இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

லீலா சாம்சன், இந்தியாவின் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர், நடன இயக்குனர், ஆசிரியை, எழுத்தாளர், நடிகை என பல துறைகளில், பல சாதனைகளை நிகழ்த்திய பெருமைக்குரிய மங்கை. பாரம்பரிய கலை மற்றும் நவீனத்துவத்தின் சங்கமமாக திகழும் இவரது வாழ்க்கைப் பயணம், பரதநாட்டியத்தின் அழகையும் ஆழத்தையும் உலகெங்கும் எடுத்துச் சென்ற பெருமைக்குரியது. கலை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கும் லீலா சாம்சன், இன்று, மே 6ஆம் தேதி தனது 74வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். இந்த சமயத்தில் இவரது வாழ்க்கை பயணம், இவர் அடைந்த வெற்றிகள், பெற்ற விருதுகள், சந்தித்த சவால்கள் மற்றும் இவர் நிகழ்த்திய சாதனைகள் குறித்து விரிவாக காணலாம்.

ஆரம்பகால வாழ்க்கை


இளம் வயதிலேயே பல மேடைகளில் தனது நடனத் திறமையை வெளிப்படுத்திய லீலா சாம்சன்

1951 மே 6ஆம் தேதி, தமிழ்நாட்டின் குன்னூரில் பிறந்த லீலா சாம்சன், ஒரு கலாச்சாரப் பாரம்பரியத்துடன் கூடிய குடும்பத்தில் வளர்ந்தார். இவரது தந்தை, வைஸ் அட்மிரல் பெஞ்சமின் அப்ரஹாம் சாம்சன், இந்தியக் கடற்படையின் முக்கிய அதிகாரியாக இருந்தவர். இவரது தாய் லைலா சாம்சன், குஜராத்தி ரோமன் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது தீராத ஆர்வம் கொண்ட லீலா சாம்சன், புகழ்பெற்ற குரு அடையார் கே. லட்சுமணனிடம் பரதநாட்டியத்தின் அடிப்படைக் கூறுகளை கற்று தேர்ந்தார். குருவின் கடுமையான பயிற்சியும், லீலா சாம்சனின் இயல்பான திறமையும் இணைந்து அவரை மிகச்சிறந்த நடனக் கலைஞராக மெருகேற்றியது. லீலா சாம்சனின் நேர்த்தியான அங்க அசைவுகளும், ஒவ்வொரு பாவத்தையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் முகபாவனைகளும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் திறன் படைத்தவை. இதன் காரணமாகவே, இளம் வயதிலேயே பல மேடைகளில் தனது நடனத் திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார். பிறகு சென்னை கலாஷேத்ராவில் புகழ்பெற்றவரும், பரதநாட்டியக் கலையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவருமான ருக்மிணி தேவி அருண்டேலிடம் பரதநாட்டியம் மற்றும் இந்தியக் கலைகளின் பல்வேறு அம்சங்களையும் ஆழமாகக் கற்றறிந்தார். இது அவரது கலை பயணத்திற்கு மேலும் வலு சேர்த்தது. அதேநேரம் தனது பள்ளிப்படிப்பை முடித்த லீலா சாம்சன், சென்னை சோபியா மகளிர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இருப்பினும், அவரது முழு கவனமும் பரதநாட்டியக் கலையின் மீதே இருந்தது.

செய்த சாதனைகளும், பெற்ற விருதுகளும்

புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரான லீலா சாம்சன் தனது கலைப் பயணத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் எண்ணற்ற நடன நிகழ்ச்சிகளை வழங்கி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இவரது நடனத்தில் பாரம்பரியத்தின் ஆழமும், புதுமையின் வெளிப்பாடும் ஒருங்கே அமைந்திருப்பது விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இவர் நிறுவிய 'ஸ்பந்தா' நடனக் குழுமம் உலக அரங்கில் இந்திய நடனத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. இந்த குழுவின் மூலம் லீலா சாம்சன் பல புதிய மற்றும் சிந்தனையைத் தூண்டும் நடனப் படைப்புகளை உருவாக்கி மேடையேற்றினார். இதன்மூலம் பரதநாட்டியத்தின் எல்லைகளை உலகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளார். இதன் ஒரு அங்கமாகவே சென்னை அடையாரில் அமைந்துள்ள இவரது நடனப் பள்ளியான 'கலாஷேத்ரா அறக்கட்டளை', பல தலைசிறந்த நடனக் கலைஞர்களை உருவாக்கி இந்திய கலை உலகிற்கு பெரும் பங்காற்றி வருகிறது. இதில் குறிப்பாக லீலா சாம்சனின் சீடர்களில் ஜாய்ஸ் பால், ஜஸ்டின் மெக்கார்த்தி, நவ்தேஜ் சிங் ஜோஹர் மற்றும் அனுஷா சுப்ரமணியம் ஆகியோர் இவரது வழிகாட்டுதலின் கீழ் சிறந்த கலைஞர்களாக உருவாகி பல்வேறு நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.


தன் குருவான ருக்மிணி தேவி அருண்டேலின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ள லீலா சாம்சன்

இது தவிர ஒரு சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்து வரும் லீலா சாம்சன், தனது குருவான ருக்மிணி தேவி அருண்டேலின் வாழ்க்கை வரலாற்றை "Rukmini Devi: A Life" என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த நூல், பரதநாட்டியத்தின் வளர்ச்சி மற்றும் சமூகத்தில் அதன் பங்களிப்பு ஆகியவற்றை ஆழமாக விவரிக்கிறது. இந்த புத்தகம் பரதநாட்டிய ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது. இப்படி கலை, எழுத்து என பல துறைகளிலும் தனது பங்களிப்பை கொடுத்துவரும் லீலா சாம்சனின் கலை சேவையைப் பாராட்டி இந்திய அரசு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் பத்மஸ்ரீ விருது ஆகியவை இவர் பெற்ற மிக முக்கியமான விருதுகளாகும். மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களும், கலாச்சார அமைப்புகளும் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும், பிற விருதுகளையும் வழங்கி சிறப்பித்துள்ளன.

​திரைப்பட வாய்ப்பும், சந்தித்த சவால்களும்

கலைத்துறையில் தனது ஆளுமையை நிலைநாட்டிய லீலா சாம்சன், திரைப்படங்களிலும் தனது முத்திரையை பதித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான 'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தில் லீலா சாம்சன் ஏற்று நடித்த கதாபாத்திரம் அவருக்கு பரவலான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அந்த படத்தில் அவரது இயல்பான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்து தனது நடிப்புத் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தினார். குறிப்பாக, 2017ஆம் ஆண்டு வெளியான ‘ஓகே ஜானு’, 2018 ஆம் ஆண்டு வெளியான ‘அமெரிக்க மாப்பிள்ளை’, 2019ஆம் ஆண்டு வெளியான ‘சில்லு கருப்பட்டி’ மற்றும் 2020ஆம் ஆண்டு வெளியான ‘புத்தம் புது காலை’ ஆகிய வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் இவரது கதாபாத்திரங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இப்படி நடனம் மற்றும் திரைப்படத் துறை மட்டும் அல்லாது ஒரு நிர்வாகியாகவும் தனது திறமையை நிரூபித்துள்ள லீலா சாம்சன், 2005 ஆம் ஆண்டு, புகழ்பெற்ற சென்னை கலாஷேத்ராவின் இயக்குநராக இருந்துள்ளார். அங்கு அவர் கல்வி மற்றும் கலைத் துறைகளில் பல புதுமையான மாற்றங்களை அறிமுகப்படுத்தினார்.


'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தில் துல்கருடன் லீலா சாம்சன்

இவரது இந்த நிர்வாகத் திறமையின் காரணமாக, 2010ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும், 2011ஆம் ஆண்டு திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றார். இருப்பினும், லீலா சாம்சனின் கலைப் பயணத்தில் சில சர்ச்சைகளும் அவ்வப்போது எழுந்தன. இவர் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயக்குநராக இருந்த காலகட்டத்தில் சில நிர்வாக ரீதியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும், லீலா சாம்சன் தனது கொள்கைகளில் உறுதியாக நின்று, கலை நிறுவனத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றினார். விமர்சனங்களை அவர் ஆரோக்கியமான முறையில் எதிர்கொண்டவிதம் பலராலும் அப்போது பாராட்டப்பட்டது. மேலும், திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவராக இருந்த காலகட்டத்தில் சில சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றசாட்டு இவர் மீது வைக்கப்பட்டது. குறிப்பாக, சில திரைப்படங்களுக்கு அனுமதி மறுத்தது அல்லது கடுமையான திருத்தங்களை பரிந்துரைத்தது போன்றவை, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானவர் என்ற விமர்சனத்தை இவருக்கு பெற்று தந்தது. இதன் உச்சமாக, 2015 ஆம் ஆண்டு,’MSG: The Messenger of God’ என்ற திரைப்படத்தின் தணிக்கை தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, இவர் திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இது அந்த சமயம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

கலையே என் காதலன்!


கலையின் மீதான தீராத காதலால் திருமணமே செய்து கொள்ளாத லீலா சாம்சன்

லீலா சாம்சனின் குடும்பத்தினர் கலை மற்றும் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இந்தச் சூழலே சிறுவயது முதலே அவருக்குள் கலை மீது ஒரு ஆழ்ந்த காதலை விதைத்தது. தனது தனிப்பட்ட மற்றும் கலை வாழ்க்கையைச் சமமாகப் கையாண்டுவரும் லீலா சாம்சன், தனது குடும்பத்தினரின் நிலையான ஆதரவே தனது மிகப்பெரிய பலம் என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். கலையின் மீதான தீராத காதலால் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று ஒரு நேர்காணலில் அவர் வெளிப்படையாக கூறியது அவரது கலை மீதான அர்ப்பணிப்புக்கு சான்றாகும். தனது வாழ்க்கையில் தன்னை ஈர்க்கும் ஒருவரை அவர் சந்திக்கவில்லை என்பதும் அவரது தனிப்பட்ட கருத்தாக அந்த நேர்காணலில் பதிவு செய்திருந்தார். இந்தியக் கலாச்சாரங்களை உலக அரங்கில் கொண்டு சேர்ப்பதில் லீலா சாம்சனின் பங்கு அளப்பரியது. இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர் மட்டுமல்ல; ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர், திறமையான நிர்வாகி மற்றும் பண்பட்ட மனிதர் ஆவார். குறிப்பாக சென்னை கலாஷேத்ராவின் இயக்குநராக அவர் ஆற்றிய பணிகள் கலாஷேத்ராவுக்கு ஒரு புதிய பொற்காலத்தை உருவாக்கியது என்றே சொல்லலாம். இவ்வாறு பல சர்ச்சைகளையும், சவால்களையும் கடந்து சாதனை பெண்ணாகவும், பல பெண்களுக்கு முன்மாதிரியாகவும் திகழும் லீலா சாம்சன், மே மாதம் 6-ஆம் தேதியான இன்று தனது 74-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த இனிய பிறந்தநாளில் லீலா சாம்சன், மேலும் பல கலைச் சாதனைகளை நிகழ்த்தவும், இந்தியக் கலை உலகிற்கு என்றென்றும் ஒளிவிளக்காக திகழவும் ராணி தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது!

Updated On 6 May 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story