இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘புன்னகை அரசி’ என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது நடிகை சினேகாதான். ஆனால், அதற்கு முன்னரே புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர்தான் நடிகை கே.ஆர்.விஜயா. இப்போதெல்லாம் ஒரு நடிகை 10 வருடங்கள் திரை உலகில் தாக்குப் பிடிப்பதே அரிதாக உள்ளது. 20 வருடங்களாக நடித்து வரும் நயன்தாராவே இதுவரை 100 படங்கள் கூட நடிக்கவில்லை. அப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் 1960, 70களில் டாப் நடிகையாக வலம் வந்து, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து 1985-லேயே 200 படங்களுக்கு மேல் நடித்தவர்தான் நடிகை கே.ஆர்.விஜயா. இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார் நடிகை கே.ஆர்.விஜயா. அந்தப் பேட்டியில், தன் சினிமா வாழ்க்கை, திருமணம், குழந்தைகள், குடும்பம் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதுபற்றி பார்ப்போம்.


இருவேறு தோற்றங்களில் நடிகை கே.ஆர்.விஜயா

திரைப்பயணம்...

கே.ஆர்.விஜயாவின் பூர்வீகம், பிறந்தது, வளர்ந்தது என எல்லாம் சென்னைதான். கே.ஆர்.விஜயாவின் தந்தை ராமச்சந்திர நாயர், எம்.ஆர். ராதாவின் நாடக கம்பெனியில் இருந்தவர். ஆனால் இது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது. நாடக கம்பெனியில இருந்து ராணுவத்திற்கு சென்றார். பின்தான் திருமணம் செய்துகொண்டார். இதனால் குடும்பத்தினருக்கு இவர் நாடகங்களில் நடித்திருந்தது தெரியாது. நடிகை கே.ஆர். விஜயாவிற்கு முதலில் நடிப்பில் எந்த ஆர்வமும் இல்லை. அவரது தந்தைக்குதான் மூத்த மகளான தெய்வானையை நடிகையாக்க வேண்டும் என்று ஆசை. அதன்படியே 1963இல் தெய்வானை, கே.ஆர்.விஜயா என்ற பெயரில் ‘கற்பகம்’ படத்தில் நாயகியாக அறிமுகமானார். நடிகர் எம்.ஆர். ராதாதான் விஜயா என்ற பெயரை தெய்வானையிடம் கூறினார். அந்தப் படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். ஜெமினி கணேசன் நாயகனாக நடித்த ‘கற்பகம்’ 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி நல்ல வெற்றியைப் பெற்றது. முதல் படமே கே.ஆர். விஜயாவுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து 22 வருடங்கள் கழித்து 1985 இல், தனது முதல் இயக்குநரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்திலேயே தனது 200வது படத்திலும் நடித்தார் கே.ஆர்.விஜயா. ‘படிக்காத பண்ணையார்’ என்ற படம்தான் அது. அதுவும் ஹிட்டாகி அவருக்கு பேர் வாங்கித் தந்தது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது அசாத்திய நடிப்பால் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் கே.ஆர்.விஜயா. தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார். அந்தக் காலகட்டத்திலேயே நடிகருக்கு இணையாக சம்பளம் வாங்கியவர்தான் நடிகை கே.ஆர். விஜயா. சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது 1966ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் பின் நடிப்பிலிருந்து விலகிய விஜயாவை அவரது கணவர்தான் நடிக்க கூறியுள்ளார். குழந்தை பிறந்திருந்த போதிலும், குழந்தையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனக்கூறி விஜயாவை நடிக்க அனுப்பியுள்ளார் அவரது கணவர். மீண்டும் திரையில் ரீ-எண்ட்ரி கொடுத்த விஜயாவிற்கு கதாநாயகியாகவே தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. விஜயாவின் கணவரான சுதர்சன் வேலாயுதம் நாயர் பிரபல தொழிலதிபர் ஆவார். நடிகை விஜயா இவருக்கு மூன்றாவது மனைவி. சுதர்சன் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனம் நடத்தி வந்த இவருக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் பல நட்சத்திர ஹோட்டல்கள் இருந்துள்ளன. மேலும் பல படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் கே.ஆர். விஜயா சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருது, கேரள அரசு விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, பல பிலிம் பேர் விருதுகளை வென்றுள்ளார். ஹீரோயினுக்கு பிறகு குணச்சித்திர நடிகையான பின்பும், அப்போது டாப் ஹீரோக்களாக இருந்த பெரும்பாலானோருடன் நடித்துள்ளார். கடந்த 2016இல் கணவரை இழந்த கே.ஆர். விஜயா, தற்போதும் கூட தொடர்ந்து சினிமாக்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார்.


இரு மலர்கள் படப்பிடிப்பிற்கு தனி ஜெட்டில் சென்ற கே.ஆர். விஜயா

ஷுட்டிங்கிற்கு என்று தனி விமானம்...

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நடிகை கே.ஆர். விஜயா, அந்தக் காலகட்டத்திலேயே ஷூட்டிங் சென்று வருவதற்காக சொந்தமாக விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும், இது தவிர நான்கு கப்பல்களை சொந்தமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். இரு மலர்கள் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்த போது, தான் அந்த விமானத்தில்தான் சென்றதாக கே.அர்.விஜயா கூறியிருக்கிறார். ஜெர்மனியில் 10 நாட்கள் தங்கி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கே.ஆர்.விஜயாவை கேட்டனராம். இதனை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார் விஜயா. இதனையடுத்து நானே உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று, லண்டன், பாரிஸ், ஜப்பான், குவைத், சுவிட்சர்லாந்து, துபாய் உள்ளிட்ட பல நாடுகளுக்கு தனது மனைவியை சுற்றுலாவுக்கு அழைத்து சென்றாராம் வேலாயுதம் நாயர். மேலும் சினிமாத்துறையில் ஷிஃப்ட் முறையும், ஞாயிற்று கிழமை என்றால் விடுமுறை என்ற முறையையும் தனது கணவர்தான் கொண்டு வந்தார் என விஜயா தெரிவித்துள்ளார். மேலும் ராஜ்கிரண் உடனான திரை அனுபவம் குறித்தும் பல்வேறு சுவாரசிய தகவல்களை இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.


தங்கைகளுடன் நடிகை கே.ஆர். விஜயா

சினிமாதான் எல்லாமே...

மேலும் தனது முதல் திரை அனுபவம் குறித்து பேசிய விஜயா, தான் 14 வயதில் திரையில் அறிமுகமானதாகவும், அப்போது படம் வெற்றியா, தோல்வியா என்பது குறித்தெல்லாம் தான் கவலைப்பட்டது இல்லை எனவும் தெரிவித்துள்ளார். “நான் சினிமாவுக்கு வந்த 10 வருஷத்துலயே 100 படம் நடிச்சுட்டேன். எனக்கு நடிக்கணும், சாப்பிடணும், தூங்கணும் இத தவிர வேற எதுவும் தெரியாது. இப்போ வரைக்கும் அதைத் தவிர வேற எதுவும் தெரியாது” எனக் கூறியுள்ளார். கே.ஆர். விஜயாவின் சகோதரிகள் கே.ஆர்.வத்சலா, கே.ஆர். சாவித்திரி ஆகியோர் தமிழ் சினிமாவில் நடிகையாக கோலோச்சிய போதிலும், விஜயாவைப் போல முன்னணி நடிகையாக உருவெடுக்கவில்லை. ஆனால் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேர்காணலில் தனது தங்கை குறித்து பேசிய விஜயா, கே.ஆர். வத்சலா ஒருமுறை உடல்நலம் குன்றி இருந்ததாகவும், அப்போது பழனிக்கு தான் பாதயாத்திரை சென்று, அங்கிருந்து எடுத்து வந்த பாலை கொடுத்ததற்கு பின்தான் அவர் குணமடைந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் முதல்முறையாக பாராட்டு விழா நடத்தப்பட்ட நடிகை கே.ஆர்.விஜயாதான்

முதல்முறை நடிகைக்கு பாராட்டு விழா...

முதன்முதலில் தமிழ் சினிமாவில் நடிகைக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது என்றால் அது கே.ஆர். விஜயாவுக்குத்தான். அதன்பின் தான் நடிகை மனோரமாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், என்.டி.ராமாராவ், ராஜ்குமார் என பல முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இப்போதெல்லாம் தன்னை ஏதேனும் விழாவிற்கு அழைத்தால், எனக்கு அப்போதே மிக சிறப்பாக பாராட்டு விழா நடைபெற்றது, அதுபோதும் எனக் கூறுவாராம். அதுபோல அந்த காலக்கட்டத்தில் அம்மன் என்றாலே கே.ஆர்.விஜாயாதான். பல பக்தி படங்களில் அம்மன் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். சோட்டானிக்கரை அம்மன் வேடத்தின்போதும் கூட நடிகை விஜயாவை மட்டும்தான் கருவறைக்குள் விட்டார்களாம். இவ்வாறு பல சுவாரசிய தகவல்களை நடிகை விஜயா பகிர்ந்து கொண்டார். 6 சதாப்தங்களாக தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை நடிகை கே.ஆர்.விஜயா மகிழ்வித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On 29 July 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story