இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘இவருக்கு இப்போதான் தேசிய விருது கொடுக்குறாங்களா?’ என அனைவரும் வியந்து கேட்க, கிடைத்தால் சந்தோஷம். கிடைக்காவிட்டால் வருத்தம் இல்லை. இன்னும் உழைக்க தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார் சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது வென்றுள்ள நடிகர் எம்.எஸ். பாஸ்கர். நகைச்சுவையோ, குணச்சித்திரமோ அல்லது வில்லன் கதாபாத்திரமோ எதுவாக இருந்தாலும், அதுவாகவே தன்னை உருவகப்படுத்திக்கொண்டு, தனது நேர்த்தியான நடிப்பை திரையில் வழங்குபவர்தான் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். 40 வருட திரைவாழ்க்கையில் தனது முதல் தேசிய விருதை பெரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் திரைப்பயணம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு காண்போம்.


நடிக்கவந்த ஆரம்ப காலத்தில், கிடைத்த சின்ன வேடங்களில் எல்லாம் நடித்த எம்.எஸ். பாஸ்கர்

நடிகர் பாஸ்கர்...

பட்டுக்கோட்டை அருகில் உள்ள முத்துப்பேட்டைதான் நடிகர் பாஸ்கரின் சொந்த ஊர். ஆனால் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் நாகப்பட்டினம். இவரது அக்கா ஹேமமாலினி ஒரு டப்பிங் கலைஞர். இவர் டப்பிங் ஸ்டுடியோவிற்கு செல்லும்போது, அவரது துணைக்காக பாஸ்கர் சென்றுள்ளார். அப்போது அங்கு குரல் கொடுக்க வேண்டிய ஆண் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஒருவரால் வரமுடியவில்லை. இதனால் வேந்தன்பட்டி அழகப்பன் என்பவர் நடிகர் பாஸ்கரை குரல் கொடுக்க கூறியுள்ளார். ஒரே டேக்கில் டப்பிங் செய்துள்ளார் பாஸ்கர். அது நடிகர் சிவக்குமாரின் சிட்டுக்குருவி படம். நடிப்பின் மீது ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் என்றாலும், இந்த நிகழ்ச்சிக்கு பின் நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு டப்பிங்கிலும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அதற்குபின் இன்சூரன்ஸ் கம்பெனியில் முகவர் என வேறுவேறு வேலைகளுக்கு சென்றுள்ளார்.


பார்க்கிங் படத்தில்... நடிகர் எம்.எஸ். பாஸ்கர்

பின்னர் மீண்டும் 1986-லிருந்து டப்பிங் செய்ய தொடங்கியுள்ளார். அப்போதுதான் 1987-ல் வெளியான விசுவின் திருமதி ஒரு வெகுமதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுதான் அவரின் திரைப்பயணத்திற்கு தொடக்கமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இதனிடையே டப்பிங்கையும் தொடர்ந்து வந்துள்ளார். இப்படி டப்பிங் செய்ய சென்ற இடத்தில், மாயாவி மாரீசன் என்ற தொடரில் சில காட்சிகளில் மட்டும் நடிக்க வேண்டும். நடிக்கிறாயா என அத்தொடரின் இயக்குநர் கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்டு அதில் நடிக்க, தொடர்ந்து சின்ன பாப்பா, பெரிய பாப்பா தொடரில் நடித்தார் பாஸ்கர். சின்ன பாப்பா, பெரிய பாப்பா தொடர் இவருக்கு பெரும் வெற்றியை தேடி தந்தது. இப்படி பிஸியாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே மீண்டும் சினிமா வாய்ப்புகள் வரத்தொடங்கின. அந்த வரிசையில் மணிரத்னத்தின் டும் டும் டும், அழகிய தீயே போன்ற படங்களில் ஒருசில காட்சிகளில் வந்தாலும், மொழி, காற்றின் மொழி, திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது.

இதற்குபின் இவர் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களே. இப்படி 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியன், குணச்சித்திரம் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தனது மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரங்களுக்கு பெரிதும் பணத்தை எதிர்பார்த்தது இல்லை எனவும், சினிமாவில் காத்திருந்தால்தான் அங்கிகாரம் கிடைக்கும் எனவும் பலமுறை தெரிவித்துள்ளார். இப்படி தனது திறமைக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த வில்லன், சிறந்த துணை நடிகர் விருதுகளை பெற்றுள்ள நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தற்போது சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். பார்க்கிங் படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பை இயல்பான தோரணைகள் மூலம் வெளிப்படுத்தியதால் சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ். பாஸ்கர் பெற்றுள்ளார்.


மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் கருத்தை சுட்டிக்காட்டிய நடிகர் எம்.எஸ். பாஸ்கர்

இந்நிலையில் விருதுபெற்றது தொடர்பாக பேட்டியளித்துள்ள எம்.எஸ். பாஸ்கர், “விருது கிடைக்கும் என்று எப்போதோ சொன்னார்கள். ஆனால் நான் அதை பற்றி யோசிக்கவில்லை. கிடைத்தால் சந்தோஷம். கிடைக்கவில்லை என்றால் வருத்தம் இல்லை. இன்னும் கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறேன். சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்தபோதே மக்கள் என்னை அங்கீகரித்துவிட்டார்கள். அதுவே எனக்கு பெரிய விருதுதான். முதலில் நான் மக்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எனக்கு வரும் கேரக்டரை நான் ஒழுங்காக நடிக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைப்பேன். காமெடியாக, சீரியஸாக, கோபமாக இவர் நடிப்பார் என்று இயக்குநர் என் மீது வைக்கும் நம்பிக்கைக்கு, நான் நன்றி சொல்லி ஆக வேண்டும். அதேபோல் என் மனதுக்கு இணங்காத எந்த கேரக்டரிலும் நான் நடிக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பலரும் நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழில் குணச்சித்திர நடிகர்களுக்கு எப்போதும் போதிய வரவேற்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உண்டு. இதனை மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் கூட விருது வாங்கும் ஒரு மேடையில் வெளிப்படையாகவே வேதனையுடன் பேசியிருப்பார். இந்நிலையில் நடிகர் பாஸ்கரின் உழைப்புக்கு ஆங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

3 தேசிய விருதுகளை வென்ற பார்க்கிங்...

பார்க்கிங் படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த துணை நடிகர், சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த திரைக்கதை என்னும் மூன்று பிரிவுகளில் பார்க்கிங் திரைப்படம் விருது பெற்றுள்ளது. நகரங்களில் பொதுவாக இருக்கும் ஒரு பார்க்கிங் பிரச்சனையை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு ஈகோவால் எழும் பிரச்சனைகளை நேர்த்தியாக ரசிகர்களுக்கு கடத்திய ‘பார்க்கிங்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ராமா ராஜேந்திரா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார்.


பார்க்கிங் படத்தில் தன் முக பாவனைகளை பலரும் பாராட்டியதாக எம்.எஸ்.பாஸ்கர் தகவல்

நீயெல்லாம் நடிகனா?

எம்.எஸ். பாஸ்கருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, பலரும் அவரை கொண்டாடி தீர்த்துவரும் நிலையில், தான் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில், நீயெல்லாம் ஒரு நடிகனா என தன்னை நோக்கி வந்த விமர்சனத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். யார் அப்படி சொன்னது என்பதை கூற மறுத்துவிட்ட எம்.எஸ். பாஸ்கர், சரத்குமார், நெப்போலியன் உள்ளிட்டோர் தன் நடிப்பை விமர்சித்தது குறித்தும் தெரிவித்துள்ளார்.

சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியலில் தன் நடிப்பை ரசித்த பலர், அதற்குபிறகு வந்த செல்வி சீரியலில் தான் நடித்த ஆண்டவர் லிங்கம் என்ற வில்லன் கேரக்டரை வெறுத்ததாக எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார். வில்லன் நடிப்பை பார்த்த அவருடைய அம்மாவே அவருக்கு சாப்பாடு போடமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அதேபோல் அவருடைய மகளின் டீச்சர் அவரை அழைத்து நல்ல கேரக்டரை ஏற்று நடிக்கலாமே என்று கூறினாராம். அனைத்திற்கும் மேல், சீரியல் சமயத்தில் நெப்போலியனையும், சரத்குமாரையும் சந்தித்ததாகவும், அப்போது அவர்கள் இரண்டு பேருமே, "போங்க பாஸ்கர்.. உங்களை நாங்கள் பட்டாபி கேரக்டரில் எப்படி கொண்டாடினோம்... ரசித்தோம்! இந்த ஆண்டவர் லிங்கம் கேரக்டரை பார்க்கவே வெறுப்பாக வருகிறது. உங்கள் முகத்தில் விஷம் சொட்டுகிறது. இப்படியெல்லாம் உங்களை யார் நடிக்க சொன்னது?" என கேட்டார்களாம்.


மொழி படத்தில் நடிகர் பிரித்விராஜுடன் நடிகர் எம்.எஸ். பாஸ்கர்

மேலும் மொழி திரைப்படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ள எம்.எஸ்.பாஸ்கர், அந்தப் படத்தில் திருமணக் காட்சி ஒன்றில், தூக்கமில்லாத தோற்றத்துடன் தோன்ற வேண்டும் என்பதற்காக,.இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தாராம். அந்த கேரக்டரை வெறும் மேக்கப் மூலம் சாதிப்பதை விட, இயற்கையான தோற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதற்காக, தான் இதை செய்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த தோற்றத்தை மேலும் மெருகூட்ட, படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன், ஜிம்மிற்குச் சென்று த்ரெட்மில்லில் ஓடி உடலை மேலும் சோர்வடையச் செய்தாராம். மொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு நம் அனைவர் மனங்களிலும் மிக அழுத்தமாக பதிந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On 12 Aug 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story