
தமிழ் திரையுலகில் நகைச்சுவையின் அடையாளமாகத் திகழும் சந்தானம், நடிகர் சிம்புவுக்கு தனது திரையுலக பயணத்தில் எப்போதும் சிறப்பான இடத்தை அளித்து வருபவர். சிம்புவின் ‘மன்மதன்’ திரைப்படம் சந்தானத்திற்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன், இருவரும் இணைந்து பல நகைச்சுவை படங்களில் கலக்கியுள்ளனர். சந்தானம் கதாநாயகனாக உயர்ந்த பின்பும் கூட சிம்புவுடனான நட்பிற்காக அவரது படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தயங்கியதில்லை. தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் 49வது படத்தில் சந்தானம் மீண்டும் இணைய உள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட இவ்விருவருக்கும் இடையே உள்ள நட்புறவின் ஆழத்தையும், திரையுலகில் அவர்கள் இணைந்து பயணித்திருக்கும் சுவாரஸ்யமான தருணங்களையும் இந்தத் தொகுப்பில் விரிவாகக் காண்போம்.
‘மன்மதன்’ தந்த வெளிச்சம்!
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து, ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சந்தானம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், வெள்ளித்திரையில் நுழைந்ததும் ஒரு சுவாரஸ்யமான கதைதான். சந்தானத்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை நடிகர் சிம்புவையே சாரும். 2004ஆம் ஆண்டு சிம்புவின் நடிப்பில் வெளியான ‘மன்மதன்’ திரைப்படத்தில் ‘பாபி’ என்கிற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து சந்தானம் மிகுந்த கவனம் பெற்றிருந்தார். இதுவே பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நட்சத்திரமாக அவர் உருவெடுப்பதற்கு உறுதுணையாகவும் அமைந்தது. சொல்லப்போனால் இதற்கு முன்னரே ‘பேசாத கண்ணும் பேசுமே’, சிம்புவின் ‘காதல் அழிவதில்லை’ போன்ற படங்களில் சந்தானம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ‘மன்மதன்’ திரைப்படம்தான் மிகப்பெரிய அங்கீகாரத்தை அவருக்கு பெற்று தந்தது. குறிப்பாக சிம்பு ஒரு அறிமுக நடிகருக்கு தனது படத்தில் வாய்ப்பளித்தது மட்டுமல்லாமல், தொடர்ந்து சந்தானத்திற்கு மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குநர்களிடம் பரிந்துரை செய்து ‘அன்பே ஆருயிரே’ போன்ற பல படங்களில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்த நிகழ்வு அந்த சமயம் பெரியளவில் பேசப்பட்டது.
'மன்மதன்' மற்றும் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' திரைப்பட காட்சிகள்
ஆரம்ப காலகட்டத்தில் சந்தானம் பல படங்களில் சிறு சிறு நகைச்சுவை வேடங்களில் தோன்றினாலும், சிம்புவின் ஆதரவும், அவரது தனித்துவமான நகைச்சுவை பாணியும் வெகு விரைவிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக சிம்புவுடன் இணைந்து சந்தானம் நடித்த படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இருவரின் நகைச்சுவை கூட்டணியும் திரையரங்குகளில் சிரிப்பலைகளை உருவாக்கின. ’வானம்’, ‘சரவணா’, ‘வல்லவன்’, ‘காளை’ போன்ற படங்களில் இவர்களது கூட்டணி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படங்களில் சந்தானத்தின் நகைச்சுவை வசனங்களும், சிம்புவுடனான அவரது கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. ஒரு கட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிய சந்தானம், பின்னர் ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். பிறகு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பத்து வருடங்கள் கழித்து, 2013 ஆம் ஆண்டு சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ திரைப்படம் வெளியானது. இப்படம் சுமாரான வெற்றியை பெற்றாலும், தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்க விரும்பினார் சந்தானம்.
ஹீரோவானாலும் தொடர்ந்த நட்பு!
நடிகர் சந்தானம் 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தாலும், ‘தில்லுக்கு துட்டு’, ‘தில்லுக்கு துட்டு 2’, ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘டிக்கிலோனா’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ போன்ற சில படங்கள் வெற்றியை தந்தாலும், பல படங்கள் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், சந்தானம் பெரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்ததாக கூறப்படுகிறது. இருந்தும் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து வந்த சந்தானம். நடிகர் சிம்புவுடனான நட்பையும் தொடர்ந்து வந்தார்.அதன் அடையாளமாகதான் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற முடிவில் இருந்த சந்தானம், தனது நண்பனுக்காக 2015ஆம் ஆண்டு 'வாலு' படத்திலும், 2016ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்திலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். அதேபோல் சிம்புவும் சந்தானத்துக்காக ‘சக்கை போடு போடு ராஜா’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இசையமைத்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
'சக்க போடு போடு போடு ராஜா' பட காட்சி மற்றும் புதிய பட பூஜையில் சிம்புவுடன் சந்தானம்
இந்நிலையில்தான், 13 வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட 'மதகஜராஜா' திரைப்படம் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியானபோது, சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பற்றாக்குறை நிலவுவதால், சந்தானம் மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. ரசிகர்களின் இந்த விருப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக, நடிகர் சிம்பு அடுத்து நடிக்கவுள்ள அவரது 49வது படத்தில் சந்தானம் ஒரு முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள இப்படத்தின் பூஜை கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் சிம்புவும், கயாடு லோஹரும் ஜோடியாக முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கல்லூரி பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சிம்பு கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளார் என கூறப்படும் நிலையில், பூஜையின் போது சிம்புவும் சந்தானமும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைததளங்களில் வைரலாகி, இருவரது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சிம்பு சாருக்கு நோ சொல்ல மாட்டேன்!
சந்தானம், தமிழ் திரையுலகில் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர். தான் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையை உறுதியாக கடைப்பிடித்து வந்த சந்தானம், தற்போது நடிகர் சிம்புவுக்காக அந்த கொள்கையை தளர்த்தியுள்ளார். சிம்புவின் புதிய படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்குக் காரணம், சந்தானத்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சிம்புதான். 'மன்மதன்' திரைப்படத்தில் ஒரு சிறிய வாய்ப்பளித்து சந்தானத்தின் திரையுலக பயணத்திற்கு வித்திட்டவர் சிம்பு. இதனால் சிம்பு மீது சந்தானத்திற்கு எப்போதும் ஒரு பெரிய மரியாதையும் நன்றியுணர்வும் உண்டு.
சிம்புவுடன் பேசி மகிழும் சந்தானம்
சமீபத்தில் நடைபெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் இது குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். "சிம்பு சாருக்கு நான் எப்போதும் நோ சொல்ல மாட்டேன்" என்று அவர் கூறிய வார்த்தைகள், சிம்புவுடனான அவரது நட்பின் ஆழத்தை உணர்த்துவதாக அமைந்தன. அந்த விழாவில் பேசிய சந்தானம், 'காதல் அழிவதில்லை' படத்தில் கூட்டத்தில் ஒருவனாக நடித்தபோது சிம்பு தன்னை கவனித்து 'மன்மதன்' படத்தில் வாய்ப்பளித்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். மேலும், 'மன்மதன்' படப்பிடிப்பின் முதல் நாளிலேயே தனக்கு ஒரு பில்டப் காட்சி வைக்க சிம்பு விரும்பியதையும், அப்போது கிடைத்த கைத்தட்டல் தனக்கு ஊக்கமளித்ததையும் அவர் குறிப்பிட்டார். சிம்பு தனக்காக பலமுறை மற்றவர்களிடம் பேசியிருப்பதாகவும், எனவே எப்போதும் சிம்புவுக்கு பின்னால் இருப்பேன் என்றும் சந்தானம் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.
அதே விழாவில் சிம்பு பேசுகையில், சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு' படங்களை தான் மிகவும் ரசித்ததாகவும், சந்தானம் ஒரு நண்பராக இருந்தாலும் அவரது படங்களை ஒரு ரசிகனாகவே பார்ப்பதாகவும் கூறினார். சந்தானத்தின் உழைப்பை தான் என்றும் மதிப்பதாகவும், தனது 49வது படத்தில் மீண்டும் அவருடன் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சிம்பு குறிப்பிட்டார். தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவரும் சிம்புவுடன் சந்தானமும் இணைந்து நடிப்பதால், இந்த திரைப்படம் ஒரு பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி திரையில் என்ன மாதிரியான மேஜிக்கை நிகழ்த்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
