இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த இரண்டு தசாப்தங்களாகவே இந்தி மாடல்களை சினிமா உலகில் கைதூக்கி விடுவதில் தென்னிந்திய திரையுலகம் முன்னிலை வகித்துவருகிறது. இருப்பினும் சில நடிகர்களுக்கு அது விதிவிலக்காகவே இருக்கிறது. என்னதான் திறமை இருந்தாலும் அங்கீகாரம் என்பது சிலருக்கு தாமதமாகவே கிடைக்கிறது. அப்படி கிடைத்த அங்கீகாரத்தை திறம்பட பயன்படுத்தி கொண்டு ஜொலிக்கும் நடிகைகளில் ஒருவர்தான் பூஜா ஹெக்டே. மாடல் அழகியான இவருக்கு ஆரம்பத்தில் தமிழ்பட வாய்ப்பு தேடிவந்த போதிலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் என்பது சற்று கடினமானதாகவே இருந்திருக்கிறது. இருப்பினும் தனது விடாமுயற்சி மற்றும் அயராத உழைப்பால் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி படங்களில் அடுத்தடுத்து பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார். பூஜா ஹெக்டேவிற்கு திரை வாய்ப்பு கிடைத்தது எப்படி? மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

பூஜா ஹெக்டேவின் ஆரம்பகால வாழ்க்கையும் திரை அறிமுகமும்

மும்பையில் பிறந்து வளர்ந்த பூஜா ஹெக்டே மங்களூருவை பூர்வீகமாகக்கொண்டவர். மும்பையிலேயே பள்ளி மற்றும் எம்.காம் பட்டப்படிப்பை முடித்த பூஜாவிற்கு நெட்வொர்க்கிங் திறமை அதிகம். இதற்கு காரணம், அவருடைய அம்மா நெட்வொர்க் பிஸினஸில் இருந்ததுதான். படிப்பை தவிர கல்லூரிகளுக்கு இடையேயான நடனம் மற்றும் ஃபேஷன் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வளர்த்துக்கொண்டார். மேலும் இந்தி, துளு, கன்னடா, மராத்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.


பூஜா ஹெக்டேவின் குடும்பம் மற்றும் குழந்தைப்பருவம்

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, மாடலிங்கில் இறங்கிய பூஜா 2009ஆம் ஆண்டு மிஸ் டேலண்டட் பட்டம் வென்றபோதிலும், அதே ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியிலிருந்து தவிர்க்கமுடியாத காரணங்களால் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும் அதே ஆண்டு மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள விண்ணப்பித்தார். 2010ஆம் ஆண்டு போட்டியில் மிஸ் இந்தியா ரன்னர்-அப்பும் பெற்றார். அதே போட்டியில் மிஸ் இந்தியா சவுத் க்ளாமரஸ் ஹேர் 2010 என்ற பட்டத்தையும் பெற்றார். இந்த போட்டியில் கிடைத்த புகழால் 2012ஆம் ஆண்டு தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்காக தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி தெளிவாக பேச பயிற்சிகளை எடுத்திருந்தார் பூஜா. தனது தாய்மொழியான துளுவுக்கும் தமிழுக்கும் கொஞ்சம் ஒற்றுமை இருந்ததால் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள சற்று எளிமையாக இருந்ததாக கூறியிருந்தார் பூஜா. இந்த திரைப்படத்தில் ஜாலியான ஒரு பெண் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த பூஜா மக்களிடையே பல்வேறு எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளாக நேரிட்டது. “இந்த படத்தில் பூஜா தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை” என தி இந்து நாளிதழ் விமர்சனத்தில்கூட கூறப்பட்டிருந்தது.


மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற தருணம் மற்றும் மாடலிங் ஷூட்

தோல்வியே வெற்றியின் தொடக்கம்

முதல்படமே படுதோல்வியை சந்தித்ததால் இரண்டு ஆண்டுகள் பூஜாவிற்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன்பிறகு 2014ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோசம்’ என்ற தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல்முறை செய்த தவறை இந்த முறை சரிசெய்துகொண்ட பூஜா, தனது நடிப்பு மற்றும் நளினத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த படத்திற்காக தெலுங்கு மொழியையும் கற்றுக்கொண்டார். அதே ஆண்டு ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கத்தில் வெளியான ‘முகுந்தா’ திரைப்படத்திலும் நடித்தார். வருண் தேஜ் ஜோடியாக நடித்திருந்த அந்தப் படமும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்ட பூஜா, ‘மொஹஞ்சதாரோ’ என்ற இந்தி படத்தில் நடித்தார். ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக இந்த படத்தில் நடிப்பதற்காக கமிட் ஆகியிருந்ததால் அதற்காக இரண்டு ஆண்டுகள் தன்னை தயார் செய்தார் பூஜா. அதனாலேயே மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதற்கு தேடிவந்த வாய்ப்பையும் நிராகரித்தார். 2016ஆம் ஆண்டு வெளியான அப்படம் இந்தியில் பூஜாவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்பிறகு 2017இல் மீண்டும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ‘துவ்வடா ஜகந்நாதம்’ என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கு, இந்தி என வாய்ப்புகள் தேடிவர அடுத்தடுத்த படங்களில் பயங்கர பிஸியானார். இதனால் 2018இல் மட்டும் ‘ரங்கஸ்தலம்’, ‘ரேஸ் 3’, ‘சாக்‌ஷ்யம்’ மற்றும் ‘அரவிந்த சமேதா’ என 4 படங்கள் வெளியாகின. 2019இல் ‘ஹவுஸ்ஃபுல்-4’ என்ற இந்தி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தோன்றினார். அதன்பிறகு 2019 முதல் 2023க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ‘அங்கு வைகுண்டபுரத்து’, ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்’, ‘ராதே ஷ்யாம்’, ‘பீஸ்ட்’, ‘ஆசார்யா’, ‘சர்க்கஸ்’ மற்றும் ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ என தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி முக்கிய நடிகைகளில் ஒருவராக அங்கீகாரம் பெற்றார் பூஜா ஹெக்டே.


தெலுங்கு, தமிழ் மற்றும் இந்திப் படங்களில் பூஜா

காதல் கிசுகிசுக்களும் பூஜாவின் பளிச் பதிலும்

திரை வெளிச்சத்திற்கு வந்துவிட்டாலே காதல் குறித்த வதந்திகள் என்பது சகஜம்தான். ஆரம்பத்தில் தடுமாறிய பூஜா குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி ஹீரோக்களின் நடிகையானதால் அவரையும் கிசுகிசுக்கள் விட்டுவைக்கவில்லை. தொடர்ந்து பிஸியாக படங்களில் ஓடிக்கொண்டிருந்தாலும் ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ என்ற இந்தி படத்தில் நடித்தபோது 57 வயது நடிகரான சல்மான் கானுடன் பூஜாவிற்கு காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் பரவின. அதனால்தான் சல்மான் கான் தயாரிக்கும் அடுத்த படத்தில் பூஜாவையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக, இருவரும் ஜோடியாக சுற்றிவருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் எனவும் பேச்சு நிலவியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “நான் இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன். தனியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் நடிப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்திவருகிறேன். மேலும் காதலிக்க நேரமில்லை. ஒரு வருடத்தில் 4, 5 படங்களில் நடித்துவருகிறேன். காதலிக்க அதிக நேரம் தேவைப்படும். அப்போதுதான் காதல் வளரும். ஆனால் எனக்கு அதற்கான நேரம் இப்போது இல்லை” என்று தெளிவாக கூறிவிட்டார். அவர் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் சல்மானை காதலிப்பது உண்மைதான் என்கின்றனர் இந்தி திரையுலகினர்.


பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே

சல்மான் கானை தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை பூஜா காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த ஆண்டு வதந்திகள் பரவின. ஆனால் அந்த வீரர் யார் என்பது குறித்தோ அல்லது பிற விவரங்களோ வெளிவரவில்லை. பூஜா தரப்பும் இதனை உறுதி செய்யாததால் அவரிடமே இதுகுறித்து கேட்டபோது அது முற்றிலும் பொய் என மறுத்துவிட்டார்.

சோஷியல் மீடியாவில் கலக்கும் பூஜா

என்னதான் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடிவந்தாலும் பூஜாவின் திறமையை அங்கீகரிக்கும் விதமான கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைக்கவில்லை என்பது ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது. தனது திரை அனுபவம் குறித்து அவர் பகிர்ந்தபோது, “திரையுலகில் எனக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. என்னுடைய 10 வருட திரைப்பயணம் என்பது ரோலர் கோஸ்டர் போன்றது. எனக்கு பல மொழிகள் தெரிந்திருந்தாலும் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்தேன். இந்த மொழிகள் எனக்கு தெரியாததால் ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. திரைத்துறையில் ஏகப்பட்ட ஏற்ற தாழ்வுகளை சந்தித்திருக்கிறேன். நிறைய படங்கள் சரியாக ஓடவில்லை. பட வாய்ப்புகளே இல்லாமலும் இருந்திருக்கிறது. திடீரென பட வாய்ப்புகள் குவிந்து பிஸியாகவும் மாறியிருக்கிறேன். நான் திரை பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வரவில்லை. ஆனால் இதனை எனது தொழிலாக மாற்றிக்கொண்டேன். என்னுடைய வாழ்க்கை என்றாவது ஒருநாள் யாரையாவது ஊக்குவிக்கும் என நம்புகிறேன்” என்று பகிர்ந்திருந்தார்.


சோஷியல் மீடியாவில் பூஜா ஹெக்டேவின் போட்டோஷூட் பதிவுகள்

என்னதான் திரைப்படங்கள் கைகொடுக்காவிட்டாலும் சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருக்கிறார் பூஜா. அவ்வப்போது ஃபோட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை இவர். இந்நிலையில் தற்போது கைவசம் இருக்கும் திரைப்படங்களில் ஒருபுறம் பிஸியாகவும் ஓடிக்கொண்டிருக்கிறார் பூஜா ஹெக்டே.

Updated On 26 Feb 2024 6:25 PM GMT
ராணி

ராணி

Next Story