இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திரைப்படங்கள் உருவான காலம்தொட்டு ஒருதலை காதல், சொல்லாமல் காதல், பார்க்காமல் காதல், தொலைபேசி காதல் என்று தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கின்றன. அப்படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் வெற்றியை பெற்று ரசிகர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியும் சென்றிருக்கின்றன. ஆனாலும், காதல் படங்கள் மீதான மோகம் என்பது மட்டும் யாருக்கும் குறையவே இல்லை. அதற்கு உதாரணம்தான் 2018-ஆம் ஆண்டு பள்ளிக்கூட நட்பு மற்றும் காதலை மையமாக வைத்து வெளிவந்த ‘96’ திரைப்படம். இந்த படம் ஒவ்வொருவர் மனதிலும் உண்டாக்கிச் சென்ற வலி என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அதிலும் ராமாக வரும் விஜய் சேதுபதியின் நடிப்பும் சரி, ஜானுவாக வரும் திரிஷாவின் நடிப்பும் சரி நிஜ காதலர்களே தோற்றுப்போகும் அளவுக்கு, பொறாமைப்படும் அளவுக்கு அவ்வளவு இயல்பாக ரசிக்க வைத்திருந்தது மட்டுமின்றி கிளைமேக்ஸ் காட்சியில் படம் பார்த்த அனைவரையும் தங்கள் கண்ணியமிக்க நடிப்பால் கலங்க வைத்திருப்பர். இப்படியொரு அழகான காதல் காவியத்தை உருவாக்கிய இயக்குநர் பிரேம்குமார் மீண்டும் தமிழ் சினிமாவில் தன் அடுத்த கவிதையை எழுத தயாராகி வருகிறார். அந்த படம்தான் ‘மெய்யழகன்’. நடிகர் கார்த்தியின் 27-வது படமாக உருவாகவுள்ள இப்படம் குறித்தும்… இதற்கு முன்பாக இயக்குநர் பிரேம் குமார் கொடுத்துள்ள வெற்றிகள் மற்றும் அவரின் சினிமா பயணம் குறித்தும் இந்த கட்டுரையில் காணலாம்.

யார் இந்த பிரேம் குமார்?


வெவ்வேறு சமயங்களில் எடுக்கப்பட்ட இயக்குநர் பிரேம் குமாரின் புகைப்படங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரேம் குமார் அங்கேயே தனது பள்ளி படிப்பை முடித்தார். சிறுவயதில் இருந்தே தூர்தர்சன் அதாவது பொதிகை தொலைக்காட்சியை அதிகமாக பார்த்து பழகிய பிரேம் குமாருக்கு, அந்த வயதிலேயே தான் எதிர்காலத்தில் சினிமாவுக்குள் செல்ல வேண்டும், அதுவும் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. பின்னாளில் எழுத்து துறை குறித்த புரிதல்கள், சிலர் உண்டாக்கிய அச்சுறுத்தல்கள் காரணமாக, அந்த ஆசை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம்பெற்று வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபர் ஆக வேண்டும் என்ற கனவு தொற்றி கொண்டுள்ளது. இதற்காக பள்ளி படிப்பை முடித்த கையோடு காட்சி தொடர்பியல் அதாவது B.Sc. விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் சேர்ந்து இளங்கலை பட்டத்தினை பெற்ற பிரேம், பிறகு தன் கனவுகளை விரித்துகொண்டு சென்னையை நோக்கி பயணமானார். சென்னைக்கு வந்தவர் இங்கு அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஃபோட்டோகிராஃபி தொடர்பாக படிக்க ஆரம்பித்தார். அப்போது தன் பேராசிரியர் ரமேஷ் என்பவரின் உதவியுடன் அந்த சமயம் வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபியில் மிகவும் புகழ்பெற்ற கேமராமேனாக இருந்த அல்போன்ஸ் ராய் என்பவரிடம் சேரும் வாய்ப்பு கிடைக்கவே, அவரிடம் அதுபற்றிய நுணுக்கங்களை கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கூடவே இருந்து கற்றுக்கொண்டார். இதற்கிடையில், சினிமாவில் இருந்த தொடர்புகளையும் சரியாக பயன்படுத்திக்கொண்ட பிரேம் குமாரிடம், அவரின் குருநாதர் அல்போன்ஸ் ராய் ஒருமுறை இந்த துறையில் பெரிதாக மாற்றங்கள் ஏதும் இருக்காது, ஒரே மாதிரிதான் இருக்கும். கொஞ்சம் சினிமா பக்கமும் போய் ஏதாவது கற்றுக்கொள் என்று கூற, பிறகு முழுமையாக சினிமா பக்கமே வந்துவிட்டார். அவரிடம் பணியாற்றிய அந்த குறுகிய காலத்தில் கேமரா தொடர்பான விஷயங்களில் நன்கு தெளிவு கிடைத்ததால், சினிமாவுக்குள்ளும் எளிதாக வந்து பிரேம் குமாரால் சாதிக்க முடிந்தது.


‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தின் ஒரு காட்சி

சினிமாவுக்குள் வருவதற்கு முன்பாகவே தன் குருநாதர் அல்போன்ஸ் ராயின் வளர்ப்பு மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரேம் குமார், 2008-ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியில் சேர்ந்து அவரின் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் பணியாற்றினார். இந்த படம் முழுமையாக முடிக்கப்படாத நிலையிலேயே 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பசங்க’ படத்தில் தனித்துவமாக ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்து கேமராமேனாக அதாவது ஒளிப்பதிவாளராக உயர்வுபெற்றார். இதனை தொடர்ந்து ‘சுந்தர பாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ரம்மி’, ‘எய்தவன்’, ‘ஒரு பக்க கதை’ போன்ற படங்களிலும் ஓளிப்பதிவாளராக பணியாற்றினார். இதில் 2012-ஆம் ஆண்டு வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் இவர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுதான் கற்பனை கலந்த நகைச்சுவை கதையாக எடுக்கப்பட்டதாம். இதற்கு பிறகு இயக்குநராக களமிறங்கும் எண்ணம் ஏற்படவே ஒளிப்பதிவாளர் என்ற நிலையில் இருந்து 2019-ஆம் ஆண்டு ‘96’ என்ற படத்தினை இயக்கி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் பிரேம் குமார்.

காதல் நினைவுகளை தூண்டிய '96'

தமிழ் சினிமாவில் காதல் படங்களுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. 80, 90-களில் காதலை மையமாக வைத்து வெளிவந்த எத்தனையோ படங்கள் வெள்ளிவிழா கொண்டாடிய படங்களாகவும் இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் பிரேம் குமாரின் ‘96’ திரைப்படமும் இடம்பெற்று என்றுமே அழிக்க முடியாத காவியமாக மாறிவிட்டது. விஜய் சேதுபதி, திரிஷா, தேவதர்சினி, ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி.கிஷன் என பலரும் நடித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைக்க, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானபோதே இப்படம் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து இருந்தது. இதனை தொடர்ந்து வெளிவந்த ‘காதலே காதலே’ பாடல் சிங்கிளாகட்டும், பின்னனி இசையாகட்டும் ஒவ்வொன்றும் ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்துக்கொண்டே சென்றது. 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி வெளியான இப்படம் எந்த வகையிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிடாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் துள்ளல் ஆட்டம் போட வைத்தது. அதிலும் பெரும்பாலானவர்கள் தங்களின் பால்யகால நினைவுகளை தூண்டி விட்டதாகவும், அந்த பள்ளி பருவ நாட்களுக்கு அழைத்துச் சென்று விட்டது எனவும் அவரவருக்கு தோன்றிய தங்களின் உணர்வுகளை கருத்துகளாக பதிவிட்டு வந்தனர்.


'96' திரைப்படத்தில் மெட்ரோ ரயில் பயண காட்சியில் திரிஷா-விஜய் சேதுபதி

இன்னும் சொல்லப்போனால் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஃபோட்டோகிராஃபர் ராமாக வரும் விஜய் சேதுபதியும் சரி, மஞ்சள் நிற சுடிதாரில் அழகு தேவதையாக வரும் திரிஷாவும் சரி தங்கள் கண்ணியமான நடிப்பால் பலரையும் கலங்க வைத்துவிட்டு போயிருப்பார்கள். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பும், வெற்றியும் பிரேம் குமாருக்கு மட்டுமின்றி, படத்தில் நடித்த, பணியாற்றிய பலருக்கும் ஃபிலிம்பேர் போன்ற பல விருதுகளையும் வாங்கி கொடுத்தது. இதனால் இப்படம் தென்னிந்திய அளவில் கவனிக்கப்பட்ட படமாக மாறியதுடன் தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வசூலில் பட்டையை கிளப்பியது. தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்திருந்த வேடங்களில், தெலுங்கில் சமந்தா, சர்வானந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.


'96'-ல் புகைப்பட கலைஞராக வரும் விஜய் சேதுபதி மற்றும் கிளைமேக்ஸ் காட்சியில் திரிஷா

இப்படி பிற மொழிகளிலும் கொண்டாடி தீர்க்கப்பட்ட இப்படம் உருவானதில் கூட சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் உள்ளன. அதனை இயக்குநர் பிரேம் குமார் தன்னுடைய நேர்காணல்கள் பலவற்றில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால், 96-ஆம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்த பிரேம் குமாரின் பேட்ச்மெட்ஸ் எல்லோரும் ரீயூனியன் மீட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தார்களாம். ஆனால், தனக்கு ஷூட்டிங் இருந்ததால் சொன்ன தேதியில், சொன்ன நேரத்தில் அந்த நிகழ்வில் சென்று கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டதாம். இதனால் மிகவும் வருத்தமுற்ற பிரேம் குமார் அந்த நிகழ்ச்சிக்கு சென்று வந்திருந்த தன் நண்பர்கள் இருவரிடம் அங்கு நடந்த அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டாராம். அப்போதுதான் அவருக்கு மனதில் ஏன் இதையே கதையாக புனைந்து நாம் படம் எடுக்க கூடாது என்று தோன்றியதாம். அப்படி உருவான ‘96’ படத்தில் முதலில் விஜய் சேதுபதி தலையெழுத்தே என்று நண்பனுக்காக நடிக்க ஒத்துக்கொண்டாராம். பின்னர் அவர் கதையை சொன்ன விதம் மிகவும் பிடித்து இது நமக்கான படம் வேறு யாருக்கும் விட்டு கொடுத்துவிடக்கூடாது என்று அப்படியே நடித்ததுதானாம் இந்த '96' திரைப்படம்.

புதிய கூட்டணியுடன் 'மெய்யழகன்'

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கார்த்திக்கு செல்லும் இடமெல்லாம் மிகப்பெரிய வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. இதனை தொடர்ந்து அதே வேகத்தில் ராஜூமுருகன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 25-வது படமான ‘ஜப்பான்’ திரைப்படத்தில் ஜப்பான் முனியாக நடித்த கார்த்திக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருந்தும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர அதன்படி, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்க, வில்லனாக சத்யராஜும், முக்கிய வேடம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரணும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. கார்த்தியின் 26-வது படமான இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு கார்த்தியின் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்த நேரத்தில், கார்த்தியின் 27-வது படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது.


நடிகர்கள் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி இடம்பெறும் 'மெய்யழகன்' திரைப்பட போஸ்டர்

அதுதான் ‘96’ பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘மெய்யழகன்’ படம் குறித்த அப்டேட். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக சொல்லப்படும் நிலையில், கடந்த மே 24-ஆம் தேதி அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் நடிகர் அரவிந்த்சாமி சைக்கிள் ஓட்ட, கார்த்தி பின்பக்கம் திரும்பியவாறு அமர்ந்துள்ளார். மேலும், போஸ்டரின் பின்னணியில், கோயில் ஒன்றும் உள்ளதை பார்க்கும்போது கிராமத்து சூழலில் வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கையை கூறும் குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாகி உள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் கார்த்தியுடன் நடிகர் அரவிந்த்சாமி தவிர ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ‘96’ படத்தின் வாயிலாக பலரையும் கவர்ந்த கோவிந்த் வசந்தாவே இசையமைத்துள்ளார். இதனால் ‘96’ படத்தை போன்றே மறக்கமுடியாத அனுபவத்தை இந்த 'மெய்யழகன்' திரைப்படமும் தரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அந்த எதிர்பார்ப்பை இயக்குநர் பிரேம் குமார் நிச்சயம் நிறைவேற்றி வெற்றி என்ற இலக்கை அடைய நாமும் வாழ்த்துவோம்.

Updated On 10 Jun 2024 6:26 PM GMT
ராணி

ராணி

Next Story