நடிகர், இயக்குநர், துணை இயக்குநர், வசனகர்த்தா என பன்முக திறமைகளால் தமிழ் திரையுலகில் கோலோச்சி, தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்தான் ரமேஷ் கண்ணா. நாடகத்துறையில் இருந்து, தான் திறைத்துறைக்கு வந்தது எப்படி? நடிகரானது எப்படி? தனது இயக்குநர் அவதாரம், தான் இயக்கிய படம் வெளிவராதது ஏன்? சக நடிகர்களுடன் ஏற்பட்ட போட்டி உள்ளிட்ட தனது திரைவாழ்க்கை அனுபவம் குறித்து ராணி ஆன்லைன் நேயர்களுக்கு அவர் அளித்த நேர்காணலின் இரண்டாம் பகுதியை தற்போது பார்ப்போம்.
ஜானகி ராமச்சந்திரனின் தாய்மாமன் என் தந்தை - ரமேஷ் கண்ணா
சமீபத்தில் நீங்கள் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளதே?
என் அம்மா ஒரு கிறிஸ்டியன். அப்பா ஒரு பக்கா இந்து. கேரளாவின் புத்தன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அம்மா, சினிமா மீதான ஆசையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். ஆனால் முறையான கிறிஸ்துவராக என் அம்மா வாழவில்லை. அதனால் நானும் முறையாக ஒரு கிறிஸ்துவனாக வாழவில்லை. இப்போது என் வீட்டில் நான் மட்டும் கிறிஸ்துவ மதத்தை முழுமையாக பின்பற்றுகிறேன்.
உங்கள் அப்பாவை பற்றி கூறுங்களேன்...
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சரான ஜானகி ராமச்சந்திரனின் தாய்மாமன்தான் என் அப்பா. எல்லோர் வீட்டிலும் அப்பா பெயரைத்தான் இனிஷியலாக பயன்படுத்துவார்கள். ஆனால் என் அப்பா குடும்பத்தில் அம்மா பெயரும், தாய்மாமா பெயரும்தான் இனிஷியலாக பயன்படுத்துவார்கள்.14 வயதில் ஜானகியை கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிவிட்டவர் என் அப்பா. இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஆனால் அப்போது வி.என். ஜானகிதான் லேடி சூப்பர் ஸ்டார். வி.என். ஜானகி, லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தபோது, எம்ஜிஆர் சின்ன சின்ன கேரக்டர்களில்தான் நடித்துக்கொண்டிருந்தார். ஹீரோவெல்லாம் ஆகவில்லை. அப்போது வி.என். ஜானகி மீது ஆசைப்பட்டு, என் அப்பாவிடம் வந்து பெண் கேட்டார் எம்ஜிஆர். எங்க அப்பா முடியாது என கூறிவிட்டார். “பணத்திற்காகத்தான் ஜானகியை கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படுகிறாய். அவர் சூப்பர் ஸ்டார், நீ இப்போதுதான் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கிறாய்” என தெரிவித்திருக்கிறார். அதற்குபின் எம்ஜிஆர் எவ்வளவோ போராடி பார்த்தார். எம்ஜிஆர், அரசியல், சினிமா என எங்கேயும் தோற்றது கிடையாது. எம்ஜிஆர் தோற்ற ஒரே இடம் என் அப்பாவிடம்தான். ஆனால் அவர் வாழ்க்கையில் ஜெயித்துவிட்டார். என் அப்பா வாழ்க்கையில் தோற்றுவிட்டார். நாங்கள் சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டோம்.
இப்போது கேரளாவில் நான் படித்த பள்ளியிலேயே என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். இதற்குமுன், அங்கு நான் நடித்த நாடகம் ஒன்றின் போட்டோ இருக்கிறதா எனக் கேட்டேன். இல்லை எனக் கூறிவிட்டார்கள். தற்போது சிறப்பு விருந்தினராக கூப்பிட்டுள்ளார்கள். இப்போதெல்லாம் அனைத்திற்கும் ஃபோட்டோ உள்ளது. ஆனால் அப்போது அதற்கு ஏற்ற சூழல் இல்லை. நான் சிறுவனாக இருந்தபோது குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், கவிஞர் பாரதிதாசன் போன்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் என்னிடம் இல்லை. நானாக சொல்லிக் கொண்டால்தான் உண்டு.
ஆண் பாவம் படத்தில் நடிகர் பாண்டியராஜன் - நடிகர் ரமேஷ் கண்ணா
நாடகத்துறையில் இருந்து திரைத்துறையில் நடிகரானது எப்படி?
உதவி இயக்குநராக திரைத்துறைக்குள் வந்துவிட்டேன். முதலில் காரைக்குடி நாராயணனிடம் வேலைக்கு சேர்ந்தேன். அவரோடு எடுத்த இரண்டு, மூன்று படங்கள் சரியாக வரவில்லை. பின்னர் பாண்டியராஜனிடம் சேர்ந்தேன். அதில் கன்னி ராசி, ஆண் பாவம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட். ஆண் பாவம் என படத்திற்கு நான்தான் டைட்டில் சொன்னேன். மேலும் கதாநாயகிக்கு சீதா என நான்தான் பெயர் வைத்தேன். இரண்டிலுமே பாண்டியராஜன் சொன்ன பெயர் எடுபடவில்லை. அதுபோல பாண்டியராஜனுடன் இணைந்து ஒரு படம் நடித்தேன். அது நல்ல வித்தியாசமான கேரக்டர். அப்போது, “ரமேஷ் கண்ணா வந்தால், உன் இடம் காலியாகிவிடும்” என பலரும் பாண்டியராஜனிடம் ஏற்றிவிட்டனர். அதனால் என் படத்தை வரவிடாடமல் பண்ணிவிட்டார் பாண்டியராஜன். அந்தப் படம் நின்றுவிட்டது. அதை நம்பி கல்யாணம் எல்லாம் செய்துவிட்டேன். என் வாழ்க்கையே அப்போது கேள்விக்குறி ஆகிவிட்டது.
பெரிய குடும்பம் படக்காட்சி - இப்படத்தின் வசனகர்த்தா ரமேஷ் கண்ணா!
பின்னர் விவேக்தான் என்னை ரவிக்குமாரிடம் சேர்த்துவிட்டார். அவருடன் வேலை நன்றாக சென்றது. அப்போது ‘பெரிய குடும்பம்’ என்ற படத்திற்கு வசனம் எழுதினேன். அது நல்ல ஹிட். அந்த கம்பெனி வந்து என்னை படம் இயக்க சொன்னார்கள். நான் முடியாது என சொல்லிவிட்டேன். உடனே ரவிக்குமார், “படம் இயக்குவதற்காகத்தானே வந்தாய், பிறகு ஏன் வேண்டாம் என சொல்கிறாய்?” என்று கேட்டார். இல்ல சார், நான் முன்னாடி பண்ண இரண்டு, மூன்று படங்கள் நின்றுபோய்விட்டன, அதனால் வேணாம்னு சொன்னேன்” எனக் கூறினேன். பின்னர் படம் செய்ய ஒப்புக்கொண்டு, படப்பணிகளை ஆரம்பித்தேன். நடிகர், நடிகைகள் தேர்வு உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிந்து ஷூட்டிங் தொடங்கியது. ஆனால், ஃபிலிம் இல்லை என்ற காரணத்தால் முதல்நாள் ஷூட்டிங்கிலேயே அந்தப்படம் நின்றுவிட்டது. அப்போது படத்தில் கமிட்டாகி இருந்த மணிவண்ணன், “ஃபிலிம் கம்பெனியிலேயே ஃபிலிம் இல்லை என்றால் நீ இயக்குநரே ஆக முடியாதுடா” என காமெடியாக சொன்னார். பின்னர் மூன்று நாட்கள் கழித்து ஷுட்டிங்கை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குள் ஒன்றரை ஆண்டுகள் தொழிலாளர் யூனியன் வேலைநிறுத்தம் வந்துவிட்டது. நொந்துவிட்டேன். இப்படி பல இடங்களில் நான் வாய்ப்புகளை இழந்துள்ளேன்.
‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்தில் ரமேஷ் கண்ணா நடிப்பை பாராட்டிய ரஜினிகாந்த்
அப்போதுதான் என்னை விக்ரமன் சார் கூப்பிட்டு, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்தில் நடிக்க சொன்னார். அவரது படங்களில் எல்லாம், எனக்கு ஒரு சீன் கொடுப்பார். எனவே, அவர் என்னை முதலில் கூப்பிட்டபோது, அப்படி ஒரே ஒரு சீனுக்காகத்தான் என்று நினைத்தேன். மேலும் அந்த நேரத்தில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சார் படத்தின் வேலைக்கு புக் ஆகியிருந்தேன். எனவே, விக்ரமன் சார் அழைத்தபோது, அவரது வாய்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர் விடாப்பிடியாக என்னை அழைத்து சென்றுவிட்டார்.
அப்போது குஷால் தாஸ் கார்டனில் ஷுட்டிங் நடந்தது. பங்களாவின் மேலே, விக்ரமன் சாரின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ பட ஷுட்டிங். கீழே ரவிக்குமார் சார் ஷுட்டிங். அப்போது என்னைப் பார்த்த ரவிக்குமார், “டேய் என்னடா, அட்வான்ஸ் வாங்கிட்டு ஓடிட்ட?” எனக் கேட்டார். விக்ரமன் சார் வந்து, என்ன எனக் கேட்டதும், “திருடன் சார் ரமேஷ் கண்ணா. காசு வாங்கிட்டு ஓடிட்டான். இப்போது நான் உட்கார்ந்து படம் எடுத்துட்டு இருக்கேன்” என சொன்னார். பிறகு விக்ரமன் சார் நடந்ததை கூறியதும், என்னை போய் நடிக்க சொல்லிவிட்டார் ரவிக்குமார். ஒருவழியாக ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது எனக்கு பேஜரில் ரஜினிகாந்திடம் இருந்து மெசேஜ் வந்தது. அந்தநேரம் என்னிடம் ஃபோன் இல்லை என்ற காரணத்தால், மெசேஜை பார்த்துவிட்டு, உடனடியாக தேனப்பன் ஆஃபிஸுக்கு போய் ரஜினி சாருக்கு ஃபோன் செய்தேன். அவர், “ரமேஷ் கண்ணா, படத்துல நீங்க சூப்பரா பண்ணிருக்கீங்களாமே... நீங்க படம் போடுங்க... நாங்க வந்து குடும்பத்தோட பார்க்கிறோம்” எனக் கூறினார். பின்னர் தேனப்பன் உதவியோடு படத்தை போட்டோம். படத்தை பார்த்துவிட்டு, “ரமேஷ் கண்ணா நல்லா பண்றப்பா என ரஜினி சொன்னார். அந்தப் படத்தில் உண்டியல் காமெடியில் வரும், “சாமி, காசெல்லாம் மேல போடுறோம், உனக்கு எவ்ளோ வேண்டுமோ அதெல்லாம் மேலயே எடுத்துக்கோ, நீ பாத்து கீழப் போடுறத நாங்க எடுத்துக்குறோம்” என்ற டயலாக் பயங்கர ஃபேமஸ். எல்லா மொழிகளிலும், அந்த டயலாக்கை ஹீரோக்கள்தான் சொல்வார்கள். ஆனால் தமிழில் மட்டும் கார்த்திக் எனக்காக அதனை விட்டுக் கொடுத்தார். இதனை ரஜினிகூட ஒரு நிகழ்ச்சியில் பேசியிருப்பார். நடிகர் கார்த்திக்குக்கு நல்ல மனசு. நன்றும் தீதும் பிறர்தர வாரா...
தொடரும்...
