இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(08-12-1974 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)

"அவள் ஒரு தொடர்கதை" படத்தில் "மாடர்ன் கேர்ல்" ஆக வரும் ஜெயலட்சுமி, "யார் அவர்?" என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு சிறப்பாக நடிக்கிறார்.

ஜெயலட்சுமி, தமிழ்ப் பட உலகுக்குத்தான் புது முகம். சினிமா உலகுக்கு பழைய முகம். ஏற்கனவே, ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்து இருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர்தான் ஜெயலட்சுமியின் சொந்த ஊர். ஆனால், வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்!

ஜெயலட்சுமியின் உண்மையான பெயர் நிரஜா. சினிமாவுக்காக, "ஜெயலட்சுமி"யாக மாறி இருக்கிறார்.

ஜெயலட்சுமியை "ராணி" நிருபர் பேட்டி கண்டார்.

"அழகு இருக்கும் வரைதான் ஒரு நடிகைக்கு மதிப்பு. எனவே, காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்" என்று ஜெயலட்சுமி சொன்னார்.

ஜெயலட்சுமி அறிமுகம்


அவள் ஒரு தொடர் கதையில் சந்திரவாக படாபட் என்ற அடைமொழியுடன் அறிமுகமான ஜெயலட்சுமி

நிருபர்: தெலுங்குப் படங்களில் நடித்துக்கொண்டு இருந்த நீங்கள், தமிழ் சினிமா உலகுக்கு எப்படி வந்தீர்கள்?

ஜெயலட்சுமி: சினிமா தொழிலுக்கு வந்தவர்கள் யாருமே, ஒரு மொழி படத்தோடு திருப்தி அடையமாட்டார்கள்! எனக்கும் வேறு மொழிப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். இப்பொழுது 7 தமிழ்ப் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

நிருபர்: "அவள் ஒரு தொடர்கதை" ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

ஜெயலட்சுமி: ஆர்ட் டைரக்டர் ஆக இருக்கும் மோகனா, எங்களுக்கு உறவுக்காரர். அவர் என்னை இரண்டு ஆண்டுகளுக்கு முன், டைரக்டர் பாலச்சந்தரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பாலச்சந்தர் "அரங்கேற்றம்" படத்திலேயே என்னை அரங்கேற வைப்பதாகச் சொன்னார். ஆனால், அந்த நேரத்தில் நான் வெளியூர் போய்விட்டதால், அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. பாலச்சந்தர் என்னை கைவிட்டு விடவில்லை. "அவள் ஒரு தொடர்கதை"யில் வாய்ப்பு தந்தார்... சரி, என் நடிப்பு எப்படி இருந்தது? உங்களுக்கு பிடித்து இருக்கிறதா?

காற்றுள்ள போதே...!


'முள்ளும் மலரும்' மங்காவாக ஜெயலட்சுமி

நிருபர்: இயற்கையாக நடித்து இருக்கிறீர்கள். தொடர்ந்து இதுபோன்ற பாத்திரங்களில்தான் நடிப்பீர்களா? அல்லது குடும்பப்பாங்கான வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்களா?

ஜெயலட்சுமி: நான்தான் முதலிலேயே சொன்னேனே! காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டியதுதான் நடிகையின் புத்திசாலித்தனம். பத்தினி வேடம் என்றாலும் சரி, வேசி வேடம் என்றாலும் சரி, எந்த வேடத்திலும் என்னால் சிறப்பாக நடிக்க முடியும்.

வேறுபாடு என்ன?

நிருபர்: தெலுங்குப்பட உலகுக்கும், தமிழ்ப்பட உலகுக்கும் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?

ஜெயலட்சுமி: நடிகைக்கு எல்லாப் பட உலகமும் ஒன்றுதான். அங்கு என்ன நடக்கிறதோ, அதுதான் இங்கும் நடக்கிறது. மொழிதான் வேறுபாடே தவிர, வேலையில் வேறுபாடு இல்லை.

நிருபர்: நடிகையாக வேண்டும் என்றால் எப்படியெல்லாமோ வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது என்கிறார்களே... அதுபற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

ஜெயலட்சுமி: ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், ஒவ்வோர் அனுபவம் இருக்கும். அதை வெளியில் சொல்லுவது தவறு. ஆனால், அந்த வளைவை நான் பெருந்தவறு என்று சொல்ல மாட்டேன். வாசல் சிறிதாக இருந்தால் குனிந்துதானே செல்ல வேண்டும்?

வயிற்றுப் பிழைப்பு

நிருபர்: நீங்கள் நடிக்க வந்தது கலையை வளர்க்கவா? பணத்தைச் சேர்க்கவா?

ஜெயலட்சுமி: வயிற்றை நிரப்ப! ஒரு சாண் வயிற்றை நிரப்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை தேர்ந்து எடுக்கிறார்கள். நான் சினிமா தொழிலை தேர்ந்து எடுத்து இருக்கிறேன்.


'முள்ளும் மலரும்' படத்தில் நடிகை ஷோபாவுடன் நடித்த ஜெயலட்சுமி

நிருபர்: எத்தனையோ வேலைகள் இருக்கும்போது, நடிப்புத் தொழிலை நீங்கள் தேர்ந்து எடுத்தது ஏன்?

ஜெயலட்சுமி: என்னிடம் இருந்த மூலதனத்துக்கு சினிமா தொழில்தான் சரிப்பட்டு வந்தது. நான் படித்துக்கொண்டு இருந்தபோது, ஜெமினி ஸ்டூடியோவுக்கு படப்பிடிப்பு பார்க்கப் போயிருந்தேன். படப்பிடிப்புக்கு வந்த நடிகைகளைப் பார்த்த பிறகு, நாமும் ஏன் நடிக்கக் கூடாது என்று நினைத்தேன். அதற்கு யார் யாரை எப்படிப் பிடிக்க வேண்டுமோ, அப்படிப் பிடித்தேன். நடிகையாகிவிட்டேன்.

நிருபர்: இப்பொழுது எத்தனை மொழிப் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

ஜெயலட்சுமி: தமிழ், தெலுங்கு படங்களோடு ஓர் இந்திப் படத்திலும், இரண்டு மலையாளப் படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறேன். "பூத்து அய்யன மக அய்யு" என்ற கன்னடப் படத்தை, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் எடுக்கிறார்கள். மூன்று மொழிப் படத்திலும் நான் நடிக்கிறேன்.

நிருபர்: உங்கள் பொழுதுபோக்கு என்ன?

ஜெயட்சுமி: இந்தி, ஆங்கிலப் படங்கள் பார்ப்பேன். மற்ற நேரங்களில் அம்மாவுக்கு துணையாக இருப்பேன்.

நிருபர்: உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள் எதுவும் ஏற்பட்டது உண்டா?

ஜெயலட்சுமி: நான் சினிமா உலகில் நுழைந்த பிறகு ஏற்பட்ட அனுபவம் - ஏற்பட்டுவரும் அனுபவங்கள் ஏராளம். அவை எல்லாம் என் வாழ்க்கையோடு மாண்டு மக்கிப்போகக் கூடியவை!

Updated On 15 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story