
2018-ல் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக ஆதரவோடு மாநிலங்களவை எம்பி ஆகியுள்ளார். ஜூலை 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுபோல படமாகும் அரசியல் தலைவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, ரீ-ரிலீஸாகும் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படம், இன்ஸ்டா பிரபலம் இலக்கியாவின் தற்கொலை உள்ளிட்ட செய்திகளை இந்த வார சினி பைட்ஸ் பகுதியில் காண்போம்.
ராமதாஸின் பயோபிக்கில் நடிக்கும் ஆரி...
படமாகும் ராமதாஸின் பயோபிக்...
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. குறிப்பாக வட மாவட்டங்களில் பாமக முக்கிய அரசியல் கட்சியாக திகழ்கிறது. இக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ், இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களின் ஒருவராக இருக்கிறார். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தை இயக்குநர் சேரன் இயக்க உள்ளாராம். தமிழ் குமரன் ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ராமதாஸ் வேடத்தில் நடிகர் ஆரி நடிக்க இருக்கிறார். முதலில் நடிகர் சரத்குமார்தான் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பிறந்தநாளை ஒட்டி ஜூலை 25ம் தேதி வெளியானது. அதில் அவர் முழக்கம் இடுவதைப் போன்றும், பொதுமக்களை கிராமங்களுக்கு சென்று சந்தித்து பேசுவது போன்ற காட்சிகளு இடம் பெற்றுள்ளன.
கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த்...
ரீ - ரிலிஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’!
`தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கதாநாயகனாகவும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனருமான விஜயகாந்த், மக்களால் அன்புடன் ‘கேப்டன்’ என அழைக்கப்பட்டு வருகிறார். மண்ணில் இருந்து மறைந்தாலும், பலரது மனங்களில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது திரையுலக வாழ்வை போற்றும் வகையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தின் மைல்கல் படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மீண்டும் ரிலீஸ் ஆகிறது. வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
1991-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு அன்று இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன். இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. இத்திரைப்படம்தான் விஜயகாந்திற்கு கேப்டன் என்ற பெயரை பெற்றுத் தந்தது. இந்நிலையில் நவீன 4கே தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் ரிலீஸாக உள்ளது.
திவாகருடன் ஒப்பிடப்பட்ட சூர்யா
இன்ஸ்டா திவாகருடன் ஒப்பிடப்பட்ட நடிகர் சூர்யா... பிரபல செய்தி நிறுவனத்தை கண்டித்த சாந்தனு!
கடந்த ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யா தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்து வரும் ‘கருப்பு’ படத்தின் டீசர் மற்றும் சூர்யா- 46 படத்தின் போஸ்டர் ஆகியவையும் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் செய்தி நிறுவனங்களும் நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தன. இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்த வாழ்த்து அட்டைப் படத்திற்கு நடிகர் சாந்தனு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அந்நிறுவனத்தின் அந்த பதிவை மறுபதிவு செய்து, “இது தவறு... மிகவும் தவறு. முதலில் இதை நீக்கம் செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார் சாந்தனு. இதற்கு சூர்யாவின் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து பிரபல செய்தி நிறுவனத்தை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இருவேறு தோற்றங்களில் நடிகை சந்தியா
சின்னத்திரையில் அறிமுகமாகும் ‘காதல்’ சந்தியா!
‘காதல்’ படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சந்தியா. இப்படத்தை தொடர்ந்து வல்லவன், மகேஷ், சரண்யா மற்றும் பலர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, அர்ஜூன் என்பவரை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதற்குபின் சில படங்களில் நடித்த சந்தியா 2016-க்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். பின்னர் குழந்தைகள், குடும்பம் என செட்டில் ஆன சந்தியா, தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்பியுள்ளார். பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். அது எந்தளவு வரவேற்பு பெறுகிறது என்பதை பொறுத்து தொடர்ந்து நடிக்க உள்ளாராம். மேலும் இத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிறார் நடிகை சந்தியா.
சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாக நடிகை ஸ்ரீதத்தா கண்ணீர் மல்க வீடியோ...
கண்ணீர் மல்க வீடியோ... என்ன ஆனது நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு?
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, தனது சொந்த வீட்டிலேயே தான் கொடுமைப்படுத்தப்படுவதாக அழுதுகொண்டே வெளியிட்ட வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. தான் metoo புகார் கொடுத்ததில் இருந்துதான் இவ்வாறு துன்புறுத்தப்படுவதாகவும், போலீசில் புகார் கொடுத்தாலும், அவர்கள் நேரில் புகார் கொடுங்கள் எனக்கூறி கண்டுகொள்ளவில்லை எனவும் கண்ணீர் மல்க வீடியோவில் பேசியுள்ளார்.
நடிகை தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா போன்ற படங்களில் நடித்த பிரபல ஹிந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். 2018-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற ஹிந்தி படத்தில் நடித்தபோது நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘யாராவது எனக்கு உதவி செய்யுங்கள்’ என அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார். தனுஸ்ரீ அந்த வீடியோவில் எனது சொந்த வீட்டில் ‘அவர்கள்’ துன்புறுத்துகின்றனர் என்று வரிக்கு வரி கூறினாலும், யார் அந்த நபர்கள் என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை. இதனால் இவர் மன அழுத்ததில் ஏதேனும் இருக்கிறாரா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எம்.பியாக பதவியேற்ற நடிகர் கமல்ஹாசன்
‘கமல்ஹாசன் எனும் நான்’... எம்.பியாக பதவியேற்றார் உலகநாயகன்!
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் எம்.பியான பாமக அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனிடையே காலியாகும் இந்த ஆறு இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திமுக மற்றும் அதிமுக சார்பில் முன்னிறுத்தப்பட்ட கமல்ஹாசன் உட்பட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகினர்.
இதனையடுத்து திமுக கூட்டணியின் உதவியால் எம்.பியான நடிகர் கமல்ஹாசன் பதவியேற்க ஜூலை 24ஆம் தேதி டெல்லிக்கு புறப்பட்டார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை எம்பியாக 25ஆம் தேதி பதவியேற்ற கமல்ஹாசன், தமிழில் தனது உறுதிமொழியை வாசித்தார். கமல்ஹாசனை தொடர்ந்து திமுகவின் பி. வில்சன், கவிஞர் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் தமிழ் மொழியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றுக் கொண்டனர்.
தான் தன்னை மூடிக் கொண்டிருந்தபோது தாலிகட்டியதாக ரிஹானா குற்றச்சாட்டு
“ஏமாற்றி தாலி கட்டினார்” - சின்னத்திரை நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!
பொன்னி தொடரில் நாயகனின் அம்மாவாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதாநாயகிக்கு சித்தியாகவும் நடித்து புகழ் பெற்றவர் சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம். தற்போதும் தொலைக்காட்சி தொடர்கள் சிலவற்றில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதாவது ரிஹானா தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னிடமிருந்து ரூ.18 லட்சம் மோசடி செய்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில் நடிகை ரிஹானா இதுதொடர்பாக பேசியுள்ளார். ராஜ்கண்ணன் தன்னை ஏமாற்றி தாலி கட்டியதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடி தீர்வு காண போவதாகவும் சின்னத்திரை நடிகை ரிஹானா தெரிவித்துள்ளார். ரிஹானாவின் புகார் அடிப்படையில் இருவரையும் அழைத்து விசாரித்த போலீசார், ஆவணங்கள் சிலவற்றை சரிபார்த்துவிட்டு இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
ஜாமினில் வெளிவந்த நடிகர் தர்ஷன்
நடிகர் தர்ஷனுக்கு ஜாமின் - உச்ச நீதிமன்றம் சாடல்!
நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசுவாமியை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் மகேந்திரன், பர்வதிவாலா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. தற்போது வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நீதிபதிகள் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். ரேணுகாசுவாமியை கொலை செய்ய காரணம் என்ன? தர்ஷன் - பவித்ரா கவுடாவுக்கு இடையே என்ன உறவு இருக்கிறது? என்றும் நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பினர். ஜாமின் உத்தரவு விபரீதமானது. தரவுகளை படித்து பார்த்தால் கொலை வழக்கில் இருந்தே விடுதலை செய்வதற்கான உத்தரவு போல் உள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்கும் வகையில், அவர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. மூன்று பக்கங்களுக்குள் எழுத்துபூர்வமான நடந்த வாதத்தை ஒரு வாரத்திற்குள், சமர்ப்பிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் செய்த அதே தவறை, நாங்கள் செய்ய மாட்டோம். நாங்கள் தண்டிக்கவும் மாட்டோம், விடுதலை செய்யவும் மாட்டோம் என இவ்வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தர்ஷனுக்கு நெருக்கமான நடிகை பவித்ரா கவுடாவுக்கு, ரேணுகாசுவாமி தொடர்ந்து தரக்குறைவான கமெண்ட்டுகள், சம்பந்தமில்லாத மெசேஜ்கள் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் தர்ஷன், தனது நண்பர்களுடன் இணைந்து ரேணுகாசுவாமியை கொடூரமான முறையில் கொலை செய்தார். இந்த கொலைவழக்கில்தான் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா மற்றும் தர்ஷனின் நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், நடிகர் தர்ஷனும் அவருடன் கைது செய்யப்பட்ட சிலரும் பார்க் போன்ற ஒரு இடத்தில் அமர்ந்து காபி குடிப்பதும், சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
என் தற்கொலைக்கு திலீப் சுப்பராயன்தான் காரணம் - இலக்கியா
பெண் யூடிபர் தற்கொலை வாக்குமூலம்... பிரபல ஸ்ட்ண்ட் மாஸ்டர் காரணமா?
தமிழ் திரையுலகில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வந்தவர் சூப்பர் சுப்பராயன். இவரின் மகனான திலீப் சுப்பராயனும் தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பணியாற்றி வருகிறார். ஜூலை 24ஆம் தேதி வெளியான ஹர ஹர வீர மல்லு திரைப்படத்திற்கும் இவர்தான் ஸ்டண்ட் மாஸ்டர். இந்நிலையில் இவர்மீது இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள இலக்கியா என்பவர் புகார் ஒன்றை முன்வைத்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும்தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான்” என தன் இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஸ்டோரியில் திலீப் சுப்பராயனின் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார்". இந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் பதிவை தொடர்ந்து தற்கொலை முயற்சியும் மேற்கொண்டுள்ளார் இலக்கியா. அதிக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற யூடியூபர் இலக்கியா போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்படுள்ளார். இச்செய்தி தற்பொழுது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. இதனிடையே இலக்கியாவின் தற்கொலைக்கும், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என திலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார். என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை யாரோ செய்கிறார்கள். இந்த விவகாரத்தை நான் சட்டப்படி சந்திப்பேன் என்று திலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
