இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

14-02-1971 தேதியிட்ட `ராணி’ இதழில் வெளியானது.

குட்டி பத்மினி இப்பொழுது இளமொட்டு அல்ல! மலர்ந்த பூ---குமரிப் பெண்! கன்னிப் பெண்ணுக்கு எத்தனையோ ஆசைகள் இருக்கும்! குட்டி பத்மினிக்கு...? அவரே சொல்லுகிறார், படித்துப் பாருங்கள்!

ஆசை யாருக்குத்தான் இல்லை?

`லாட்டரி சீட்டிலே லட்ச ரூபாய் கிடைக்காதா! ஜாக்பாட்டிலே பத்து லட்சம் அடிக்காதா!’ என்றெல்லாம் ஆசைப்படாதவர்கள் யாருமே இல்லை! தேர்தலிலே நிற்க வேண்டும் வெற்றி பெறவேண்டும் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் அமைச்சராக உலா வரவேண்டும்.... இப்படி ஆசை எத்தனை பேருக்கு இல்லை! ஆளுக்கு ஆள் ஆசை வேறுபடுகிறதே தவிர, ஆசைப்படாதவர்களே இல்லை. இன்னும் சொன்னால் எல்லோருமே ஆசைப்படத்தான் செய்கிறார்கள். ஆசையிருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். பேராசை கூடாது என்றுதான் பெரியவர்கள் சொன்னார்களே தவிர, ஆசைப்படக் கூடாது என்று யாருமே சொல்லவில்லை.

எனது ஆசைகள்

எல்லோருக்கும் போல எனக்கும் ஆசைகள் இருக்கின்றன! சிறு வயதிலே எனக்கு ஓர் ஆசை உண்டு. வண்டி வண்டியாகப் படித்து, வக்கீல் ஆகவேண்டும் என்பதுதான் அந்த ஆசை! அந்த ஆசை நிறைவேறுமுன், நான் நடிகையாகிவிட்டேன்! என் ஆசையில் நான் உறுதியாக இருந்திருந்தால் இப்பொழுது வக்கீலுக்குத்தான் படித்துக் கொண்டிருப்பேன். ஆனால் இடையில் நட்சத்திர ஆசை ஏற்பட்டு விடவே படிப்பை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. அதுமுதல், என் உள்ளத்தில் ஓரே ஆசை! அதுதான் நட்சத்திர ஆசை!

பதினாலு வயதில்!

பதினாலு வயதுக்குள்ளேயே ஆறு மொழிகளில் நடித்து அமோகப் புகழ் அடைந்த நான், 14 மொழிப் படங்களிலும் நடித்து, அகில இந்திய நட்சத்திரம் ஆக வேண்டும் என்பதுதான் இப்பொழுது என் ஆசை! சென்னை, பம்பாய், ஆந்திரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் நான் பரிசு பெற்றிருக்கிறேன். அனைத்து இந்திய நட்சத்திரம் ஆகி, நான் நடித்த படத்துக்கு தங்கப்பதக்கம், பரிசு வாங்க வேண்டும் என்பது எனது தீவிரமான ஆசை! வெறும் ஆசையிருந்தால் போதுமா? கவர்ச்சி வேண்டும், கட்டான உடல் வேண்டும்; நடிப்புத் திறமை வேண்டும். பருவமும் உருவமும் என் ஆசைக்குத் துணை செய்கின்றன. ஆகவே, என் ஆசை நிறைவேறும் நாள் வெகு தூரம் இல்லை.

எம்.ஜி.ஆர்.

இப்பொழுது நான் நாடகங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். என்னை சந்திக்கும் ரசிகர்கள், “வாத்தியாரோடு எப்பொழுது சேர்ந்து நடிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்கிறர்கள் . வாத்தியாரோடு இப்பொழுது நான் ஓரு படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். அவருக்கு ஜோடியாக அல்ல---தங்கையாக. இதை ரசிகர்களிடம் சொன்னால், “வாத்தியாரோடு சேர்ந்து, வாத்தியாரம்மாவாக எப்பொழுது நடிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். இதற்கு நான் என்ன சொல்வது?

ஆறு மாதம் பொறு

சமீபத்தில் நான் எம்.ஜி.ஆரை சந்தித்தேன். “ரசிகர்கள் இப்படி கேட்கிறார்களே; என்ன பதில் சொல்லுவது?” என்று அவரிடமே கேட்டேன். ``ஏ குட்டி! இன்னும் ஆறு மாதம் பொறுத்துக்கொள். அதன் பின் நீதான் என்னோடு கதாநாயகியாக நடிப்பாய்” என்று சொன்னார். என் மீது அவருக்கு மிகவும் அன்பு உண்டு. ஆகவே என்னை ‘குட்டி’ என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவார். நானும் குட்டி பத்மினிதானே!

50 படம்!

எம்.ஜி.ஆர். குண்டு அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, நான் போய்ப் பார்த்தேன். அந்த நிகழ்ச்சி இப்பொழுதும் என் நினைவில் இருக்கிறது. என்னைப் பார்த்ததும் “குட்டி, உன்னோடு நான் கதாநாயகனாக நடிக்க பிழைப்பேனா?” என்று எம்.ஜி.ஆர். கேட்டார். “ஒ...நீங்கள் நிச்சயம் பிழைத்துக் கொள்ளுவீர்கள். உங்களோடு 50 படத்தில் கதாநாயகியாக நான் நடிப்பேன்” என்று சொன்னேன். இந்த ஆசை வெகு விரைவிலேயே நிறைவேறும் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன்.

சவுகார் ஜானகி


எனக்கு சவுகார் ஜானகியை மிகவும் பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். “என்னுடைய வாரிசு நீதான்” என்று சவுகார் ஜானகி சொல்லுவார். அவரது ஆசை நிறைவேற வேண்டும் என்பது என் ஆசை. நான் வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டும் விளங்க விரும்பவில்லை. குணச்சித்திர நடிகையாகவும் திகழ ஆசைப்படுகிறேன். சிவாஜி மாமாவோடு சேர்ந்து நடிப்பேன். இந்தப் புகழையும் பெறுவேன்.

தொழிலாளர்களுக்கு

நான் பெரிய நட்சத்திரம் ஆனதும், சினிமா ஸ்டுடியோவில் வேலை செய்யும் சிப்பந்திகளுக்கு சொந்த வீடு கட்டித் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். இந்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்பதும் என் ஆசை. என் பெற்றோர்களை நல்ல முறையில் பார்த்துக் கொண்டு இருக்கும் என் அண்ணன்மார்களுக்கு பெரிய வேலைகள் வாங்கிக் கொடுப்பேன்.

நான் என்றுமே ‘குட்டி’தான்


எனக்கு ஒரே ஒரு பேராசை உண்டு. ரசிகர்களுக்கு நான் என்றைக்குமே “குட்டி பத்மினி”யாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை! நான் இன்று குமாரிதான். ஆனால், ரசிகர்கள் என்னை “குட்டி பத்மினி” என்று கூறுவதையே நான் விரும்புகிறேன்! ரசிகர்களுக்கு நான் என்றுமே “குட்டி”தான்!

காதல் ஆசை!

கன்னிப் பெண் என்றால், வேறொரு முக்கிய ஆசையை நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அதுதான் காதல்! ஆனால், எனக்கோ காதல்----திருமணம் என்ற ஆசைகள் இப்பொழுது இல்லை! நட்சத்திர ஆசையே என்னை ஆட்கொண்டு இருக்கிறது. அகில இந்திய நட்சத்திரம் ஆனபின்புதான், “காதல்... கத்தரிக்காய்....” எல்லாம் பார்க்க வேண்டும்!

Updated On 3 Aug 2023 6:18 AM GMT
ராணி

ராணி

Next Story