இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

'பருத்திவீரன்' படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் அப்படத்தை இயக்கிய அமீருக்கும் இடையேயான மோதல்தான் தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக். இந்த சம்பவத்தில் அமீர் குறித்து பொதுவெளியில் ஞானவேல் ராஜா பேசிய பேச்சு கடும் விவாதத்திற்கு உள்ளானதோடு, திரையுலக பிரபலங்கள் பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அமீர் குறித்து தவறாக பேசியதற்கு ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டபோதும் முடிவுக்கு வராத இந்த சிக்கல் குறித்த முழு அலசலை இந்த தொகுப்பில் காணலாம்.

அன்று என்னதான் நடந்தது?

அமீர் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் 'பருத்திவீரன்'. கார்த்தியின் முதல் படமான இதில் அவருக்கு ஜோடியாக பிரியாமணி நடிக்க, இவர்களுடன் பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு, சம்பத் ராஜ், சமுத்திரக்கனி உட்பட பலர் இணைந்து நடித்திருந்தனர். 'மௌனம் பேசியதே' என்கிற வித்தியாசமான காதல் படம். அதன் பின்னர் அம்மா - மகன் பாசத்தை வேறொரு கோணத்தில் கூறி வியப்பைத் தந்த க்ரைம் த்ரில்லர் 'ராம்' என தனக்கான அடையாளத்தை வைத்திருந்த இயக்குநர் அமீரின் மூன்றாவது படமான 'பருத்திவீரன்' அந்த சமயம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கிராமத்து மக்களின் ரத்தமும், சதையுமான வாழ்க்கையையும், சாதிய ஏற்ற தாழ்வுகளையும் காதலுடன் கலந்து வலியுடன் கூறியிருந்த இப்படத்தில், பிரியாமணி தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றார். அதே போல் நடிகர் கார்த்தியின் முதல் அடையாளமாக இன்றுவரை இந்த 'பருத்திவீரன்' இருந்து வருவதோடு, இயக்குநர் அமீருக்கும் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.


'பருத்திவீரன்' திரைப்பட காட்சிகள்

மேலும் அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி முதல் இயக்குநர் இமயம் பாரதிராஜா வரை அனைவரின் பாராட்டையும் பெற்ற இப்படம் பல விருதுகளையும் அள்ளி குவித்தது. இப்படி பல்வேறு சாதனைகளை நிகழ்திக் காட்டிய 'பருத்திவீரன்' படம் ரிலீஸ் ஆன சமயத்தில் இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே மோதல் உருவானது. காரணம், படத்தின் தயாரிப்பாளராக இருந்த ஞானவேல் ராஜா ஷூட்டிங் சமயத்தில் பாதியிலேயே காணாமல் போய்விட்டார். இந்த படத்தில் பாதி செலவை நான் செய்து எடுத்தேன். ஆனால், என்னிடமிருந்து படத்தை எழுதி வாங்கி ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளர் என சொல்லி படத்தை ரிலீஸ் செய்தனர். நான் செய்த செலவுகளையும் எனக்கு கொடுக்கவில்லை என இயக்குநர் அமீர் ஒருபுறம் குற்றம் சாட்ட, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவோ, அமீர் சொல்வது பொய். அவருக்கு எல்லா பணமும் கொடுக்கப்பட்டுவிட்டது. அவர் பொய் கணக்கு எழுதி கொடுத்தார். என் காசை திருடினார் என்றெல்லாம் மற்றொரு புறம் பழி சுமத்தினார். இதனால் இரு தரப்பினரிடையேயும் மோதல் உருவானதோடு, நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டு கடந்த 16 வருடங்களாக வழக்கு நடந்து வருகிறது.

தற்போதைய மோதலின் துவக்கம்

கடந்த தீபாவளி அன்று கார்த்தியின் 25ஆவது படமான 'ஜப்பான்' படம் ரிலீஸானது. இதனையொட்டி ரிலீஸுக்கு முன்னதாக ’கார்த்தி 25’ எனும் தலைப்பில் மிக பிரம்மாண்டமாக விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 'ஜப்பான்' படக் குழுவினருடன் கார்த்தியின் நண்பர்களான நடிகர்கள் ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, சிபிராஜ், தமன்னா, அனு இமானுவேல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டதோடு, கார்த்தியை இயக்கிய சிறுத்தை சிவா, ராஜேஷ், லோகேஷ் கனகராஜ், லிங்குசாமி, ஹெச்.வினோத், பி.எஸ் மித்ரன், பா.ரஞ்சித், சுராஜ் போன்ற இயக்குநர்களும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கடந்த 20 வருடங்களில் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில், அவரின் அண்ணனும் நடிகருமான சூர்யா, குடும்ப நண்பரும் நடிகருமான சத்யராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.


நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் அமீர் மற்றும் செல்வராகவன்

இருப்பினும், கார்த்தியின் திரைப்பயணத்தில் முதல் படமாகாவும், அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாகவும் அமைந்த 'பருத்திவீரன்' பட இயக்குநர் அமீர் மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை. அதே வேளையில் இயக்குநர் அமீரை அழைத்ததாக கார்த்தி தரப்பில் சொல்லப்பட்டதோடு, விழா மேடையிலேயே நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே இயக்குநர் அமீருக்கு நன்றி தெரிவித்தனர். இதில் குறிப்பாக கார்த்தி 'நடிப்புன்னா என்னன்னே தெரியாத என்னிடம் காலத்துக்கும் நிலைத்து இருக்கும் படியான 'பருத்திவீரன்' கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த அமீர் அண்ணனுக்கு இந்த தருணத்தில் பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என பேசியிருந்தார். இந்நிலையில், அடுத்த நாளே நடைபெற்ற 'மாயவலை' படத்தின் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்று பேசிய அமீர், "என்னை 'கார்த்தி 25’ நிகழ்ச்சியில் பங்கேற்க யாரும் அழைக்கவில்லை. அதில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. நான் விதைத்த விதை, மரமாக வளர்ந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று கூறியிருந்தார். இந்த முரண்பாடான பேச்சு ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

அமீர் vs ஞானவேல் ராஜா மோதல்


தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குநர் அமீர்

இந்நிகழ்வுகளுக்கு பிறகு ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசிய அமீர், 'பருத்திவீரன்' பட ரிலீசுக்கு முன்பு வரை சிவக்குமார், சூர்யா, கார்த்தி குடும்பத்துடன் தனக்கு நெருக்கமான பழக்கம் இருந்ததாக தெரிவித்தார். ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் எங்களுடைய நட்பை கெடுத்து விட்டார். அவரால் எனக்கு இரண்டு கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் முழு காரணம். அவரிடம் எனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியும் எங்குமே நீதி கிடைக்கவில்லை. மேலும் கடந்த 16 வருடங்களாக நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறேன் என்று மனம் வருந்தி கூறியிருந்தார். இந்த பேட்டி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் தன்னுடைய பங்கிற்கு பேட்டி ஒன்றை கொடுத்தார். அதில், மெளனம் பேசியதே முடித்த கையோடு, தன் சொந்த தயாரிப்பில் 'ராம்' என்கிற படத்தை அமீர் எடுத்தார். அப்படத்தால் அவருக்கு ரூ.58 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. அந்த கடனை கட்ட முடியாமல் அவர் தவித்து வந்த நேரத்தில்தான் 'பருத்திவீரன்' படத்தில் அவரை கமிட் செய்து அந்த கடனை அடைத்தோம். பிறகு 'பருத்திவீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை ரூ.2 கோடியே 75 லட்சத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அமீர் இறுதியாக என்னிடம் கணக்கு தந்தது ரூ.4 கோடியே 80 லட்சம். அதோடு 6 மாதத்தில் படத்தை முடிக்கிறேன் என கூறிவிட்டு இரண்டரை வருடம் இழுத்துவிட்டார். அமீர் மனதில், தான் பாரதிராஜா என்று நினைப்பு, அவருக்கு அவ்வளவு சீனெல்லாம் கிடையாது. என்றைக்குமே அவரால் யாருக்குமே கொஞ்சமும் பிரயோஜனம் இல்லை. எனது காசில்தான் அவர் தொழில் கற்றுக்கொண்டார். அண்ணன், பன்றிகளை வைத்தே 10 விதமா கணக்கு கொடுக்கும் நபர். அவருக்கு இருக்கும் திறமைக்கு ஹாலிவுட் வரை சென்று படம் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் இங்கேயே திருட வேண்டும் என நினைத்து சுற்றிக் கொண்டிருக்கிறார். அமீர் என்னிடம் மட்டுமல்ல 'ஆதிபகவன்' தயாரிப்பாளர் அன்பழகன் மற்றும் 'சந்தனத்தேவன்' தயாரிப்பாளர் ஆகியோரிடமும் இருந்து பணத்தை திருடி இருக்கிறார் என ஏடாகூடமாக பேசியிருந்தார்.

அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள்


'பருத்திவீரன்' பட பிரச்சினையில் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குநர்கள், நடிகர்கள், பாடலாசிரியர்

ஞானவேல் ராஜாவின் பேட்டிக்கு பிறகு அமீர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல் ராஜா கூறிய கருத்துகளில் ஒன்று கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள்தான். இது முழுக்க முழுக்க எனது கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரச்சாரமே. ‘பருத்திவீரன்’ திரைப்படம் தொடர்பாக எந்த ஒரு ஒப்பந்தமும் நான் போடவில்லை. எனவே இல்லாத ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை. படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர, அடுத்தடுத்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணாமல் போனவர்தான் ஞானவேல்ராஜா. அதன் பின்னரே, நான் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன். மேலும், ‘பருத்திவீரன்’ படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் முற்றாக அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்பிரச்சினையில், மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது என தெரிவித்திருந்தார். அதனையடுத்து இயக்குநர்கள் பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அவர்களை தொடர்ந்து நந்தா பெரியசாமி, சேரன் போன்ற பிற இயக்குநர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதில் குறிப்பாக ‘பருத்திவீரன்’ படத்தில் பணியாற்றி இருந்த சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சினேகன் போன்றோர் அமீர் பட்ட துயரங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதோடு, ஞானவேல் ராஜாவை பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவும் கூறினர். இதே வேளையில், அமீருக்கு படத்தின் மேக்கிங் தெரியவில்லை என்று சுதா கொங்கரா தன்னிடம் கூறியதாக ஞானவேல் ராஜா தன்னுடைய பேட்டியில் கூறியிருந்த கருத்திற்கு பதில் கொடுக்கும் விதமாக, இயக்குநர் சுதா கொங்கரா ‘என்னுடைய படங்களில் பெண் வேடங்களை தேர்வு செய்யும் பொழுது நான் முத்தழகு கதாபாத்திரத்தை மனதில் வைத்துதான் கதாநாயகியை வர சொல்வேன்' என கூறி வாயடைக்க செய்தார்.

வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா


தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரின் அறிக்கை

அமீருக்கு ஆதரவாக திரைக்கலைஞர்கள் ஒன்றாக திரண்டதை தொடர்ந்து ஞானவேல் ராஜாவுக்கு எதிரான கருத்துக்களும், அமீருக்கு ஆதரவான குரல்களும் சினிமா பிரபலங்கள் தொடங்கி சமூக வலைதளங்கள் வரை வலுக்க தொடங்கின. இதனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சில தினங்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன் மீது இயக்குநர் அமீர் சுமத்திய குற்றச்சாட்டுகள் தன்னை மிகவும் காயப்படுத்தியாக தெரிவித்திருந்த அவர், அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் போது இயக்குநர் அமீரின் மனதை புண்படுத்தும் விதமாக பேசியிருந்தால் அதற்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்த போதிலும், பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அதில் குறிப்பாக இயக்குநர் கரு.பழனியப்பன் 'ஞானவேல் ராஜாவை நான் மன்னிப்பு கேட்கவே சொல்லவில்லை. என்னுடைய அறிக்கையில், சிவகுமார், ஞானவேல் ராஜாவை மன்னிப்பு கேட்க செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஒரு சின்னப் பயல் தவறு செய்தால் ஒரு பெரிய மனிதரிடம்தான் சொல்வோம் அல்லவா? அதைத்தான் நான் செய்தேன். ஞானவேல் ராஜாவுக்கு பின்னால் சிவகுமார் குடும்பம் இருக்கிறது என்பதைத்தான் நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன். அதை உணர்த்தும் விதமாகத்தான் தற்போது ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்' என கூறியுள்ளார்.

இதேபோல் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோரும் ஞானவேல் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளதோடு, அன்றைக்கு கொடுக்காமல் ஏமாத்திவிட்டுச் சென்ற பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டும். எந்த பொதுவெளியில் உட்கார்ந்துகொண்டு எகத்தாளமாக, அதேநேரம் அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைச்சீங்களோ... அதே பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்..! திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

16 வருடங்களுக்கு முன் வெளிவந்த 'பருத்திவீரன்' திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு மைல் கல். அப்படம் ஏற்படுத்திய ரணம் இன்று பார்த்தாலும் வலியை கொடுக்கும். அதே மாதிரியாக இயக்குநர் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையே ஏற்பட்ட மோதலின் ரணம் என்பது, இப்போதும் வலியை கொடுத்தாலும், தயாரிப்பு தரப்பில் பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்கள் வெளிப்படைத்தன்மையோடு ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் இந்த சிக்கலே வந்திருக்காது. இதற்கான முடிவு நீதிமன்றத்தின் கையிலேயே உள்ளது.


Updated On 11 Dec 2023 6:44 PM GMT
ராணி

ராணி

Next Story