இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘ஒரு நாள் கூத்து’ படத்தில் வரும் “அடியே அழகே” என்ற பாடல் வரிகளைப் போன்றே, தமிழ் பெண்ணுக்கே உரிய அழகுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நிவேதா பெத்துராஜ். ஒரு நடிகையாக மட்டுமின்றி பல திறமைகளை உள்ளடக்கிய பெண்ணாகவும் இவர் வலம் வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிசியான நடிகையாக இயங்கிக்கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ் சினிமா என்ற புகழ் வெளிச்சத்தை கடந்து கராத்தே, கார் பந்தயம், பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளிலும் மிகவும் ஆர்வம் கொண்டு ஒரு மிகச் சிறந்த வீராங்கனையாகவும் சாதித்து வருகிறார். அதற்கு உதாரணமாக அண்மையில், மதுரையில் டால்ஃபின் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் பங்குபெற்ற நிவேதா பெத்துராஜ் கலப்பு இரட்டையர் பிரிவில் மதுரை அணிக்காக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த நிலையில் நிவேதா பெத்துராஜின் திரைப்பயணம் மற்றும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஆரம்பகால வாழ்க்கை


வித்தியாசமான தோற்றங்களில் நிவேதா பெத்துராஜ்

அழகும், திறமையும் கொண்ட நடிகையான நிவேதா, பெத்துராஜ் என்பவருக்கு மகளாக மதுரையில் 1991-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி பிறந்தார். இவரின் தந்தை பெத்துராஜ் கப்பல் பொறியாளராக பணியாற்றியவர். இதனால் நிவேதா பிறந்த சிறிது காலத்திலேயே தந்தை பணி நிமித்தம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு மாற, பின்னர் குடும்பம் மொத்தமாக அங்கு குடியேறியது. 12 வயது வரை தூத்துக்குடியில் பள்ளி படிப்பை பயின்ற நிவேதா பின் மீண்டும் தந்தையின் பணி மாறுதலால் தனது 13-வது வயதில் துபாய்க்கு சென்று செட்டில் ஆனார். அதனை தொடர்ந்து அங்கேயே செயல்பட்டு வரும் GEMS என்ற அரேபிய வாழ் இந்தியப் பள்ளியில் சேர்ந்து பள்ளி படிப்பை முடித்தார். இதன் பிறகு, தனது கல்லூரிப் படிப்பை துபாயில் உள்ள ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தில் தொடங்கியவர், அங்கு “மனிதவள மேலாண்மை” துறையில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார். இதனையடுத்து ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் அமர்ந்துவிட வேண்டும் என்று முயற்சியில் இறங்கியவருக்கு எதிர்பாராமல் துபாயில் நடந்த “மிஸ்.யுஏஇ” என்றழைக்கப்படும் அரேபிய அழகி போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தில், அந்த வாய்ப்பினை ஏற்று 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட நிவேதா பெத்துராஜ் முதல் முயற்சியிலேயே அழகி பட்டத்தினை வென்றார். இதன் பிறகு முழுக்க முழுக்க மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தவருக்கு, நிறைய பெரிய மனிதர்களின் அறிமுகங்களும் கிடைத்தன.


நிவேதா பெத்துராஜ் 2015-ஆம் ஆண்டு துபாயில் “மிஸ்.யுஏஇ” அழகி பட்டம் வென்ற அழகிய தருணம்

திரைப்பயணம் தொடங்கியது எப்படி?

நிவேதா ஏற்கனவே அரேபிய அழகி பட்டத்தினை வென்று குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்றிருந்ததால், சினிமாவிலும் நடிக்க அவரது குடும்பத்தினர் அனுமதி அளித்தனர். அதனால், மாடலிங் துறையில் மிகவும் பிசியாக இயங்கி கொண்டிருந்த நிவேதா பெத்துராஜுக்கு, சென்னையில் திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்த அவரது தோழி ஒருவர் மூலமாக சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதற்காக சென்னைக்கு வந்து ஆடிஷனில் அதாவது நாயகிக்கான தேர்வில் கலந்து கொண்டபோது அதிலும் வெற்றி பெற்று கதாநாயகியாக தேர்வானார். அந்த படம்தான் நெல்சன் வெங்கடேஷ் என்பவரின் இயக்கத்தில் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த “ஒரு நாள் கூத்து” திரைப்படம். அப்படத்தில் அட்டக்கத்தி தினேஷிற்கு ஜோடியாக, அவரின் காதலியாக காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பால், தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் அந்த ஆண்டு சிறந்த புதுமுக நடிகைக்கான “பிஹைன்வுட்ஸ் கோல்டுமெடல்ஸ்” என்ற விருதையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து உதயநிதியுடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற படத்தில் நடித்தவருக்கு தெலுங்கு திரையுலக பக்கத்தில் இருந்தும் பட வாய்ப்பு வரத் தொடங்கியது. பின் தொடர் பட வாய்ப்பின் காரணமாக தான் வசித்து வந்த இடமான துபாய்க்குச் செல்லாமல் சென்னையிலேயே தங்கி கதை கேட்டு படங்களை தேர்வு செய்து நடிக்கும் பணியில் ஈடுபட்டார்.


நிவேதா பெத்துராஜ் அறிமுகமான “ஒரு நாள் கூத்து” திரைப்படத்தின் காட்சிகள்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக இயங்க ஆரம்பித்த நிவேதா, தமிழில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து “டிக் டிக் டிக்” என்ற படத்தில் நடித்தார். விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான அறிவியல் புனைக்கதையை மையமாக வைத்து 2018-ஆம் ஆண்டு சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் லெப்டினன்ட் சுவாதி என்ற கதாபாத்திரத்தில் துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்து பலரையும் ஆச்சரியப்பட வைத்திருந்தார். இதுதவிர விஜய் ஆண்டனியுடன், ‘திமிரு புடுச்சவன்’ என்ற படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அதகளப்படுத்தி இருந்தார். குறுகிய காலத்தில் அதிகமான படங்களில் நடித்து நன்கு சம்பாதித்து விட வேண்டும் என்று நினைக்கும் ஒரு சில கதாநாயகிகளுக்கு மத்தியில், நிவேதா பெத்துராஜ் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். அதிலும் குறிப்பாக எத்தனை படங்களில் நடிக்கிறோம் என்பதைவிட, எத்தனை படங்கள் வாயிலாக ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறோம் என்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படவேண்டும் என்பதை மனதில் வைத்து சினிமாத்துறையில் பயணித்து வரும் இவர், நடுநடுவே தெலுங்கிலும் வரிசையாக நடித்தார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்திருந்தாலும், அதிகமாக நடித்ததும், நடித்து வருவதும் என்னவோ தெலுங்கு திரையுலகில்தான். இது குறித்து, அவரிடம் பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளித்த அவர், "எனக்கு தமிழ் படங்களில் நடிக்கக் கூடாது என்றெல்லாம் ஏதும் இல்லை. தெலுங்கு திரையுலகில் கதாநாயகிகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் தருகிறார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நிறைய வாய்ப்புகள் அங்கிருந்துதான் வருகின்றன. தமிழில் மீண்டும் நடிப்பதற்கு கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். விரைவில் தமிழ் திரையுலக பக்கம் வருவேன்” என கூறியிருந்தார். இதற்கிடையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ என்ற படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் நடித்திருந்த நிவேதா பெத்துராஜுக்கு அப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் இன்னும் தயாரிப்பு பணியில் இருக்கிறதே தவிர எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.


'டிக் டிக் டிக்', ‘திமிரு புடிச்சவன்’, 'பார்ட்டி' ஆகிய படங்களில் நிவேதா பெத்துராஜ் ஏற்ற கதாபாத்திரங்கள்

ஹிந்தியிலும் கலக்கி வரும் நிவேதா...

க்ரைம் த்ரில்லர் ஜானரில் 2023, செப்டம்பர் 20 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிய வெப் சீரிஸ்தான் ‘காலா’. கருப்புப் பணம் தொடர்பான கதை என்பதால் இதற்கு ‘காலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் ‘டேவிட்’, ‘சோலோ’ ஆகிய படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார் என்பவர்தான் இந்த வெப் சீரிஸையும் இயக்கி உள்ளார். இதில் நிவேதா பெத்துராஜுடன், அவினாஷ் திவாரி, அனில் சரண்ஜீத் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த வெப் தொடரில் ரித்விக்கின் காதலியாக, கொல்கத்தா ஐபிஎஸ் அதிகாரி சித்தாராவாக நடித்திருந்த நிவேதா பெத்துராஜ் தன் கம்பீரமான நடிப்பால் ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினை பெற்றிருந்தார். நிவேதா பெத்துராஜுக்கு ஹிந்தி தெரியாது என்பதால் இந்த வெப் தொடரில் நடிக்கும் பொழுது வசனங்களை பேசி நடிக்க மிகவும் சிரமப்பட்டாராம். ஏற்கனவே தமிழில் ‘திமிரு புடுச்சவன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தாலும், இந்த வெப் தொடர் அவருக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்ததாம். இதுமட்டுமின்றி ஆக்சன் காட்சிகளில் நடிக்கும் பொழுதெல்லாம் அடிபட்டு ரத்தம் சிந்திய நிகழ்வெல்லாம் நடந்ததாம். தற்பொழுது இதேபோன்று ‘பருகு’ என்ற தெலுங்கு வெப் தொடரிலும் இவர் நடித்து வருகிறார்.

நடிகை டு பேட்மிட்டன் சாம்பியன்


பேட்மிண்டன் போட்டியில் விளையாடி நிவேதா சாம்பியன் பட்டம் வென்ற அழகிய தருணம்

நிவேதா தற்காப்பு கலைகளான கராத்தே, மல்யுத்தம், குத்துச்சண்டை மீது ஆர்வம் கொண்டவர். இதுதவிர தனது ஃபிட்னஸ் விஷயத்திலும் எப்போதும் கவனமாக இருக்கும் நிவேதா, அதற்காக ஃபிட்னஸ் பயிற்சித் துறையில் சான்றிதழும் பெற்றுள்ளார். தினம்தோறும் உடற்பயிற்சிகளையும் விடாமல் செய்து வரும் பழக்கம் கொண்ட இவர், விளையாட்டு தவிர்த்து ஓவியம் வரைவதிலும், இசை கருவிகளை வாசிப்பதிலும் வல்லவராக திகழ்ந்து வருகிறார். மேலும் கார் பந்தயம், பேட்மிட்டன் போன்ற விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வம் கொண்ட பெத்துராஜ் ஆர்வத்தோடு மட்டும் நின்றுவிடாமல், அவற்றிலும் பயிற்சி பெற்று அதுதொடர்பான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடி வருகிறார். அந்த வரிசையில் பேட்மிட்டனிலும் ஈடுபாடு உள்ள நிவேதா அண்மையில் மதுரையில் டால்பின் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்குபெற்று மதுரை அணிக்காக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. நிவேதாவின் இந்த வெற்றி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும், வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் நெகட்டிவான விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

கார் ரேஸ்ஸிலும் கலக்க தயாராகும் நிவேதா!


2021-ல் கார் ரேஸுக்கான லெவல்–1 பயிற்சியில் இருந்தபோது நிவேதா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

நிவேதா பெத்துராஜுக்கு சிறுவயதில் இருந்தே கார்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதிலும் ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர். காரணம் கார் ரேஸில் 7 முறை வேர்ல்டு சாம்பியன் பட்டம் வென்ற புகழ்பெற்ற வீரரான F1 ரேஸர் லூயிஸ் ஹாமிட்டனின் தீவிர ரசிகை என்பதால்தான். அவரைப்போன்று தானும் ஒரு மிகச்சிறந்த ரேஸராக வரவேண்டும் என்று துபாயில் இருந்த போதே லெக்ஸஸ், ரோல்ஸ்ராய்ஸ் போன்ற புகழ்பெற்ற கார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மோட்டார் ஷோ நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு பணியாற்றும் பழக்கம் வைத்திருந்த இவர், ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுவதில் இருக்கும் நுணுக்கங்களை கேட்டு தெரிந்துக் கொள்வாராம். இதற்கிடையில் 2014-ஆம் ஆண்டு தனது கனவு காரான Dodge Challenger என்ற ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியதுடன் துபாயில் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய இரண்டாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார். பின்னர் நடிகையாக மாறிய பிறகு சென்னை வந்து செட்டில் ஆனா நிவேதா பெத்துராஜ் 2021-ஆம் ஆண்டு கோவையில் செயல்பட்டு வரும் ‘மொமன்டம் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ் ரேஸிங்’ அகாடமியில் சேர்ந்து ரேஸுக்கான லெவல்–1 பயிற்சியை முடித்தார். தற்போது பல வளைவுகளை மிக குறுகிய வினாடிகளில் பயணிக்கும் அனுபவம் பெற்றுள்ள பெத்துராஜுக்கு கார் ரேஸ் ஆக்‌ஷன் நிறைந்த கதைகளத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம். அப்படி யாராவது ஒருவர் கதை வைத்திருந்தால் சொல்லுங்கள் நானே அதற்கு சூட்டபுலாக லூயிஸ் ஹாமிட்டனை ஹீரோவாக நடிக்க அழைத்து வருகிறேன் என்று பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில் ஏற்கனவே ஒருமுறை தெரிவித்திருந்தார். எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டு பெண்கள் என்றாலே அவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற பெருமையை எங்கிருந்தாலும் பறைசாற்றி வரும் பலருக்கு மத்தியில், நிவேதா பெத்துராஜும் தான் தைரியம் மிக்க தமிழ் பெண் என்பதை வெற்றிகரமான நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் பதிவு செய்திருப்பது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் பெருமையான ஒன்றுதான்.

Updated On 12 Feb 2024 6:18 PM GMT
ராணி

ராணி

Next Story