
எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து, தனது அலட்டல் இல்லாத நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் எனவும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். திரையுலகில் தந்தை நடிகராக இருந்தால் மகனும் நடிகராக வருவார் என ஒரு பொதுக்கருத்து உண்டு. அதற்கு உதாரணமாக தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகை சொல்லலாம். என்னதான் தந்தை மாஸ் ஹீரோவாக இருந்தாலும், அவர்களை தொடர்ந்துவரும் அவர்களின் தலைமுறையினர் பலரும் திரையுலகில் பெரிதாக சோபிப்பதில்லை. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஃபீனிக்ஸ் வீழான் என தலைப்பிடப்பட்ட இந்தப் படம் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால், இப்போதுதான் சினிமாவுக்குள் வந்துள்ளார், ஆனால் அதற்குள் என்ன ஒரு ஆட்டிடியூட் என பல விமர்சனங்கள் சூர்யா மீது முன்வைக்கப்படுகன்றன. அதற்கு காரணம் என்ன? இதுபோல இந்த வாரம் தமிழ் திரையுலகில் நடந்த பல சுவாரஸ்ய தகவல்களையும் இங்கு காண்போம்.
செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி
மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி... காரணம் என்ன?
பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம்தான் ‘ஃபீனிக்ஸ்’ வீழான்’. இப்படத்திற்கு முன்னரே விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் சூர்யா. இப்படம் ஜூலை 4ஆம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் நல்ல ரிவியூ கொடுத்து வரும் நிலையில், தன் மகனுக்காக அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
முன்னதாக ஃபீனிக்ஸ் பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், ‘தான் வேறு, தன் தந்தை விஜய் சேதுபதி வேறு’ என சூர்யா பேசியிருந்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதன்பின் அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் அவர் பொதுவெளியில் நடந்துகொண்ட விதம் பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த ட்ரோல் தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், அதனை நீக்க வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு சூர்யா தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “தெரியாமல் நடந்திருக்கும். வேறு யாரேனும் செய்திருப்பார்கள். மன்னித்துவிடுங்கள்” என பதில் அளித்தார். எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல், அப்படி தன்மீது ஏதேனும் விமர்சனங்கள் எழுந்தால் கூட அமைதியாக கடந்து செல்லக்கூடியவர் விஜய் சேதுபதி. அப்படி இருக்கையில், மக்கள் செல்வனை மக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டாரே அவரது மகன் என விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
மனைவி மற்றும் மகனுடன் பிக்பாஸ் பிரபலம் ஷாரிக்
ஆண் குழந்தைக்கு தந்தையானார் பிக்பாஸ் புகழ் ஷாரிக்..
நடிகை ரியாஸ் கானின் மகனும், பிக்பாஸ் பிரபலமுமான ஷாரிக்கிற்கு கடந்த ஆண்டு தனது காதலியான மரியா ஜெனிபருடன் திருமணம் நடைபெற்றது. மரியா ஜெனிபர் ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து செய்து, பின்னர் தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இச்சூழலில் ஜிம்மிற்கு செல்லும்போது ஷாரிக் உடன் காதல் ஏற்பட தனது பெற்றோர் சம்மதத்துடன், அவரை திருமணம் செய்துகொண்டார். அப்போது இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். திருமணத்தை தொடர்ந்து மரியா கர்ப்பமானார். இந்நிலையில் தனக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் ஷாரிக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷாரிக், “என் காதலுக்கு ஒரு சிறந்த பரிசை கொடுக்க விரும்பினேன்.. அதனால் நான் அவளுக்கு என் மினி வெர்சனை கொடுத்தேன். ஜூன் 28ம் தேதி நாங்கள் எங்கள் ஆண் குழந்தையை வரவேற்றோம்” என தெரிவித்துள்ளார். குழந்தையை தனது தோளில் வைத்து கொஞ்சும் வீடியோ ஒன்றையும் ஷாரிக் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சித்தா படத்தில் நடிகர் சித்தார்த் - நடிகை ராஷ்மிகா மந்தனா
“யாரையும் படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லை” - ராஷ்மிகா பரபர பேச்சு!
சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் ‘அனிமல்’. வசூல்ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக கடும் கண்டனங்களை பெற்றது. படம் முழுவதும் வன்முறையும், ஆபாசமுமே நிறைந்து இருந்ததாக கருத்து தெரிவித்தனர். தன்மீது எழுந்த கடும் விமர்சனங்களால், இப்படத்தில் நடித்ததற்காக மூன்று நாட்கள் அழுததாகவும் நடிகை திரிப்தி டிம்ரி ஒரு நேர்காணலில் பேசியிருப்பார். அண்மையில் கூட இப்படத்தின் பெயரை தமிழில் குறிப்பிட்ட பேசிய நடிகர் சித்தார்த், “‘மிருகம் என டைட்டில் வைத்த படத்தை சென்று பார்க்கிறார்கள். ஆனால், என் படத்தை (சித்தா) பார்க்கும்போது அவர்களுக்கு தொந்தரவாகிவிட்டதாம். அது தொந்தரவில்லை, வெட்கமும், குற்றவுணர்வும்தான் அது. பரவாயில்லை போகப்போக சரியாகிவிடும்” என விருது நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில் இப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, “படத்தை படமாக பாருங்கள். படத்தில் ஒரு ஹீரோ புகைபிடித்தால், அதை பார்த்து ரசிகர்கள் புகைப்பிடிப்பார்கள் என்பதெலாம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்போதெல்லாம் புகை பிடித்தல் என்பது சாதாரணமாகி விட்டது. நான் ஒருபோதும் படம் பார்த்து இன்புளூயன்ஸ் ஆக மாட்டேன். அப்படி நீங்கள் நினைத்தால் அது போன்ற படங்களை பார்க்காதீர்கள். உங்களுக்கு எந்த வகை படங்கள் பிடிக்குமோ அதை பாருங்கள். அனிமல் படத்தை பார்க்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. எல்லா மனிதர்களுக்குமே ஒரு கிரே கேரக்டர் இருக்கும். அப்படிப்பட்ட கேரக்டரைதான் அனிமல் படத்தில் காண்பித்திருந்தார் இயக்குநர் வங்கா ரெட்டி. படங்களில் வரும் கதாபாத்திரத்தோடு, நடிப்பவர்களை இணைத்து பார்க்க கூடாது. படங்களில் நாங்கள் நடிப்பது வேறு. நிஜ கேரக்டர் வேறு” எனப் பேசினார். ராஷ்மிகாவின் இந்தப் பேச்சு, ‘அனிமல்' திரைப்படம் குறித்த சர்ச்சைகள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதையே காட்டுகிறது.
நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சிம்பு
வெற்றிமாறனிடம் ரூ.20 கோடி பணம் கேட்ட தனுஷ்?
வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று வடசென்னை. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். அதற்கேற்றவாறு வடசென்னை 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். இதனிடையே வடசென்னை 2-ஐ தனுஷ் கைவிடப்பட்டதாகவும், அவருக்கு பதில் படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் சிம்புவை வைத்து தயாரிக்கும் படத்திற்காக வடசென்னை தயாரிப்பாளரான தனுஷ், ரூ.20 கோடி வெற்றிமாறனிடம் கேட்டதாகவும் தகவல் வெளியானது.
இதற்கு விளக்கமளித்துள்ள வெற்றிமாறன், சிம்பு நடிப்பில் உருவாக உள்ள படம் ‘வடசென்னை 2’ ஆக இருக்குமா? என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் ‘வட சென்னை 2’ இல்லை. அதில் தனுஷ் நடிப்பார். ஆனால் இதுவும் ‘வட சென்னை’ உலகத்தில் நடக்கும் கதைதான். அந்தப் படத்தில் இருக்கும் சில கதாபாத்திரங்கள் இந்தக் கதைக்குள்ளும் இருக்கும். ‘வடசென்னை’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்தான். அவர் அனுமதியின்றி அந்த படத்தில் உள்ள காட்சிகளையோ, கதாபாத்திரங்களையோ பயன்படுத்த முடியாது. அவர் ‘காப்பிரைட்’ வைத்திருக்கிற ஒரு விஷயத்தைப் பெறுவதற்கு, அவர் பணம் கேட்க அனைத்து உரிமையும் உண்டு. அதனை தவறாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், உண்மை என்னவென்றால், இந்தப் படத்தை ஆரம்பிக்க இருப்பதாக தனுஷிடம் சொன்னபோது, நீங்கள் எதுவும் நினைக்காதீங்க. நீங்கள் தாராளமாக இதில் உள்ள கதாபாத்திரங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதுதொடர்பாக குழுவிடம் பேசி அதற்கான என்.ஓ.சி.யை தரச் சொல்கிறேன். எனக்கு பணம் எதுவும் வேண்டாம்” என்று சொன்னார் என வெற்றிமாறன் கூறியுள்ளார்.
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி
கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பிடித்த மம்முட்டி...
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மம்முட்டி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் துல்கர் சல்மானும் நடிப்புத்துறைக்கு வந்துவிட்டபோதிலும், தற்போது வரை தனது மார்க்கெட்டை இழக்காமலும், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் கையில் வைத்துள்ளார் மம்முட்டி. சமீப காலமாகவே வித்தியாசமான கதாப்பாத்திரங்களை கொண்ட பிரம்மயுகம், காதல் தி கோர் போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் மம்முட்டியின் 50 ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பயணத்தை கௌரவிக்கும் விதமாக, அவரின் திரை பங்களிப்பு பற்றிய தகவல்கள் ஒரு பாடமாக, கல்லூரி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாம். மம்முட்டி படித்த எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் இளங்கலை வரலாறு பாடத்திட்டத்தில் ‘History of Malayalam Cinema’ என்ற பெயரில் அந்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டு இளங்கலை வரலாறு (ஹானர்ஸ்) படிப்பை படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, இந்த செமஸ்டருக்கான பாடப்புத்தகத்தில் மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. மம்முட்டி மட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படித்து முதன்முதலில் பட்டம் வாங்கிய தாட்சாயினி வேலாயுதம் வாழ்க்கையும் இந்த ஆண்டுக்கான இந்திய சமூக அரசியல் என்கிற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
முருகன் கோயிலில் கணவர் மற்றும் மகன்களுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா
பழனி முருகன் கோயிலில் தனது மகன்களுடன் நயன்தாரா சாமி தரிசனம்!
40 வயதானாலும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த 2022-ல் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது வெளிநாடு, செல்ஃபி என லைஃபை கணவருடன் என்ஜாய் செய்துவரும் நயன்தாரா, அவ்வப்போது தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். என்ஜாய்மெண்ட் ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்மிகத்திலும் ஈடுபாடுடன் இருந்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் தனது கணவர் விக்னேஷ் சிவன், மகன்கள் உலக் மற்றும் உயிருடன் நடிகை நயன்தாரா பழனி முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அவர்களை சூழ்ந்து ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெளியானது ராமின் ‘பறந்து போ’
எப்படி இருக்கிறது ராமின் ‘பறந்து போ’?
ராமின் இயக்கத்தில்,சிவா நடிப்பில் ஜூலை 4ஆம் தேதி திரையங்குகளில் வெளியான படம் ‘பறந்து போ’. இப்படத்தில் அஞ்சலி, மிதுல் ரயான், கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ளார். பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற படங்களின் அழுத்தமான கதைக்களம் மூலம் மக்களின் மனதில் ஆழமான இடம் பிடித்தவர் இயக்குநர் ராம். அதுபோல தமிழ்ப்படம், வணக்கம் சென்னை, கலகலப்பு போன்ற படங்களில் தனது நகைச்சுவை கலந்த நடிப்பிற்காக அனைவராலும் கவரப்பட்டவர் மிர்ச்சி சிவா. இப்படி இருக்கையில் இவர்கள் இருவரின் காம்பினேஷன் இணைந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ராமின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படமும் ஒரு நல்ல ஃபீல் குட் மூவிதான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்திலும் தனது நகைச்சுவை கலந்த நடிப்பை சிவா அப்படியே அழகாக வெளிப்படுத்தியுள்ளார் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அஜித்குமார் இறப்பையடுத்து அவரது தம்பிக்கு ஆறுதல் கூறிய தவெக தலைவர் விஜய்
அஜித்குமார் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில். இக்கோயிலில் அஜித்குமார் என்ற 28 வயது இளைஞர் காவலாளியாக பணிபுரிந்தார். இந்நிலையில் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண் கொடுத்த நகை திருட்டு புகாரில் கைது செய்யப்பட்ட அஜித்குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அஜித் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த 5 காவலர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உயிரிழந்த அஜித்குமார் இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், அஜித்தின் தாய் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
