
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கம் மற்றும் நடிப்பில், 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' என்ற திரைப்படத்தை அவரது மகள் ஜோவிகா தயாரித்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இப்படத்தில் தன்னிடம் முறையாக அனுமதி பெறாமல், தனது பாடலை பயன்படுத்தியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இதனைப்பற்றி பேசிய வனிதா, சோனி மியூசிக்கிடம் முறையாக அனுமதி பெற்றுதான் பாடலை பயன்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் படத்திற்காக இளையராஜாவிடம் நேரில் சென்று ஆசிர்வாதம் வாங்கியதாகவும், ஆனால் இப்போது ஏன் அவர் இப்படி செய்கிறார் என தெரியவில்லை என்றும் வனிதா கூறினார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இளையராஜாவிற்கு வேறு வேலை, வெட்டி இல்லை என நடிகை ஷகிலா விமர்சித்துள்ளார். இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரும் விவகாரம் நீண்ட நாட்களாக தொடரும் நிலையில், இதுகுறித்து ஷகிலா பேசியது என்ன என்பதை இங்கு காணலாம்.
இருவேறு தோற்றங்களில் நடிகை ஷகிலா
ஷகிலா...
மலையாள திரைப்படமான ப்ளே கேர்ல்ஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஷகிலா. கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தாலும், மலையாள திரையுலகில் ஷகிலா மிகவும் பிரபலமானவர். ப்ளே கேர்ல்ஸ் படத்தில் அவரது தங்கையும் நடித்திருப்பார். அப்போதே ஷகிலாவிற்கு ஒரு நாளைக்கு ரூ.6 லட்சம் சம்பளம் வழங்கப்படுமாம். பணத்தை வைக்கவே வீட்டில் இடம் இருக்காதாம். மலையாள ஸ்டார் ஹீரோக்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்களை விட ஷகிலாவின் படங்கள் வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது. கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த கின்னரா தும்பிகள் என்னும் திரைப்படம் ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, ரூ.4 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்க விஷயம். மேலும் ஆறு மொழிகளில் இப்படம் வெளியானது. இப்படம் நடிகை ஷகிலாவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இருப்பினும் கவர்ச்சிப் படம் என்பதால் இதன் வெற்றி குறித்து பெரிதாக பேசப்படவில்லை. மலையாளப் படங்களை தொடர்ந்து தமிழ் திரையுலகிலும் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமானார் ஷகிலா.
கவர்ச்சி வேடங்களை தாண்டி காமெடி மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் ஷகிலா நடித்துள்ளார். ஆனால் கவர்ச்சி நடிகையாகவே அடையாளம் காணப்பட்டார். ஆனால் ஆரம்பத்தில் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருந்த அபிப்பிராயமும், தற்போது வைத்திருக்கும் அபிப்பிராயத்திற்கும் நூறு மடங்கு வித்தியாசங்கள் இருக்கின்றன. தற்போதைய இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பலரும் ‘அம்மா’ என்று உரிமையாக ஷகிலாவை அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சமையல் நிகழ்ச்சிதான். இந்நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பது, பிரபலங்களை நேர்காணல் எடுப்பது என பிஸியாக இருந்து வருகிறார் நடிகை ஷகிலா. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
10 ஆண்டுகள் லிவ்-இன் உறவில் இருந்தேன் - ஷகிலா
திருமணம் செய்து கொள்ளாமல் ஒருவருடன் 10 ஆண்டுகள் வாழ்ந்தேன்!
நேர்காணலில் திருமணம் குறித்து பேசிய ஷகிலா, தான் திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும் ஒருவருடன் 10 ஆண்டுகள் லிவ்-இன் உறவில் இருந்ததாக தெரிவித்துள்ளார். திருமணம் செய்யவில்லையே தவிர, உண்மையான கணவன், மனைவியாகத்தான் வாழ்ந்ததாக ஷகிலா கூறியுள்ளார். மேலும் தனது அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என அனைவரின் குழந்தைகளையும் தான்தான் வளர்த்ததாகவும் ஷகிலா தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு திருமணம் ஆகவில்லை, குழந்தைகள் இல்லை என ஒருநாளும் கவலைப்பட்டதில்லை எனவும் ஷகிலா கூறியுள்ளார்.
ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தால்... சந்தேகம்தான் - ஷகிலா
அரசியல் ஆசை...
விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஷகிலா, “என்டிஆர், எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரும் திரைப்படங்களில் நடித்துள்ளனர். கருணாநிதிகூட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். சினிமாவில் இருப்பதனால் அரசியலுக்கு வந்தால், வெற்றிப் பெற்றுவிடுவோம் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நடிகர்கள் பிரச்சாரத்திற்கு செல்லலாம். அவர்கள் செய்யும் பிரச்சாரத்தை வைத்து, கட்சி குறித்து ரசிகர்கள் சிந்திக்கலாம். ஆனால் ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தால், அது சந்தேகம்தான். சினிமா நடிகர் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வராதீர்கள்” எனவும் தெரிவித்தார். மேலும் தான் அரசியலுக்கு வர விரும்புவதாக தெரிவித்த ஷகிலா, தான் இப்போது யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற சூழலில் இல்லை என்றும், தனக்கு இனிமேல் எந்த கடமைகளும் கிடையாது என்றும், சொத்து சேர்த்து இனி யாருக்கும் கொடுக்கப்போவதும் இல்லை என்றும், அதனால் அரசியலில் ஏதேனும் பொறுப்பு கிடைத்தால் கண்டிப்பாக நன்றாக செய்வேன் என்றும் கூறினார். குழந்தைகள், பள்ளிக் கழிப்பறைகள் குறித்து ஏதேனும் பொறுப்புகள் வழங்கப்பட்டால் நிச்சயம் நன்றாக செய்வேன் என்று தெரிவித்தார். பணத்திற்கு ஒருபோதும் தான் ஆசைப்படமாட்டடேன் என்றும் குறிப்பிட்டார்.
வனிதா, ஜோவிகாவிற்கு நன்றி - ஷகிலா
வனிதாவிற்கு நன்றி...
நடிகை ஷகிலா அண்மையில் வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை வனிதா விஜயகுமார் இயக்கி நடிக்க, அவரின் மகள் ஜோவிகா தயாரித்து இருக்கிறார். இந்நிலையில் இதில் நடிக்க வாய்ப்பு கொடுத்த வனிதாவிற்கும், ஜோவிகாவிற்கும் நன்றி என தெரிவித்துள்ளார் ஷகிலா. மேலும் இந்த திரைப்படத்தில் தனது அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா தொடர்ந்து வழக்கு குறித்தும் ஷகிலா கருத்து தெரிவித்துள்ளார்.
இளையராஜாவிற்கு வேலை, வெட்டி இல்லை...
இதுதொடர்பாக பேசிய ஷகிலா, “இளையராஜாவிற்கு வேலை வெட்டி இல்லை. இப்போது எத்தனை படங்களுக்கு இசை அமைக்கிறார் என்று தெரியவில்லை. உண்மையில், இந்த விஷயத்தை கேட்டு எனக்கு கோவம்தான் வருகிறது. ‘சிவராத்திரி’ ஒரு நல்ல பாடல். அது அவர் இசையமைத்த பாடல்தான். நான் குழந்தையாக இருந்ததில் இருந்தே அவரின் பாடலை கேட்டு வளர்ந்து இருக்கிறேன். இளையராஜா சார், லிவ்விங் லெஜண்டாக இருக்கிறார். அவரை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அவரை மக்கள் மிகப்பெரிய உயரத்தில் மக்கள் வைத்து இருக்கிறார்கள். ஆனால், அவர், பாட்டை பயன்படுத்துவதால் வழக்கு போடுவது சரியில்லை.
அவர் ஒரு படத்திற்கு இசையமைத்துவிட்டு, அதற்கான பணத்தை வாங்கிவிட்டார். அப்படி என்றால், அது தயாரிப்பு நிறுவனத்திற்குதான் சொந்தம். அவர் எப்படி அந்த பாட்டு என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியும். யாராவது போய் அவருக்கு வேலை கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதில் கவனம் செலுத்துவார். இப்போது வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார். மக்கள் அனைவரும் இளையராஜா பாட்டை கேட்டு வளர்ந்தவர்கள். இந்த வயதில் ஏன் தனது மரியாதையை அவர் கெடுத்துக் கொள்கிறார்? வனிதா இளையராஜாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கியபோது பாடலுக்கு அனுமதி வாங்கவில்லை. அதன்பின்தான் முறைப்படி சோனி மியூசிக்கிடம் அனுமதி வாங்கினாள். இளையராஜா இதில் தலையிட்டு, படத்தை புரமோஷன்தான் செய்துள்ளார்” என தெரிவித்தார்.
இளையராஜாவிற்கு வேலை வெட்டி இல்லை - நடிகை ஷகிலா
பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோருவதற்கான காரணம் என்ன?
தனது இசையில் உருவான சுமார் 4,500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ, அகி ஆகிய இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தாலும், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் பயன்படுத்துவதாகக் கூறி இளையராஜா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை அவர்கள் பயன்படுத்துவதாகவும் இளையராஜா கூறியிருந்தார். இதற்கு, தனது பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோருவதற்கு வாய்ப்பில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. வழக்கின் முடிவில், ‘தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்று பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது’ என தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இளையராஜா தொடர்ந்த வழக்கில் இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு எக்கோ நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
அப்போது 'எக்கோ' தரப்பு வழக்கறிஞர், 'ஒரு படத்துக்காக தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றுவிட்டால் ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இசையமைப்பாளர் இழந்துவிடுகிறார்' என வாதிட்டார். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. 'எக்கோ' நிறுவனத்துக்கு தடை உள்ளது என்றால் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய சோனி மியூசிக் நிறுவனத்துக்கும் இது பொருந்தும் என இளையராஜா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் நீதிமன்றம் சோனி மியூசிக்கிற்கு பாடலை விற்க எந்த தடையும் கூறவில்லை. இதனால் தங்களிடம் கேட்போருக்கு சோனி மியூசிக், பாடலை பயன்படுத்தும் உரிமையை அளித்து வருகிறது. இதனால் இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்படுகிறது. அதேசமயம், இளையராஜா தரப்பில் அனுமதி பெற்றால், சோனி மியூசிக் தரப்பிலுருந்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதனால் இதற்கு தீர்ப்பு வரும்வரை இந்த பிரச்சனை தொடரும் என கூறப்படுகிறது.
