இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே பழைய பாடல்களுக்கென்று தனி மவுசு உண்டு. இதனை நன்கு உணர்ந்துள்ள இன்றைய இயக்குனர்கள், இதற்காகவே ரெட்ரோ பாடல்கள் என்கிற புதிய பிளே லிஸ்டை உருவாக்கி அவ்வப்போது தங்களது படங்களில் பயன்படுத்தி மக்களை குதூகலப்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வருகைக்கு பின்னர், புதிய படங்களில் பழைய பாடல்கள் என்கிற ட்ரெண்ட் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. கடந்த 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான விஜய்யின் 'லியோ' திரைப்படத்தில் வரும் காஃபி ஷாப் சண்டைக்காட்சியில் கூட இதே மாதிரியான ரெட்ரோ பாடல், பின்னணியில் ஒலித்தவாரே சண்டைக்காட்சி அமைக்கப்பட்டிருந்த விதம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்திருந்தது. இந்நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் என்று மட்டும் அல்லாமல், பல பிரபலமான இயக்குனர்களும் இதே ரெட்ரோ பாடல் முறையை பின்பற்றி வருகிறார்கள். இது குறித்த சுவாரஸ்யமான அலசலை கீழே காணலாம்…

லோகேஷ் உருவாக்கிய புதிய ட்ரெண்ட்

'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தன் முதல் படத்திலேயே ரெட்ரோ பாடல்கள் பின்னணியில் ஒலிக்கும் முறையை அறிமுகம் செய்திருந்தார். ரஜினி நடிப்பில் 1982 ஆம் ஆண்டு வெளியான 'மூன்று முகம்' படத்தில் வரும் 'தேவாமிர்தம் ஜீவாமிர்தம்' பாடல், படத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் ரேடியோவில் ஒலிப்பது போல் இடம்பெறும். அதே போல் வில்லன்களை காட்டும் பொழுதும், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'நவராத்திரி' படத்தில் வரும் 'இரவினில் ஆட்டம்' பாடலை பின்னணியில் ஒலிக்க செய்திருப்பார் லோகேஷ். இருப்பினும், இது அந்த சமயம் பெரியளவில் கவனிக்கப்படவில்லை. பின்னர் 2019 ஆம் ஆண்டு ‘கைதி’ திரைப்படம் வெளிவந்த பிறகுதான் இந்த ரெட்ரோ பாடல்கள் மக்களிடம் கவனம் பெற்றது.


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் 'மாநகரம்' படத்தின் போஸ்டர்

‘கைதி’ படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் ‘என் சுவாசக் காற்றே’ படத்தில் வரும் 'ஜும்பலக்கா ஜும்பலக்கா' பாடல் இடம் பெற்றிருந்ததோடு, படத்தின் முக்கிய வில்லனான அர்ஜுன் தாஸ் ஆக்ரோஷமாக வந்து சண்டை போடும் போது, பின்னணியில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'இந்து' படத்தில் வரும் 'மெட்ரோ சேனல்' பாடலும், 'மறுபடியும்' படத்தில் வரும் 'ஆசை அதிகம் வெச்சு' பாடலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒலிக்க வைத்து படத்தின் டோனை மாற்றியிருந்தார் லோகேஷ். அதேபோல் படத்தில் கார்த்தி, நரேனுடன் லாரியில் பயணம் செய்யும் போது 'மீரா' படத்தில் வரும் 'புது ரோட்டுலதான்' பாடலை பின்னணியில் ஒலிக்க செய்திருந்த இயக்குனர், அதன் மூலம் நாமும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் உணர்வை நமக்கு ஏற்படுத்தினார். இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, தனது அடுத்தடுத்த படங்களில் இதே ரெட்ரோ பாடல் முறையை தொடர்ந்து பயன்படுத்த துவங்கினார் லோகேஷ் கனகராஜ்.


'கைதி' படத்தில் இடம்பெற்ற பழைய பாடல்கள்

'ரெட்ரோ' ஏற்படுத்திய புதிய அலை

திரைக்கதையில் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்கிற புதிய பாணியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜ், ரெட்ரோ பாடல்களை தன் படங்களில் மிக நேர்த்தியாக பயன்படுத்திய விதத்திலும் பலரின் கவனத்தை பெற்றார். அந்த வரிசையில், கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த 'மாஸ்டர்' திரைப்படத்தில், இரண்டு முக்கியமான கட்டத்தில் ரெட்ரோ பாடல்களை பயன்படுத்தி இருந்தார். படத்தில் ஒரு முக்கியமான நிகழ்விற்கு பிறகு, சிறார் பள்ளியில் இருக்கும் வில்லன் கோஷ்டியை விஜய் பார்க்க வருவார். அப்போது கார்த்திக் நடிப்பில் வெளிவந்த 'அமரன்' படத்தில் வரும் 'வெத்தல போட்ட சோக்குல நா' என்ற பாடலை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அங்கு அமர்ந்திருக்கும் வில்லன் கும்பல் பாடுவதாக காட்சிப்படுத்தி இருந்தார் லோகேஷ். அதே போல் மற்றும் ஒரு காட்சியில், வில்லன் கும்பல் ஹீரோயினை துரத்தி வந்து சலூன் கடையில் கையும் களவுமாக பிடிக்கும் போது, அங்கு இருக்கும் டிவி ஒன்றில் 'புது நெல்லு புது நாத்து' படத்தில் வரும் 'கருத்த மச்சான்' பாடல் வருவது போல் காட்சிப்படுத்தி, பின்னணியில் ஒலிக்க செய்திருந்த விதம் ரசிக்கும் படியாக இருக்கும்.


'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வெத்தல போட்ட சோக்குல' மற்றும் 'கருத்த மச்சான்' பாடல்கள்

இதனை தொடர்ந்து அடுத்து வெளிவந்த 'விக்ரம்' படத்திலும், சிறைக்குள் கமல்ஹாசன் துப்பாக்கியுடன் சண்டைபோடும் காட்சியில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘அசுரன்’ படத்தில் வரும் 'சக்கு சக்கு வத்திக்குச்சி' பாடலை பயன்படுத்தி ரசிக்க வைத்திருந்தார். பிறகு மற்றும் ஒரு முக்கிய காட்சியான வில்லன் விஜய் சேதுபதி வீட்டில் பாம் வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, விஜய் சேதுபதி தன் குடும்பத்தினரை கோபம் கலந்த பயத்துடன் பாதுகாப்பாக அழைத்து செல்வார். அப்போது அங்கு இருக்கும் ரேடியோ ஒன்றில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'சரஸ்வதி சபதம்' படத்தில் வரும் 'கல்வியா செல்வமா வீரமா' பாடல் பின்னணியில் ஒலிக்கும். இது அந்த காட்சிக்கு மேலும் கவனத்தை பெற்று தந்தது மட்டுமின்றி, சிரிப்பு கலந்த பதற்றத்தையும் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும்.


விக்ரம் படத்தில் இடம்பெற்ற 'சக்கு சக்கு வத்திக்குச்சி' மற்றும் 'கல்வியா செல்வமா வீரமா' பாடல்கள்

லோகேஷ் பாணியில் பிற இயக்குனர்கள்

ரெட்ரோ பாடல்களை லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்திய விதம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்றதையடுத்து, இந்த விஷயம் பிற இயக்குனர்களையும் வெகுவாக ஈர்த்து விடவே அவர்களும் தங்கள் படத்தில் இதே ரெட்ரோ பாடல் முறையை பயன்படுத்த துவங்கினர். அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில், வில்லன் கோஷ்டியின் தலைவன் ஒரு முக்கியமான காட்சியில் 1999-ம் ஆண்டு வெளிவந்த 'தாளம்' படத்தில் வரும் 'தால் சே தால் மிலா' பாடலுக்கு நடனம் ஆடுவார். அதேபோல் ரஜினியை சந்திக்கும் காட்சியிலும் ‘ஜீன்ஸ்’ படத்தில் வரும் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடலுக்கு நடனமாடுவார். அந்த பகுதி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, இணையத்திலும் வைரலானது.


'ஜெயிலர்’ பட வில்லன், 'மார்க் ஆண்டனி' விஷால் மற்றும் 'ஜவான்' ஷாருக்கான்

அதே போல் அடுத்து வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த ‘மார்க் ஆண்டனி’ படத்திலும் ‘எட்டுப்பட்டி ராசா’ படத்தில் வரும் 'பஞ்சு மிட்டாய் சேலை கட்டி' பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருந்தார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். மேலும் படத்தில் வரும் ஒரு முக்கியமான சண்டை காட்சி ஒன்றில் 'தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் இடம்பெற்ற 'வருது வருது விலகு விலகு' பாடலை கிளப்பில் ஒலிப்பது போல் பின்னணியில் கொண்டு வந்த விதம் ரசிக்கும்படியாக இருந்தது. இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்னரே, அவர் இயக்கிய ‘பகீரா’ படத்தில் ரஜினி ஆடிய 'பட்டுகோட்ட அம்மாளு' பாட்டை பிரபுதேவாவின் நடனத்துடன் இணைத்து மிரட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இப்படி கோலிவுட்டில் மட்டுமே ரெட்ரோ பாடல்கள் வலம் வந்த சமயத்தில் தான், பாலிவுட்டிலும் இதனை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் அட்லீ. ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘ஜவான்’ படத்தில் வரும் ஒரு முக்கியமான ட்ரெயின் சீன் காட்சியில், மொட்டையடித்த ஷாருக்கான் ‘பாட்டுப் பாடவா’ பாடலுக்கு அவருக்கே உரிய வகையில் அழகாக நடனம் ஆடி அசத்தியிருப்பார்.

'லியோ' படத்திலும் தொடரும் ரெட்ரோ...

கடந்த 19-ம் தேதி திரையரங்குகளில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்திலும், ரெட்ரோ பாடல்களை பயன்படுத்தியுள்ள லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தனது ஸ்டைலை மாற்றாமல் முத்திரை பதித்து வருகிறார். சொல்லப்போனால் படம் ரிலீஸ் ஆனது முதலே ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், ரெட்ரோ பாடல் பின்னணியில் ஒலிக்கும் காட்சிக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதில் குறிப்பாக ‘ஏழையின் சிரிப்பில்’ படத்தில் வரும் 'கருகரு கருப்பாயி' பாடலுக்கு விஜய் நடனமாடும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது தவிர அந்த பாடல் முடிந்த உடனேயே நடக்கும் காஃபி ஷாப் சண்டை காட்சியில், பாரதிராஜா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பசும்பொன்’ படத்தில் வரும் 'தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணெய்க்கும்' பாடல் பின்னணியில் கேட்பது போல் செய்து சண்டையை படமாக்கியிருந்த விதம் காட்சிக்கு கனகச்சிதமாக பொருந்தியிருந்தது.


'லியோ' படத்தில் இடம்பெற்ற 'கருகரு கருப்பாயி' மற்றும் தாமரைப் பூவுக்கும்' பாடல்

மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் குடும்பத்தினருடன் அமர்ந்து விஜய் உணவு சாப்பிடும் போது, டிவியில் வரும் 'நான் பொல்லாதவன்' பாடல்... படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியதோடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒப்பிட்டு கலாய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் இடம்பெற்றிருந்தது. இப்படியாக பழைய பாடல்களைக் கொண்டு புதிய படங்களில், புதிய காட்சிகளை எடுத்து வரும் இன்றைய இயக்குனர்கள் இதன் வாயிலாக நமக்குள் வித்தியாசமான உணர்வை கடத்த முயன்று வருகின்றனர். பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு புதிய புதிய விஷயங்கள் ட்ரெண்ட் ஆவது வழக்கம் தான் என்றாலும், பழைய நினைவுகளை அசைபோடும் நபர்களுக்கு லோகேஷ் கனகராஜ் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய ரெட்ரோ பாடல் முயற்சி மிகவும் பிடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Updated On 6 Nov 2023 6:53 PM GMT
ராணி

ராணி

Next Story