இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி இடத்தை வகிப்பவர்களில் ஒருவர் சாய் பல்லவி. ‘ப்ரேமம்’ என்ற மலையாளப் படம்மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், மலர் டீச்சராக அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக்கொண்டார். எந்த சினிமா பின்னணியும் இல்லாதபோதும் எதேச்சையாக கிடைத்த வாய்ப்பின்மூலம் தனக்குள்ளிருந்த நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டுவந்ததால் இப்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருக்கு பாலிவுட் வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. திரையில் அறிமுகமாவதற்கு முன், 23 வயதிற்குள் திருமணம் செய்துகொண்டு 30 வயதுக்குள் இரண்டு குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என நினைத்தாராம் சாய் பல்லவி. ஆனால் திரையில் அறிமுகமான பிறகு தனது முடிவுகளை மாற்றிக்கொண்டாராம். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணனுக்கு அவரது காதலனுடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதில் சாய் பல்லவி குஷியாக இருந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. ஆனால் எந்தவொரு நல்ல நிகழ்வாக இருந்தாலும் அதில் நெகட்டிவ் கமெண்டுகளை பதிவிடுவதற்கு தவறுவதில்லை சில நெட்டிசன்கள். அப்படி சாய் பல்லவி திருமணம் செய்துகொள்ளாமல் அவரது தங்கைக்கு ஏன் திருமணம்? என்ற கேள்வியை முன்வைப்பதுடன் ஏதோ சிக்கல் இருப்பதாகவும் பேசிவருகின்றனர். இந்நிலையில் சாய் பல்லவியும், அவரது தங்கையும் நடிகையுமான பூஜா கண்ணனும் இருவருக்குமிடையேயான பாசம் மற்றும் பிணைப்பு குறித்து அளித்திருந்த பழைய நேர்க்காணல்களும், பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த கொண்டாட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் மாறி மாறி சுழன்று வருகின்றன.


சாய் பல்லவி மற்றும் பூஜா கண்ணன்

இணை பிரியா சகோதரிகள்

சாய் பல்லவி பொதுவாகவே குடும்பம்தான் தனது உலகம் என்பதை பலமுறை நேர்க்காணல்களில் கூறியிருக்கிறார். குறிப்பாக, அவருடைய தங்கைமீது அவருக்கு தனிப்பாசம். பூஜா கண்ணனும் தனது அக்கா, தனக்கு இன்னொரு அம்மா என்று பலமுறை கூறியிருக்கிறார். மேலும் பெரும்பாலும் சாய் பல்லவியுடன் ஷூட்டிங்குக்கு போவதும் அவர்தானாம். இப்படி அடிக்கடி ஷூட்டிங் செட்களில் செய்யும் குறும்புத்தனத்தை பார்த்துதான் அவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ‘சித்திரை செவ்வானம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனையடுத்து பூஜாவுக்கு திரை வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இருப்பினும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சமூக ஊடங்களில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் பூஜாவிற்கும் அவரது நீண்டகால காதலரான வினீத்திற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் சாய் பல்லவி, தனது தங்கையின் விரல்களில் நெயில் பாலிஷ் போடுவது, அவரை ரசித்து ரசித்து வீடியோ எடுத்தது போன்ற காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகின. மேலும் நிச்சயதார்த்த விழாவில் குடும்பமே சேர்ந்து ‘மாமதுர’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோக்கள் நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.


சிறுவயது மற்றும் தற்போது சாய் பல்லவி மற்றும் பூஜா கண்ணன்

அக்கா எனக்கு இன்னொரு அம்மா மாதிரி - பூஜா கண்ணன்

‘சித்திரை செவ்வானம்’ திரைப்படம் வெளியான பிறகு அளித்த ஒரு நேர்க்காணலில் சாய் பல்லவியுடனான தனது பிணைப்பு குறித்து பகிர்ந்திருந்தார் பூஜா. அதில் “அக்கா எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. ஒரு அம்மா எப்படி தனது பிள்ளையை கட்டிப்பிடித்து வாழ்த்துவாரோ அதுபோல வாழ்த்தினார். குறிப்பாக என்னைக் குறித்து மிகவும் பெருமைப்பட்டார். ஷூட்டிங்கிற்கு ஒருநாள் கூட அக்கா வரவில்லை. நான் உதவி கேட்டதால் டப்பிங்கிற்கு மட்டும் ஒருநாள் வந்து உதவி செய்தாள். அப்போதுகூட என்னுடைய பகுதிகளை மட்டும்தான் பார்த்திருந்தாள். தியேட்டருக்கு வந்து முழுப்படத்தையும் பார்த்துவிட்டு மிகவும் எமோஷனல் ஆகிவிட்டாள்” என்று கூறியிருந்தார். மேலும் நடிப்பதிலும் சில விஷயங்களை கற்றுக்கொடுத்ததாக கூறினார்.

பூஜா குறித்து சாய் பல்லவி பேசும்போதெல்லாம், இருவருக்குமிடையே நல்ல நட்பு இருப்பதாகவும், ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க மாட்டார்கள் எனவும் கூறியிருக்கிறார். மேலும் தன்னுடைய தங்கைக்காக விளம்பர படங்களில் நடிக்கக்கூடாது என முடிவெடுத்தது பற்றியும் ஒரு நேர்க்காணலில் பகிர்ந்திருந்தர் சாய் பல்லவி.

தனது அக்காவுக்கு நன்றி தெரிவித்து பூஜா கண்ணன் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “அக்கா இல்லாமல் என்னால் எல்லாவற்றையும் தாக்குப் பிடித்திருக்க முடியாது” என்று கூறியிருந்தார்.


பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் சாய் பல்லவி

நெட்டிசன்களின் கருத்து

இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்தது. அதுகுறித்த வீடியோ க்ளிப்ஸ்களை ஒவ்வொன்றாக ரீல்ஸாக போட்டுவருகிறார் பூஜா. அந்த வீடியோக்களில் இரு வீட்டாரும் நண்பர்களும் கோலாகலமாக நடனமாடுவது, சாய் பல்லவி பூஜாவை தயார் செய்வது, விருந்து, போட்டோஷூட் என அமர்க்களப்படுத்தியிருக்கின்றனர். பூஜாவிற்கு வாழ்த்துகள் ஒருபக்கம் குவிந்தாலும், சாய் பல்லவி குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன.

தங்கைக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதே! எப்போது அக்காவிற்கு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் சாய் பல்லவி தமிழ் பெண்ணாக இருந்தபோதிலும் மலையாளம் படத்தால்தான் ஹிட்டானார். ஆனால் வாய்ப்புகள் தேடிவந்து அவரை ஸ்டாராக்கியது என்னவோ தெலுங்கு திரையுலகில் இருந்துதான். அதனாலேயே அவர் தெலுங்கு மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்வார் என அவருடைய அப்பா அவரை கிண்டல் செய்வதாக ஏற்கனவே நேர்க்காணல் ஒன்றில் கூறியிருந்தார் சாய் பல்லவி. மேலும் வீட்டில் இருக்கும்போது அப்பாவிடம் அடிக்கடி தெலுங்கு கலந்து பேசுவாராம். அதனாலேயே அவரது அப்பா தெலுங்கு பையனை பார்க்கலாமா? என கிண்டல் செய்வார் எனவும், இவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறியிருந்தார். அதனாலேயே ஒருவேளை இவருக்கு தெலுங்கு பாய் ஃப்ரண்ட் இருப்பாரோ என பழைய வீடியோவை பகிர்ந்து கிண்டலடித்து வருகின்றனர்.

தனது திருமண எதிர்பார்ப்பு குறித்து சாய் பல்லவி கூறுகையில், “கருப்பான பையனாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் எமோஷனலான நன்றாக அழ தெரிந்த ஆணாக இருக்கவேண்டும். எனக்கு சமைக்கத் தெரியாது. எனவே சமைக்க தெரிந்த மாப்பிள்ளையாக இருந்தால் ஓகேதான்” என தனது எதிர்பார்ப்பை கூறியிருந்தார்.


தென்னிந்திய நடிகை சாய் பல்லவி

இப்போதைக்கு திருமணத்திற்கு நோ!

என்னதான் நெட்டிசன்கள் சாய் பல்லவிக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தை தொடங்கியிருந்தாலும் தனது திருமணம் குறித்து சாய் பல்லவி இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. அடுத்தடுத்து படங்கள் இருப்பதால் பிஸியாக ஓடிக்கொண்டிருப்பதாகவும், மேலும் குடும்பத்துடன் இருக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். தனது குடும்பத்துடன் இருக்க விரும்பும் ஆணாக இருந்தால் ஓகே என்றும் கூறியதாக தகவல்கள் பரவிவருகின்றன. இதற்கிடையே, சிவகார்த்திகேயேனுடன் எஸ்.கே21 படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் சாய் பல்லவி. இந்த படத்தின் பூஜையின்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இவர் மாலை போட்டிருந்த புகைப்படம் மிகவும் வைரலானதுடன், அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில்தான் கவனம் செலுத்தி வருவதாகவும், திருமணம் குறித்த வதந்திகள் முற்றிலும் பொய்யெனவும் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் சாய் பல்லவி. இந்நிலையில் எப்போது சாய் பல்லவி தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Updated On 12 Feb 2024 6:16 PM GMT
ராணி

ராணி

Next Story