இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சிவகார்த்திகேயன் இந்த பெயரைக் கேட்டாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கடின உழைப்பாளி, அருமையான கலைஞன், சிறந்த மனிதன், இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கை நாயகன் என்ற வார்த்தைகள்தான். இருந்தும் சமீபகாலமாக சிறந்த மனிதன் என்ற சொல்லுக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பல விமர்சனங்களும் அவர் மீது தொடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த வீடியோக்களும், பேட்டிகளும் சமூகவலைத்தளங்களில் பல பரவி வந்தாலும் மௌனமே சிவகார்த்திகேயனின் பதிலாக இன்று வரை இருந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மற்றொரு படமென தனது அடுத்தக்கட்ட பயணத்தை மேற்கொண்டு வரும் சிவகார்த்திகேயன், தற்போது ‘குட்நைட்’ பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. எப்போதுமே தனக்கென்று ஒரு பாணி, செல்ஃப் பிராண்டிங், சமூகவலைத்தளங்களை தன்னுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என புது புது விஷயங்களை முயற்சி செய்து வெற்றி நடைபோட்டு வரும் சிவகார்த்திகேயன் சமீபகாலமாக இயக்குனர் தேர்வில் ஒரு புது ஃபார்முலாவை பின்பற்றி வருகிறார். அது குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

சிவகார்த்திகேயனின் தொடக்க யுக்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற காலம் முதலே தன்னுடைய வாழ்க்கையில் புது புது யுக்திகளை கையாளும் பழக்கத்தை கொண்டிருந்தார். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக விஜய் டிவியில் பயணத்தை துவங்கிய இவர், 'ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியின் மூலம் நடனத்தையும், 'அது இது எது' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளருக்கான திறமையையும் வளர்த்துக் கொண்டார். எந்த ஒரு இடத்தையும் தனக்கு சாதகமான களமாக மாற்றும் திறமை சிவகார்த்திகேயனுக்கு துவக்கத்திலிருந்தே இருந்தது. அப்படித்தான் விமல் நடித்த 'வாகை சூடவா' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயனின் நகைச்சுவை திறமையை கண்டு அசந்துப்போன இயக்குநர் பாண்டிராஜ் தனது அடுத்த படத்தின் கதாநாயகனாக அவரை தேர்வு செய்தார். அந்த திரைப்படம்தான் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’. ஓவியா, சதீஷ், பக்கோடா பாண்டி ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படத்தை, இயக்குநர் பாண்டிராஜ் தனது சொந்த தயாரிப்பில் இயக்கியிருந்தார். 'மெரினா' வெளியாகும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என பாண்டிராஜ் அறிவுறுத்தியிருந்த நிலையில், சிவகார்த்திகேயனின் நகைச்சுவை திறமையால் ஈர்க்கப்பட்ட தனுஷ் தன்னுடைய '3' படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார்.


தொடக்கக்காலத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்பட கதாபாத்திரங்கள்

இதனால் இயக்குநர் பாண்டிராஜை சந்தித்து தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த தனுஷ், அவரின் ஒப்புதலுடன் '3' படத்தில் தனக்கு நண்பராக நடிக்க வைத்தார். இருப்பினும் தான் இயக்கும் 'மெரினா' படம்தான் சிவகார்த்திகேயனின் முதல் படமாக வெளிவரவேண்டும் என பாண்டிராஜ் கேட்டுக் கொண்டதை அடுத்து முதலில் 'மெரினா' திரைப்படமும், தொடர்ந்து '3' படமும் வெளிவந்தன. இந்த சமயத்தில்தான் இயக்குநர் எழில் ‘மனம்கொத்திப் பறவை’ படத்தில் அட்டகாசமான கதாபாத்திரத்தை சிவகார்த்திகேயனுக்கு வழங்கினார். இந்த படம் சுமாராக ஓடினாலும் நகைச்சுவை மற்றும் பாடல்களின் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு நெருக்கமானார் சிவகார்த்திகேயன். அடுத்த ஆண்டில் மீண்டும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் விமல் மற்றும் சூரியுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கிய சிவகார்த்திகேயன், இறுதிக் காட்சியில் அப்பாவின் பாசத்தையும் தியாகத்தையும் புரிந்து உணர்ந்து நம்மைக் கலங்கடிக்கும் கதாபாத்திரத்தை சிறப்புறச் செய்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் சம்பளமும் எகிறியது. சிந்தனையும் திசை திரும்பியது.

கிராமத்து இளைஞராக கலக்கிய சிவா

துவக்கத்தில் சில தடுமாற்றங்களுடன் கிடைத்த வாய்ப்பை இறுகப்பற்றி பயணித்துவந்த சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப்படமாக அமைந்ததுதான் 'எதிர்நீச்சல்'. ஏற்கனவே '3' படத்தில் சிறிய கதாபாத்திரத்தை வழங்கி அடையாளம் கொடுத்திருந்த தனுஷ், இந்த படத்தில் முழு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். தன்னால் வெறும் காமெடி மட்டுமின்றி, எல்லா உணர்வுகளையும் வெளிக்காட்ட முடியும் என்பதை சிவாகார்த்திகேயன் இப்படத்தில் நிரூபித்திருந்தார். இருப்பினும் கொஞ்சம் சிம்பதி ஹீரோவாக அவருக்கு இந்த படம் அடையாளம் கொடுத்திருந்த நேரத்தில்தான், நான் சிம்பதி ஹீரோ இல்லை... சில்லறைகளை சிதறவிடும் மாஸ் ஹீரோ என்பதை நிரூபிக்கும் விதமாக 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் போஸ் பாண்டியாக நடித்தார். குறிப்பாக, சி சென்டர் வரை கவனம் பெற்றால்தான் அடுத்தக்கட்டத்திற்கு பயணிக்க முடியும் என்பதை சரியாக புரிந்துக் கொண்ட சிவகார்த்திகேயன், அதற்கு ஏற்றார் போன்ற வசனங்களையும், காட்சிகளையும் இப்படத்தில் வைத்து அசத்தினார். இதனால் படத்தை பார்த்த ஒவ்வொரு இளைஞனும் சிவகார்த்திகேயனுக்குள் தங்களைப் பார்த்துக் கொண்டதோடு, அவர்களின் பெற்றோரும் தங்கள் மகனைப் போலவே குறும்புகள் செய்கிற சிவகார்த்திகேயனை தங்கள் பிள்ளையாகவே பார்க்க தொடங்கினர்.


மாடர்ன் டு கிராமத்து இளைஞனாக நடிகர் சிவகார்த்திகேயன் தோன்றிய வேடங்கள்

பிறகு ’மான் கராத்தே’ படத்தில் சிட்டி பாயாக மாறி பீட்டர் எனும் கதாபாத்திரத்தில் குத்துசண்டை வீரராக நடித்து அசத்தியவர், அடுத்த படத்திலேயே சீரியஸ் பாயாக மதிமாறன் எனும் போலீஸ் அதிகாரியாக நடித்து ஆக்‌ஷனிலும் அதகளம் செய்தார். இதில் குறிப்பாக,’மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்த நிகழ்வு அந்த சமயம் பரபரப்பாக பேசப்பட்டது. தொடர்ந்து பட்டி தொட்டியெங்கும் தன்னை கொண்டு செல்வதற்காக மீண்டும் இயக்குநர் பொன்ராமுடன் இணைந்து கிராமத்து கதைக்களத்தை பின்புலமாகக் கொண்ட ’ரஜினி முருகன்’ படத்தில் நடித்தார். இப்படம் முந்தைய அவரது படங்களின் வசூல் சாதனைகளையெல்லாம் முறியடித்ததோடு, படத்தில் இடம்பெற்ற கலக்கலான காமெடியும், பாடலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்துப்போய் அவர்களின் குடும்பத்தில் ஒருவராக மாறிப்போனார் சிவகார்த்திகேயன். இதனாலேயே, சிறிய இடைவேளைக்கு பிறகு அதே பாணியில் 2017 ஆம் ஆண்டு ‘சீமராஜா’ படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு அப்படம் கை கொடுக்கவில்லை என்றாலும், அவரது குருநாதர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அண்ணனாக நடித்து உருகியவர், பல இடங்களில் தன் நடிப்பால் உள்ளங்களை கரைய வைத்தார்.

புதிய முயற்சியும் சில சறுக்கல்களும்...

இப்படி தனது ஆதிக்கத்தை நகர்புற எலீட் தொடங்கி கிராமத்து எல்லை வரை கொண்டுசென்ற சிவகார்த்திகேயன் அவ்வப்போது சில புது முயற்சிகளையும் மேற்கொண்டு முத்திரைப் பதித்தார். காரணம், தொடர்ந்து ஒரே பாணியில் படம் நடித்தால் குறுகிய வட்டத்துக்குள் சுருங்கி அடுத்த கட்டத்திற்குள் பயணிக்க முடியாது என்ற தெளிவு அவரிடம் இருந்ததால்தான். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த 'ரெமோ' திரைப்படம் சிவகார்த்திகேயனின் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்திக் காட்டியது. இதில் பெண் வேடத்தில் நடித்து, நகைச்சுவையில் அசத்தியிருந்தார் சிவகார்த்திகேயன். படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு என்பதாலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. வழக்கம் போல் இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்க பாடல் பட்டிதொட்டி எல்லாம் சென்றடைந்து வசூல் சக்கரவர்த்தியாக மாறினார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜாவின் 'வேலைக்காரன்' படத்தில் முதன் முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடித்தவருக்கு, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தும், படத்திற்கு வசூல் பெரிய அளவில் இல்லை.


நடிகராக சிவகார்த்திகேயனுக்கு வெற்றி கொடுத்த திரைப்படங்களின் காட்சிகள்

இதனால் மீண்டும் தனது பழைய பாணியிலேயே ராஜேஷ் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தவர், முதல் பாலிலேயே டக் அவுட் ஆனார். இருந்தும் முயற்சியை கை விடாத சிவகார்த்திகேயன், தான் எடுத்த பேட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் கொடுத்து, 'கனா' என்னும் படத்தை தயாரித்து, அதில் நெல்சன் திலீப்குமார் எனும் கதாபாத்திரத்தில் தோன்றி கவனம் பெற்றார். பிறகு மீண்டும் புதிய முயற்சியாக இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கிய 'ஹீரோ' படத்தில் மாஸ்க் போட்டு தமிழ்நாட்டின் 'த டார்க் நைட்' ஹீரோவாக மாறியவருக்கு தோல்வியே இருள் மேகமாக சூழ்ந்தது. 'டார்க் நைட்' எடுபடவில்லை என்றால் என்ன... ‘டார்க் காமெடி’ நிச்சயம் நமக்கு செட் ஆகும் என்பதை உணர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கிய ‘டாக்டர்’ படத்தில், வேறொரு பாடி லாங்வேஜுடன் புதிய பரிமாணத்தில் தோன்றி மிகப்பெரிய வெற்றிக் கண்டார். தொடர்ந்து, 'டான்' படத்தில் கல்லூரி மாணவராக, 'பிரின்ஸ்' படத்தில் பள்ளி ஆசிரியராக, 'மாவீரன்' படத்தில் கார்டூனிஸ்ட்டாக என புது புது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் சிவகார்த்திகேயன் தற்போது பொங்கலன்று வெளிவரவுள்ள ‘அயலான்’ படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் புது ஃபார்முலா

இவ்வாறு தனது துவக்க காலம் தொடங்கியே புது புது யுக்திகளை முயற்சி செய்து அடுத்தடுத்த கட்டத்திற்கு பயணித்து வரும் சிவகார்த்திகேயன், தற்போது ரஜினி, கமல், அஜித், விஜய் வரிசையில் இணைந்துள்ளார். பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தையும் வித்யாசமான முறையில் அணுகும் பழக்கம் கொண்ட சிவகார்த்திகேயன், கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு, தன் பட இயக்குநர் தேர்வில் புதிய ஃபார்முலாவை பின்பற்றி வருகிறார். எப்போதுமே அறிமுக இயக்குநர்கள் தங்களுடைய முதல் படம் நிச்சயம் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். இதனால் முன்பொரு காலத்தில் விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் அத்தகைய இயக்குநர்களின் திறமையை தங்கள் படங்களில் பயன்படுத்திய நிகழ்வுகளும் அடிக்கடி நடந்ததுண்டு. இருந்தும் முதல் படத்தில் வெற்றி தந்த அறிமுக இயக்குநர்களால் இரண்டாவது படத்திலும் அதே வெற்றியை கொடுக்க முடியாது என்ற கருத்து பல காலமாக இங்கு நிலவி வருகிறது. இந்த சிந்தனையை தகர்க்கும் விதமாகத்தான் சமீபகாலமாக சிவகார்த்திகேயனின் பட தேர்வு முறை இருந்து வருகிறது.


தற்போது சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்து, இயக்கி வரும் கமல்ஹாசன் மற்றும் பிற இயக்குர்கள்

கடந்த 2018 ஆம் ஆண்டு பி.எஸ் மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' மிகப்பெரிய வெற்றி திரைப்படம். அதனை தொடர்ந்து மித்ரன் இயக்கிய இரண்டாவதுப் படமான 'ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தார். அதே போல் கடந்த 2018 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கிய முதல் படமான 'கோலமாவு கோகிலா' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, அதன் தொடர்ச்சியாக அவர் இயக்கிய இரண்டாவது படமான 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயன்தான் கதாநாயகன். தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் கே.வி.அனுதீப்பின் 'ஜதி ரத்னாலு' வெற்றிக்கு பிறகு 'பிரின்ஸ்'. தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வினின் 'மண்டேலா' வெற்றிக்கு பிறகு 'மாவீரன்' என தொடர்ந்து வெற்றி இயக்குநர்களின் இரண்டாவது படங்களையே டார்கெட் செய்து நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் முத்திரையும் பதித்து வருகிறார். ஏன் வருகிற பொங்கலுக்கு வெளிவரவுள்ள 'அயலான்' திரைப்படமும் இயக்குநர் ஆர்.ரவிக்குமாரின் இரண்டாவது படம்தான். அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் SK 21 திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள அப்படம்தான் இரண்டாவது படம். அந்த வரிசையில் தற்போது மற்றுமொரு புது அறிவிப்பு வெளிவந்து சிவகார்த்திகேயனின் புது ஃபார்முலாவை உறுதி செய்துள்ளது. அதுதான் 'குட்நைட்' பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுடன் சிவகார்த்திகேயன் இணைந்து பணியாற்ற உள்ளார் என கூறப்படும் தகவல். மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக் நடிப்பில் இந்த ஆண்டு மே மாதம் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘குட்நைட்’ படத்திற்கு ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தாக சொல்லப்படுகிறது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இதற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த முறையும் தனது புதிய ஃபார்முலாவில் முத்திரைப் பதிப்பார் சிவகார்த்திகேயன் என நம்பலாம்.

Updated On 6 Dec 2023 7:37 AM GMT
ராணி

ராணி

Next Story