இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தனின் ‘ஜீவா’ படத்தின் மூலமாக ஒரு நடன இயக்குநராக பிரபுதேவா அறிமுகமாகி தொடர்ந்து பணியாற்றி இருந்தாலும் முதல் முதலாக அவர் நடன இயக்குநராக பிரபலமானது என்னவோ ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த ’சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு’ பாடல் வாயிலாகத்தான். அதற்கு முன்பு வரை திரையில் கூட்டத்தில் ஒருவராகவும், தந்தை இயக்கம் செய்யும் பாடல்களுக்கு உதவி இயக்குநராகவும் மட்டுமே பணியாற்றி வந்தவர், இப்பாடலில் இவரின் நடனத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகு தொடர்ந்து நடனம் என்னும் ரயிலில் ஏறிய பிரபுதேவா இன்று, நடன இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகர், இயக்குநர் என பல உயரங்களை தொட்டு பாலிவுட் வரை சென்று தன் திறமையால் கலக்கி வருகிறார். அதற்கு முதல் அச்சாரமாக பிரபுதேவாவிற்கு அமைந்தது ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளிவந்த பாடல்களையும் ஒரு காரணமாக சொல்லலாம். அதிலும் ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’ என 90-களில் இவ்விருவரின் கூட்டணியில் வெளியான படங்களும், பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கடைசியாக 1997-ல் வெளியான ‘மின்சார கனவு’ படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பது இருவரது ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் நடிகர் பிரபுதேவா இருவரும் 6-வது முறையாக இணைவதை குறிக்கும் வகையில் #ARRPD6 என பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்தும், இதற்கு முன்பாக இருவரும் இணைந்து பணியாற்றி வெற்றி கொடுத்துள்ள படங்கள் மற்றும் பாடல்கள் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

இந்திய அளவில் கலக்கிய 'காதலன்'

ஒரு இயக்குநர் முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துவிட்டால், அடுத்ததும் வெற்றியாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் போது அந்த எதிர்பார்ப்பு பொய்த்து போய்விடும் படியாக இரண்டாவது படம் தோல்வியை தழுவி விடும். அதற்கு உதாரணமாக தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் ரசிகர்களின் ரசனை அறிந்து படத்தினை எடுக்கும் விதத்தில் எடுத்தால் நிச்சயம் தொடர் வெற்றிகளை தர முடியும் என்று நிரூபித்து காட்டியவர் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஷங்கர். ‘ஜென்டில்மேன்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே ‘இந்து’ என்ற படத்தின் மூலமாக நடிகராக களமிறங்கியிருந்த பிரபுதேவை வைத்து தனது இரண்டாவது படமான ‘காதலன்’ படத்தினை இயக்கினார். இப்படம் ஷங்கருக்கு மட்டுமல்ல, பிரபு தேவாவுக்குமே இரண்டாவது படம்தான் என்றாலும் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. ஷங்கர் படங்கள் என்றாலே அதற்கு ஏ.ஆர்.ரகுமான்தான் இசை என்ற தாரக மந்திரத்தை இப்போது வரை பின்பற்றி வரும் ஷங்கர், 1994-ஆம் ஆண்டு வெளிவந்த ‘காதலன்’ படத்திற்கும் அவரையே இசையமைக்க வைத்திருந்தார். ஒரு சாதாரண கான்ஸ்டபிளின் மகன் எப்படி கவர்னரின் மகளை காதலித்து பல பிரச்சினைகளை கடந்து பின்னர் இறுதியாக அப்பெண்ணை கரம்பிடிக்கிறார் என்பதனை வைத்து வெளிவந்த இப்படத்தில் ரகுமானின் இசையில் இடம்பெற்றிருந்த “ஊர்வசி ஊர்வசி”, “முக்காலா முக்காபுலா’, ‘என்னவளே அடி என்னவளே”, “காதலிக்கும் பெண்ணின் கைகள்” போன்ற அத்தனை பாடல்களும் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.


'காதலன்' திரைப்படத்தின் பாடல் காட்சிகளில் நக்மாவுடன் பிரபு தேவா

அதிலும், ''முக்காலா முக்காபுலா'’ பாடல் இந்திய அளவில் கவனம் பெற்று பலரையும் டிஸ்கோ ஆட வைத்த அதேவேளையில், அதில் இடம் பெற்றிருந்த கிராஃபிக்ஸ் காட்சிகள் இன்றளவும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது. இதே போல் ''ஊர்வசி ஊர்வசி'' பாடலில் பஸ்ஸின் மேல் வித்தியாசமான நடனமாடி நம்முடைய பல்ஸையும் எகிற வைத்த பிரபு தேவா, “காதலிக்கும் பெண்ணின் கைகள்” பாடலில் எஸ்.பி.பியுடன் இணைந்து கலக்கலான நடனமாடியிருப்பார். இன்னொரு புறம் சென்னை மொழியை ராப் இசையில் தோய்த்து ரகுமான் கொடுத்திருந்த ''பேட்ட ராப்'' பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒரு கலக்கு கலக்க, ‘'என்னவளே அடி என்னவளே” பாடலோ இன்றளவும் காதலர்களின் தேசிய கீதமாய் ஒலிக்கும் அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படி இப்படத்தில் இடம் பெற்றிருந்த அத்தனை பாடல்களுமே மெகா ஹிட் ஆனதற்கு முழு முதற்காரணமாக அமைந்தது ஏ.ஆர் ரகுமானின் இசையும், பிரபுதேவாவின் நடனமுமே என்று சொல்லலாம். இருப்பினும் இப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் சில சர்ச்சைகளில் சிக்கி தவித்த போதிலும், அதிலிருந்து மீண்டு வெற்றிக்கண்டதோடு, 42-வது தேசிய விருதுகள் விழாவில் என்னவளே பாடலுக்காக உன்னிகிருஷ்ணன் தனது முதல் விருதினையும், விஷுவல் எஃபெக்ட்ஸ், ஆடியோகிராஃபி, எடிட்டிங் ஆகிய பிரிவுகள் உட்பட 4 விருதுகளை அள்ளி குவித்தது. மேலும் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த இசையமைப்பாளர் என்ற பிரிவுகளில் பிலிம்பேர் விருதுகளை ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் பெற்றனர். விருதுகளை அள்ளி குவிக்கும் அளவுக்கு வெற்றி பெற்ற இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்று இந்திய அளவில் கவனம் பெற்றது.

அடுத்தடுத்து தொடர்ந்த வெற்றி பயணம்

‘காதலன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரகுமான் மற்றும் பிரபு தேவாவின் கூட்டணி தொடர்ந்தது. அப்படி பி.வாசு இயக்கத்தில் 'லவ் பேர்ட்ஸ்', கே.எஸ்.ரவி இயக்கத்தில் 'மிஸ்டர் ரோமியோ', ராஜிவ் மேனன் இயக்கத்தில் 'மின்சார கனவு' என வரிசையாக இந்த கூட்டணி தொடர்ந்தது. பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த இந்த மூன்று படங்களுக்குமே ரகுமான் இசையமைத்திருந்தார். ஒவ்வொன்றும் வேறு வேறு பாணியிலான காதல் கதையம்சம் கொண்ட படங்கள் என்றாலும், ரகுமானின் இசையில் இடம்பெற்றிருந்த பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் நாடித்துடிப்பை தூண்டிவிட்டது. அதிலும் உணர்ச்சிகரமான காதல் கதையாக வெளிவந்த 'லவ் பேர்ட்ஸ்' திரைப்படத்தில் ஹரிஹரன் - சித்ரா குரல்களில் வரும் “மலர்களே மலர்களே” பாடல் அன்று பலரின் இதயங்களை ஊஞ்சலாட வைத்தது என்றால், மிஸ்டர் ரோமியோ படத்தில் வரும் ரோமியோ ஆட்டம் போட்டால் பாடல் தமிழ்நாட்டில் பல இளசுகளையும் துள்ளல் ஆட்டம் போட வைத்தது. இதுதவிர “மெல்லிசையே” மற்றும் “தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை” ஆகிய பாடல்கள் மெல்லிய இசைகளின் ரீங்காரமாய் ஒலித்து பலரின் உள்ளங்களையும் கவர்ந்தது.


மெல்லிசையே பாடல் காட்சி மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

இவ்விரு படங்களின் பாடல்களும் இசை ரசிகர்களின் மத்தியில் இப்படியானதொரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுபோக, இதற்கு பிறகு ரகுமானின் இசையில் 1997-ஆம் ஆண்டு வெளிவந்த ‘மின்சார கனவு’ படத்தில் வரும் 6 பாடல்களும் இசையை பாராட்டுவதா? பாடல் வரிகளை பாராட்டுவதா? நடனத்தை பாராட்டுவதா? என்ற குழப்பத்திலே ஒவ்வொரு முறையும் கேட்கும்படியான உணர்வைத்தரும். சில பாடல் கேட்கும் போது மட்டும் மனம் ஏனோ தெரியவில்லை பூ மாதிரி ஆகிவிடும். அப்படியான உணர்வைத்தான் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நமக்கு தரும். அதிலும் குறிப்பாக வெள்ளியன்று, தூர்தர்ஷனில் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் இப்பாடலை அடிக்கடி பார்த்த 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டும்தான் தெரியும் இப்பாடல்களின் அருமை என்னவென்று. அந்த அளவிற்கு ஞாபக அலைகளை தூண்டும் இப்படத்தின் “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலாக இருக்கட்டும், “மானா மதுர மாமர கிளையிலே” பாடலாக இருக்கட்டும், “தங்கத் தாமரை மகளே” பாடலாக இருக்கட்டும் ஒவ்வொன்றும் நகரங்கள், கிராமங்கள் என்றில்லாமல் பட்டிதொட்டியெல்லாம் ஒரு கலக்கு கலக்கியது. மேலும் 45-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் கலந்து கொண்ட இப்படம் சிறந்த இசையமைப்பாளர் என்ற பிரிவில் ஏ.ஆர்.ரகுமானுக்கும், சிறந்த பாடகர்களாக எஸ்.பி.பி., கே.எஸ்.சித்ரா ஆகியோருக்கும், சிறந்த நடனக்கலைஞர் என்ற பிரிவில் நடிகரும், நடனக்கலைஞராக பணியாற்றிய பிரபுதேவாவிற்கும் தேசிய விருதுகளும் கிடைத்தன.


பிரபுதேவா மற்றும் காஜல் இடம்பெறும் வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் காட்சி

மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் - பிரபு தேவா

‘காதலன்’ படம் தொடங்கி 'லவ் பேர்ட்ஸ்', 'மிஸ்டர் ரோமியோ', ‘மின்சார கனவு’ என 1997-வரை அடுத்தடுத்து இணைந்து வெற்றிப் பாடல்களை மட்டுமே ரசிகர்களுக்கு கொடுத்துவந்த ரகுமான் - பிரபுதேவா கூட்டணி யார் கண்பட்டதோ அதற்கு பிறகு இணையவே இல்லை. அவரவர் தனித்தனியாக கூட்டணி அமைத்து வெற்றிப்படங்களை கொடுத்து இயங்க ஆரம்பிக்க, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸ்லி, தீபா, மலையாள நடிகர்களான அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிகைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான என்.எஸ்.மனோஜ் இயக்குநராக களமிறங்கி இயக்கவிருக்கும் இப்படத்தை அவருடன் சேர்ந்து திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் எலக் ஆகியோர் தயாரிக்கவுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி வெளியான நிலையில், “முக்காலா முக்காபுலா” பாடலில் பிரபுதேவா நடனம் ஆடும் காட்சியை வைத்து, அதன் பின்னால் ஏ.ஆர்.ரகுமானின் உருவம் தெரிவது போன்ற தோற்றத்தினை உருவாக்கி படத்தின் போஸ்ட்டரை உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். இந்த போஸ்டரை ‘காதலன்’ படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோன் வெளியிட்டார். மேலும் இந்த போஸ்டரை பிகைண்ட்வுட்ஸ் வெளியிட்டபோது இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்திருந்தது.


#ARRPD6 படத்தின் போஸ்டர் மற்றும் பிரபு தேவா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

கடந்த சில நாட்களுக்கு முன்பு படம் தொடர்பாக வெளியான அறிவிப்பினை தொடர்ந்து “இசை, நடனம், நகைச்சுவை காட்சிகள் என இரண்டு மணி நேரம் திரையரங்குகளை மகிழ்ச்சியான இடமாக மாற்ற வேண்டும் என்பதே இயக்குநரின் நோக்கம் என்பதால், படத்தில் ரத்தமோ, வன்முறையோ எதுவும் இருக்காது. இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என படக்குழுவும் தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரகுமானுடன் இணைந்திருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரபுதேவா, “நடன இயக்குநர்களை ஊக்கப்படுத்திய மியூசிக் டைனமைட்டுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார். எது எப்படியிருந்தாலும் இந்த இரண்டு டைமண்டுகளும் ஒன்றிணைந்து மீண்டும் ஒரு புதிய சகாப்தத்தை படைப்பார்கள் என்று நம்புவோம் .

Updated On 8 April 2024 6:16 PM GMT
ராணி

ராணி

Next Story