
தென்னிந்திய திரையுலகில், குறிப்பாக மலையாளத் திரையுலகில் தனது வசீகரமான நடிப்பாலும், துடிப்பான நடனத்தாலும், அழுத்தமான கதாபாத்திர தேர்வுகளாலும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் நடிகை சீமா. நடனக் கலைஞராக திரையுலகில் காலடி பதித்து, பின்னர் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் பல பரிமாணங்களில் ஜொலித்து ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள இவர், இந்த உச்ச நிலையை அடைந்தது அவ்வளவு எளிதாக நிகழ்ந்துவிடவில்லை. மலையாளத் திரையுலகில் மின்னல் வேக அறிமுகம் பெற்று, அங்கேயே தனது ராஜ்ஜியத்தை நிறுவியது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு என்றே சொல்லலாம். அந்த வகையில், சீமாவின் ஆரம்ப கால வாழ்க்கை, திரையுலகில் அவர் எதிர்கொண்ட சவால்கள், மலையாளத் திரைப்படத் துறையில் அவர் அடைந்த வெற்றிகள், தமிழ்த் திரைப்படங்களில் அவரது பங்களிப்பு, இயக்குநர் ஐ.வி. சசியுடனான அவரது காதல் மற்றும் திருமணம், அவர் பெற்ற விருதுகள் மற்றும் அவரது தற்போதைய வாழ்க்கை நிலை என அனைத்தையும் இந்தத் தொகுப்பில் விரிவாகக் காண்போம்.
சீமாவை பாராட்டிய சிவாஜி
1959ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி சென்னையில் ஒரு மலையாளக் குடும்பத்தில் சீமா பிறந்தார். இவரது இயற்பெயர் சாந்தகுமாரி ஆகும். கேரளாவின் தலச்சேரியைச் சேர்ந்த மாதவன் நம்பியார் இவரது தந்தையாவார். தாயார் பவானி திரிப்பூந்துறையைச் சேர்ந்தவர். சென்னையில் பிறந்து வளர்ந்த சீமாவுக்கு வீட்டில் பெற்றோர் மலையாளத்தில் உரையாட முயன்றாலும், அவர் பதிலளித்தது தமிழில்தான். அந்த அளவிற்கு சென்னை புரசைவாக்கத்தில் தமிழ் பேசும் சூழலில் வளர்ந்த இவர், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்த ஆதர்ஷ் வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். டிவிஎஸ் பார்சல் சர்வீஸில் அதிகாரியாகப் பணியாற்றிய இவரது தந்தை மாதவன் நம்பியார், சீமாவுக்கு ஏழு வயதாக இருந்தபோது தாயார் பவானியைப் பிரிந்து சென்றது சிறுவயதில் அவருக்குப் பல ஏமாற்றங்களை அளித்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து தனது தந்தையின் மீது அன்புகாட்டி வந்த சீமா, தாய் தந்தை இருவருடனும் நல்லுறவைப் பேணி வந்துள்ளார்.
திரையுலகில் ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக சீமாவை பாராட்டிய சிவாஜி கணேசன்
இந்தச் சூழலில்தான் கலை ஆர்வம் சிறுவயதிலிருந்தே சீமாவுக்குள் பொங்கி வழிந்தது. எங்கு பாடல்கள் ஒலித்தாலும் நடனமாடும் திறமை பெற்றிருந்த சீமாவின் ஆர்வத்தை உணர்ந்த பெற்றோர் அதற்கு ஆதரவளித்தனர். முறையாக நடனம் பயிலத் தொடங்கிய சீமா, நடன ஆசிரியர் தங்கப்பனிடம் உதவியாளராக இருந்த நடிகர் கமல்ஹாசனிடம் நாட்டிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். பள்ளி விழாக்களில் நடைபெற்ற நடனப் போட்டிகளில் முதன்மை மாணவியாக பல பரிசுகளை வென்றார். 14 வயதில் சோப்ரா என்ற நடன ஆசிரியரிடம் உதவியாளராகப் பணியாற்றியபோது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சீமாவின் வசீகரமான தோற்றத்தையும், நாட்டியத் திறமையையும் கண்டு வியந்து, அவருக்குத் திரையுலகில் ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாகப் பாராட்டினார்.
தமிழ் திரையுலக பிரவேசம்
1973ஆம் ஆண்டு அஞ்சுகம் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.என். பாலு கதை வசனத்தில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளியான ‘பூக்காரி’ என்ற தமிழ் திரைப்படத்தின் வாயிலாக தனது 13ஆம் வயதில் சீமா தமிழ் திரையுலகில் முதன் முதலாக அறிமுகமானார். பின்னர் 1978ஆம் ஆண்டு அருண் பிரசாத் மூவிஸ் தயாரிப்பில் தேவராஜ் மோகன் இயக்கத்தில் சிவக்குமார், ஜெயசித்ரா நடிப்பில் வெளியான ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ என்ற படத்தில் ஜி.கே. வெங்கடேஷ் இசையில் இடம்பெற்ற ‘தஞ்சாவூர் சீமையிலே’ என்ற கிராமிய மணம் கமழும் தெம்மாங்கு பாடலில் ஜெயசித்ரா, விதுபாலாவுடன் இணைந்து நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் சீமா. அடுத்து 1978இல் முக்தா ஸ்ரீநிவாசன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சுஜாதா நடிப்பில் வெளியான ‘அந்தமான் காதலி’ திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் மகனாக நடித்த சந்திரமோகனின் காதலியாக நடித்த சீமா, கிட்டத்தட்ட படத்தின் இரண்டாவது கதாநாயகியாக தோன்றி பாராட்டை பெற்றார். இதே காலகட்டத்தில், மலையாள முன்னணி இயக்குநர் ஐ. வி. சசி இயக்கத்தில் சில மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த சீமா, அவருடைய இயக்கத்தில் தமிழில் 1979ஆம் ஆண்டு விஜயகுமார், ரவிக்குமார், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ‘பகலில் ஓர் இரவு’ என்ற திரைப்படத்தில் ராஜி என்ற கதாபாத்திரத்தை ஏற்று ஸ்ரீதேவிக்கு இணையான இரண்டாம் நாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
‘கை வரிசை’ மற்றும் 'பகவதி' திரைப்படங்களில் சீமா
இதனைத் தொடர்ந்து மீண்டும் ஐ.வி. சசி இயக்கத்தில் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ‘ஒரே வானம் ஒரே பூமி’, ரஜினிகாந்த் உடன் ‘காளி’ என வரிசையாக நடித்தவருக்கு ‘காளி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் அனிதா மற்றும் கீதா என ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் நடித்திருந்தார் சீமா. பின்னர் மீண்டும் ரஜினிகாந்துடன் ‘எல்லாம் உன் கைராசி’, கமல்ஹாசனுடன் ‘சங்கர்லால்’, ஜெய்சங்கர் உடன் ‘கைவரிசை’, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ‘எங்க ஊரு கண்ணகி’, ‘கல்யாண அகதிகள்’, சிவக்குமாருடன் ‘அக்னி சாட்சி’ என பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த சீமா, தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருந்தார். இதன் பின்னர் சுமார் 16 வருடங்கள் கழித்து 2001 ஆம் ஆண்டு கவிதாலயா புரொடக்ஷன் தயாரிப்பில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘பார்த்தாலே பரவசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் மாதவனின் தாயார் கதாபாத்திரத்தை ஏற்று மீண்டும் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் ‘பாபா’, கமலுடன் ‘அன்பே சிவம்’, விஜயுடன் ‘பகவதி’, சிலம்பரசன் உடன் ‘காளை’, விஜய் சேதுபதியுடன் ‘ஓ மை கடவுளே’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, மாதவனுடன் ‘மாறா’, ஆர். ஜே. பாலாஜியுடன் ‘வீட்ல விசேஷம்’ போன்ற திரைப்படங்களில் அடுத்த தலைமுறை நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துவரும் சீமா இன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
மலையாள சினிமாவில் உச்சம்
தனது 19 வயதில், இயக்குநர் ஐ. வி. சசியின் ‘அவளுட ராவுகள்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சீமா, தனது முதல் படத்திலேயே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்த அவர், அந்த இளம் வயதிலேயே மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திப் பலரது பாராட்டுகளைப் பெற்றார். குறிப்பாக, பூர்வீகம் கேரளாவாக இருந்தும் சரளமாக மலையாளம் பேசத் தெரியாத சீமா, அந்தப் படத்தில் பேசியிருந்த மலையாளத்தைக் கேட்டுப் படக்குழுவினரும், ஒட்டுமொத்த கேரளத் திரையுலகமும் ஆச்சரியமடைந்தது. இந்த வெற்றி அவரைத் தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிக்க வைக்க, அவர் பின்னர் முறையாக மலையாளம் கற்றுக்கொண்டார். குறிப்பாக, இந்தச் சமயத்தில் நடிகர் ஜெயனுடனான சீமாவின் கூட்டணியில் அமைந்த மலையாளத் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன. அதுமட்டுமின்றி, மலையாள சினிமாவின் மற்றொரு ஜாம்பவானான மம்மூட்டியுடன் மட்டுமே 47 படங்களில் நடித்திருந்த சீமா, அதிலும் வெற்றி கண்டது அவரது திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இவ்வாறு 1988 வரை மலையாளத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த சீமா, ‘மகாயானம்’ என்ற படத்திற்குப் பிறகு சிறிது காலம் மலையாளத் திரையுலகிலிருந்து விலகியிருந்தார். பிறகு மீண்டும் 1998 ஆம் ஆண்டு ‘ஒலிம்பியன் ஆண்டனி ஆடம்’ என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்த அவர், தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்தார்.
'மகாயானம்’ திரைப்படத்தில் மம்மூட்டி மற்றும் கணவர் ஐ.வி.சசியுடன் சீமா
சீமாவின் சினிமாப் பயணம் எவ்வளவு சுவாரஸ்யமானதோ, அதேபோல அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் மிகவும் சுவாரஸ்யமானது. 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ஐ. வி. சசியை அவர் திருமணம் செய்து கொண்டார். ஐ. வி. சசியின் பல படங்களில் கதாநாயகியாக நடித்த சீமாவுக்கு அவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்தது . இந்தத் திருமணத்திற்குப் பிறகு சீமாவின் வாழ்க்கையில் மலையாள மொழி ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. வீட்டில், குழந்தைகளிடம் துவங்கி எங்கும் மலையாளமே பேசும் சூழல் உருவானது. இந்த தம்பதிகளுக்கு அனு சசி என்ற மகளும், அனி சசி என்ற மகனும் உள்ளனர். அனு தனது தந்தையின் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு ‘சிம்பொனி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். பின்னர் பெரியளவில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு தனது கணவர் ஐ. வி. சசியின் மறைவு சீமாவுக்குப் பேரிழப்பாக அமைந்தது. சிறிது காலம் திரையுலகிலிருந்து விலகியிருந்த அவர், பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனையின் பேரில் மீண்டும் கலை உலகில் காலடி எடுத்து வைத்தார். தற்போது சீமா தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் நிலையில், அவரது மகன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.
விருதுகளும் அங்கீகாரங்களும்
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் தனது ஆளுமையின் முத்திரையை அழுத்தமாகப் பதித்துள்ள சீமா ‘அம்மாவுக்கு ரெண்டுல ராகு’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ‘தங்கம்’, ‘வம்சம்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘செம்பருத்தி’ போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் ஆவார். குறிப்பாக இந்த தொடர்களில் இவரது இயல்பான நடிப்பும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உயிர்ப்பிக்கும் திறனும் தொலைக்காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. மலையாள மொழியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்துள்ள சீமா,1984-ஆம் ஆண்டு ‘ஆக்ரோஷம்’ மற்றும் 1985-ஆம் ஆண்டு ‘அனுபந்தம்’ ஆகிய திரைப்படங்களுக்காக கேரள மாநில அரசின் சிறந்த நடிகை விருதை இருமுறை வென்றுள்ளார். மேலும், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் கௌரவிக்கப்பட்டு உள்ளதோடு இன்றும் மலையாள சினிமாவில் முடிசூடா ராணியாக திகழ்ந்து வருகிறார்.
தொலைக்காட்சி தொடர் மற்றும் விருது மேடையில் நடிகை சீமா
திரையுலகில் ஒரு எளிய நடனக் கலைஞராக தனது கலைப் பயணத்தைத் துவங்கி, ஒரு சமயத்தில் மலையாள மொழி அறியாத நிலையிலும், தனது அயராத உழைப்பாலும், நிகரற்ற நடிப்புத் திறமையாலும் முதன்மை நடிகையாக உயர்ந்திருப்பது சீமா படைத்திருக்கும் வியக்கத்தக்க சாதனை என்றே சொல்லலாம் . பல்வேறு தடைகளையும், சவால்களையும் தாண்டி அவர் அடைந்த இந்த வெற்றி, அவரது தளராத மனநிலையையும், உள்ளார்ந்த திறமையையும் எடுத்துக்காட்டுகிறது. இன்றும் தனது அழகான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் சீமா, மென்மேலும் பல அருமையான கதாபாத்திரங்களில் நடித்து நம்மை மகிழ்விப்பதோடு, திரையுலகில் இன்னும் பல புதிய சாதனைகளை நிகழ்த்தி நீண்ட காலம் நலமுடன் வாழ ராணி ஆன்லைன் மனதார வாழ்த்துகிறது!
