களையும் விமானத்தில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட நெடுமாறன், குறைந்த விலையில் விமான சேவையை துவங்குவதற்காக விருப்ப ஓய்வு பெற்று, தனது நண்பர்களின் உதவியுடன் அதற்கான வேலையை துவங்குகிறான். இந்த விஷயத்தில் காதல் மனைவியாக வரும் சுந்தரி துவக்கத்தில் முரண்பட்டாலும், பிறகு கணவனின் கனவை புரிந்துக்கொண்டு அவளும் உறுதுணையாக நிற்கிறாள். ஒருகட்டத்தில் விமான நிலையம் ஆரம்பிக்கும் முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும் நெடுமாறனை, பெரு முதலாளிகள் கூட்டம் பின்னோக்கி இழுத்து எப்படி எல்லாம் சிதைக்கிறது? இதனால் அவன் சந்திக்கும் வலி, அவமானம், வேதனைகள் என்னென்ன? இறுதியில் தனது லட்சியத்தில் நெடுமாறன் ஜெயித்தானா என்பதை ரத்தமும் சதையுமாக சொன்ன திரைப்படம்தான் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த இப்படம் பல விருதுகளை அள்ளியதோடு, பல உணர்வுகளையும் நமக்குள் கடத்தியிருக்கும். குறிப்பாக அப்பா இறந்த செய்தி கேட்டு ஊருக்கு வர முடியாமல், விமானக் கட்டணத்துக்கும் வழியில்லாமல் பரிதவிக்கும் நெடுமாறனின் அவலநிலை ஒவ்வொரு சாமானியனின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை நினைவுப்படுத்தி இருக்கும். இந்த சமுதாயத்தில் நம்மால் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாதா என ஏங்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் உத்வேக மருந்தாக அமைந்த இப்படத்தின் கிளைமேக்ஸ் என்றுமே மறக்க முடியாத ஒன்று தான்.

இந்த வகையிலான படங்களின் சாயலில்தான் தற்போது கவின் நடித்து வெளிவந்துள்ள ‘ஸ்டார்’ திரைப்படமும் அமைந்துள்ளது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற 10-ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இளன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். தன் தந்தையின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் இயக்கியுள்ள இப்படம் இதற்கு முன்பாக நாம் சொன்ன கதைகளோடு ஒத்துப்போகும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது சினிமா என்ற கனவோடு மதுரையில் இருந்து கிளம்பி சென்னைக்கு வரும் இளைஞனாக நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார் கவின். வாழ்க்கையில் தங்கள் கனவை அடைய போராடும் ஒவ்வொருவருக்கும் இப்படமும் நிச்சயம் ஒரு சமர்ப்பணமாக இருக்கும்.

Updated On 13 May 2024 6:05 PM GMT
ராணி

ராணி

Next Story