இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நம் எல்லாருக்குமே செய்துகொண்டிருக்கும் வேலையில் ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைத்தாலும் வாழ்நாள் முழுவதும் நிரந்தர வருமானத்திற்கென்று ஏதாவது ஒரு சைடு பிஸினஸ் இருந்தால் நன்றாயிருக்கும் என்று யோசிப்பதுண்டு. இது எல்லா துறையினருக்கும் பொருந்தும். குறிப்பாக என்டர்டெய்ன்மென்ட் பிசினஸ் என்று சொல்லக்கூடிய சினிமாத் துறையில் இருப்பவர்களுக்கு எந்த நேரமும் திரைப்படங்கள் கைகொடுக்காமல் போகலாம். ஒரு கட்டத்தில் டாப்பில் இருந்த நடிகர்கள்கூட ஏதேனும் ஒரே ஒரு தவறான முடிவால் சினிமா கேரியரையே தொலைத்துவிட்டு ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற நிலை தனக்கும் வந்துவிடக்கூடாது என நினைக்கிற நடிகர், நடிகைகள் பலர் நல்ல மார்க்கெட் இருக்கும்போதே சொந்த பிசினஸை தொடங்குவது இப்போது அதிகரித்துவிட்டது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் இருந்த இந்த பிசினஸ் மோகம் தற்போது தெற்கு பக்கமும் பரவிவருகிறது. முன்பெல்லாம் நடிகர் நடிகைகள் என்றாலே ரியல் எஸ்டேட், ஹோட்டல் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களைத்தான் தொடங்குவார்கள் என்ற நிலை மாறி, தற்போது நிறைய நடிகைகள் காஸ்மெட்டிக் பிசினஸில் அதிகம் இறங்குகின்றனர். குறிப்பாக, இப்போதுள்ள இளைஞர்கள் முதல் வயதானவர்கள்வரை ஸ்கின் கேர் மற்றும் காஸ்மெட்டிக்குகளின்மீது காட்டும் ஆர்வமே பல்வேறு ப்ராண்டுகள் உருவாக காரணமாக இருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் பாலிவுட்டில் நடிகை தீபிகா படுகோன் காஸ்மெட்டிக் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதை விளம்பரப்படுத்தி கொண்டிருந்த சமயத்தில் கோலிவுட்டில் நடிகை நயன்தாராவும் தனது சொந்த காஸ்மெட்டிக் நிறுவனத்தை தொடங்கி விளம்பரப்படுத்தி வருகிறார். மார்க்கெட் கொஞ்சம் குறைந்தாலே அடுத்து பிசினஸ் என இறங்கும் நடிகைகளுக்கு மத்தியில் உச்சத்தில் இருக்கும்போதே சொந்த நிறுவனங்களைத் தொடங்கி காசு பார்த்து வருகின்றனர் சில முன்னணி நடிகைகள்.

தீபிகா படுகோனின் 82°E

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தீபிகா படுகோன். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 82°E என்ற பெயரில் காஸ்மெட்டிக் பிராண்ட் ஒன்றை தொடங்கினார். தனது பிராண்ட் குறித்து பல்வேறு யுடியூப் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் இன்றளவும் விளம்பரம் செய்துவருகிறார். தனது 82°E குறித்து அவர் பகிர்கையில், “ஏதேனும் ஒன்றை அடிப்படையிலிருந்து தொடங்குவது என்பதை நினைத்தபோது மிகவும் ஆர்வமாக இருந்தது. என்னுடைய பிராண்டிற்கு எனது பெயரை வைக்கக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். இந்தியாவை சேர்ந்த இந்நிறுவனம் உலகளவில் பெயர்பெற வேண்டும் என்று நினைத்துதான் எங்களது குழுவுடன் ஆலோசித்து 82°E என்ற பொதுவான பெயரை வைத்தோம். இந்த பிராண்டை உருவாக்க நான் எனது ஆத்மார்த்தமான உழைப்பை போட்டிருக்கிறேன். சரும பராமரிப்பில் நான் ஆர்வம் காட்டுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது நமது தினசரி வாழ்வில் கலந்த ஒன்று. அதில் பிசினஸும் இருக்கிறது.


தீபிகா படுகோன் தனது 82°E ப்ராடக்ட் தொடர்பான விளம்பரத்தில்

அதேசமயம் தற்போது மார்க்கெட்டில் எண்ணற்ற வகை சரும பராமரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதுவே வாடிக்கையாளர்களை குழப்பமடைய செய்கிறது. அதனால் அதை சுலபமாக்க நினைத்து என் சொந்த ப்ராண்டை தொடங்கியிருக்கிறேன். எனது ப்ராண்டில் தயாரிக்கப்படும் பொருட்களில் ஆயுர்வேதம் மற்றும் இந்திய மூலிகைகள் இடம்பெற்றிருக்கின்றன. வாடிக்கையாளரை குழப்பவேண்டாம் என்றே முதலில் மாய்ச்சுரைஸர் மற்றும் சன்ஸ்கிரீன் என மிகவும் அத்தியாவசியமான இரண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்” என்று கூறியிருந்தார். மேலும் பொருட்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய 5 நாட்களுக்குள்ளேயே முதல் மாத டார்கெட்டை அடைந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். ப்ரீமியம் ப்ராண்ட் என அழைக்கப்பட்டாலும் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருவதால் தொடர்ந்து அடுத்தடுத்து பல பொருட்களை அறிமுகப்படுத்தி வருகிறது 82°E. இந்த ப்ராடக்ட்ஸ் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

நயன்தாராவின் ‘9ஸ்கின்’ மற்றும் ‘ஃபெமி9’

பெரும்பாலும் பாலிவுட் நடிகைகள்தான் இதுபோன்ற மேக்கப் மற்றும் பியூட்டி ப்ராடக்ட்ஸ்களின் மீது ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால் தென்னிந்திய நடிகையான நயன்தாராவும் தற்போது காஸ்மெட்டிக் பிசினஸில் இறங்கியிருக்கிறார். திருமணத்திற்கு முன்புவரை ரியல் எஸ்டேட் பிசினஸில் ஆர்வம்காட்டிவந்த நயன்தாரா, திருமணத்திற்கு பிறகு, குறிப்பாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தபிறகு ஸ்கின் கேர் பிசினஸில் ஆர்வம் காட்டி வருகிறார். தீபிகா படுகோனுடன் சேர்ந்து ‘ஜவான்’ படத்தில் நடித்தபிறகு அவரைப்போலவே, இல்லை அவருக்கு போட்டியாக நயன்தாரா தனது ப்ராடக்ட்ஸை இறக்கியிருப்பதாக திரையுலகில் பேசப்பட்டாலும் அதுகுறித்தெல்லாம் நயன்தாரா கவலைப்படுவதாக இல்லை. முதலில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். தனது தயாரிப்பு நிறுவனத்தின்கீழ் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் அளித்துவரும் நயன்தாரா அந்த படங்களில் நடிக்கவும் செய்கிறார். இதுபோக ‘9ஸ்கின்’ என்ற பெயரில் அழகுசாதன ப்ராடக்ஸ் நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். மலேசியாவில் வைத்து இந்த ப்ராடக்ட்ஸை மிக பிரம்மாண்டமாக லாஞ்ச் செய்தார். அடித்தட்டு மற்றும் மிடில் கிளாஸ் ஆட்கள் இந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு இதன் விலை இல்லை என்றாலும், அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் வசதிப்படைத்தவர்கள் வாங்கி பயன்படுத்தலாம்.


நயன்தாராவின் ‘9ஸ்கின்’ ப்ராடக்ட்ஸ் அறிமுகம் மற்றும் விளம்பரம்

தங்களது ப்ராடக்ட்ஸ் குறித்து நயன் கூறுகையில், “இது நம்பகத்தன்மை கொண்டது. சருமத்தின்மீது நன்கு செயல்பட்டு, பாசிட்டிவான மாற்றத்தை கொடுக்கக்கூடியது. அறிவியலும் இயற்கையும் சேர்ந்திருக்கும் இந்த ப்ராடக்ட்ஸ் சருமத்தை அழகாக்கி, தன்னம்பிக்கையை அதிகரிக்கும்” என்று கூறியிருந்தார். இதுபோக, ‘ஃபெமி9’ என்ற பெயரில் சானிட்டரி நாப்கின் பிசினஸ் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தின்மூலம் நாப்கின் தயாரிக்கும் பிசினஸில் நலிவடைந்த பெண்களை ஈடுபடுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். நாப்கின் பிசினஸ் குறித்து நயன்தாரா பேசியபோது, “முன்பெல்லாம் பெண்கள் தனக்கு நாப்கின் வேண்டுமென்று கேட்கவே கூச்சப்படுவார்கள். ஆனால் இப்போது சானிட்டரி நாப்கின் என்ற வார்த்தையை பொதுவெளியில் தைரியமாக பயன்படுத்தும் அளவிற்கு முன்னேறி இருக்கிறோம். இதை பெரிய மாற்றமாக கருதுகிறேன். நாப்கின் குறித்த விழிப்புணர்வு நாட்டிலிருக்கும் ஒவ்வொரு பெண்களையும் சென்றடைய வேண்டும். ஃபெமி9 நாப்கின் முழுக்க முழுக்க பெண்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து எந்த விளம்பரமும் நாங்கள் கொடுக்கவில்லை” என்று கூறியிருந்தார். பொதுநலத்துடன் இதுபோன்ற பிசினஸ்களை தொடங்குவதாக கூறினாலும் அவற்றில் சுயநலமும் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

காஸ்மெட்டிக் பிசினஸில் இறங்கிய பிற நடிகைகள்

ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ‘அனோமலி’ என்ற பெயரில் ஹேர் கேர் ப்ராடக்ட்ஸ்களை அறிமுகப்படுத்தினார். கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் தங்களது சொந்த பிசினஸை தொடங்கிய சமயத்தில் பிரியங்காவும் தனது அனோமலியை தொடங்கினார். தற்போது இந்தியாவில் ‘நைகா’வுடன் இணைந்து தனது ப்ராடக்ட்ஸை விற்பனை செய்துவருகிறார். ஹேர் கேர் இன்டஸ்ட்ரியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், ஆண்- பெண் இருவரும் பயன்படுத்தும் வகையிலும், மேலும் இயற்கை ஒன்றியதாக இருக்கும்படியாகவும் தனது ‘அனோமலி’ ப்ராடக்ட்ஸை நிறுவியிருப்பதாக பிரியங்கா தெரிவித்திருந்தார்.


தங்களது பியூட்டி ப்ராடக்ட்ஸ் விளம்பரங்களில் நடிகை க்ரித்தி சனோன் மற்றும் நடிகை கத்ரீனா கைஃப்

அதேபோல் 2019ஆம் ஆண்டு நடிகை கத்ரீனா கைஃபும் ‘கே பியூட்டி’ என்ற பெயரில் தனது காஸ்மெட்டிக் ப்ராடக்ட்ஸ்களை அறிமுகப்படுத்தினார். இவரும் நைகா இணையதளம்மூலம் தனது பொருட்களை விளம்பரப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் என இரண்டையும் செய்துவருகிறார். தனது வாழ்க்கையில் மேக்கப் முக்கியப்பங்கு வகிப்பதாலேயே இந்த ப்ராண்ட் தனது மனதில் சிறந்த இடத்தை பெற்றிருப்பதாக கூறுகிறார். குறிப்பாக, இந்த ப்ராடக்ட்ஸ் அனைத்துமே வீகன் வகையை சார்ந்தவை. பல்வேறு ஸ்கின் டோன் மற்றும் வகைகளுக்கேற்ப இவை தயாரிக்கப்பட்டிருக்கின்றன. நடிகை க்ரித்தி சனோனும் சமீபத்தில் HYPHen என்ற பெயரில் பியூட்டி ப்ராடக்ட்ஸ் வெப்சைட் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த ஆன்லைன் தளத்தில் அனைத்தும் ரூ.449 முதல் ரூ.649க்குள் தான் விற்பனை செய்யப்படும் என்பதால் அனைத்து தரப்பினராலும் வாங்கமுடியும். இவர்களைப் போலவே சன்னி லியோன், சோனாக்‌ஷி சின்ஹா போன்றோரும் சொந்த ப்ராண்டை ஆரம்பித்து அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்துவருகின்றனர்.

போட்டி போடும் நார்த் & சவுத் குயின்கள்

பாலிவுட் நடிகைகள் பலர் பிற பிசினஸ்களுடன் காஸ்மெட்டிக் பிசினஸையும் ஒருபுறம் நடத்திக்கொண்டிருக்க, தென்னிந்திய நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வால் போன்றோரும் பிற பிசினஸில் முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக, முன்னணி நடிகையாக வலம்வந்த சமந்தா, மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, திரைத்துறையிலிருந்து சற்று விலகியிருப்பதாக அறிவித்திருந்த காலகட்டத்தில் Tralala Moving Pictures என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இவர் நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’க்கு போட்டியாகத்தான் இந்த நிறுவனத்தை தொடங்கியிருப்பதாக பேசப்பட்ட நிலையில் தனது தயாரிப்பு நிறுவனத்தை பொருத்தவரை சமந்தா பெரும்பாலும் டோலிவுட் பக்கமே கவனம் செலுத்தி வருகிறார்.


சமந்தாவின் Tralala Moving Pictures, நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ், ஜனனி ஐயரின் The Hazel Avenue, தமன்னாவின் ‘White & Gold’

குறிப்பாக புதிய இயக்குநர்கள் மற்றும் புதிய கதைகளுக்கு வாய்ப்பு அளிப்பதில் கவனம் செலுத்தவிருப்பதாக தனது தயாரிப்பு நிறுவனம் குறித்து வெளியிட்ட அறிவிப்பு வீடியோவில் சமந்தா தெரிவித்திருந்தார். தமிழ், பாலிவுட், டோலிவுட் என நிறைய சம்பாதிப்பதால் அதை தயாரிப்பு நிறுவனம் மூலம் செலவழிக்கலாம் என நினைத்திருக்கலாம் என்று விமர்சித்தன ஊடகங்கள். அதேபோல் காஜல் அகர்வால் மார்சாலா ஜுவல்லரி என்ற பெயரில் ஒரு நகைக்கடையையும், டாப்சி ‘தி வெட்டிங் ஃபேக்டரி’ என்ற பெயரில் திருமண ஏற்பாடு நிறுவனத்தையும், தமன்னா ‘White & Gold’ என்ற பெயரில் ஆன்லைன் கஸ்டமைஸ்டு நகைக்கடையையும், ஸ்ருதி ஹாசன் ISIDRO என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கின்றனர். ஸ்ருதி தனது தயாரிப்பு நிறுவனத்தின்கீழ் பெரும்பாலும் தனக்கு பிடித்தமான மியூசிக் ஆல்பங்களை தயாரிப்பதிலேயே ஆர்வம்காட்டி வருகிறார். இதுபோன்ற முன்னணி நடிகைகளுடன் போட்டிபோடும் அளவிற்கு ‘தெகிடி’, ‘அவன் இவன்’ போன்ற படங்களில் நடித்திருந்த ஜனனி ஐயர் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் தனக்கு பிடித்த ஃபேஷன் துறையில் இறங்கியிருக்கிறார். The Hazel Avenue என்ற பெயரில் ஆன்லைன் பொட்டிக்கை நடத்திவரும் இவர், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் துபாய் போன்ற வெளிநாடுகளிலிருந்து வித்தியாசமான ஆடைகளை வாங்கி அதை ஆன்லைனில் விற்பனை செய்துவருகிறார். முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகைகள் தற்போது ஜனனியின் ரெகுலர் கஸ்டமர்களாக உள்ளனர். என்னதான் பிற நடிகைகள், மேக்கப், காஸ்டியூம், நகை, ரியல் எஸ்டேட் என தங்களது பணத்தை முதலீடு செய்தாலும் தீபிகா படுகோனும், நயன்தாராவும் சினிமாத்துறையில் கொடிகட்டி பறக்கும்போதே போட்டி போட்டுக்கொண்டு காஸ்மெட்டிக் பிசினஸிலும் கலக்கி வருகின்றனர். 30 வயதைத் தாண்டிவிட்ட இருவருமே குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டதால் சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் வருமானத்திற்கு குறை இருக்காது என்கின்றன சினிமா வட்டாரங்கள்.

Updated On 29 April 2024 6:25 PM GMT
ராணி

ராணி

Next Story